வாழ்க்கைத் துணைநலம்!



* குறளின் குரல் 114

மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்? அவள் எப்படி இருந்தால் அது அவளுக்கும் கணவனுக்கும் குடும்பத்திற்கும் பெருமை தரும்? இந்தக் கேள்விகளுக்கான விடையை திருக்குறளில், `வாழ்க்கைத் துணைநலம்` என்ற ஆறாம் அதிகாரத்தில் ஆராய்கிறார் திருவள்ளுவர்.

`மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.’ (குறள் எண் 51)
 
இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகள் உடையவளாக இருந்து, கணவனுடைய வருவாய்க்குத் தக வாழ்க்கை நடத்துபவளே
 
`மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.’ (குறள் எண் - 52)
 
நல்ல பண்புகளும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லையானால், அவ்வாழ்க்கை எவ்வளவு சிறப்புக்களைப் பெற்றிருந்தாலும் பயனில்லாததே.
 
`இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.’ (குறள் எண் - 53)

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. அதே மனைவி நற்பண்பு இல்லாதவளாக இருப்பாளானால் வாழ்க்கையில் இருப்பது எதுவுமில்லை.
 
`பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.’  (குறள் எண் - 54)
 
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் அந்தப் பெண்ணை விடப் பெருமையுடையது எதுவுமில்லை.
 
`தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.’ (குறள் எண் - 55)
 
வேறு தெய்வத்தைத் தொழாது கணவனையே தெய்வமாக எண்ணித் தொழுபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பதே இக்குறளுக்குச் சொல்லும் சம்பிரதாயப் பொருள். இன்றைய கண்ணோட்டத்தில் இந்தக் குறளை ஆராய்ந்து வேறுவிதமாகப் பொருள் கொள்வதே பொருந்தும்.   இரவுப் பணிக்குச் செல்லும் மனைவி கணவனைத் தொழுது எழுவது என்பது எப்படிச் சாத்தியம்? கணவனை மனத்திலே தொழுபவளும் அவன் நேசம் தனக்குக் கிட்டியுள்ளது என்ற பெருமிதத்தால் `எழுச்சி’ பெறுபவளும் ஆகிய மனைவி, பெய்யென்றால் பெய்யும் மழையைப் போன்று அன்பு செலுத்துபவள் எனப் பொருள் கொள்வது பொருந்தக் கூடும்.
 
`தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’ (குறள் எண் - 56)
 
கற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி குடும்பத்தின் புகழையும் கட்டிக் காப்பவளே பெண்ணாவாள்.

`சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.’ (குறள் எண் 57)
 
பெண்களைச் சிறைவைத்துக் காப்பதில் பொருளில்லை. பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
 
`பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.’ (குறள் எண் - 58)
 
மேலே சொன்ன இத்தனை சிறப்புக்களையும் பெண்கள் பெற்றிருந்தால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
 
`புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.’ (குறள் எண் - 59)
 
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு, அவர்களை ஏளனம் செய்பவர்கள் முன்னே ஆண்சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
 
`மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’ (குறள் எண் - 60)
 
ஒருவனுக்கு நல்ல பண்புகளையும் செயல்களையும் உடைய மனைவியே மங்கலம் தருபவள். நல்ல பிள்ளைகளைப் பெறுவதே அந்த மங்கல அழகிற்கு ஏற்ற அணிகலன் ஆகும். மனைவி முற்காலங்களில் பணிவுடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாள். இப்போதைய மனைவி கணவனைப் பணிபவள் அல்ல. அவள் கணவனுக்குத் தோழியாக இருப்பவள்.

`காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து’ வாழும் அதே நேரத்தில், கணவனும் தன் காரியம் யாவினும் கைகொடுத்து உதவ வேண்டும் என எதிர்பார்ப்பவள்.

ஒற்றை மாட்டு வண்டியாக இல்லறம் ஓடிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. பெரும்பாலும் இன்றைய இல்லறம் இரட்டை மாட்டு வண்டிதான். பொருளாதாரச் சுமையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்தே சுமக்க வேண்டிய நிர்பந்தம். குடும்பப் பொறுப்பிலிருந்து குழந்தை வளர்ப்பு வரை எல்லாவற்றையும் இருவரும் சேர்ந்தே பகிர்ந்துகொள்கிறார்கள்.

*கணவனுக்கு அதிக வருவாய் வரும்போது மனைவி பணிக்குப் போகவேண்டிய அவசியமென்ன, அவள் வேலைக்குப் போகாமல் இருந்தால் அந்த வேலை இன்னோர் ஆண்மகனுக்குக் கிடைக்குமல்லவா, குழந்தை வளர்ப்பில் அந்த இளம் தாய் முழுமையாக ஈடுபடலாம் அல்லவா என்பன போன்ற வாதங்களை எழுப்புபவர்கள் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். அந்த வாதங்களில் அர்த்தமில்லை. மனைவி படித்திருக்கும்போது அந்தப் படிப்பின் பயனை சமுதாயம் அனுபவிக்காமல் அவள் சமையலறை மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என எண்ணுவது தவறான போக்கு. வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதுதான் ஆண்களின் வேலையின்மைக்கான தீர்வாக இருக்க முடியும். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனச் சொல்வதல்ல தீர்வு.

கணவன் வெறும் பொருளாதார ஆதாயத்திற்காக மட்டுமே பணிக்குப் போகிறான் என்று சொல்ல முடியுமா? வேலைக்குப் போவதால் கிடைக்கும் மகிழ்ச்சி, அடுத்தவர்களோடு பழகுவதால் கிடைக்கும் நிறைவு, படித்த படிப்பைப் பயன்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் என ஓர் ஆண் பணிக்குப் போக இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் பிறவியிலேயே செல்வ வளம் மிக்க ஆண்களும் கூட எங்காவது வேலை பார்க்கிறார்கள். அல்லது வணிகம் செய்கிறார்கள். பொருளாதாரம் தாண்டி ஒரு படித்த கணவனுக்குக் கிடைக்கும் அனைத்து மன நிறைவுகளும் அவ்விதமே படித்த மனைவிக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதானே நியாயமாக இருக்க முடியும்?

இருவருமே பணிக்குப் போவதால் குடும்ப வாழ்வில் சில இடர்ப்பாடுகள் ஏற்படலாம். கணவனோ மனைவியோ வேறு ஊருக்குப் பணிநிமித்தம் மாற்றப்படுதல், அதனால் பிரிவு நேர்தல், ஒருவருக்குத் தொடர்ந்து இரவுப் பணி அமைதல், குழந்தை வளர்ப்பில் நேரும் சிரமங்கள் எனச் சில சிக்கல்கள் இல்லற வாழ்வில் காலப் போக்கில் ஏற்படத்தான் செய்கின்றன.   கணவனைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குபவளாக இருந்தால் அதை இயல்பானதாக எடுத்துக் கொள்ளும் போக்கு சமுதாயத்தில் மிகக் குறைவு.

அதனால் கணவனுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதையும் கணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அதன் விளைவுகள் குடும்பத்தையே பாதிப்பதையும் பல இடங்களில் காண முடிகிறது.   பொருளாதாரம் என்பது வாழ்வின் முக்கியமான ஒரு கூறு தானே தவிர அதுவே வாழ்வல்ல. வாழ்க்கைக்காகத்தான் பொருளே தவிர, பொருளுக்காக வாழ்க்கை அல்ல. ஓர் ஆணோ பெண்ணோ அதிகச் சம்பளம் வாங்குவது என்பது பெரும்பாலும் தற்செயலான நிகழ்வு தானே தவிர, அதனாலேயே மற்ற எல்லா விதங்களிலும் அந்த ஆணோ பெண்ணோ உயர்ந்தவர்கள் என்று ஆகாது. பல குடும்பங்களில் தந்தையை விட மகள் அதிகம் சம்பாதிப்பதைப் பார்க்கிறோம். அதனால் அறிவிலும் அனுபவத்திலும் அந்தத் தந்தையை விட மகள் உயர்ந்தவள் என்றா பொருள்? அவளுக்குக் கிடைத்த வாய்ப்பு அப்படி என்பது மட்டும்தான் உண்மை. தந்தைக்கு அந்தக் காலத்தில் அத்தகைய வாய்ப்புக் கிட்டவில்லை. அவ்வளவே.

தந்தை விஷயத்தில் மட்டுமல்ல, கணவன் விஷயத்திலும் இதுவே உண்மை. மனைவி பணியாற்றும் துறை காரணமாகவும் வேறு பல நிலைமைகள் காரணமாகவும் அவளுக்குப் பதவி உயர்வும் அதனால் கூடுதல் சம்பளமும் கிடைத்தால், அது பொருளாதார ரீதியாய் குடும்பத்திற்குக் கிடைத்த நன்மை என்று உணர்ந்து மகிழ வேண்டுமே அல்லாது மனைவியைப் பார்த்துக் கணவன் பொறாமைப் படுவது அபத்தம். கணவனை விடத் தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என மனைவி கர்வம் கொள்வாளானால் அது அதைவிட அபத்தம். தற்செயலாகக் கிட்டிய வாய்ப்புக்களுக்கு நன்றிசொல்லி இருவரும் ஆனந்தமாக எந்த வகையான கர்வமும் இல்லாமல் இணைந்து வாழ்வார்களானால் அதுவே நல்ல இல்லறம்.

அதுபோலவே மனைவியைப் பற்றிச் சொல்லும்போதும் நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு காலத்திற்குக் காலம் மாறக்கூடிய மனைவியின் அன்றாடக் கடமைகள் பற்றி வள்ளுவம் எதுவுமே பேசவில்லை. கணவன் மனைவியிடையே உள்ள அன்பை முதன்மைப் படுத்தி, அந்த அன்பின் வெளிப்பாடு பற்றியே வள்ளுவம் பேசுகிறது.தம் சமகாலம் தாண்டிச் சிந்தித்த வள்ளுவரின் பொதுநோக்கு பயிலும்போதெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. வள்ளுவர் வகுத்த இலக்கணங்களோடு கூடிய `மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (குறள் உரைக்கும்.)

- திருப்பூர் கிருஷ்ணன்