திருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவிஎல்லாம்வல்ல பரம்பொருளை, எங்களைக் காக்க பூ லோகம் அனுப்பி விட்டாயா? ஓ, தயாதேவி உன் கருணைக்கு ஒரு எல்லையே இல்லை. உலகில் உள்ள மற்ற தெய்வங்கள், தங்களை பூஜித்தவர்களுக்கு சில சமயம் கருணையால் அவர்கள் வேண்டியதைத் தருகிறார்கள். சில சமயம் அவர்கள் தராமல் போகவும் வாய்ப்புண்டு. (இந்திரனை தக்ஷகன் சரணாகதி செய்து ஏமாந்தது போல) ஆனால் என்னைப் போன்ற பாபிகளோ கருணை தெய்வமான உன்னை வணங்கவும் இல்லை, புகழவும் இல்லை. ஆனால் நாங்கள் உன்னுடைய நாதனின் பாதத்தில் செய்த சரணாகதிக்காக உன் மடியில் சதா விழுந்து கிடக்கும் பெரும் நிதியான உன் மணாளனையே இங்கு பூலோகத்திற்கு அனுப்பிவிட்டாயே!

உன் கருணைக்கு ஈடு இணை உண்டோ? அந்த மாலவன்கூட அதற்கு ஈடாக மாட்டான். ஆனால், தாயே ஒன்றை நீ கவனித்தாயா? இந்த உலகத்தில் என்னைவிட பெரிய பாவி யாருமில்லை என்னுமாபோலே! நான் அவ்வளவு பாவம் செய்திருக்கிறேன். அவை அனைத்தையும் நான் அனுபவித்தே கழிக்க வேண்டும் என்றால், நான் கோடானுகோடி ஜென்மம் எடுக்க வேண்டி வரும். ஆனால் நான் இந்த திரு வேங்கட மா மலைக்கு வந்து உன்னையும் மாலவனையும் சரணடைந்த பின் நான் ஒன்றை கவனித்தேன். கருணையே வடிவான நீ என் பாவக் கூட்டங்களை ஒரு உக்கிரமான பார்வை பார்த்தாய். அதோடு என் பாவக்கூட்டங்கள் அனைத்தும் பொடிப் பொடியாகி பஸ்மமாகிப் போனது.

மொத்தத்தில் வேங்கடவனின் கருணையான உன்னிடத்தில், கருணையே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆம் உனக்கு என் பாவங்களின் மீது துளி கூட கருணை இல்லாததால் தானே என் பாவங்கள் அனைத்தும் சாம்பலாகிப் போனது.’’‘‘லோக மாதாவிற்கு நம் பாவத்திடம் எள்ளளவும் கருணை இல்லை, ஆஹா எத்தனை ரசமான உண்மை’’ வேங்கடவனின் சந்நதியில் இருந்த ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் மெய் மறந்தார். அவர் அருகில் இருந்தவர் அவரை தட்டி ‘‘சுவாமி அடுத்து ரசமான ஒரு விஷயத்தை தேசிகர் விளக்குகிறார். இதற்கே மெய் மறந்து விடாதீர்கள்’’ என்று மெய் மறந்த வைஷ்ணவரை நினைவிற்கு அழைத்து வந்தார்.

அப்போது தேசிகர் தியானத்தில் இருந்தார். அவரது மனம் இம்முறை ஒரு நீதி மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்தது.! நீதிபதியின் சிம்மாசனத்தில் எல்லாம் வல்ல எம்பெருமான் அமர்ந்திருந்தான். சித்ரகுப்தனால் தேசிகர் செய்த பாவங்கள் அனைத்தும் வரிசையாக வாசிக்கப்படுகிறதாம். (பெரிய மகான் அவரே தனக்கு இப்படி எல்லாம் நடக்கும் என்று சொல்லும் போது பாவமே செய்து கொண்டிருக்கும் நம் கதி என்னவோ? நினைக்கவே அச்சமாக இருக்கிறது அல்லவா?) அந்த பட்டியலில் ஒரு புண்ணியம் கூட மருந்துக்கும் இல்லை. தேசிகருக்கு இனி நாம் தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. மனதார ‘‘பெருமானே, பிராட்டியே’’ என்று பரம்பொருளின் பாத கமலங்களை சரண் புகுந்தார்.

அப்போது நீதிமன்ற வாயில் காப்பாளன் பெரிய குரலெடுத்து ஒரு அறிவிப்பை விட ஆரம்பித்தான். ‘‘அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி! வேங்கடேசனின் பிரிய பத்தினி! வேதங்கள் புகழும் தயா தேவி! கருணையே வாடிவானவள்! வருகிறார் பராக் பராக்!’’ வாயில் காப்பாளனின் அறிவிப்பை கேட்டு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். பிராட்டியார் கோடி சூர்யப் பிரகாசத்தோடு மரகதக் கொடிபோல நீதி மண்டபத்துள் நுழைந்தாள். புதிதாக நீதி மன்றத்துக்கு ,தன் தேவி வந்ததன் காரணம் புரியாமல் மாயவன் விழித்தான். அதை கவனிக்கத் தவறாத பிராட்டி தனது மலர் வாய் திறந்து பேச ஆரம்பித்தாள்.

‘‘காலம் காலமாக நீதியை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்த நீதி மன்றத்தில் இன்று நீதிக்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே நான் இங்கு வந்தேன்.’’  தேவியின் மொழியைக் கேட்டு ‘‘மாலவன் வழங்கும் நீதியில் எப்படித் தாயே தவறிருக்கும்?’’ என்பதுபோல அங்கிருப்பவர்கள் பார்த்தார்கள். கடை விழியாலேயே அதை கவனித்த அம்பிகை, தனது வாதத்தை முன் வைக்க ஆரம்பித்தாள். ‘‘சகல புவனங்களையும் ஆளும் ஹே பிரபோ! நான் சொல்லும் இந்த வார்த்தைகள் தங்களுக்கு நினைவு இருக்கிறதா பாருங்கள். ’’ கடைபிடிக்க முடியாத கடினமான தர்மங்களை விட்டுவிடு. என்னை (அதாவது கண்ணனை) சரணடைந்து விடு. நான் உனக்கு மோட்சம் தருகிறேன்! கவலைப் படாதே‘‘ இந்த வார்த்தைகளை யார் சொன்னது என்று நினைவில் உள்ளதா?’’ முதல் கேள்விக்கணையை மாதவனை நோக்கித் தொடுத்தாள் அம்பிகை.

‘‘வேறு யாருமில்லை சாட்சாத் நானே கண்ணனாக அவதரித்தபோது, பகவத் கீதையில் சொன்னது. இந்த வார்த்தைகளை நான் எப்படி மறப்பேன்’’ கண்ணன் நொடியில் பதில் தந்தான். ‘‘அப்படியென்றால் இதோ நம்மை சரணாகப் பற்றியிருக்கும் இந்த தேசிகருக்கு முக்தி தாருங்கள்!’’ குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் தேசிகரை காண்பித்து சொன்னாளாம் நாச்சியார்.    கண்ணன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தானாம். காரணம் அர்ச்னுக்கு சொன்ன உபதேசம் இவருக்கு எப்படிப் பொருந்தும் என்று கேட்டால்  ‘‘அர்ச்சுனனுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா சுவாமி?’’ ,  என்று மடக்குவாள் ஜகன் மாதா. தான் தப்ப வழியே இல்லை என்று கண்ணன் உணர்ந்தான். தேசிகருக்கு மோட்சம் தந்து தீர்ப்பளித்து அவரது பாவங்களை மன்னித்தான். அந்த தீர்ப்பைக் கேட்டு தயா தேவி ஒரு வெற்றிச் சிரிப்பை சிரித்தாள். அதைக் கண்ட தேசிகருக்கு புல்லரித்தது.

அவரது மனம் மீண்டும் திருமலைக்கு வந்து சேர்ந்தது. கண்களைத் திறந்தார். எதிரில் நிவாசனின் மார்பில் அமர்ந்து அருளாட்சி செய்யும் தேவியைக் கண்டு அகமகிழ்ந்து போனார். அவர் தியானத்தில் கண்டதை கவிதையாக பாடவும் செய்தார் அதைக் கேட்டு  வைஷ்ணவர்கள் மெய் மறந்தார்கள். பிறகு மீண்டும் தியானத்தில் புகுந்தார். இம்முறை அவர் சென்றது திருப்பாற்கடலுக்கு. அங்கே ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சயனித்திருந்தான் கோவிந்தன். அவன் பாதமே கதி என்று பாத சேவை செய்து கொண்டிருந்தாள் பிராட்டி. அப்போது மெல்ல பரந்தாமனை, தயா தேவி தனது குயில் குரலால் அழைத்தாள். அவனும்‘‘ என்ன தேவி ?’’ என்பது போலப் பார்த்தான்.

 ‘‘பூவுலகில் ஜீவாத்மாக்கள் செய்யும் பாபத்தை பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் இன்னும் பல ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த பாவங்கள் குறையாது. தீரவும் தீராது. நீங்கள் அந்த பாவத்தை கழிக்க சரணாகதி என்னும் அற்புத மார்க்கத்தை உலகிற்கு தந்தும் பயனில்லை. யாரும் வந்து உங்களை சரண் புகவில்லை. உலக வாழ்க்கையில் மதி மயங்கியே உள்ளார்கள். அவர்கள் கரை தேர வழியே இல்லை. ஆனால், எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.’’ மாதவன் பாத சேவை செய்த படியே சொன்னாள் அந்த மாதேவி.

 ‘‘தயங்காமல் சொல் தேவி! நீ சொன்னதை என்றாவது நான் மீறி இருக்கிறேனா?’’ இந்த உறுதியையே  கோவிந்தனிடமிருந்து எதிர்பார்த்தாள் பிராட்டி. அது கிடைத்து விட்டது.  ஆகவே இப்போது தைரியமாக சொல்ல ஆரம்பித்தாள்.   ‘‘ சுவாமி வேதங்கள்  சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்று சொல்கிறது. அதாவது இந்த வையகம் முழுவதும் தாங்களே நிறைந்து உள்ளீர்கள். ஆகவே தாங்கள் வேறு இல்லை.    ‘‘இந்த உலகம் வேறு இல்லை என்றும் சொல்லலாம்.எனவே இவர்கள் அனைவரும் பல பிறவி எடுப்பதற்கு பதிலாக நீங்கள் சில பிறவிகளை இவர்களுக்காக எடுத்துவிடுங்கள். அவ்வாறு நீங்கள் பிறப்பதால் ஜீவாத்மாக்களின் பிறவிகளின் எண்ணிக்கை குறையும். அது மட்டுமில்லை அவ்வாறு நீங்கள் பிறக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் செய்யும் லீலைகளை கேட்டும் நினைத்தும் பாடியும் இந்த வையகம் நற்கதி பெரும். அது மட்டுமில்லை நீங்களோ வைகுண்டத்தில் வாசம் செய்கிறீர்கள் அவர்களோ பூலோகத்தில் வாசம் செய்கிறார்கள். ஆகவே நீங்கள் எடுக்கும் பல பிறவிகளில் சிலது மீனாகவும் ஆமையாகவும் அன்னமாகவும் இருக்கவேண்டும்.’’

‘‘ பிறக்கச் சொன்னது சரி! அது என்ன முக்கியமாக மீன் ஆமை அன்னம் இவைகளாக அவதரிக்க வேண்டும் என்ற கட்டளை. புரியவில்லையே!’’ குழம்பிய கேசவன் இடையில் புகுந்து வெட்டினான். தயா தேவி தொடர்ந்தாள். ‘‘ சுவாமி மீன் தனது குஞ்சுகளை தூரத்தில் இருந்தாலும், கண்களாலேயே பாதுகாக்கும். அதுபோலவே, ஆமை தன் மனதால் நினைத்தே தனது குட்டிகளை பாதுகாக்கும்.  அன்னமும் தன் சிறகுகளால் தன் குழந்தைகளை கட்டி அணைத்து பாதுகாக்கும். பரப்பிரம்மமான நீங்கள், கண்களாலும் நினைவாலும் அணைப்பாலும் என்றும் ஜீவன்களை பாதுகாப்பீர்கள் என்று உணர்த்த வேண்டும்.  அதற்கு இவ்வாறு அவதாரம் செய்வது அவசியமாகிறது.’’ தயா தேவி ஒரு சிறு உரையையே நிகழ்த்தி முடித்தாள்.

‘‘ஆஹா... உன்னைப்போல் ஒரு புத்தி சாதுர்யம் மிக்க ஒரு பெண்ணை மணந்தவன் எந்த உயர்ந்த நிலையை தான் அடைய மாட்டான்?.  பிரியே! உன் ஆசை, ஒரு சொல் மாறாமல் நிறைவேற்றப்படும். சந்தோசம் தானே?’’ என்று மாலவன் கேட்க வெற்றிக்களிப்புடன் கூடிய ஒரு ஆனந்தப் புன்னகை பூத்தாள் தயா தேவி.   மறுபடியும் தேசிகரின் உள்ளம் திருவேங்கடமலையில் இருக்கும் அவரிடம் வந்து ஐக்கியம் ஆனது. வைகுண்டத்தில் நடந்ததை மனக்கண்ணால் பார்த்ததால் அவர் உண்மையை உணர்ந்திருந்தார்.

இறைவன் இத்தனை பிறவி எடுத்தது ,ஜீவாத்மாக்களான நம்முடைய பிறவி சுமையை போக்கவே, என்று அறிந்து புல்லரித்துப் போனார். அது மட்டுமில்லை இத்தனைக்கும் காரணமான தயா தேவியை அவளது பிரபாவத்தை என்ன சொல்லி புகழ்வது என்று தெரியாமல் ஆனந்தப் பரவச நிலையில் இருந்தார். பிறகு மெல்ல மீண்டு வந்து தான் கண்டதை அழகான கவிதையாக பாடினார். அதைக் கேட்ட திருமலையின் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அகமகிழ்ந்தார்கள். அதில் ஒருவர் ‘‘ அஜாயமானோ பஹுதா விஜாயதே’’ என்ற வேத வாக்கியத்தை எத்தனை ரசமாக சொல்லிவிட்டார். ‘‘பிறப்பில் பல் பிறவிப் பெருமான்’’என்ற ஆழ்வார்கள் அனுபவத்தையும். இது ஒத்திருக்கிறதே என்று ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார்.    தேசிகர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை பிரம்மிக்க செய்தது.
 

(தொடரும்)
ஜி.மகேஷ்