வேதங்கள் வியந்தோதும் ஞான சரஸ்வதிதொன்மையான வேதங்கள் சரஸ்வதி தேவியை பல்வேறு விதமாக புகழ்கின்றன. துதி செய்கின்றன. சரஸ்வதி எனும் நேரடியான பெயர் பல்வேறு விதமான அர்த்தங்களாக வேதங்களால் விவரிக்கப்படுகின்றன. சரஸ்வதியை துதிப்பதால் ஏற்படும் பலன்களையும் வேதமே அழகாகக் கூறிச் செல்வதை பார்ப்போம் வாருங்கள்.   

1. ரிக் வேதம் 2.41.16

சரஸ்வதி தேவியோடு சேர்த்து, சரஸ்வதியின் அம்சமாகத் திகழும் நதியாகிய சரஸ்வதி நதியையும், ரிக் வேதம் பல இடங்களில் புகழ்கிறது.

“அம்பிதமே! நதீதமே! தேவிதமே! ஸரஸ்வதி!
அப்ரசஸ்தா இவ ஸ்மஸி ப்ரசஸ்திம் அம்ப! நஸ் க்ருதி”

“அன்னையர்களுள் சிறந்தவளே! நதிகளுள் சிறந்தவளே! தேவியர்களுள் சிறந்தவளே! சரஸ்வதியே! எண்ணங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாத எமக்கு, அவற்றை வெளிப்படுத்த வல்ல நல்ல பேச்சாற்றலை அருள்வாயாக!” என்று இந்த மந்திரம் சரஸ்வதி தேவியைப் பிரார்த்திக்கிறது. இந்த மந்திரத்தில் இருந்து, பேசத் தெரியாதவர்களுக்கும் பேச்சாற்றலை சரஸ்வதி தேவி அருள்கிறாள் என்பதை அறிய முடிகிறது.

“படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்ப் பூந்தாமரைப் போல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி?”

என்ற கம்பரின் சரஸ்வதி அந்தாதிப் பாடல், இதே வேத மந்திரத்தின் கருத்தைக் கூறுகிறது என்பதும் நோக்கத்தக்கது.

2. ரிக் வேதம் 7.95.2

“ஏகாசேதத் ஸரஸ்வதீ நதீனாம் சுசிர் யதீ கிரிப்ய ஆ ஸமுத்ராத்
ராயச் சேதந்தீ புவனஸ்ய பூரேர் க்ருதம் பயோ துதுஹே நாஹுஷாய”

“அனைத்து நதிகளுக்குள்ளும் சரஸ்வதி நதி மட்டுமே சைதன்யம் உள்ள நதியாகும். அதுவே மிகவும் தூய்மையான நதியாகும். அது மலைகளிலிருந்து தொடங்கி, சமுத்திரத்தைச் சென்று அடைகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்துச் செல்வங்களைப் பற்றியும் நன்கு அறிந்த சரஸ்வதி நதி, தன் அருகில் உள்ள மக்களுக்கெல்லாம் பாலையும் நெய்யையும் தருகிறாள்!” என்பது இம்மந்திரத்தின் பொருளாகும்.

இது மிகப்பெரிய வேதாந்த தத்துவத்தைக் கூறும் மந்திரமாகும்.
வார்த்தை     உள்ளுறைப் பொருள்
சரஸ்வதி    நதி தத்துவ உபதேசம்
மலை      உயர்ந்த ஞானியரின் நிலை
கடல்      நம் போன்ற சாமானியர்களின் நிலை
பால்      அறிவொளி
நெய்      மனத் தெளிவு

ஞானியர் செய்யும் தத்துவ உபதேசம் என்பது நதியைப் போல் பிரவாகமாக வருவதால், அது சரஸ்வதி நதியோடு இங்கே ஒப்பிடப் படுகிறது. மலையிலிருந்து கடலை நோக்கி சரஸ்வதி நதி பயணிப்பது போல், தத்துவ உபதேசமானது மலை போல் உயர்ந்த ஞானியரிடம் இருந்து, நம் போன்ற சாமானிய மக்களை வந்து அடைகிறது. அந்தத் தத்துவ உபதேசமாகிய சரஸ்வதி நதி, பால் போன்ற வெண்மையான அறிவொளியையும், நெய்போல் தெளிந்த மனநிலையையும் நமக்குத் தருகிறது என்பதே இந்த மந்திரத்தினுள்ளே ஒளிந்திருக்கும் தத்துவமாகும்.

3. ரிக்வேதத்தில் உள்ள சரஸ்வதி சூக்தம் - 3-ம் மந்திரம்

“ஸரஸ்வதி தேவநிதோ நிபர்ஹய
ப்ரஜாம் விச்வஸ்த்த வ்ருஷயஸ்ய மாஇன
உதக்ஷிதிப்யோ அவனீரவிந்தோ
விஷமேப்யோ ஆஸ்ரவோ வாஜினீவதி!”

“சரஸ்வதி தேவியே! தேவர்களை அச்சுறுத்தும் அசுரர்களை, நீ அச்சுறுத்துவாயாக! உன் வாக்கின் ஒலியால் அவர்களை வாட்டுவாயாக! குழப்பமும் அறியாமையும் நீங்க வேண்டும்! உன்னுடைய பிரவாகம் மேடு பள்ளங்களை எல்லாம் கடந்து தடையின்றி வரவேண்டும்!” என்கிறது இம்மந்திரம்.

வார்த்தை     உள்ளுறைப் பொருள்
சரஸ்வதி     வேத ஒலிகளின் உருவகம்
தேவர்கள்     நல்ல எண்ணங்கள்
அசுரர்கள்     தீய எண்ணங்கள்
மேடு பள்ளங்கள்    வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள்

நமது உள்ளத்தில் எழும் நல்லெண்ணங்களாகிய தேவர்களை, தீய எண்ணங்களாகிய அசுரர்கள் அச்சுறுத்துவார்கள். அப்போது வேத ஒலியாகிய சரஸ்வதி, அந்தத் தீய எண்ணங்களாகிய அசுர சக்திகளை விரட்டி, நம் உள்ளத்தில் நல்ல எண்ணங்களாகிய தேவர்களை வளரச் செய்கிறாள். அதன் விளைவாக, தத்துவங்களை அறிந்து கொள்வதில் நமக்கு இருக்கும் குழப்பம், அறியாமை உள்ளிட்டவை நீங்குகின்றன. மேலும், அந்த வேத ஒலி, நம் வாழ்வில் மேடு பள்ளங்களாகிய இன்ப துன்பங்கள் ஏற்படும் போது, நாம் அவற்றைக் கடந்து சமநிலையில் பயணிக்க வழிசெய்கிறது.

4. சுக்ல யஜுர் வேதம் 34.11

“பஞ்ச நத்ய: ஸரஸ்வதீமபி யந்தி ஸஸ்ரோதஸ:
ஸரஸ்வதீ து பஞ்சதா ஸோ தேசே அபவத் ஸரித்”

ஐந்து நதிகள் ஒன்றாக இணைந்து உருவான சரஸ்வதி என்னும் நதி, இந்த தேசத்தில் ஒரே நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

5. கிருஷ்ண யஜுர் வேதத்தில் சரஸ்வதி மந்திரங்கள்
“ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ தீனாமவித்ர்யவது”

அனைத்துச் செல்வங்களும் நிரம்பப் பெற்றவளான சரஸ்வதி தேவி, அவளை வணங்குவோரின் ஞானத்துக்கு மேலும் வலு சேர்த்து, நம்மைக் காத்தருளட்டும்.

“ஆனோ திவோ ப்ருஹத: பர்வதாதா ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம்
ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ சக்மான்னோ வாசம் உஷதீ ச்ருணோது”

மிகப்பெரிய சொர்க்கம், மிக உயர்ந்த மலைகள் ஆகியவற்றில் திகழும் சரஸ்வதி,  நம்முடைய ஞான வேள்வியை நோக்கிப் பயணித்து வருவாளாக! தெளிவு மிக்கவளும், துதிகளைக் கேட்டு மகிழ்பவளுமான அவள், நம் குரலைக் கேட்டு மகிழ்ந்து நல்ல வாக்கு வன்மையை நமக்கு அருள்வாளாக!

6. சாம வேதம் 189

“பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
யஜ்ஞம் வஷ்டு தியாவஸு:”

வாக்குக்கும் ஞானத்துக்கும் அதிபதியான சரஸ்வதி தேவி, நம் அறிவுக்கு ஏற்ற உணவைத் தந்தருளி, ஞான ஒளியினால் நம்மைத் தூய்மைப் படுத்துவாளாக! நம்மால் செய்யப்படும் கல்வி என்கிற யாகத்துக்கு அவள் ஒளிதருவாளாக!

7. சாம வேதம் 1299
“பாவமானீர்யோ அத்யேத்ய்ருஷிபி: ஸம்ப்ருதம் ரஸம்
தஸ்மை ஸரஸ்வதீ துஹே க்ஷீரம் ஸர்பிர் மதூதகம்”

முனிவர்களால் பாதுகாக்கப் பட்டதும், நம்மைத் தூய்மைப் படுத்தவல்ல அமுதமாய்த் திகழ்வதுமான வேத மந்திரங்களை யாரெல்லாம் ஓதுகிறார்களோ, அவர்களுக்கு சரஸ்வதி தேவி, பால், நெய், தேன், அமுதம் ஆகியவற்றை அருள்கிறாள்.

வார்த்தை                 உள்ளுறைப் பொருள்
வேதம்                           வேதத்தின் தத்துவம்
சரஸ்வதி தேவி    தத்துவ ஞானம்
பால்                           ஞானம்
நெய்                         மனத்தெளிவு
தேன்                       இனிய இறை அனுபவம்
அமுதம்                        மரணமில்லாப் பெருவாழ்வு, ம்ருத
என்றால் மரணம், அம்ருத என்றால் மரணமின்மையாகிய முக்தி

வேதம் கூறும் தத்துவ ஞானத்தை யார் உணர்கிறார்களோ, அவர்களுக்கு ஞான வடிவமாய் இருக்கும் சரஸ்வதி, ஞானம் (பால்), மனத்தெளிவு (நெய்), இனிய இறையனுபவம் (தேன்), மரணமில்லாப் பெருநிலையான முக்தி (அமுதம்) ஆகியவற்றை அருளுகிறாள் என்பது இதில் உறைந்திருக்கும் உள்ளுறைப் பொருளாகும்.

8. சாம வேதம் 1460

“ஜனீயந்தோ ந்வக்ர: புத்ரீயந்த ஸுதாநவ:
ஸரஸ்வந்தம் ஹவாமஹே”

திருமணம் நடப்பதற்கும், மக்கட்பேறு பெறுவதற்கும், தானம் செய்வதற்கேற்ற செல்வத்தைப் பெறுவதற்கும், ஞான ஒளியைப் பெறுவதற்கும் சரஸ்வதி நதியின் பிரவாகத்தை நாம் வணங்குவோம்.

9. தைத்திரீய உபநிஷத் - 42.1

“மேதாம் ம இந்த்ரோ ததாது, மேதாம் தேவீ ஸரஸ்வதீ
மேதாம் மே அச்வினௌ தேவாவாதத்தாம் புஷ்கரஸ்ரஜா”

இந்த மந்திரத்தில் மேதா என்றால் ஞானம் என்று பொருள். இந்திரன் நமக்கு ஞானத்தை அருளட்டும். சரஸ்வதி தேவி நமக்கு ஞானத்தை அருளட்டும். மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அச்வினி தேவர்கள் நமக்கு ஞானத்தை
அருளட்டும் என்பது இம்மந்திரத்தின் கருத்தாகும்.

சு. நாகராஜன், கும்பகோணம்
மதுஜெகதீஷ்