நரசிங்கமூர்த்தியின் மருகனே!* அருணகிரி உலா 86

உத்தரமேரூரில் பாடிய ஒரு பாடலில் அருணகிரியர், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்திருநூறு மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூர் என்ற ஊரைச் சிறப்பிக்கிறார்.

‘‘ஆழியில் துயில்வோனு மாமலர்ப் பிரமாவும்
ஆகமப் பொருளோரும்  அனைவோரும்
ஆனைமத் தகவோனும் ஞானமுற்றியல்
வோரும் ஆயிரத்திருநூறு மறையோரும்
வாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக
வாகு சித்திர தோகை மயிலேறி
மாறெனப் பொரு சூரனீறெழப் பொரும் வேல
மான் மகட்குளனான பெருமாளே ! ’’

என்பது அப்பாடல், நான்காவது உத்தரமேரூர்ப் பாடலில் சுந்தர மூர்த்தி நாயனாரை இறைவன் ஆட்கொண்ட குறிப்பை வைத்துள்ளார் அருணகிரியார்.

‘‘சாதனங்கொடு தத்தா மெத்தென
வே நடந்து ‘பொய்’ பித்தா உத்தர
மேதெ’னும்படி தற்காய் நிற்பவர் சபையூடே
தாழ்வில் சுந்தரனைத் தானொற்றிகொள்
நீதி தந்திர நற்சார்புற்றருள்
சால நின்று சமர்ந்தா வெற்றிகொள் அரன் வாழ்வே’’

என்று பாடியுள்ளார். சுந்தரர் சிறுவனாக இருந்த போதே அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மண்டப வாசலில் கிழ வேதியர் வடிவாய் கொண்டு வந்த இறைவன் ‘‘இதோ உன்பாட்டனார் எனக்கு எழுதித்தந்த அடிமை ஓலை: இதன்படி நீ எனக்கு அடிமை நீ என் உத்தரவு இல்லாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது’’ என்று கூறினார். சுந்தரர் ‘ஏ’, பித்தா! ஒரு அந்தணன் மற்றொரு அந்தணனுக்கு அடிமை ஆக முடியுமா’ என்று கேட்டு ஓலையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார். தன் ஊர் திருவெண்ணெய் நல்லூர் என்று கூறி அங்குள்ள நியாயவாதிகளிடம் ‘இவன் கிழித்தது நகல் ஓலை; இதோ அசல் ஒலை’ என்று கிழவர் காட்டியதும் ‘‘கிழவர் கூறுவது தான் நியாயம்’’ என்றனர் பெரியோர்கள்.

‘உங்கள்  வீடு எங்கே ’ என்று கேட்டதும், கிழவர் கோயிலுள் நுழைந்து மறைந்தார். கயிலையில் தான் விரும்பிய கமலினி, அநந்திகை இருவரைத் தவிர பூவுலகில் வேறு யாருடனாவது எனக்குத் திருமணம் நேர இருந்தால் தன்னை அங்கு வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தபடி இறைவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட சம்பவம் இது.உத்தரமேரூர்ப் பாக்களை இறைவனுக்கு அர்ப்பணித்த பின்னர் அங்கிருந்து புறப்படும் நாம் செல்ல விருக்கும் தலம், விழுப்புரம்  சென்னை சாலையில் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள மலைத்தலமாகிய பெரும்பேறு கண்டிகை . ‘அச்சிறுபாக்கம்’ என்பது மருவி ‘அச்சரப்பாக்கம்’ என்றானது போல், இத்தலமும் இன்று ‘பெரும்’ பேர் கண்டிகை’ எனப்படுகிறது. நிலமாக அவர்களுக்குக் கிடைத்தது பேறு; நமக்கோ திருப்புகழ்த்திருத்தலங்களைத் தரிசிக்கக் கிட்டியது ‘பெரும் பேறு’ என்றே சொல்லலாம்!

குன்றின் மீது 225 படிகள் ஏறித் தரிசிக்கும் படியாக அழைந்துள்ளது. மிக அழகான முருகன் கோயில். இப்போது கார் மூலம் மேல் வரை செல்ல முடிகிறது. கோயில் மலை உச்சியில் தனிப்பட்டு நிற்பதால் எப்போதும் திறந்திருப்பதில்லை. அடிவாரத்தில் வசிக்கும் குருக்களிடம் கோயில் திறந்திருக்கும் நேரம் குறித்து அறிந்து கொண்ட பின் செல்வது உத்தமம். தெற்கு நோக்கி அறுமுகன் தேவியருடன் நிற்கும் அழகிய திருவுருவங்கள். குன்றின் மீதுள்ள அமைதியும் இயற்கை எழிலும் நம்மை இறைவனோடு ஒன்றச் செய்கின்றன. ஞான ஸ்வரூபமான தட்சிணாமூர்த்தியைப் போன்று சஞ்சீவிமலை எனப்படும் இம்மலை மீது முருகனும் தெற்கு நோக்கி அகஸ்தியருக்குக் காட்சி அளித்தான். கருவறைக்கு நேர் எதிரே சக்தி வேலாயுதம் தனித்து நிற்கிறது. சத்ருசம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரியார், அகஸ்தியர் போன்றோரின் திருஉருவங்கள் உள்ளன.

கருவறைக்கு நேரே வெளிப்பிராகாரத்தில் கொடி மரமும், வலம் வருகையில் செல்வவிநாயகர், சுந்தர விநாயகர் ஆகியோருக்கான தனிச் சந்நதிகளும் உள்ளன. கோயிலை ஒட்டி, மலை மீது ஏறி வருபவர்கள் இளைப்பாற சிறு மண்டபம் ஒன்றும் உள்ளது. அருணகிரியார் பெரும் பேறு கண்டிகையைப் பேறை நகர் என்று அழைத்துப் பாடியுள்ளார்.
 
‘‘கோலவுருவாய் எழுந்து பாரதனையே யிடந்து
கூவிடு முராரி விண்டு திருமார்பன்
கூட முறை நீடு செம்பொன் மாமதலையூ டெழுந்த
கோப அரி நாரசிங்கன் மருகோனே
பீலிமயில் மீதுறைந்து சூரர்தமையே செயங்கொள்
பேர் பெரிய வேல்கொள் செங்கை முருகோனே
 பேடை மட ஓதி மங்கள் கூடி விளையாடுகின்ற
பேறை நகர் வாழ வந்த பெருமாளே!’’
[ கோலம்  = பன்றி]
 
பன்றியின் உருவில் பூமியைத் தோண்டிச் சென்று அதனை மீட்டு வந்த முராரியாகிய திருமால். [ இரணியாட்சன் எனும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டான். திருமால் பன்றி உருவங் கொண்டு பாதாளத்திற்குச் சென்று தன் கொம்பினால் அதைக் கொன்று தனது கொம்பில் தாங்கி மேலே கொண்டு வந்து பழையபடி வைத்தார். ‘‘எயிறதன் நுதிமிசை இதமமர் புவியது நிறுவிய எழிலர்’’
- சம்பந்தர்]

லட்சுமியை மார்பில் வைத்தவன், கூடத்தில் இருந்து செம்பொன்னாலாய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த நரசிங்கமூர்த்தியின் மருகனே! [‘என் இறைவன் தூணிலும் உளான்’ என்று பிரஹ்லாதன் கூறக் கோபம் கொண்ட இரணிய கசிபு தூணைப்பிளக்க, அத்தூணிலிருந்து கோபத்துடன் வெளிப்பட்டார் நரசிங்க மூர்த்தி.]

தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரபத்மன் முதலானோரை ஜெயித்த பெருமை மிக்க வேலாயுத்தை உடைய திருக்கை கொண்ட முருகனே!
அறியாமையோடு கூடிய பெண் அன்னங்கள் ஒன்று கூடி விளையாடுகின்ற பேறை நகரில் வீற்றருளும் பெருமானே!

இயற்கை அழகையும், இறைவன் அழகையும் ஒருங்கே கண்டு மகிழ்ந்து மலையை விட்டு இறங்கி வருகிறோம். படிகளில் ஏறி வருபவர்கள் பாறையடிப் பிள்ளையாரையும் நவகிரகங்களையும் கண்டு வணங்கலாம். அடுத்தாக நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் சேயூர். ‘சேய்’ என்பது முருகனைக் குறிக்கும் சொல். முருகனுடைய ஊர் என்பது பொருள். மதுராந்தகத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது. சென்னையிலிருந்து புறப்படுவதானால் கிழக்குக் கடற்கரையில் பயணித்து ‘எல்லையம்மன் கோயில் பஸ் நிறுத்தத்திலிருந்து வலப்புறம் உள்ளே சென்றால் முதலில் வருவது முதலியார் குப்பம்; அடுத்தது செய்யூர்.

ஊரின் நடுவே முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோயில் உள்ளது. முருகன் இத்தலத்தில் கந்தசுவாமி என்றழைக்கப்படுகின்றான். நுழைவாயிலில் கோபுரம் இல்லை. உள்ளே வந்ததும் இடப்புறம் ஓரத்தில் ‘பிரதான கணபதி’ யைத் தரிசிக்கலாம். இவ்வெளிப் பிராகாரம் மற்ற கோயில்களிலிருந்து மிகவும் மாறுபட்டு விளங்குகிறது. 27 வேதாள உருவங்கள், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்று என்பதாகத் தனித் தனிச் சந்நதிகளில் விளங்குவதைக் காணலாம். ‘அருணகிரியார் அநுபூதியில் ‘வேதாள கணம் புகழ் வேலானே’ என்று பாடியுள்ளார். ‘பூத வேதாள வகுப்பு’ என்று ஒரு தனி வகுப்பே பாடியிருக்கிறார்; முருகபிரான் சூரனொடு பொருத போர்க்களத்தில் ஆடிய அநேகவித பூத வேதாளங்களின் வர்ணனை இவ்வகுப்பில் உள்ளது.

(உ-ம்)
‘‘கஜ ரத பதாகினி அரக்கர் துணிபட்டு விழ
கள முழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன
(அநேகவித பூத வேதாளங்கள்)

[ யானைகளும்’, தேர்களும், காலாட்படையும்’ உள்ள அரக்கர் சேனை அறுபட்டு விழுகின்ற போர்க்களம் முழுதும் ‘முருகவேள் வாழ்க’ எனக்கூறி அவனது திருப்புகழை ஓதி ஒலி எழுப்புவன அநேகவித பூத வேதாளங்கள்]
விசாள நேத்ர வேதாளம், ஆனந்த பைரவ பக்த வேதாளம், ஞானஸ் கந்த வேதாளம், வீர பாகு சேவக வேதாளம் போன்ற பல பெயர்கள் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன. நவகிரஹங்களை வலம் வருகிறோம். ருத்ராட்சமரம் ஒன்று உள்ளது. சிவராத்திரி, திங்கட்கிழமை, பிரதோஷம் முதலான தினங்களில் பக்தர்கள் இதை வலம் வருகின்றனர். பலி பீடம், மயில் மண்டபம், அருகே அருணகிரி நாதர் தனிச் சந்நதியில் இவற்றைக் காண்கிறோம். அந்தம் ஆதி இல்லா குகனுக்கு அந்தாதி பாடிய நம் குருநாதரை வணங்குகிறோம்.

கோயிலுள் நுழைந்து இடப்புறம் குஹசூரியனையும் வலப்புறம் பைரவரையும் வணங்குகிறோம். கருவறையின் இருபுறமும் துவார விநாயகர், துவார கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். எதிரே மயில், வேல், பலிபீடம் உள்ளன. மூலவர் கந்தஸ்வாமி, நான்கு கரங்களுடன் இருபுறமும் தேவிய சூழ் நின்ற கோலத்தில் உள்ளார். மூலவரைச் சுற்றிய கோட்டத்தில் ஸ்தபன விநாயகர் தவிர ஐந்து திருவுருவங்களைக் காண்கிறோம். 1. நிருத்த ஸ்கந்தர் 2. பிரம்ம சாஸ்தா 3. பாலஸ்கந்தர் 4. சிவ குருநாதர் 5. புளிந்தர் [வில் அம்பு ஏந்தி வள்ளியுடன் நிற்கிறார்] இவை ஐந்தும் முருகனின் வெவ்வேறு வடிவங்களே, வள்ளி தெய்வானையுடன் ஷண்முகர் மிகுந்த சும்பீரத்துடன் விளங்குகிறார். தனி அறையில் பல்வேறு உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.

மூலஸ்தானத்திற்குத் தெற்கே உற்சவ மண்டபம் இருக்கிறது. லிங்க வடிவில் சோம நாதர், உடன் மீனாட்சியம்மை வீற்றிருக்கின்றனர் வாசலில் பிரம்மாவும் விஷ்ணுவும், நந்தியும் தரிசனம் தருகின்றனர்.
முருகனின் பல்வேறு திருவுருவங்களைக் கண்டு மகிழ்ந்த பின் தலத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.
 
‘‘ககனார் பதியோர் முறை கோவென
இருள் காரசுரார்படை தூள்பட
கட லேழ்கிரி நாகமு நூறிட விடும் வேலை
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுரனாரிட மேவிய
கருணாகர ஞான பராபரை யருள்பாலா
மகிழ் மாலதி நாவல் பலா கமு
குடன் ஆட நிலாமயில் கோகில
மகிழ் நாடுறை மால் வளிநாயகி மணவாளா
மதி மாமுகவா அடியேன் இரு
வினைதூள்படவே அயிலேவிய
வளவாபுரி வாழ் மயில் வாகன பெருமாளே’’!
 
பொருள்: விண்ணுலகினர் கோ என்று முறையிட, இருள் போன்ற கரிய நிறமுடைய அசுரர் படை பொடிபட, சமுத்திரமும், சூரனுக்கு அரணாக இருந்த ஏழுமலைகளும் கிரவுஞ்ச கிரியும் தூளாகும்படி வேலைச் செலுத்திய வேலாயுதனே!

தாமரையைக் கோயிலாக்கி வாசம் செய்பவள், [அம்புயமேல் திருந்திய சுந்தரி!] தேவர்கள் தொழும் சிவனாரின் இடப்பாகத்தில் குடிகொண்ட க்ருபைக்கடல், ஞான பரதேவதை அருளிச் செய்த பாலா! மகிழமரம், மல்லிகை, நாவல் மரம், பலாமரம், பாக்குமரம் இவற்றின் நிழலில் விளையாடும் மயிலும் குயிலும் களிப்புடன் வாழும் ஊராகிய வள்ளிமலையில் வாழும் பெருமை வாய்ந்த வள்ளியம்மையின் கணவனே! அடியேனுடைய இருவினைகள் தூளாகும்படி என் நாவில் வேலால் ஆறெழுத்தைப் பொறித்த பெருமாளே! வளவாபுரி எனப்படும் செய்யூரில் வீற்றிருக்கும் மயில் வாகனனே!  [முருகன் அருணகிரியாரின் நாவில் வேல் கொண்டு ஆறெழுத்தைப் பொறித்து அவரது வரலாற்றுக் குறிப்பாகும்]
வளவாபுரி, வளவநகர் எனும் பெயர்கள் சேயூரைக் குறிக்கும், சோழனுடைய நகரம் என்பது இதன் பொருள் . ‘‘தெரிதமிழ் வளவனகரியின் முருகா! திருமகள் மருகா! வருகவே!’’  சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்.

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி