பேசும் வல்லமை தருவாள் பேச்சாயி



படைப்புத் தொழில் புரிந்து வந்த பிரம்மா, வழக்கம் போல் தியானம் மேற்கொண்ட போது அவர் மனது ஒருமுகப்படவில்லை. அது வேறொன்றும் இல்லை. காத்தல் தொழில் புரிந்து வரும் பகவான் மகாவிஷ்ணுவை நேரே உருவாய் காண வேண்டும் என்று ஆவல். அதுவே அவரது மனம். ஒரு நிலையாகாததற்கு காரணம். ரம்மன் ஆசை கொண்டதை அறிந்த அனந்தன், அசரீரியாக பேசினார், “பிரம்மா! உனக்கேன் இந்த தருணத்தில் இந்த எண்ணம் உருவானது.” என்றார். “தாமோதரா, தங்களை நேரில் காணவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்.’’ என்றார். ‘‘சரி உன் எண்ணப்படியே ஆகட்டும் என்றுரைத்த சதுர்புஜன், “நீ, ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அனந்தனை நேரில் காண முடியும்’’ என்றார்.

திகைத்து நின்ற திசை முகன் திருமாலிடம் ‘‘ஒரு அசுவமேத யாகத்தைச் செய்து முடிப்பதே பெரும் காரியமாகுமே, எவ்விதம் என்னால் ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்ய முடியும். என்னால் மட்டுமல்ல எவராலும் அது இயலாத காரியமாயிற்றே’’ என்று கூறினார். அதற்கு அனிருத்தன், “பிரம்மனே! பூமியில் சத்திய விரத சேத்திரம் என்றொரு இடம் உள்ளது. அங்கு ஒரு முறை எது செய்தாலும் அது ஆயிரம் முறை செய்ததற்குச் சமமாகும். அங்கே ஒரு பொற்காசு தானம் செய்தால், ஆயிரம் பொற்காசுகள் தானம் செய்ததற்கு நிகராகும். அவ்வாறே அங்கு ஒரு பொய் சொன்னாலும் ஆயிரம் பொய்கள் சொன்னதற்கு நிகராகும். அத்தகைய சத்தியவிரத சேத்திரத்திற்குச் சென்று நீ ஓர் அசுவமேத யாகத்தைச் செய்தால், அது ஆயிரம் அசுவமேத யாகங்களுக்குச் சமமாகும். உன் எண்ணப்படி அனந்தனை நேரில் காணலாம்” என்று கூறினார்.

நான், உம்மை காண தொடங்கும் யாகம் எந்த இடையூறும் இன்றி சிறப்புற அமைய பகவானே எமக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். பின்னர் சத்தியவிரத சேத்திரத்தை நோக்கிச் சென்றார் பிரம்மா. சத்தியவிரத சேத்திரம் வந்த பிரம்மன், வேள்விச் சாலையையும் உத்திரவேதியையும் அமைத்தான். சத்தியவிரத சேத்திரத்தில் ஓர் அழகான நகரையும் உருவாக்கினான்.  காஞ்சிபுரம் = கா+அஞ்சி+புரம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூஜித்தல், புரம் நகரம் என்று பொருள். பிரம்மன் பூஜித்த நகரம் என்பதால் காஞ்சிபுரம் என்று ஆயிற்று.

வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் காஞ்சி மாநகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர். பிரம்மன் காஞ்சியில் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் அசுவமேத யாகம் தொடங்கினார். வேள்விச் சாலையில், கிழக்கு முகமாக அமர்ந்து யாகம் செய்யத் தயாரானார் நான்  முகன். ரிஷிகள், புரோகிதர்கள், வேதவிற்பன்னர்கள் ஆயத்தமாகினர். புரோகிதரான  வசிஷ்டர் அவ்விடம் வந்ததும் “உன்னத யாகம் நடத்தும்போது உரியவளை அழைக்க  வேண்டாமா? மகத்தான வேள்வி நடத்துகையில் மனைவி உடனிருக்க வேண்டாமா!’’ என்று  கேள்வி எழுப்பினார்.

வேள்வி தொடங்கும் வேளையிலே இப்படி ஒரு கேள்வியா  என்றெண்ணிய வேததத்தன், ‘‘ஊடல் ஏற்பட்டதன் காரணமாக விலகி சென்ற வித்யா,  சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிகிறாள்’’ என்றார். அப்படியா என்றதும்  பிரம்மாவின் மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்திரி இருவரையும் பிரம்மாவோடு  அமர வைத்தார். அசுவமேத யாகம் ஆரம்பமானது. பிரம்மா  யாகம் செய்வதையும் அதற்கு தன்னை அழைக்காமல் இருப்பதையும் அறிந்த அன்ன  வாகனி, சாந்த சொரூபினி கலைமகள் கடுஞ்சினம் கொண்டாள். யாகத்தை தடுத்து  நிறுத்தும் பொருட்டு தனது சக்தியால் சந்திரனையும், சூரியனையும் கிரகிக்க  வைத்து சத்திய சேத்திரத்தையே(காஞ்சிபுரம்) இருளில் மூழ்கும்படிச் செய்தாள்.  இருளால் சூழப்பட்ட காஞ்சியில் யாகம் செய்ய முடியாமல் தவித்தார் பிரம்மா.

வேள்வி  இடையூறின்றி நடக்க அருள் புரியுமாறு விஷ்ணுவை வேண்டினார் வேதரஞ்சகன்.  அன்றைய தினம் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரம் நிறைந்த நன்னாள். பொழுது  சாய்ந்து நாளிகை இரண்டு கடந்த நிலையில் விண்ணில் விளக்கு ஒளி போல் ஜோதியாய்  தோன்றினார் திருமால். பிரம்மனின் யாகம் தடையின்றி நடந்தேற  ஒளி கொடுத்து அருளினார். இதைக்கண்டு பொங்கி  எழுந்த புனிதவதி சரஸ்வதி, வேகவதி என்னும் நதியாக மாறினாள். பிரம்மாவின் யாகசாலையை  அழிப்பதற்காகப் புறப்பட்டு வந்தாள்.

வேகவதி வெள்ளம் பொங்கி  வருவதைக் கண்டு, யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் அஞ்சி ஓடினார்கள்.  மீண்டும் திருமாலின் உதவியை நாடினார் பிரம்மா. அப்போது வேகாசேது என்ற  திருநாமத்துடன், அந்த வேகவதி நதிக்குக் குறுக்கே அணையாக வந்து சயனித்தார்  திருமால். பின்னர் பிரம்மா,  சரஸ்வதி இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, இணைத்து வைத்தார்  திருமால். சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி ஆகிய மூவருடன் தனது அசுவமேத  யாகத்தைத் தொடர்ந்து செய்தார் பிரம்மா.

தனது பாபங்கள்  அனைத்தும் தீருவதற்காகவும், இறைவனை க் குறித்த தியானம் நன்கு  கைகூடுவதற்காகவும் பிரம்மா மேற்கொண்ட அந்த வேள்வி, சித்திரை மாதம் வளர்பிறை  சதுர்த்தசியில், ஹஸ்த நட்சத்திரத்தில், ஞாயிற்றுக் கிழமையன்று இனிதே  நிறைவு பெற்றது.

- சு.இளம் கலைமாறன்
படங்க ள்: ஜி.சிவக்குமார்