பேச்சியம்மனின் அவதாரம்சிவபெருமான் உயிர்களுக்கு படி அளக்க புறப்பட்டபின் கயிலையில் பார்வதிதேவி, சிவபெருமான் உண்மையிலேயே படி அளக்கத்தான் செல்கிறாரா? அது எல்லா உயிர்களுக்கும் கிடைக்கிறதா? என்பதை சோதிப்பதற்காக தேவி, சிமிழில்  இரண்டு கட்டெறும்புகளை போட்டு அதில் திருகு ஆணி இட்டு இடுப்பில் சொருகி கொள்கிறார். படி அளந்துவிட்டு கைலாயம் வந்த சிவனிடம், ‘‘சுவாமி, எல்லா உயிர்களுக்கும்படி அளந்தீர்களா?’’  ‘‘அவரவர் செய்த முற்பிறவியின்படி எறும்பு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளந்து தான் வருகிறேன்.’’

‘‘என்னிடத்தில் இரண்டு ஜீவன்கள் பசியோடு உள்ளது.’’
‘‘எங்கே அந்த ஜீவன்களை என்னிடத்தில் காட்டு’’.

பார்வதிதேவி தன்னிடமுள்ள சிமிழை திறந்து காட்டினார். அப்போது இரண்டு கட்டெறும்புகளும் தனது வாயில் அரிசியை கவ்விக் கொண்டு சிமிழுக்குள் வலம் வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட தேவியார், சிவனிடம், ‘‘சுவாமி தங்களை சோதித்தமைக்கு என்னை மன்னித்தருள வேண்டும்.’’ ‘‘என்னையே! சோதித்தமைக்காக  வனப் பேச்சியாகவும், நாகக் கன்னியின் கருவில் அஷ்ட காளியாகவும் பிறக்கவேண்டும்’’ என சிவனார் கூறினார். இந்நிலையில் பார்வதிதேவி குழந்தை வரம் கேட்க தூண்டா மணிவிளக்கை சிவனார் தூண்ட, பார்வதி தேவியின் முந்தானையில் முத்துச் சுடர் மூன்று விழுந்தது.

முதல் பிறந்தவன் முண்டன், பின் பிறந்தவள் பேச்சி, அடுத்து பிறந்த சுடலை என மூன்று பேரையும் சிவபெருமான் பூலோகம் அனுப்பி வைக்கிறார். பூலோகம் வந்தவர்கள் தில்லை வனம் வருகிறார்கள். அங்கிருந்து மலையாளநாடு சென்றவர்கள் தென் பொதிகை மலைக்கு வந்து அமர்கிறார்கள். மயானம் சென்றதால் மயான பேச்சி என்றும், பேய்களை ஆட்சி செய்ததால் பேய்ச்சியானதாகவும் அது மருவி பேச்சி என்றும் அழைக்கப்பட்டது.  பிரம்மனின் சக்தியே இந்த பேச்சியம்மை என்றும் கூறுகின்றனர். இங்கு பிரம்மனின் சக்தி என்பது சரஸ்வதி ஆவாள். சரஸ்வதி கல்வி, கேள்வி, பேச்சு, கலை போன்றவற்றிற்கெல்லாம் அதிபதி ஆவாள். படைப்பு என்பதை பிரம்மனாக கொண்டால் அந்த படைப்பிற்குள் நுணுக்கத்தையும், நுட்பங்களையும், அழகியலையும், அள்ளித்தெளித்து படைப்பை வேறொரு கோணத்தில் காட்டும் சக்தியையே சரஸ்வதி என்கிறோம். எனவே தான் புராணங்கள் பிரம்மனையும், சரஸ்வதியையும் தம்பதியராக போற்றுகின்றன.

இந்த இரு தெய்வங்களும் படைப்பிற்குள் அழகும், அழகிற்குள் படைப்பும் என பிரிக்கொண்ணாத அளவுக்கு இடம் பெற்றிருக்கின்றனர். கிராமங்களில் மிக எளிதாக, நேரிடையாக சரஸ்வதியை பிரம்மசக்தி என அழைத்து பூஜித்து வருகின்றனர். மேலும் பேச்சியை சுற்றிலும் செவி வழிக்கதைகள் சொல்வதற்கான காரணம் என்பது அந்த தெய்வத்தை பல்வேறு கோணங்களில் சமூகத்தில் நிலைநிறுத்தவே ஆகும். இன்னும் பார்ப்போமானால் வழிபாடு, சடங்கு என்று பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கி அந்த தெய்வத்தை பெரும் மரபில் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள். இதுபோன்று பேச்சியம்மன் குறித்து பல்வேறு கதைகள் கிராமப்புறங்களில் செவி வழிக்கதைகளாக
சொல்லப்படுகிறது.

சு.இளம் கலைமாறன்
படங்கள்:  ச.சுடலைரத்தினம்