நன்மைகள் பெருக்கும் நாமக்கல் நரசிம்மர்



நலம் தரும் நரசிம்மர் தரிசனம்  17

நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணு தலங்களாக உள்ளன. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையினுள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் திருமால் இங்கு எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரங்களில் திருமால் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தாலும், நரசிம்மரே இங்கு பிரதானம். முதலில் கோயிலுக்கு முன்னே அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நதி. நரசிம்மர் மிகவும்  கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறார். தேவி-பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர். நாமகிரித் தாயார் கிழக்கு  நோக்கி எழுந்தருளியுள்ளார்.

கணித மேதை ராமானுஜம் இத்திருக்கோயிலின் நாமகிரி தாயாரின் பக்தர்.  அவருக்கு கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்கு கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின்  வழிமுறைகளை எழுதுவது ராமானுஜத்தின் வழக்கம். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். இந்த அனுமன் கண்களும் சோளிங்கர் போலவே நரசிம்மரது பாதங்களைப் பார்க்கின்றன.  கோட்டையின் மேற்குபுறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருக்கிறார். காலடியில் சங்கர நாராயணர். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயார் சேவை  சாதிக்கிறார். கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்த தீர்த்தக்குளமாகக் கருதப்படுகிறது. அடுத்து மலையேறி வரதராஜரைத் தரிசிக்கலாம்.

ஹிரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரஹலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர, திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில்  தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை  கையிலிருந்து கீழே வைத்தார். தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை. எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கேதான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரிகிறாள் என்பதால், அவளுக்கு அருள்  புரியவே நரசிம்மர் இங்கே தங்கி விட்டாராம்.
ஹிரண்யனை வதைத்த கரங்களோடு நரசிம்மர் வீற்றிருப்பதால் நரசிம்ம மூர்த்தியின் விரல் நுனிகள் சற்றே சிவந்தாற்போல் காணப்படுகிறது.சோளிங்கர் தலத்தைப் போலவே முதலில் நாமகிரி தாயாரை தரிசித்துப் பின் நரசிம்மமூர்த்தியை வணங்கி, பின் அனுமனை தரிசித்தல் இங்கும் வழக்கம். பங்குனி உத்திரத்திற்கு முதல்நாள் நரசிம்மர், தேவி, பூதேவி, ரங்கநாதர், ரங்கநாயகித்  தாயாருக்கு குளக்கரை மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அப்போது தம் திருமண வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள் மொய்ப்பணம் வைக்கின்றனர். இந்தப் பணம் ஆலய நிதியில் சேர்க்கப்படுகிறது. அனுமனின்  தோள் மீதமர்ந்து போருக்குச் செல்லும் ராமபிரானை ‘நாமக்குன்றமீதமர்ந்த நரசிங்கமே’ என்று அனுமனை நாமக்கல் மலையாகவும், ராமனை நரசிம்மராகவும் உருவகப் படுத்தி கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியுள்ளார்.

 ஒரே நாளில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக தேர்த்திருவிழா நடப்பது இத்தல விசேஷம். இந்தக் கோயில்கள் 1300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திரவர்மன் அமைத்த குட்வரைக் கோயில்களாகும். அதியேந்திர  விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றி ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.இங்கு அமைந்துள்ள  நாமகிரித் தயார் மேற்கிலிருந்து கிழக்கு  நோக்கி  நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.  இங்குள்ள  நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல செல்வங்களும், பில்லி, சூனியம்  போன்றவை  ஒரு மண்டல காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.  இத்திருக்கோயிலின்  பெயராலேயே திருவரைக்கல் எனப்படும் நாமக்கல் நாமகிரி என முன்பு புராணங்களில்  கூறப்படுகிறது.இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது.   இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர்  வீற்றிருக்கிறார்.  அருகில் பூஜக முனிவர்களான சநக சநந்தர்களும், சூர்ய  சந்திரர்களும் கவரி வீச  வலது புறம் ஈஸ்வரனும், இடதுபுறம் பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர  வழிபடுகிறார்கள்.

 மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்ததால் இங்கு  லட்சுமி நரசிம்மர் என  அழைக்கப்படுகிறார்.   பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் ஒரே இடத்தில் அருள் பாலிப்பதால் மும்மூர்த்தி தலம் என அழைக்கப்படுகிறது.  உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே  தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார்.  அவற்றில் ஒன்று  இத்திருத்தலம்.இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரம சிவனிடமிருத்து 50 கோடி ஆட்களையும் தேவர்,  மானுடர், ஜலம், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு  வேளைகளில் சாகா வரம் பெற்றார்.  பரமேஸ்வரனின்  வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும்,  தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்விதயாகமும், பஜனைகளும்  நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர்   சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக இரண்யன் மகனாக பிறக்க கட்டளையிட்டார்.  கருவிலேயே  நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனை தக்க வயதில் குருகுலத்திற்கு இரணியன்  அனுப்பினான்.

இரண்யன் கட்டளைப்படி இரண்யாய நமஹ என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் “ஓம் நமோ நாராயணாய நமஹ” எனக் கூறினான்.  அதன்படி இரணியனிடம் ஆசிரியர் கூற.  பலவகைகளிலும்  தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன்.   கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள்  கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன  காத்தன. இதனைக் கண்ட இரணியன் பிரகலாதனிடம், வேண்டுமானால் நாராயணனை  எனக்கு  காட்டு, எனக் கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான்.அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்து நரசிம்மமூர்த்தி  காட்சியளித்தார்.  அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனை தன் சிங்க நகம் போன்ற கூரிய நகத்தால்  அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத   நரசிம்ம அவதார மூர்த்தியான மந்  நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல  பயந்தாள்.  பிரகலாதன்  நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, நரசிம்மர்  ராஜ்யபட்டாபிஷேகம்  செய்து அருட்பாலித்தார்

அவனும் அது முதல் பூஜித்து வரலானான்.இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர, திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக்  கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை. எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர். அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணுவாகக்  கருதப்படுகிறார். நரசிம்மரை கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு அருள்மிகு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருட்பாலித்த வண்ணம் எழுந்து அருள்கின்றார். நரசிம்ம ஜெயந்தி இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்