ஆனைமுகனின் ஆனந்த தரிசனம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

‘‘பன்னிரெண்டு ராசிகளும், ராசியான பிள்ளையாரும்,’’ பகுதியில் இடம் பெற்ற, அவரவர் ராசிக்கான பிள்ளையார் பற்றிய தகவல்களை இதுவரை நாங்கள் எங்கும் கேட்டதில்லை, படித்ததும் இல்லை. ‘உள்ளதைச் சொல்கிறோம்’, இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நாங்கள்  அனைவரும் அவரவர்களின் ராசியான பிள்ளையாரைத் தெரிந்துகொண்டு அவரை மனதாற வணங்கி நின்றோம். இந்தப் புண்ணிய பலனை கொடுத்த ‘ஆன்மிகம்’ இதழுக்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- S. ஜெயந்தி,கீழக்கட்டளை, சென்னை-117.

துன்பங்கள் அனைத்தையும் கண நேரத்தில் போக்கிடும் கணநாதனின் அட்டைப்படம் கோயிலில் சென்று அவரை நேரிலேயே தரிசித்ததைப் போன்ற மனநிறைவை அளித்தது. ஆன்மிகத்தின் அட்டைப்படங்கள் நெஞ்சில் அட்டையைப்போல  ஒட்டிக்கொள்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. விநாயகரின் முன்னோர் வழிபாடு வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதில் எவ்வளவு  தத்துவங்கள் நிறைந்துள்ளன என்பதை ‘ஞானக்களிறு’ தலையங்கத்தில் தெளிவாக   விளக்கியிருந்தது அருமை. இதுநாள் வரை இருந்து வந்த பற்பல சந்தேகங்களை  நிவர்த்தி செய்யும் விதமாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.
- மு.மதிவாணன்,அச்சல்வாடி அஞ்சல், அரூர்-636903.க்ளோசப் ஷாட்டில் விதவிதமான ஆபரணங்களுடன் அட்டையில் ஜொலிக்கும் பிள்ளையார் பக்திப் பரவசமூட்டினார்.

ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம்! ஏன் தேங்காய் உடைக்கிறோம்! இவ்விரண்டும் பல ஐயங்களை போக்கி விட்டன.- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.ஆனைமுகனின் அழகிய அட்டைப்படம் கண்ணைக் கவர்ந்தது. விநாயகரின் தத்துவத்தை விளக்கும் ஆசிரியரின் தலையங்க கட்டுரை வெகு சிறப்பாக அறிவுப் பூர்வமாக இருந்தது. விநாயகரின் வியத்தகு தரிசனப் படங்கள், கட்டுரை மிகவும் விவரமாக மனதைத் தொடும் விதமாக அமைந்திருந்தது. வழக்கமான தொடர்கள் அற்புதம். ‘நலம் தரும் நரசிம்மர் தரிசனம்’ தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆன்மிக உலகின் மாணிக்கப் பெட்டகம் ‘ஆன்மிக பலன்’தான்.
- ஆயுள் வாசகன்,இரா. கல்யாணசுந்தரம், கொளப்பாக்கம்.

விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷல் ஆனைமுகத்தானின் புகழ் பாடியிருந்த விதம் ‘அருமை அருமை அருமை’ காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் அருமை பெருமைகளை அழகுற எடுத்துரைத்திருந்தது  ‘‘நாடே திரும்பிப்பார்த்த 48 நாட்கள்’’  என்ற கட்டுரை.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பொறுப்பாசிரியர் அவர்களின் ‘ஞானக்களிறு’ எனும் தலைப்பில், தலையங்கம் மிகவும் பாராட்டுக்குரியது; விரிவாக, புரியும்படி தகவல்கள் மின்னின; பல்வேறு விநாயகர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம் என்ற செய்தி, நீண்ட நாளாகக் காத்திருந்த வினாவிற்கு சரியான விடை கிடைத்துள்ளது.
- சு.இலக்குமணசுவாமி,வெங்கடேஸ்வரா நகர்,  மதுரை-6.

சக்தியின் தத்துவம் தொடர் குடும்பத்தோடு படித்து வருகிறோம் ஆன்மிக இதழ்களிலே தனி முத்திரை பதித்து வருகிறது எங்கள் ஆன்மிகம்.
- தஞ்சை ஹேமலதா,வெண்டையம்பட்டி,.

வரலாற்று தென்றலில் வலஞ்சுழி, ‘ஞானக்களிறு’ என்ற ஆசிரியர் தலையங்கம் தொடங்கி முழு முதற்கடவுளான கணபதியாரின் மகத்துவங்கள் கூறும் பல்வேறு கட்டுரைகளை தொகுத்து ஒரு முழுமையான விநாயகர் சதுர்த்தி மலரை  சமர்ப்பித்து வயிறு புடைக்க மோதகம் சாப்பிட்ட மாதிரி திணறடித்து விட்டீர்கள். தங்கள் சீரிய பணிக்குப் பாராட்டுக்கள்!
- அயன்புரம்த.சத்திய நாராயணன்,பட்டாபிராம், சென்னை-72.