லலிதா செல்வாம்பிகை



*செல்லப்பிராட்டி, செஞ்சி

லலிதம் என்றாலே இதமானது, அழகானது என்று பொருள். லலிதாம்பிகையை மகாசக்தியும் பேரழுகும் ஒருங்கே பெற்றவள். அப்படித்தான் இந்த தலத்தில் அருளும் அம்மனும் கருவறையில் விளங்குகிறாள். ஆனால், உருவத்தோடு அல்ல.  சக்தியின் அம்சத்தோடு... அதாவது செவ்வக வடிவ கருங்கல்தான் இங்கு லலிதா செல்வாம்பிகை. நான்கடி உயரமும், இரண்டடி அகலமுமான கற்பலகைக்குள் லலிதா எனும் ஆதிசக்தி எழுந்தருளியிருக்கிறாள். ஆயிரம் வருடங்களாக  இப்படித்தான் அருள்கிறாள். நாமாக விக்ரகங்கள் அமைத்து அதற்குள் சக்தியை அமரவைப்பது என்பது வேறு. சிறு மனைப் பலகையில் அமர்ந்த சுமங்கலி பெண் போல், ‘நான் இருக்க இந்த கல்லே போதும்’ என்று எளிமையாக வீற்றிருக்கிறாள்.  

மந்திர பீஜாட்சரங்களை கல்லின் மீது பொறித்துள்ளனர். கருவறையை நெருங்கும்போதே உடல் சிலிர்த்துப் போடும். ராமர் பிறக்க தசரத சக்ரவர்த்திக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  தேவி இவள். குழந்தை பாக்கியம் கிட்டுவதற்காக வந்து வேண்டிக் கொள்கிறார்கள். மூலவராக லலிதை கற்பலகையில் அருளினாலும், உற்சவ மூர்த்தியாக பேரழகு வாய்ந்த லலிதா செல்வாம்பிகை சிலையை நிறுவியிருக்கிறார்கள். திண்டிவனம் -  திருவண்ணாமலை நெடுஞ்சாலையிலுள்ள செஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.