உலகளாவிய காளி கோட்பாடு



இந்தியாவில் பெண் முதன்மை சமுதாயத்தின் பிரதிபலிப்பாக வழிபடும் ஆக்ரோஷப் பெண் தெய்வ வழிபாடு போலவே ஐரோப்பிய நாடுகளிலும் வழிபட்டனர். காளி என்பது இந்தியாவில் வணங்கப்படும் தெய்வப் பெயர் என்றாலும் இது ஒரு  தெய்வம் மட்டுமன்று. இது ஒரு கோட்பாடு. பிறப்புக்கும் இறப்புக்கும் உடைய பெண் தெய்வம் என்ற  பொருளில் அஸ்டெக் இனத்தவர் கொட்லிக்யு என்ற பெயரில் ஒரு பெண் தெய்வத்தை வழிபட்டனர். அவள் தன் இடுப்பில் பாம்புகளை  உடையாக உடுத்தியிருந்தாள். [இந்தியாவில் காளி வெட்டப்பட்ட கைகளை கோர்த்து தன் இடுப்பில் ஆடையாக அணிவாள்]. கொட்லிக்யு  அருவருப்பானவளாகவும் கருதப்பட்டாள். ஸ்பெயின் நாட்டில் கிரடுலபே என்ற தெய்வம் காளியை நிகர்த்தவளாக இருந்தாள். அவள் தலை வெட்டப்பட்டு அங்கிருந்து இரண்டு ரத்த ஊற்று  பீய்ச்சி அடிக்கும். அது இரண்டு பாம்புகளின் உருவில் தோன்றும். இவள் இடுப்பில் பாம்பை  கச்சையாக அணிந்திருப்பாள். மார்பில் மனித இதயங்களை கோர்த்து மாலையாக அணிந்திருப்பாள். இந்த கழுத்தணியில் பதக்கமாக மண்டையோடு இருக்கும். [இந்தியாவில் காளி மண்டையோடுகளைக்  கோர்த்து  மாலையாக அணிவாள்] இவளது தலை மேலே இருக்கும் மோட்சத்தையும் கால் அதற்குக் கீழே இருக்கும் பாதாளத்தையும் குறித்தன.

ருஷ்யப் பழங்குடிகளின் பெண் தெய்வமான ரா என்பவள் கோபக்கனல் தெறிப்பவள் என்பதால் சிவப்பு நிறமாகக் காட்சி தருவாள். அதனால் அவள் பெயர் ரா. அதாவது சிவந்தவள். ஏஜியர்களின் ஜெகன் மாதா ரியா எனப்படுவாள். இவளும் பிறப்பு  இறப்பு இரண்டுக்கும் உரிய அதி தேவதை ஆவாள். சிவனிடம் இருந்து தோன்றிய காலனின் பெண் வடிவம் காளி என்றதை போன்று ரியாவுக்கு காலப்போக்கில் ஒரு கணவர் தெய்வத்தை [a husband God] அம்மக்கள் கொண்டு வந்தனர். அந்த ஆண் கடவுளின் பெயரும் காலன் தான். அவன் பெயர் kronus / Chronus. கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்த இச்சொல் காலம் அடிப்படையில் [Chronology] என்பதையே குறித்தது.  செல்டிக் பழங்குடியினர் தங்கள் பிள்ளைகளைக் கொன்று தின்னும் பெண் தெய்வத்தை ரியானோன் என்று அழைத்தனர். இந்த ரியாவும் வானத்தின் தந்தை யுரேனசை கொன்றாள். யுரேனசை கேலெயாக் என்ற பெயரில் ஓர் அழிவுக் கடவுள்  செல்டிக் இனத்தவர் வணங்கி வந்தனர்.  இவள் கருப்பு நிறத்தவள். இவளே படைப்புக் கடவுள் ஆவாள். இவள் கணவன் மறைவுக்குப் பிறகும் வாழ்ந்தவள். இவளது மேலுடையில் இருந்து கற்கள் உதிர்ந்து மலைகள் தோன்றியதாக நம்புகின்றனர்.  எனவே, இவளே உலகத்தைப் படைத்தவள். இங்கு இந்த தெய்வத்துக்கு ஆடு வெட்டி பலி கொடுக்கின்றனர். ‘கேலெலாக்’ என்றால் மூத்த பெண், கன்யாஸ்த்ரி, ஆண் முகம் காணாதவள் என்று பொருள் படும். இவளுக்கு ஆண்களைப் பிடிக்காது. இவள் ஆண்களை வெறுப்பவள் என்ற கருத்தாக்கம் இந்தியக் காளி கதையுடன் ஒத்துப்போகின்றது.  தன்டகாசூரன் இறைவனிடம் தனக்கு  பதினாறு வயது வரை ஆண் முகம் பார்த்திராத கன்னிப் பெண்ணால் மரணம் நேரிடலாம் என்று  வரம் பெற்றான். அது போல அவனை கொல்ல காளி வந்தாள்.  

வேறு நாடுகளிலும் கொலைத் தெய்வமாகப் பெண்ணைப் போற்றிய  காலத்தில் இருந்து அவளை ஆண் வாடை அறியாதவளாக ஆணை வெறுப்பவளாகவே உருவகித்துள்ளனர். இந்த நாடுகளில் இடைக்காலத்தில் எழுத்தப்பட்ட நூல்களில்  இவளை கருப்பு ராணி என்று அழைத்தனர். சொர்க்கத்தில் வசித்த இந்த கருபபு ராணி ஆண்களைக் கருவுற்பத்திக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு பின்னர் அவர்களைக் கொன்று விடுவாள் என்ற தகவல்கள் உள்ளன. அயர்லாந்தில் பெண் பூசாரிகளை ‘கேல்லஸ்’ என்பர். அதாவது கேலெ என்ற தெய்வத்துக்குப் பிறந்தவர்கள் இப்பெண்கள். கேளே என்ற சொல்லில் இருந்து சக்சன் [saxon] மொழி பேசுவோர் கேலேண்டர் என்ற சொல்லைக் கொண்டு வந்தனர்.  சந்திரனை அடிப்படையாகக்  கொண்டு நாட்காட்டி தயாரிக்கும்  lunar calender முறை இவர்களிடமும் இருந்தது. இவர்கள் அந்த நாட்காட்டியை ‘லூனார் கேலேண்டர்’ என அழைத்தனர். இந்த நாட்காட்டி வசந்த காலத்தில் இருந்து மார்ச் 14  முதற்கொண்டு தொடங்கும். இதே முறை தான் இந்தியப் பஞ்சாங்கங்களிலும் பின்பற்றப்படுகிறது. வருடப்பிறப்பு சித்திரை மாதத்தில் இருந்து தொடங்கும். பௌர்ணமி வரும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பன்னிரெண்டு மாதங்களுக்கு  பெயரிடப்பட்டது.  மதி [சந்திரன்] பெயரில் கணக்கிடப்பட்டதால் மாதம் எனப்பட்டது. சந்திரனின் ஒரு முழு நிலா நாளில் இருந்து மறு முழு நிலா நாள் வரும் வரை இருபத்தெட்டு நாட்கள் ஆகும் அதுவே ஒரு மாதம் எனப்பட்டது. 28 நாட்கள்  கொண்டது  ஒரு மாதம். குழந்தை பெற பத்து  மாதம் ஆகும் [280 நாட்கள்] .
   
‘‘கேலெ’’ என்ற தெய்வத்தை ‘ஸ்காட்டியா’ என்பர். ஸ்காட்டியாவின் மக்கள் வாழ்ந்த நிலம் ஸ்காட்லாந்து எனப்பட்டது. செல்டியப் பழங்குடியினர் இத்தெய்வத்தை ‘ஸ்காத்தா’ [scatha] என்றும் ஸ்கித் [scyth] அழைத்தனர்.  ஸ்கேண்டிநேவியாவைச் சேர்ந்தவர்கள் ஸ்கதி [scathe]  என்று இப்பெண் தெய்வத்தை அழைக்கின்றனர். பெண் முதன்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இத்தெய்வத்தை தமது தாய்த்  தெய்வமாகப் போற்றும் மரபு பல நாடுகளிலும் காணப்படுகிறது. பாரசிக நாட்டில் வாழும் நாடோடிகள்  [ஜிப்சிகள்] கேலண்டிரிஸ் என்ற பெயரில் தனைகளை கேலியின்  பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர். இந்த ஜிப்சிகளின் பெயரும் ‘கல் தர’  அல்லது ‘கதேராஷ்’ என்பதாகும். கருப்பு தெய்வம் குழந்தை பெறுவதை போல் உருவகிப்பதும் இங்கு வழக்கில் உண்டு. இவளை ‘துருயிட் குரோட்டோ’ என்பர்.  குரோட்டோ என்றால் கருவறை.  ஆண் வாடை அறியாத கன்னிப் பெண் என்பதால் குழந்தை பெறும் இந்தக் கன்னிப் பெண்ணை ஜிப்சிகள் ‘சாரா கேலெ’ என்கின்றனர். சாரா கேலெ என்றால் கேலெ ராணி என்பது பொருள். இவளே இவர்களின் தாய், ஆட்சியாளர், ராணி என  அனைத்தும் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் பியாற்றிஸ், மடோனா, ஆக்னெஸ், சாரா  என்று பல தாய் தெய்வங்களை வழிபட்டனர். இவர்களின் ஒருமித்த சேர்க்கையே ரோமர்கள் தமது தாய் தெய்வ வழிபாட்டிற்காக பின்னாளில் கத்தோலிக்க  மதத்துக்கென்று தோற்றுவித்த கன்னி மரியாள். ரோமானியர் தாங்கள் வணங்கிய கன்னித்  தாயை ஆற்றல் மிகு தெய்வத்தை,  ‘அனைத்து ரோமானியரின் ரத்த மூலம் [மூலாதாரம்]’  என்பர். ஸ்பெயின் மொழி பேசியோர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தபோது தாங்கள் வணங்கி வந்த கேலெ என்ற பெண்தெய்வத்தின் பெயரால் அந்த புதிய நிலப் பகுதியை கேலிஃபோர்னியா என்று அழைத்தனர். ஃபின்லாந்து பகுதியில் இப்பழைய பெண் தெய்வத்தை காளிமா என்றும் கல்மா என்றும் குறிப்பிட்டனர். இவள் கல்லறையில் இருக்கும் பிணங்களைத் தோண்டி தின்பாள். சாரா கேலெ என்றும் இவளை அழைப்பதுண்டு. சாரா கேலெ என்றால்  கேலெ ராணி என்று பொருள். .அதாவது அவளே எல்லோருக்கும் மேம்பட்டவள் அதிகாரம் மிக்கவள் என்பதாகும். பிரான்ஸிலும் சாராவை வணங்கும் பழக்கம் உண்டு.   
    
காளி தன் காதுகளில் தான் கொன்றழித்த குழந்தைகளை  குண்டலங்களாகத் தொங்க விட்டிருப்பாள். தனது இனத்தைத் தானே அழிக்கும் கால தேவதை என்ற பொருளில் அங்கும் ரியாவை வணங்குகின்றனர். கோபம் வந்தால் நோய் வெள்ளம் நில
நடுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி தனது  இனத்தை தானே அழித்து விடுவாள் என்ற அச்சம் மக்களுக்கு இருக்கிறது. மக்கள் ஆயுட்காலத்தின் கணக்கை முடித்து வைக்கும் கால தேவதை இவள் என்ற கருத்தியல் உலகெங்கும் இருப்பதை  அறியலாம். ஆங்கிலத்தில் இவளை Cannibal mother என்றும் Goddess of Time என்றும் அழைக்கின்றனர். தென் தமிழகக் கிராமங்களில் பிள்ளை தின்னி இராக்கச்சி என்ற பெண் தெய்வம் உண்டு. இத்தெய்வத்தைக் கைகளில் பிள்ளைகளைத் தொங்க விட்டிருப்பதாகவும் தனது  மடியில் ஒரு பிள்ளையை மல்லாக்கப் போட்டிருப்பதாகக்  வடிவப்படுத்துவர். இராட்சசி என்ற பெயரின் திரிபு இராக்கச்சி என்பதாகும். மதுரையின் அருகில் உள்ள அழகர் கோயில் மலையில் உள்ள சுனையின் தெய்வம் தீர்த்தக்கரை ராக்கு எனப்படும் இத்தெய்வத்தை வணங்குவோர் தம் பெண் குழந்தைகளுக்கு ராக்காயி, ராக்கம்மாள், ராக்கு எனப் பெயரிடுவர். இராக்கச்சி என்ற  பெயரின் குறு வடிவமே ராக்கு.பெண்ணின் ஆளுமை திறன் மிகுந்த காளி என்ற வடிவம் வரலாற்றால் மறக்கடிக்கப் படவில்லை. அந்தப் பதிவு சிவ புராணத்தின் மூலமாக தோல்வியுற்ற பெண்ணாக காட்டப்பட்டாலும் கூட கதைகளும் காளியும் இன்னும் இருந்து கொண்டுதான்  இருக்கிறார்கள்.

முனைவர் செ. ராஜேஸ்வரி