படிகளாய் அருளும் பஞ்ச பஞ்சிகா தேவியர்



நவராத்திரி கொண்டாடுவதன் நோக்கமே சக்தி வழிபாட்டின் சகல அம்சங்களையும் அறிந்து கொள்வதேயாகும். சக்தி வழிபாடு என்பது வேப்பிலையிலிருந்து தொடங்கி ஸ்ரீசக்ரம் வரை பல்வேறு சம்பிரதாயங்களை ஊடறுத்துச் செல்வதாகும். இதில் ஆதிசங்கரரால் மிகவும் மரபார்ந்த முறையில் வளர்க்கப்பட்ட ஸ்ரீசக்ர பூஜை என்பது அதிமுக்கியமானதாகும். ஸ்ரீசக்ரத்தை மையமாக வைத்து ஏராளமான பூஜை முறைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு கோணத்திற்கும் ஒவ்வொரு தேவியர்  உண்டு. இதையேதான் சம்பிரதாயத்தில் பஞ்ச பஞ்சிகா தேவியர் என்று அழைப்பர்.
இதைக் குறித்த விஷயங்களை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஸ்ரீசக்ரத்தை உங்கள் மனதாகக் கொண்டால் அதன் மையத்தில் லலிதா திரிபுரசுந்தரியை  அமர்த்திப் பாருங்கள். மனமே ஸ்ரீபுரம் எனப்படும் தேவியின் கோட்டையாக மாறிப் போகும். ஸ்ரீசக்ர பூஜை என்பது தொன்மையான நேர்வழியாகும். இதில் தடுக்கும்போதெல்லாம் தேவி தூக்கி நிறுத்துகிறாள். கூடவே தான் துணையிருப்பதையும்  உறுதி செய்கிறாள். வாருங்கள்… பஞ்ச பஞ்சிகா தேவியர் குறித்து அறிவோம்.   

ஸ்ரீசக்ரத்தின் நடு திரிகோணத்தின் மூன்று மூலைகளிலும் காமேஸ்வரி, வஜ்ரேஸ்வரி,
பகமாலினி எனும் தேவிகள் வீற்றிருக்க அதன் நடுவில் பிந்து எனப்படும் மையத்தில் திரிபுரசுந்தரி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் என்ற ஐந்தொழில்களையும் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக இந்த  உலகை பரிபாலனம் செய்து கொண்டு தேவி திருவருட்பாலிக்கிறாள். இவள் அமர்ந்திருக்கும் ரத்னமயமான கட்டிலின் கால்களாக ருத்ரன், ஈசன், நான்முகன், திருமால் எனும் நால்வரும் துலங்க சதாசிவனே அந்த மஞ்சத்தின் பலகையாக இருக்க  அவன் மேல் அமர்ந்து அருளும் திருக்கோலம் கொண்டவள் இவள். பரப்ரம்ம மஹிஷியான இவளே அன்பின் சக்தியாகவும் கொண்டாடப்படுகிறாள். அத்தேவி படிக்கு ஐந்து தேவியர் அமர்ந்தருளும் ஐந்து படிகள் கொண்ட பீடத்தின் மீதே  கோலோச்சுகிறாள். இந்த தேவியர் பஞ்ச பஞ்சிகா தேவியர் அதாவது இருபத்தைந்து தேவியராக, தேவி வழிபாட்டில் வழிபடப்படுகின்றனர். அவர்களைப் பற்றி அறிவோமா!

1. பஞ்ச லட்சுமியம்பா

1.1 ஸ்ரீவித்யாலட்சுமி

இத்தேவி லலிதாம்பிகையே. இந்த இடத்தில் அன்னை ஸ்ரீவித்யாலட்சுமி என வணங்கப்படுகிறாள். தேவி தன் வலது முன் கையில் தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ என்ற ஐந்து புஷ்பங்களையே பாணங்களாகக்  கொண்டிருக்கிறாள். பூக்களிலுள்ள தேனைப்பருகும் வண்டுகள் ‘ஹ்ரீம்’ என்று பாடுகிறது. ஹ்ரீங்காரத்துடன் வண்டுகள் தேனை சேர்ப்பதால் தான் வண்டெச்சில் ஆன தேன் பூஜைக்கு உகந்ததாக உள்ளது. தேவி இடது முன்கையில் கரும்பையே  வில்லாகக் கொண்டிருக்கிறாள். நம் மனமே தேவி கைக்கரும்பு வில் கரும்பிலிருந்து தான் கற்கண்டு, சர்க்கரை வெல்லம் போன்ற இனிப்பு பொருட்கள் கிடைக்கிறது. மனம் என்னும் கரும்பு, வில்லில், கருணை என்ற புஷ்பங்களால் தேவி நம்  விருப்பங்களை நிறைவேற்றுகிறாள். நம் விருப்பங்கள் நியாயமாகவே இருக்க வேண்டும்.

1.2. ஸ்ரீ லட்சுமி லட்சுமி

இத்தேவி தன் மேலிரு கரகமலங்களில்
தாமரைமலர்களை ஏந்தியும்கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை தாங்கி பொன்னிற ஆடை அணிந்து பொன்னாபரணங்கள் மின்ன நான்கு புறங்களிலும் நான்கு யானைகள் சூழ திருவருட்பாலிப்பவள். குங்கும நிறத்தவளான தேவி, யானை  மஸ்தகத்தைத் தோற்கடிப்பது போன்ற கனத்த ஸ்தனங்கள்; ஸ்தனங்களின் கனத்தால் நுண்ணிய இடை ஒடியாமலிருக்க, இடை மும் முறை வல்லிக்கொடியால் சுற்றப்பட்டது போல் வயிற்றின் மும் மடிப்புக்கள். சிவந்த நிறமும், பருத்த  தனங்களும் சங்கரரின் கண்களுக்கு ஆனந்தம் அளிக்கும் அம்ருதம் போல் விளங்குகிறது.

1.3. மஹாலட்சுமி லட்சுமி

இத்தேவி தன் மேலிரு திருக்கரங்களில் கண்ணாடி, பூரணபொற்கலசம், கீழிரு திருக்கரங்களில் இரு பொற்றாமரை, அமிர்தம் ஏந்திய திருக்கோலம் கொண்டவள். அம்பிகையை வணங்கினால் அதிக வரம் பெறலாம்’ என்பர் சான்றோரும்.  எப்படிப்பட்ட மனக்கலக்கம், துயர் எல்லாம் தீர்க்க வல்லவள் தேவி லலிதாம்பிகையே ஆவாள். தேவியை வணங்குபவர்களின் அருள் தாகத்தைத் தணிக்கும் மேகமாகவும், ஸம்ஸாரமாகிய அடர்ந்த இருளில் ஒளிவீசும் தீபமாகவும் தேவி  விளங்குகிறாள். லலிதா ஸஹஸ்ர நாமாவில் 742 முதல் 749 நாமாக்களில் தேவியின் கருணை பேசப்படுகிறது.

1.4. த்ரிசக்தி லட்சுமி

இத்தேவி தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், வில், அம்பு தரித்தவள்.தேவியின் திருவடித் தாமரைகளின் வீசும் ஒளிக்கிரணங்கள் நகங்களின் வெண்மையான ஒளியை கொக்குகளின் வரிசைகளுக்கும், தேவியின் பாதங்களை நமஸ்கரிக்கும்  வேத மாதர்களின் விரிந்த கருங்கூந்தல் கார் மேகங்களுக்கும் ஒப்பிடப்படுகிறது. மேகங்களில் தோன்றும் மின்னலோ, மேகங்களின் ஓடவாட்டில் தோன்றும் வெள்ளிக் கோடே என்று காண்கிறது. இப்பொழுது தேவியின் பாதங்கள் செக்கச் சிவந்த  செம்பருத்தி மலர்கள், கால் நகங்கள் மின்னற் கொடிகள், தேவமாதரின் கூந்தல் கார்மேகம், இப்படிப்பட்ட வர்ணனை மனதைக் கொள்ளை கொள்கிறது.

1.5. ஸர்வ ஸாம்ராஜ்ய லட்சுமி

இத்தேவி தன் திருக்கரங்களில் சங்கு,சக்கரம், கதை, தாமரை,வில்,அம்பு, அபய வரதம் தரித்து நீல்மணி நிறத்தைக் கொண்டவள். அரசியலில் வெற்றிபெற இத்தேவி திருவருள்புரிபவள் எனக் கூறப்பட்டுள்ளது. தேவி காமாட்சியின் திருவடித் தாமரை என்று பெயர் கொண்ட திருமால்  மூன்று இருப்பிடங்களை உடையவர். சங்கு, சக்கரம், தாமரை இவைகளைக் கைகளில் தரித்திருக்கிறார். தேவியின் பாதங்களில் சங்கரேகை, சக்ர ரேகை, பத்மரேகை மத்ஸ்ய ரேகை இவைகள் ஒப்பற்ற அழகு, காந்தியுடன் நக  காந்தியில் நடுவே  ப்ரகாஸிப்பதால் வானம், வைகுண்டம், பூமிமூன்று இடங்களிலும் விளங்கும் மஹா விஷ்ணுவின் மூன்று மூர்த்தங்களும் தேவியின் பாதங்களில் ஒருங்கே அமைந்ததைப் போல் இருக்கிறது. தாமரை லட்சுமி ஸ்திரவாஸம் செய்யுமிடம். வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு லட்சுமி என்னும் ஸ்ரீதேவியை தரித்துக் கொண்டு விளங்குகிறார். பூமியிலே மத்ஸ்ய ரேகையைமேற்கொண்டும், வானத்தில் திருப்பாற்கடலில் பரிசுத்தமான  வெண்மை ஒளியாகவும், ஸ்ரீமஹா விஷ்ணுவானவர். ‘த்ரிதாமா’ என்ற மூன்று இருப்பிடங்களையும் தேவியின் பாதங்களிலேயே பெற்று விளங்குகிறார்.

2. பஞ்ச கோசாம்பா

2.1. ஸ்ரீவித்யாகோசாம்பா

லலிதாம்பிகை இந்த இடத்தில் ஸ்ரீவித்யா கோசாம்பாவாக திருவருட்பாலிக்கிறாள். தேவியின் புன்னகையானது வெண்மை நிறத்திய தளிருக்கு இருப்பிடமாக, வெண்மை நிறத்தை உண்டு பண்ணியதாகவே இருக்கிறது. சிறந்த சிருங்காரத்திற்கு  இருப்பிடமாகவும், இனிமையான அருளி போன்ற ‘அம்ருத ஜரி’ போன்ற வாக்குப்பெருக்கும், கருணை என்ற கடலுக்கு அலைபோன்றும், இனிமை என்ற சாம்ராஜ்ய லட்சுமிக்கு ஓர் உயர்ந்த புஷ்பச் சோலை போன்றும் தேவியின் புன்சிரிப்பின்  பொலிவு திகழ்கிறது அந்தப் புன்னகை நமக்கு மங்களங்களை அளிக்கட்டும்.

2.2. பரஜ்ஜோதி கோசாம்பா

இத்தேவி புவனேஸ்வரியைப்போன்றதோற்றம் கொண்டவள். அங்குசம், பாசம், வரத, அபயம் தரித்தவள்.தேவியின் கண்ணோக்கம் ச்ருங்கார ரஸம் நிறைந்த விதையினின்றும் செழித்து வளர்ந்த மன்மதனான பயிரை மங்களமேயான பரமசிவனின் கண்ணாலேயே எரிந்து கரிந்து  போன போது, அப்பயிர் மீண்டு செழித்து வளர்ந்தது. பரம சிவன் நெற்றிக் கண் கொண்டு மன்மதப் பயிரை எரித்து சாம்பலாக்கினர். தேவி ச்ருங்காரரஸத்தை ஊற்றி மன்மதப் பயிரைத் தன் கண்ணோக்கம் என்ற வயலிலே மீண்டும் செழித்து  வளரும்படி அன்பு எனும் நீரைப் பாய்ச்சி, கண்ணால் எரிந்து போனவனைக் கண்ணாலேயே உண்டாக்கினாள்.

2.3. பராநிஷ்கலா கோசாம்பா

இத்தேவி வலக்கரம் சின்முத்திரையையும், இடக்கரம் தன்  தொடைமேல் இருத்தியும் அருட்கோலம் தரித்தவள். காமாட்சியின் இருகண்களும் லட்சுமியும். சரஸ்வதியுமாகும். எனவே தேவி காமாட்சியின் கடாட்சம் ஏற்பட்டவர்களுக்கு  செல்வமும், கல்வியும் குறைவின்றிக்கிட்டும். ‘ஸசாமர ரமாவாணி ஸவ்ய தட்சிண ஸேவிதா’ தேவி காமாட்சி வலது, இடது பக்கங்களில் லட்சுமி , வாணியால் சாமரம் வீசப் பெறுபவள். எனவே அவர்கள் கடாட்சமும் அடியவர்களுக்கு உண்டு.  கடாட்ச  கிங்கிரீ பூத கமலா கோடி ஸேவிதா (ல.ஸ.நா.590) கடைக்கண் பார்வையால் இட்ட ஏவலை நிறைவேற்றும் கோடிக்கணக்கான லட்சுமி தேவிகளால் வழி படப்பட்டவள். ‘கிம்கரோமி’ என்ன செய்யவேண்டும் மென்று தேவியின் கடைக்கண் பார்வை விழுமிடத்து நின்று கொண்டு ஏவல் செய்யக் காத்திருக்கும் கோடிக் கணக்கான லட்சுமிகள். தேவியின்  கண்ணோக்கு யார் மேல் விழுகிறதோ அவர்களுக்கு செல்வம் அளிக்கிறார்கள்.

2.4. அஜபா கோசாம்பா

இவள் அர்த்தாம்பிகா எனும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டவள். தன் திருக்கரங்களில் மழு, அங்குசம், வரதம், அபயம் தரித்தருள்பவள். இத்தேவியின் புன்முறுவல்கள் வெண்ணிற முடையதாகவும், காதுகளிலுள்ள ரத்ன குண்டலங்களின்  செந்நிறகிரணங்களின் சேர்த்தியால் செந்நிறமுடையதாகவும், இயற்கையிலேயே கருநிறமுடைய கடைக்கண்ணோக்கங்களின் பெருக்கானது வெண்ணிற முறுவல் என்னும் மல்லிகைப் பூக்களையும், செந்நிறக்கிரணங்கள் என்னும்  இளந்தளிர்களையும் இயற்கையாகவே அமைந்த கருநிறத்தை கருநீல மலர்களாகவும் கொண்டு தொடுக்கப் பெற்ற மாலையைப் போலச் சிறந்து விளங்குகிறது.

2.5. மாத்ருகா கோசாம்பா.

இத்தேவி கலசம், அட்ச மாலை, தந்தம், ஏடு, அபயம், வெண்தாமரை போன்றவற்றை ஏந்தி திருவருட்பாலிப்பவள். அம் முதல் க்ஷம் வரையிலான அட்சர சக்திகளின் சமஷ்டி வடிவம். திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் அட்சரபீடமாக  அருள்பவள். மனம் என்னும் அலைந்து திரிகின்ற அஞ்ஞானமாகிய காட்டு யானையை தேவியின் கடைக்கண்ணோக்கமாகிய வளைந்த முனையையுடைய பெரிய அங்குசத்தாலே வசமாக்கி வேகமாக அடக்கும்படி நாம் தேவியிடம்  வேண்டுவோம். அந்தக் காட்டுயானை என்ற அஞ்ஞானமோ அறிவு என்னும் தாமரை ஓடையைக் கலக்கி மனம் என்னும் காட்டிலே அலைந்து திரிகின்றது . கண்ணோக்கு என்ற அங்குசத்தால் அதை அடக்கும்படி வேண்டுவோம்.

3. பஞ்ச கல்பலதாம்பா

3.1. ஸ்ரீவித்யா கல்பலதாம்பா

லலிதாம்பிகை இந்த இடத்தில் ஸ்ரீவித்யாகல்பலதாம்பா என வழிபடப்படுகிறாள். தேவியின் கடைக்கண்நோக்கு கற்பக விருட்சத்துக்கு ஒப்பிடப்படுகிறது. விருட்சம் இருண்ட நிழலால் உலகத்தின் வெப்பத்தைப் போக்குகிறது. அதைப்போல் தேவியின்  கண்நோக்கும் உலகத்தாரின் தாபத்தைப் போக்குகிறது. விருட்சம் என்றால் தளிர்கள் உண்டு. பூக்கள் உண்டு. அந்தப் பூக்களிலிருந்து கருணை என்னும் தேன் அதிகமாக வடிகின்றது. இப்படியாக தேவியின் கண்கள் என்னும் கற்பக விருட்சம்,  காதில் உள்ள தாடங்கங்களே விருட்சத்தின் தளிர்கள், கருணையே பூக்களில் வடியும் தேன் இப்படியாக நாம் இந்த தேவியின் திருவுருவை அனுபவிக்கிறோம்.

3.2. பஞ்சகாமேஸ்வரி கல்பலதாம்பா

நெற்றிக்கண்ணால் காமனை அழித்தார். அதன் பின் தேவியின் கடைக்கண்பார்வையால் உயிர் பெற்ற காமனால் வசப்படுத்தப்பட்டார். எனவே தேவிக்கு எந்தக் காரியமும் செய்வதும் அரிதன்று. அந்தப் பரமேஸ்வரனையே தனக்குப்படுத்திக்  கொண்டவள். தேவியின் பாதங்களை கிளிக்கூட்டாக உருவகிக்கிறார். பஞ்ச இந்திரியங்களாலும் இந்திரிய சுகங்களை அனுபவிக்கிறோம். இந்த விஷய சுகமானது அலை போலப் பரப்பிய நொய்யரிசியைப் புசித்துப்புசித்து அலுத்துவிட்ட இந்த மனித  மனமெனும் கிளிக்குஞ்சை, அம்மா தேவி காமாட்சி! உன் பாதமெனும் கிளிக்கூட்டினுள் என்று அடைத்து வைப்பயம்மா! அதை இப்பொழுதே செய்வாயம்மா! என்று மூககவி மனமுருகி நம்மை அழைக்கிறார்.

3.3. பாரிஜாதேஸ்வரி கல்பலதாம்பா

வெண்தாமரை ஆசனத்தில், வெண்பட்டு உடுத்தி, ஜபமாலை புஸ்தகம் கைக்கொண்டு, வீணையைக் கையிலேந்தி ப்ரும்ம பத்னியாக தேவியே விளங்குகிறாள். மற்ற திருக்கரங்கள் அட்சமாலை,புஸ்தகம், அமிர்தகலசம் தாங்கியுள்ளன. காமாட்சி  கோயில் ‘ஸசாமர ரமாவாணி ஸவ்யதட்சிண ஸேவிதா’ வாக உற்சவ மூர்த்தி விளங்குகிறது. ஸ்ரீவித்யாஸ்வரூபிணியே வித்யா ஸ்வரூபிணியாக விளங்குகிறாள். கல்விக்கரசி, செல்வத் துக்கரசி, எல்லாமாக விளங்கும் தேவியே விரிஞ்சனின்  பத்னி வாக்தேவதையுமானவள். ‘ஐம்’ என்ற வாக்பீஜம், மன்மத வித்தையின் முதல் கூடம், தேவியின் முகமலர் இப்படி ஓன்றாகவும், பலவாகவும் தேவி விளங்குகிறாள்.

3.4. குமாரி த்ரிபுடா கல்பலதாம்பா.

இக்குமாரி த்ரிபுடா கல்பலதாம்பா உதிக்கின்ற சூரியனின் நிறம் கொண்டு ஸர்வாலங்கார பூஷிதையாய் தன் திருக்கரங்களில் அட்சமாலை, வேதபுத்தகம், புஷ்பபாணம், கரும்பு வில்லேந்தி அருட்கோலம் அளிப்பவள். தேவியை நமஸ்கரிக்கும்  தேவமாதர்களின் அசைந்து ஒளிரும் வண்டு போன்ற கூந்தல்களோடு கூடியதாயும், லாட்சாரஸம் என்னும் ஒளி பொருத்திய செம்பஞ்சுக் குழம்பின் பூச்சுக்களால் பிரகாசிப்பதும், நீர்த்திவலைகள் பொருந்தியதுமான தேவியின் பாதகமலங்கள்  தாமரை மலர்களுக்கு ஸமானமாக உள்ளது. சூரியனைக் கண்ட தாமரை மலரும். செம்பஞ்சுப் பூச்சு அதன் சிவந்த ஒளி பாலசூரியனின் காந்தியை ஒத்திருக்கிறது. கூந்தல் என்ற கரு வண்டுக் கூட்டம், பாதங்கள், என்னும் தாமரையின் மகரந்தப்  பொடிகளை நுகர்வதற்கு மொய்ப்பது போலும் இருக்கிறது.

3.5.பஞ்சபாணேஸ்வரி கல்பலதாம்பா

இந்த அம்பிகை தன் வலக்கரத்தில் புஷ்பபாணமும், இடக்கரத்தில் கரும்பு வில்லும் கொண்டவள். இந்த அன்னையின் கருணாகடாட்சம் எந்தப்புண்ணியசாலியின் மேல் விழுகிறதோ அவனுக்கு மோட்சம் கிட்டுகிறது. அந்தக் காலத்தில் அரசர்கள்  சுவயம்வரம் என்று, அரசகுமாரிகள் தாங்களே வரனை வரிப்பது உண்டு. கையில் மாலையுடன் ஸ்வயம்வர மண்டபத்தில் வரும் பெண்ணுடன் பணிப் பெண் என்னும் தோழி ஒவ்வொரு வரனையும் பற்றிக் கூறுவாள். பிடித்தமானவனையே  கணவனாக மாலையிட்டு வரிப்பாள். தேவியின் கருணாகடாட்சம் எந்த வரன் மேல் விழுகிறதோ அப்பொழுதே முக்தி என்ற பெண்ணும் அவனுக்கு மாலையிட்டு விடுகிறாள்.

4. பஞ்சகாமதுகாம்பா

4.1. ஸ்ரீவித்யா காமதுகாம்பா

லலிதாம்பிகையே இங்கு ஸ்ரீவித்யாகாமதுகாம்பாவாக வணங்கப்படுகிறாள். தேவியின் நவாவரண பூஜையில் சேனாநாயகியான வாராஹி தேவிக்கு பன்னிரெண்டு நாமாக்களும், மந்த்ரிணியான ராஜமாதங்கிக்கு பதினாறு நாமாக்களும், லலிதைக்கு  இருபத்தைந்து நாமாக்களும் கூறி அர்ச்சிப்பதுண்டு. அதில் கடைசி நாமா. ‘ச்ருங்கார நாயிகா’ என்பதாகும். லலிதையே காமாட்சி, எனவே ஒவ்வொரு பாடலிலும் காமனின் சிருங்கார சாஸ்திர ரஸம் ருசிக்கப்படுகிறது. லலிதை சிருங்கார  ரஸப்ராதானை. மீனக் கொடியோனான மன்மத வித்தையின் விஸ்தாரமே தேவி தான்.

4.2. அம்ருதபீடேஸ்வரி காமதுகாம்பா

இத்தேவி வரத அபயம், அட்சமாலை தரித்து புன் முறுவல் பூத்த முகத்துடன் (முல்லையை நிகர்த்த புன்முறுவல், பற்கள் வெண்மையாகக் காணப்படும்) இடுப்பு பாகம் இளைத்தும், பெருத்த ஸ்தனங்களுடன் காட்சி அளிக்கிறாள். எண்ண  அலைகள் ஒடுங்கிய மனதில் தேவி குடி கொண்டு, கண்ணோக்கில் குளிர்ச்சியாகக் காணப்படுகிறாள். பனிமலை அரசனின் பெண், பனிமலைவாசியான சிவனை மாலையிட்டதால், தேவி குளிர்ச்சியாக இருப்பது சகஜமே.

4.3. ஸுதாஸு காமதுகாம்பா

இந்த அன்னை ஜபமாலை, புத்தகம் ஏந்தியவள். தேவியின் சிவந்தநிறம், நுண்ணிய இடுப்பு, யௌவன ஸம்பத்து இவை பேசப்படுகிறது. அணி, துகில் , மாலை, பூஷணம் அனைத்திலும் செந்நிறம் வஹித்தனை போற்றி! உதிக்கின்ற செங்கதிர்,  உச்சித்திலகம், உணர்வு டையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, குங்குமத்தோயம், அபிராமி பட்டர் வியந்து அன்னையைப் போற்றுகிறார். ‘வயோவஸ்தா விவர்ஜிதா’ தருணீ, நித்ய யௌவனா’ மூவா முகுந்தற்கு இளையவளே!  போன்ற நாமாக்கள் தேவியின் யௌவனத்தையும் ,‘இடை ஒடியா வண்ணம் பொருத்திய பூண் ஒக்கும் உதர மடிப்புக்கள்’ என்ற வரிகள் நுண்ணிய இடையையும் நமக்குப் படம் பிடித்துக் காண்பிக்கிறது.

4.4. அம்ருதேஸ்வரி காமதுகாம்பா

இந்த அன்னையும் ஸுதாஸுவைப் போலவே அருட்கோலம் கொண்டவள். தேவி ஹிமவானின் குலத்திற்கு ஓர் ஒப்பற்ற திருவிளக்கு, சூரியனைக் கண்டால் தாமரை மலர்வதும், சந்திரனைக் கண்டால் ஆம்பல் மலர்வதும் உலக இயல். தேவி  தலையில் சந்திரனை அணிந்துள்ளாள்.முகத்தைத் தாமரைக்கும், கண்களை ஆம்பலுக்கும் பொருத்திப் பார்ப்பது சுவையாகவே இருக்கிறது. பெண்ணே! உன்முகத் தாமரையில், இரண்டு நீலோத்பலங்களைக் காண்கிறேன்? என்ற காளிதாஸரின்  காவ்யரஸம் நினைவை நனைக்கிறது.

4.5. அன்னபூர்ணா காமதுகாம்பா

தன் திருக்கரங்களில் தங்கபாத்திரம், தங்கக்
கரண்டி கொண்டு ஐயன் அளந்தபடி 32 அறங்களை வளர்ப்பவள். காசியில் அருட்கோலம் தருபவள். வெறும் பசி மட்டுமல்ல, ஞானப்பசியையும் தீர்ப்பவள்.
கருவண்டினை நிகர்த்த கூந்தல், மன்மதனின் வேத ச்ருங்காரக் கொள்கைகளில் தேர்ச்சி பெற்ற கண்கள், ஏனென்றால் காமனை உண்டாக்கிய கருணைக்கண்கள், காமனைகளைப் பூர்த்தி செய்யும் கண்கள், காமம் குடி கொண்ட கண்கள். எனவே  காமாட்சி என்ற பெயரே வந்தது. (பசித்த பேர்க் கெல்லாம் அபீஷ்ட வரங்களை பார்த்துக் கொடுத்தாள். அம்ருதக் கண்ணால், காமாட்சி என்ற பெயர் கொடுத்தார் பிரம்மதேவாள் என்று லலிதாம்பாள் சோபனம் கூறுகிறது.

5. பஞ்ச ரத்னாம்பா

5.1. ஸ்ரீவித்யா ரத்னாம்பா

இத்தேவி லலிதாம்பிகையே. இந்த இடத்தில் அன்னை ஸ்ரீவித்யா ரத்னாம்பா என வழங்கப்படுகிறாள். தேவியின் பாதங்களை வணங்கும் உத்தமர்களின் மனமெனும் வீட்டின் மேன்மாடி என்னும் உப்பரிகையிலே, தேவியின் சரணங்கள் என்ற நல் விளக்கானது இருளை விரட்டிப் பிரகாசத்தை அளிக்கிறது. அளவில்லாத, எண்ணிறந்த  கொடிய தீவினைக் கூட்டங்கள் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல் தேவியின் பாதமெனும் தீபத்தில் தீவினைக் கூட்டங்கள் பொசுங்கி விடுகின்றன.

5.2. ஸித்தலட்சுமி ரத்னாம்பா

இந்த அம்பிகை தன் இருகரகமலங்களில் மாதுளங்கனிகளை ஏந்தி ஸர்வாலங்கார பூஷிதையாகப் பொலிகிறாள். இத் தேவியின் கடைக்கண் நோக்கு சிறிதுபட்டாலும், உலக முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆள்வார்கள். அவன் தேவேந்திரனாகி  ஐராவதத்தில் ஊர்ந்து, தேவர்கள் அவனுக்கு ஏவல் புரிய மன்மதன் பார்த்துப் பொறாமை கொள்ளும்படி எழில் படைத்து, தேவதாஸிகள், அப்சரஸ்கள் காதல் கொண்டு கிரீடிப்பவர்கள் ஆகிறார்கள். அவன் வாக்குகளில் தாம்பூல நறுமணம் வீசும். யௌவனத்துடன் விளங்குவான்.

5.3. மாதங்கி ரத்னாம்பா

காளிதாசனுக்கு திருவருள்புரிந்து ச்யாமளாதண்டகம் பாடச்செய்தவள். தன்னிரு திருக்கரங்களில் வீணைமீட்டி தோள்களில் கொஞ்சும் கிளியை வைத்தருள்பவள். ஆய கலைகள் 64ம் இவளருளால் கிட்டும்  தேவியைப் பச்சை நிறந்தவள் என்றும் சொல்வதுண்டு. தமால மரத்தின் பூங்கொத்துப் போன்ற தேக காந்தி உடையவள்.  அபிராமி அந்தாதியில் பச்சைநிறம் வெகுவாகப் பேசப்படுகிறது. ‘பண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’ (70) ‘சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக்குன்றி லொன்றிப் படரும்  பரிமளப் பச்சைக் கொடியைப் பித்து நெஞ்சில்’ (48) ‘சொல்லும் பொருளுமென நடமாடும் துணை வருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே’ (28) தன்னை அடி வணங்கும் ஜீவர்களின் ஏழ்மையை நீக்குவதும், ஸம்ஸாரம் என்னும் இருளை  அகற்றுவதும், திருபுரங்களை யழித்து பரம சிவனின் இடது தொடையில் அமர்ந்திருப்பவளும். மதுரையையே தன் இருப்பிடமாகக் கொண்டவளும், ஜகத்தை, உலகம் முழுவதையுமே காப்பாற்றும் வண்மை உடையதுமான, அந்தப் பரஞ்ஜோதிப் பொருளான ஸ்ரீமீனாட்சி பராபட்டாரிகைக்கு எங்கள் வணக்கங்கள் உரித்தாகட்டும்.

5.4. புவனேஸ்வரி ரத்னாம்பா

இவள் பாசாங்குசம் ஏந்தி, வரத அபய முத்திரையோடு அலங்கார ரூபிணியாய்த் திகழ்பவள். தன் பாதங்களை கடார்க்கள யந்திரத்தின் மேல் வைத்த திருக்கோலம் கொண்டவள். தேவியின் பாதங்களை வணங்கும் உத்தமர்களின் மனமெனும்  வீட்டின் மேன்மாடி என்னும் உப்பரிகையிலே, தேவியின் சரணங்கள் என்ற நல் விளக்கானது இருளை விரட்டிப் பிரகாசத்தை அளிக்கிறது. அளவில்லாத, எண்ணிறந்த கொடிய தீவினைக் கூட்டங்கள் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல்  தேவியின் பாதமெனும் தீபத்தில் தீவினைக் கூட்டங்கள் பொசுங்கி விடுகின்றன.

5.5. வாராஹி ரத்னாம்பா

இத்தேவி தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், உலக்கை, கலப்பை, வரத, அபயம் தரித்தவள். பக்தர்களின் பாதக மலங்களை தன் பாதகமலங்களால் அழிப்பவள். திருமந்திரத்தில் உலக்கை, கலப்பை, ஏந்திய கைகள் உடைய  வெண்நகையாள் ஊனுடலைக் கடந்து தியானிப்பவர்கள் உள்ளத்தில் விளங்குபவள் என்று கூறுவார். மஹா வாராஹி எனும்போது தேவியின் படைத்தலைவி; லகு வாராஹி என்பது சப்தமாதரில் உள்ளவள் பிரும்ம, விஷ்ணு, ருத்ர, ஈச்வர,  சதாசிவர் என்ற பஞ்சமவரின், ஐந்தாவதான சதாசிவ சக்தி. எனவே பஞ்சமி என்ற பெயரும் உண்டு. இந்த தேவி காசியில் கோயில் கொண்டு லலிதா ஸஹஸ்ரநாமாவுக்கு உரை செய்த திரு. பாஸ்கர ராயருக்கு காட்சி அளித்த வரலாறு உள்ளது.

ஓவியங்கள்: அமரர் ஸி.ஏ. ராமச்சந்திரன்