புன்னகைக்கும் சக்தி!



எத்தனை பிறவிப் பயனோ -நான்
இத்தனை சிறப்பு பெற்றேன்!
அனைத்துமன்னை சக்தி வடிவமென
அருள்தரும் நவராத்திரியில்  உணர்ந்தேன்!
கொலு பொம்மையென அலங்கரித்தாள்
கோலத்தில் குடிகொண்ட பராசக்தி!
மனையில் எழுந்தருளி மனதில்
மகிழ்ச்சி துள்ளும் இசையானாள்!

பலப்பல கதைகள் சொல்லும்
பலவித பொம்மைகள் கண்டு
பாசம் கொள்ளும் குழந்தைகளுக்கு
வண்ண விளக்குகள் நடுவமர்ந்து
அன்னபூரணி அமுது படைப்பாள்!

உண்ணத்தகும் தேங்காய்பூ சுண்டல்
ஊறிய இனிப்பு நாவுக்கு சுவையாம்
உள்ளம் கவர்ந்தாள் அன்னலட்சுமி!
பராசக்தி வடிவான பெண்கள்
பக்தி செய்யும் நவராத்திரியில்
கன்னியரை சிறப்பித்து பாடுவோம்
விரதம் நிறைவேற உதவிடுவோம்!

திருச்சக்கர அம்சத்தை வணங்கி
திருமகள் திருவடி பணிவோம்!
கலைப்பொருள் தழுவிய கலைவாணி
வளைக்கர மங்கை உருவெடுத்தாள்!
மங்கையர் நெற்றி குங்குமத்தில்
மகாசக்தி மணம் பரப்புகிறாள்
மனதில் நினைவில் கலந்தவரின்
மாசற்ற பண்பை போற்றுகிறாள்

வீடும் நாடும் நலம்பெற
வில்லிடையர்  மதிநுட்பம் அவசியமன்றோ!
மலைசுரக்கும் இனிய நீர்போல
மனையில் ஆனந்தம் பெருகட்டும்!

ஒன்பது நாளும் ஒருமுறை உண்டு
ஒருமனதில் நின்று; பயனுள பேசி
ஓவியம் பொம்மை புன்னகைபோல
ஒப்பற்ற தியானம் அமைதி காத்து
ஒலிகடலாய் குடும்ப இடரை
ஒதுக்கி முழுநிலவு சக்தியை
பக்தியுடன் சரண் புகுந்தால்
தர்மம் தொழும் தீத்தீண்ட அஞ்சும்!
 
அணையா தீபம் ஏற்றி
அன்னை சக்தியை போற்று
அறிவொளி அச்சம் தீர்க்கும்
அழியாத செல்வம் சேர்க்கும்!

விஷ்ணுதாசன்