அங்கதன்



* காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

ராவணனைப் பற்றிய தன் வியப்பையெல்லாம் விட்டு விட்டு,ராவணன் கேட்ட கேள்விக்குப்பதில் சொல்லத் தொடங்கினான் அங்கதன். ‘‘இந்த உலகத்திற்கே நாயகனாக இருக்கக் கூடியவர். வேதங்களுக்கெல்லாம் நாயகர். விதிக்கு நாயகர்.  சீதாதேவியின் நாயகர். அந்த ராமர் அனுப்பிய தூதன் நான்’’ என்ற அங்கதன் மேலும்சொல்லத் தொடங்கினான்.அவனை இடைமறித்தான் ராவணன். ‘‘என்ன உளறுகிறாய்? குரங்குகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, சிறு குளம் போன்ற கடலுக்கு அணைகட்டி வந்தவன். அப்படிப்பட்டவன் தன் பெருமையை மேலும் பறைசாற்றுவதற்காக, ஒரு நரன் -  மனிதன் அனுப்பிய தூதனா நீ? அவனா உலகத்திற்கு நாயகன்? அவன் அனுப்பினான் என்று அஞ்சாமல் வந்த நீ யார்?’’ என்று ஏளனமாகச் சிரித்தான்.

ராவணன் கேட்ட கேள்விக்கு, அங்கதன் பதில் சொல்லத் தொடங்கினான். அது பதிலாக மட்டுமல்ல. ராவணனின் மலரும் நினைவுகளை, மறுபடியும் நினைவு படுத்துவதைப் போல இருந்தது.‘‘முன்பொரு சமயம் ராவணன் என்பவனை, தோள்களோடு தன் வாலால் இறுக்கமாகச் சுற்றிக்கட்டி, இந்த உலகம் முழுதும் சுற்றித் திரிந்தவரின் மகன்; தேவர்கள் அமுதம் உண்ண வேண்டும் என்பதற்காக மந்தரமலையால் கடலைக்கலக்கியவரின் மைந்தன்’’ எனப் பதில் சொன்னான் அங்கதன்.ராவணனுக்கு ஒருமாதிரி ஆகி விட்டது. யாராக இருந்தாலும், அவர்கள்பட்ட பழைய அவமானங்களை நினைவுபடுத்தினால் அப்படித்தானே ஆகும்! அந்த நிலையை அடைந்தான் ராவணன். இருந்தாலும் அங்கதன் போனவழியிலே தானும்போய்,  அங்கதனைத் தன் பக்கம் திருப்ப முயற்சி செய்தான், ராவணன்.
‘‘வாலியின் மகனா நீ! அப்பா! உன் தந்தையும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்பது,அனைவருக்கும் தெரியுமே! அப்படியிருக்க நீ போய், ராமன் தூதனாக வந்தேன் என்கின்றாயே!’’ இதைவிட இழுக்கு உண்டா உனக்கு? வானரர்களின்  தலைவனாக, உன்னைச் செய்கிறேன். நல்லவேளை! இப்போதாவது வந்தாயே!‘‘தந்தையைக் கொன்றவன் பின்னால், கைகளைத் தலைமேல் வைத்துக்கொண்டு, மூடனைப்போல வாழ்ந்தவன் எனும் இழிசொல் இன்றோடு தீர்ந்தது. சீதையைப் பெற்றேன். உன்னை என் மகனாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் எனக்கு  அரிதானது, என்ன இருக்கிறது?’’

‘‘அந்த மனிதர்கள் (ராம-லட்சுமணர்கள்) இன்றோ, நாளையோ அழிந்து விடுவார்கள் சந்தேகமே இல்லை. சுக்ரீவனிடம் இருக்கும் உன் அரசை, உனக்கே அளிக்கிறேன். சந்தோஷமாகப் பலகாலம் ஆட்சி செய்து வா! சிங்காதனத்தில் உன்னை  அமர்த்தி, உனக்கு நானே முடி சூட்டுவேன்’’ என்றெல்லாம் பெருமை பேசி, வலையை வீசினான் ராவணன்.  ‘‘ராவணன் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அங்கதன், தோளும் மார்பும் குலுங்கும்படியாக, கைகளைத் தட்டிப் பேசத் தொடங்கினான்.’’
நாய் கொடுக்கும் உணவை, சிங்கம் ஏற்குமா? அதுபோல, ‘‘நீ கொடுக்கும் அரசை, நான் ஏற்பேனா? தூதாக வந்த என்னை உன் வசமாக்கப் பார்க்கிறாயா?’’பெரும் தவறை நீ செய்திருந்தாலும், ராமருக்கு இன்னும் உன்மேல் கருணை இருக்கிறது தேவியை விடு! இல்லாவிட்டால் ஆவியை விடு! என்று என்னைத் தூதாக அனுப்பி இருக்கிறார் ராமர். உன் பாட்டி தாடகையைக் கொன்ற அன்று போருக்கு வரவில்லை நீ; உன் மாமனான சுபாகுவைக் கொன்ற அன்று போருக்கு வரவில்லை நீ; உன் தங்கையின் மூக்கையும் காதையும் சிதைத்து அனுப்பிய அன்று, போருக்கு வரவில்லை நீ.  அப்போதெல்லாம் போருக்கு வராத உனக்கு, ஆண்மையிருக்கிறதா?கரண் தூஷணன் முதலான உன் உறவினர்களை எல்லாம் முழுதுமாக அழித்தார் ராமர். அப்போதுகூட, போருக்கு வராமல் மாயமானை வைத்து, லட்சுமணன் இல்லாத நேரத்தில் வஞ்சனையாகச் சீதா தேவியைத் தூக்கிக் கொண்டு வந்த நீ,  போருக்கு வருவதெல்லாம் நடக்குமா என்ன?சீதா தேவியைக் கண்டு, எதிர்த்தவர்களை எல்லாம் தரையில் சாந்து தேய்ப்பதைப்போலத் தேய்த்து அழித்து, உன் ஊரைக் கொளுத்தி அது எரிவதைப் பார்த்து விட்டு, மறுபடியும் கடலைத்தாவி எங்கள் ஆஞ்சநேயர் திரும்பிச் சென்றார். அன்று  போருக்கு வராதவன், இன்றா வரப்போகிறாய்?‘‘நீ அனுப்பிய ஒற்றர்களைக் கொல்லாமல், உயிருடன் திருப்பி அனுப்பி, உன் தம்பி (விபீஷணன)க்கு அரசு தந்து, வருணன் வந்து தொழ அணைகட்டி இக்கரைக்கு வந்த பின்னும், அவ்வளவு நாட்களாகப் போருக்கு வராத நீ இன்றா போருக்கு  வரப்போகிறாய்?’’‘‘இவ்வளவு ஏன்? உன் மணிமகுடங்களை எல்லாம் (சுக்ரீவன்)பறித்த போதும், போருக்கு வராத நீ, இனிமேல்  போருக்கு வருவாயா என்ன?’’

‘‘உறுதியாக ஒன்று சொல்கிறேன் கேள்! அன்னை சீதா தேவியை விடு! உன் சுற்றத்தோடு நன்றாக வாழ்வாய்! இல்லையேல் அழிவதற்கு ஆசையிருந்தால், என் பின்னாலேயே புறப்படு!’’‘‘அதை விட்டுவிட்டு, நான் தேவர்களை வென்றேன். அவர்களை வென்றேன். இவர்களை வென்றேன் என்றெல்லாம் பெருமை பேசும் நீ, பகைவர் வந்து அழைக்கும் அளவிற்கு ஔிந்து வாழும் நீ, உன் ஊரிலேயே அழிந்தால், அது உனக்குத்தான்  பெரும் பழியாகும்’’ என்று, அன்றுவரை நடந்தவைகளையெல்லாம் விவரித்து, ராவணனை இடித்துரைத்துப் பேசி முடித்தான், அங்கதன்.அதே விநாடியில், உலகம் முழுவதையும் அப்படியே தின்றுவிட வேண்டும் என்பதைப்போல,கோபம்கொண்டான் ராவணன். ‘‘பிடியுங்கள் இவனை! வேகமாகப் பிடியுங்கள்! தரையில் தேயுங்கள்!’’ என்று கத்தி, நான்கு பேர்களை ஏவினான்.அவர்களையெல்லாம் அப்படியே அழித்த அங்கதன், அவர்களின் உடல்களைக் கோபுர வாசலில் வீசினான். ‘‘இந்த ஊரில் உள்ளவர்கள் உயிர் பிழைக்க எண்ணினால், ராமருடைய தீயைக்கக்கும் அம்புகளால் இறப்பதற்கு முன்னால், ஓடி  விடுங்கள்!’’ என்று கூவி விட்டு, ராமரிடம் திரும்பினான் அங்கதன். சிறு காரணத்திற்காகக் கூடப் போரில் ஈடுபடும் ராவணன், பலமான காரணங்கள் இருந்தும் போருக்குப் போகாதது, ராவணனின் அச்சத்தைக் காட்டுகிறது என்பது அங்கதனின் உபதேசக் கருத்து.

ராவணனிடம் இருந்து திரும்பிவந்த அங்கதன், ‘‘என்ன சொன்னாலும் கேட்காத மூர்க்கன் அவன்; உயிரை விடத்தயாராக இருக்கும் அவன் ஆசையை விடத் தயாராக இல்லை’’ என்று ராமரிடம் கூறினான்.ஆஞ்சநேயருக்கு இணையாக ராமரால் மதிக்கப்பட்ட அங்கதன், சீதாராம பட்டாபிஷேகத்தின் போது எப்படி மதிக்கப்பட்டான் என்பதையும் காட்டுகிறார் கம்பர்.பட்டாபிஷேக வைபவத்தை வர்ணித்த கம்பர், ‘அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த’ எனப் பாடி, அங்கும் ஆஞ்சநேயரையும் அங்கதனையும் சேர்த்தே படைக்கிறார்.ராமர் சுமக்க வேண்டிய வாளை, பட்டாபிஷேகத்தின் போது அங்கதன் சுமந்தான் என்றால், அங்கதனின் பெருமை புரிகிறதல்லவா? அங்கதனின் கதா பாத்திரம் சிறியதுதான் என்றாலும், ராமர் புகழ்பாடும் மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த  விதத்திலும் குறைந்ததல்ல! (தொடரும்)

பி.என்.பரசுராமன்