அங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்உள்ள(த்)தைச் சொல்கிறோம்

அழகிய சிங்கனின் இனிய இருபத்தைந்து தலங்கள் என்ற தொகுப்பின் மூலம்  தென்னிந்தியாவின் நரசிம்ம ஆலயங்களைத் தொகுத்தளித்த சிறப்பு ஆன்மிக உலகின்  தீனி ஜொலிப்பு. ‘நரசிம்ம ஜெயந்தி’க்கு முத்தாய்ப்பாக அமைந்தது! - ஆர்.விநாயகராமன், செல்வமருதூர்.

ஆன்மிகம்  பலன் இதழ் (2019-16-31) மிகவும் அருமை. அட்டைப்படமே மிகவும் அழகாகவும்  அசத்தலாகவும் நன்கு அமைந்திருந்தது வரவேற்கத்தக்கதே! நரசிம்மரின் பக்தி  ஸ்பெஷலை கண்முன் நிறுத்திய விதம் கண்டு இதழை பொக்கிஷமாக்கிக்கொண்டோம்.  மேலும் பொறுப்பாசிரியரின் அணிந்துரை வாயிலாக, கோயில் குளங்களை பராமரிக்க  தகுந்த நேரத்தில் அறிவுறுத்திய விதம் மிகவும் அற்புதம். நீர் நிலைகளை  பராமரிக்க (நீவிர்) எடுத்துரைத்த வரிகளைக் கண்டதும்  கண்கள் குளமாயின  என்பது நிதர்சனம். பாராட்டுக்கள்! - துரை.ராமகிருஷ்ணன், எரகுடி.

நரசிம்ம ஜெயந்தியை யொட்டி நரசிம்ம பெருமாளின் 25 தலங்களை  பட்டியலிட்டு தல இருப்பிடம், தல சிறப்பு மற்றும் படங்களுடன் கட்டுரை வெளியிட்டு ஆன்மிகம் பலன் வாசகர்கள் நரசிம்மரை வழிபட்டு பயனடையச் செய்துவிட்டீர்கள். நன்றி. - K.சிவகுமார், சீர்காழி.

திருவானைக்கால் அகிலாண்டேஸ்வரி, உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலய ஆன்மிக அற்புதங்களை அறிந்துகொண்டோம். அர்ச்சகர் அம்பாள் வேடமிட்டு, சுவாமிக்குப் பூஜை செய்வது சிறப்பு. அகிலாண்டேஸ்வரி, காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் முப்பெருந்தேவியராகக் காட்சி அளிப்பது இன்னமும் சிறப்பு. சிவன் குருவாகவும், தேவி மாணவியாகவும் இருப்பது போற்றுதற்குரியது. தினமும் அன்னாபிஷேகமும், வழக்கத்திற்கு மாறாக வைகாசியில் அன்னாபிஷேகம் நடப்பது திருமுற்ற விசேடமாக அமைகிறது. - இராம.கண்ணன், சாந்திநகர், திருநெல்வேலி.

அழகிய சிங்கனின் இனிய இருபத்தைந்து திருத்தலங்களைப்பற்றிய தொகுப்பு நரசிம்ம ஜெயந்தி சிறப்பிதழுக்குப் பெருமை சேர்த்து பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டது. இவ்வளவு நரசிம்மர் ஆலயங்களைப் பற்றிய அரிய தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ள தங்களின் முயற்சி, பிரமிக்க வைத்துவிட்டது. நரசிம்மர் ஜெயந்தி சமயத்தில் எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாய் சென்ற இதழ் மின்னியது. நன்றியுடன் பாராட்டுக்கள்.- அயன்புரம் த.சத்திய நாராயணன், பட்டாபிராம், சென்னை-72

கோயில் குளங்களில் உள்ள நீரை தீர்த்தம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று இதுநாள் வரையில் குடைந்துகொண்டிருந்த கேள்விக்கு தக்க பதிலாய் அமைந்திருந்தது. ‘நலந்தானே!’ பகுதி. கோயில் குளங்கள் பக்தர்களின் கண்களில் ரத்தக்கண்ணீர் வரவழைப்பதையும், அவைகள் பராமரிக்கப்பட்டு, பழைய நிலையை அடைய வேண்டும் என்பதையும் புரியும் விதத்தில் விளக்கியிருந்தது அருமை! - மு.மதிவாணன், அச்சல்வாடி P.o., அரூர்.

கோயில் திருக்குளம் என்பது ஆத்ம தீர்த்தம் என்பது அக்காலம். இன்றோ வறண்டு  கிரிக்கெட் மைதானமானது. மாடு புல் மேய்கிறது. சனிப்பெயர்ச்சியன்று  திருநள்ளாறு குளத்தில் பழைய துணிகளாக மிதக்கும். புனித நதிகள்கூட, மகரஜோதி  காலத்தில் பம்பா நதியில் அசிங்கம் மிதக்கும். கங்கையில் பிணம் மிதப்பதுபோல!  இவை, பயபக்தி போய், பக்தி யாத்திரைகூட டூர் ஆகி மக்களின் பொறுப்பற்ற  தனத்தின் விளைவுகள். கோயில் குளத்தை காப்பாற்றாததால், மற்ற குளங்களும்  வறண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதை உணர்ந்தாவது, திருக்குளங்களை  தலையங்கப்படி புனிதப்படுத்துவோமாக. - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்ைட.