நன்றி அறிதல் வேண்டும்!* குறளின்  குரல் 108

ஒருவர் செய்த உதவியைப் பெற்றுக்கொண்ட நாம், அதை நம் வாழ்நாளில் ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும் என்ற உயரிய பண்பாட்டை வள்ளுவம் நமக்குக் கற்பிக்கிறது. பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல் என்ற பொருள்படும் வகையில் `செய் நன்றியறிதல்’ என்ற தலைப்பில் ஒரு தனி அதிகாரத்தையே இந்தப் பண்பை வலியுறுத்துவதற்காக வள்ளுவர் எழுதியுள்ளார்.

`செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
 வானகமும் ஆற்றல் அரிது’ (குறள் எண்:101)

ஒருவர் நம்முடைய துன்பத்தை உணர்ந்து தாமாகவே முன்வந்து நமக்கு ஓர் உதவி செய்வார் என்றால், அவருக்கு இந்த நிலவுலகத்தையும் வானகத்தையும் கைம்மாறாக வழங்கினாலும் அது ஈடுசெய்ய இயலாதது.

`காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.’ (குறள் எண்:101)

சரியான தருணத்தில் செய்யப்படும் உதவியானது சிறியதேயென்றாலும் அதன் பயனை எண்ணிப் பார்க்கும்போது அது இந்த உலகை விடப் பெரியது.

`பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.’ (குறள் எண்:103)

 இன்ன உதவி செய்தால் அதனால் தனக்கு இத்தகைய பயன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏதுமின்றி, இயல்பாகச் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்து பார்ப்போமானால், அந்த நன்மையின் அளவு கடலை விடவும் பெரியது.  

`தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்’ (குறள் எண்:104)

 செய்ந்நன்றி அறிதலின் உயர்வை அறிந்தவர்கள், தமக்குப் பிறர் தினையளவு உதவி செய்தாலும் அதைப் பனையளவு உயர்வானதாகக் கருதிப் போற்றுவார்கள்.

`உதவி வரைத்தன்று உதவி, உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.’
(குறள் எண்:105)

 உதவியின் அளவு என்பது அதன் இயல்பான மதிப்பைப் பொறுத்தது அல்ல. அந்த உதவியைப் பெற்றவரின் தகுதியைப்
பொறுத்தது அது.

`மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.’ (குறள் எண்:106)

தூய உள்ளம் கொண்டவரின் நட்பை மறவாதிருக்க வேண்டும். அதுபோலவே துன்பத்தில் துணையாக இருந்தவரின் நட்பையும் ஒருபோதும் நாம் கைவிட்டுவிடக் கூடாது.

`எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண்:107)

தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை நல்லவர்கள் மறக்கவே மாட்டார்கள். ஏழு பிறவிகளிலும் அதை எண்ணுவார்கள்.

`நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.’ (குறள் எண்:108)

 ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால் அவர் செய்த தீமையை அப்போதே மறந்துவிடுவது
நல்லது.

`கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்.’ (குறள் எண்:109)

 கொல்வதைப் போன்ற தீமையை ஒருவர் நமக்குச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்துப் பார்த்தால் நம் துன்பம் மறைந்துவிடும்.

`எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’ (குறள் எண்:110)

 எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் அவர் பாவங்களைக் கழுவ வழியுண்டு. ஆனால் செய்த உதவியை மறந்தவர்க்குக் கழுவாயே இல்லை.  செய்ந்நன்றி அறிதலின் விளக்கமாக ராமாயணத்தில் ஒரு பாத்திரமும் மகாபாரதத்தில் ஒரு பாத்திரமும் இடம்பெற்றுள்ளன. கும்பகர்ணனும் கர்ணனுமே அவர்கள்.  விபீஷணன் போல் கும்பகர்ணன் ராமன் அணியில் போய்ச் சேரவில்லை. ஆனால் ராமன் தரப்பில்தான் அறம் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். தன் அண்ணனான ராவணனுக்குப் பலவகைகளில் புத்திமதி சொல்லிப் பார்த்தான்.

தான் துயிலெழுப்பப் பட்டபோதுதான் உண்மையிலேயே விழித்துக் கொள்கிறான் கும்பகர்ணன். ராவணனிடம் அவன் கேட்கும் கேள்விகள் ராவணனை திகைக்கச் செய்கின்றன. ‘‘போர் வந்துவிட்டதா? கற்பின் கனலியான சீதையின் துயரம் இன்னுமா தீரவில்லை? மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பரவிய உன்புகழ் போய்விட்டதா? இறக்கும் காலம் வந்துவிட்டதா?’’ என்றெல்லாம் அவன் தொடுத்த வினாக்கள் ராவணன் எடுத்த முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

  இவ்வளவு தூரம் ராவணனைக் கடிந்து புத்திமதிகள் சொன்னாலும் தன்னை அதுவரை ஆதரித்துப் பாதுகாத்தவன் தன் அண்ணன் ராவணனே என்பதைக் கும்பகர்ணனின் உள்மனம் உணர்கிறது. எனவே ராவணன் விரும்பியபடி நடந்துகொள்வதே சரி என அவன் முடிவுசெய்கிறான். உயிர் போகும் என்று தெரிந்தே செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் எண்ணத்தில் போருக்குப் புறப்படுகிறான் கும்பகர்ணன்.

  போர்க்களத்தில் விபீஷணன் வந்து கும்பகர்ணனை ராமன் அணியில் சேருமாறு அழைத்தபோது கும்பகர்ணன் சொல்லும் பதில் அவனது உள்ளத்தை நமக்குப்
புலப்படுத்துகிறது.  ‘‘நீர்க்குமிழி போல் என்றேனும் ஒருநாள் எப்படியும் அழியப் போகிற இந்த வாழ்க்கையை விரும்பி நான் உன் அணிக்கு வரமாட்டேன். இத்தனை நாள் என்னை வளர்த்து இன்று எனக்குப் போர்க்கோலம் புனைந்து போருக்கு அனுப்பியவருக்கு உயிர்கொடுப்பதே என் அறம்.’’ என்று தெளிவாக அறிவிக்கிறான் கும்பகர்ணன். திருக்குறள் கூறும் செய்ந்நன்றி அறிதலுக்கு விளக்கமாகவே கம்பன் படைத்த பாத்திரம் என்று கும்பகர்ணனைச் சொல்ல வேண்டும்.

கும்பகர்ணன் ராவணனின் உடன் பிறந்த தம்பி. எனவே ராவணன் கும்பகர்ணனை ஆதரித்ததில் வியப்பில்லை. அது ரத்த பாசம். அதற்கு நன்றியாக உயிரை விட்டான்
கும்பகர்ணன். ஆனால் மகாபாரதப் பாத்திரமான கர்ணன் துரியோதனனின் சகோதரன் அல்ல. அவன் பாண்டவர்களின் சகோதரன். இந்த உண்மையும் இறுதியில்தான் அனைவருக்கும் வெளிப்படுகிறது. ஆனால் போர் நடக்கும் முன்பாகவே, அனைவருக்கும் இந்த உண்மை வெளிப்படுவதற்கும் முன்னால் கர்ணனுக்கு அது சொல்லப்பட்டு விடுகிறது. சொல்பவள் அவன் தாயான குந்தி.

  ‘‘கெட்டவனான துரியோதனனை விட்டுவிட்டு பாண்டவர்களுடன் வந்து சேர்’’ என அழைக்கிறாள் அவள். கர்ணனே அவளின் மூத்த மகன் என்பதால் போரில் வெற்றி பெற்ற பிறகு அவனுக்கு மகுடம் உறுதி என்று கூட ஆசை காட்டுகிறாள். ஆனால் எந்த ஆசை வார்த்தைக்கும் கர்ணன் இணங்கவில்லை. தான் அவமானப்பட்டு நின்ற காலத்தில் தன்னை ஆதரித்து அங்க தேசத்தின் மன்னனாகவும் ஆக்கிய துரியோதனன் அணியில் இருந்து உயிரை விடுவதும் தனக்கு மகிழ்ச்சியானதே என முடிவெடுக்கிறான் கர்ணன். கர்ணனின் செய்ந்நன்றி அறிதல் பண்பு கும்பகர்ணனை விடவும் கூட ஒருபடி மேலானது.

தமிழ் மூதாட்டி அவ்வையார் தாம் எழுதிய மூதுரை என்ற புகழ்பெற்ற வெண்பா நூலில் நன்றியுணர்ச்சியின் பெருமையையும் அது இல்லாதிருப்பவர்களின் சிறுமையையும் பல பாடல்களில் பேசுகிறார்.

`நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’

 ஒருவருக்குச் செய்த உதவிக்கான பலன் என்று வரும் என எண்ணி உதவி செய்யத் தயங்க வேண்டாம். வேர் மூலம் நீரை உண்ட தென்னை மரம் பின்னாளில் அதே நீரை இளநீராகத் தந்துவிடும்.

`நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.’

  நல்லவர்க்குச் செய்யும் உதவி கல்மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. இரக்கமில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துப் போல் பயனில்லாது அழிந்துவிடும்.    பாத்திரமறிந்து உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எச்சரிக்கிறார் அவ்வையார். நன்றி என்றதும் நினைவுக்கு வரும் பிராணி நாய்தான். தன்னை வளர்த்தவரிடம் நாய் காட்டும் நன்றியுணர்ச்சி வியக்க வைப்பது. மற்ற பிராணிகளும் வளர்த்தவர்மேல் பாசமுடையவை என்றாலும் நன்றியுணர்வைத் தெரிவிப்பதில் நாயை மிஞ்சிய விலங்கு வேறு கிடையாது.

  நன்றியுணர்ச்சியில் மனிதர்களை விட நாய்கள் மேம்பட்டவை என்று சொல்லி நாயின் நன்றியுணர்ச்சியைப் புகழும் பாடலொன்று `படிக்காத மேதை` திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தான் நாய்போல வளர்த்த தனது மகனல்லாத வளர்ப்பு மகனின் அன்பைப் பாராட்டிக் கதாநாயகனும் கதாநாயகியும் பாடுவதாக அமைந்த பாடல். கே.வி. மகாதேவன் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி பாடியுள்ள இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்களில் ஒன்று:

`ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
  ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை - அந்த
  ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை!.....
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் - அதைப்
  பிள்ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார் - அதன்
  உள்ளத்திலே வீடுகட்டித் தானும் இருந்தார்..
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை - ஒரு
  துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா! - தம்பி!
  நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா!`

`இறைவன் இரண்டு இடங்களில் வசிக்கிறான். ஒன்று சொர்க்கத்தில். இன்னொன்று நன்றியுள்ள மனிதன் இதயத்தில்’ என்கிறார் ஐசக் வால்டன்.`நன்றியுள்ள மனிதன் எதுசொன்னாலும் நம்பலாம். அவன் நிச்சயம் துரோகம் செய்யமாட்டான்’ என்கிறது ஸ்பெயின் தேசப் பழமொழி.  `உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று தமிழ்ப் பழமொழியும் சொல்கிறது.

வள்ளுவர் வலியுறுத்தும் செய்ந்நன்றியறிதல் என்னும் உணர்வு உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு நல்லுணர்வு. வள்ளுவர் சொல்லைப் பின்பற்றி அந்த உணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்வில் இனிமை காணலாம்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்