இருகைகளுடன் விஷ்வக்சேனர்



கும்பகோணம் அருகில் உள்ள திருத்தலம் ‘திருக்கண்ண மங்கை’. இத்தலத்தில் உள்ள பக்தவத்சலப் பெருமாள்  திருக்கோயிலில் இருக்கும் விஷ்வக்சேனர் சிறப்புடையவராவார். பிற திருக்கோயில்களில் நான்கு கரங்களுடன் தோன்றும் இவர் இக்கோயிலில் இரு கைகளுடன் விளங்குகிறார். தாம் நான்கு கரங்களுடன் தோன்றினால் திருமாலைக் காணவரும் திருமகள், தன்னையே திருமால் என எண்ணி விடுவாரோ எனும் எண்ணத்தினாலேதான் இரு கரங்களுடன் விளங்குகிறாராம்.

அரிய வடிவில் கருடாழ்வார்


திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி திவ்ய தேசத்தில் இருக்கும்  தாமோதர நாராயணப் பெருமாள். திருக்கோயிலின் மகா மண்டபத்தின் தெற்கில், சுவாமி சந்நதிக்கு எதிராகத் தங்க முலாம் பூசப்பெற்ற உற்சவரான கருடாழ்வார் இருக்கிறார். கருடாழ்வார் பொதுவாகக் கைகளைக் கூப்பியவாறு தோன்றுவார். ஆனால் இத்திருத்தலத்தின் உற்சவர் வைகுண்டத்தில் தோன்றுவது போலக் கைகளை ஒன்றன் மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கியவாறு கட்டிக்கொள்வதைப்போல உருக்கொண்டு அரிய வடிவில் காட்சி தருகிறார்.

நான்குமுகன் பெயர் சூட்டிய தலம்

திருமால் மனம் மகிழ்ந்து தமிழ்நாட்டில் கண்ணன் அவதாரத்தில் எழுந்தருளியுள்ள ஐந்து கண்ணன் திருத்தலங்களில் திருவாரூர் அருகில் உள்ள திருத்தலம் ‘திருக்கண்ணங்குடி.’ இத்திருத்தலத்திற்கு ‘பஞ்ச பத்ரா’ என்னும் பெயரை நான்குமுகன் சூட்டியுள்ளார். இத்தலத்தில் ஆறு, காடு, ஆலயம், திருக்குளம், ஊர் ஆகிய ஐந்து கூறுகளும் நிறைந்ததால் அவ்வாறு பெயரிட்டார். அவை காவிரி என்னும் ஆறு. கிருஷ்ணாரண்யம் என்னும் வனம், கிருஷ்ணேக்ஷத்திரம் என்னும் ஊர், திருக்கண்ணங்குடி என்னும் ஆலயம். சிரவண புஷ்கர்ணி எனும் திருக்குளம் ஆகும். கருட புராணத்தில் இத்தலத்து திருக்குளம் சிறப்பித்துக் கூறப்படுவதால் இத்திருத்தலத்துக்கு ‘பௌராணிக ேக்ஷத்திரம்’ என்று பெயர்.

- டி. பூபதிராவ்