குடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்* (8-6-2019 முதல் 14-6-2019 வரை) ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி - நடாதூர் அம்மாள்

வசந்த காலம் எனப்படும் சித்திரை - வைகாசி காலத்தில் அனைத்துத் திருக்கோயில்களிலும் வசந்த உற்சவம் நடப்பது வழக்கம். கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகாசி மாதம் பௌர்ணமிக்கு ஆறுநாட்கள் முன் வசந்த உற்சவம் தொடங்குவது வழக்கம். முதல் ஆறு நாட்களும் மாலையில் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள், ஏழாம் திருநாளன்று வெள்ளி ரதத்தில் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளிச் சாற்றுமுறை கண்டருள்வார்.

அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், கோமளவல்லித் தாயார் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அதற்கு அடுத்த நாள், பெருமாளும் தாயாரும் இணைந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி உற்சவத்தை நிறைவு செய்வார்கள். இவ்வருடம் 12-5-2019 முதல் 21-5-2019 வரை பத்து நாட்களுக்கு இவ்வுற்சவம் இனிதே நடைபெற்றது. சார்ங்கபாணிப் பெருமாளின் வசந்த உற்சவம் நிறைவடைந்தபின், கும்பகோணம் கடைவீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி வசந்த உற்சவம் கண்டருள்வார். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தின் கடைசி ஏழு நாட்களில் இவருக்கு வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் வைகாசி 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, ஜூன் 8-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை கும்பகோணம் ராஜகோபால ஸ்வாமிக்கு வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.

ராஜகோபாலனுக்கு நடைபெறும் வசந்த உற்சவம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், அக்கோவயிலில் வேதாந்த தேசிகனைத் தமது மடியில் வைத்து ஆசிர்வதித்தபடி காட்சி தரும் நடாதூர் அம்மாளையும் வசந்த மண்டபத்துக்குத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார் பெருமாள். 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் நடாதூர் அம்மாள். அவருக்கு வரதகுரு என்று பெயர். அவர் காஞ்சியிலுள்ள நடாதூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். காஞ்சி வரதராஜப் பெருமாளுக்குப் பாலை ஆற்றிச் சமர்ப்பித்தபடியால், அவரது தாய்ப்பாசத்தைக் கண்டு வியந்து “அம்மா!” என்று பெருமாளே அவரை அழைத்தார். அதனால் வரதகுரு என்ற பெயர் மறைந்து, நடாதூர் அம்மாள் என்று அவர் அழைக்கப்படத் தொடங்கினார்.

அவர் சிலகாலம் குடந்தையில் தங்கியிருந்து சார்ங்கபாணி-சக்ரபாணி பெருமாள்களுக்குக் கைங்கரியம் செய்து வந்தார். குடந்தை சக்ரபாணிப் பெருமாளைக் குறித்து ‘ஹேதிபுங்கவ ஸ்தவம்’ என்னும் துதியை இயற்றியுள்ளார். அவரும் குடந்தை ராஜகோபாலன் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் பெருமாளுக்கு அருகில் எழுந்தருளியுள்ளார். இளம் வயதிலுள்ள வேதாந்த தேசிகனைத் தம் மடியில் அமர்த்தி ஆசிர்வதிக்கும் கோலத்தில் நடாதூர் அம்மாளின் விக்கிரகம் அமைந்துள்ளது.

ராஜகோபால ஸ்வாமிக்கு எப்போது புறப்பாடு நடைபெற்றாலும் நடாதூர் அம்மாளும் அவருடன் புறப்பாடு கண்டருளுவது அக்கோயிலின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் வசந்த உற்சவம் நடைபெறும் ஏழு நாட்களும் கோயிலுக்கு அருகாமையிலுள்ள வசந்த மண்டபத்துக்கு ராஜகோபாலனும், ருக்மிணி சத்தியபாமாவும், நடாதூர் அம்மாளும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

இக்கோவிலில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த வசந்த உற்சவம் இடையில் சில காரணங்களால் நின்று போயிருந்த நிலையில், பாஞ்சராத்ர ஆகம விஷாரதர் ஸ்ரீ.உ.வே. சக்ரபாணி பட்டாச்சாரியார் சுவாமி, தமது அயராத முயற்சிகளால் வசந்த மண்டபத்தைப் புனரமைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இந்த உற்சவம் மீண்டும் தொடர்வதற்கு வழிவகை செய்துள்ளார்.

 
- ராஜகோபாலன்