வளமை கொண்ட வசந்த காலம்நம் பெரியோர்கள் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்தார்கள்.

வடமொழிப்
  பெயர்                                 தமிழ்ப் பெயர்                 காலம்

வசந்த ருது               இளவேனில் காலம்     சித்திரை, வைகாசி
கிரீஷ்ம ருது           முதுவேனில் காலம்      ஆனி, ஆடி
வர்ஷ ருது                          கார்காலம்                ஆவணி, புரட்டாசி
சரத் ருது                    இலையுதிர்க்காலம்        ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது          முன்பனிக் காலம்           மார்கழி, தை
சிசிர ருது                        பின்பனிக் காலம்          மாசி, பங்குனி

இவற்றுள் சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்கள் அடங்கிய காலம், வசந்த காலம் என்றும் இளவேனில் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.வசந்தம் என்ற வடமொழிச் சொல், இனிமை, வளமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். செடி, கொடிகளெல்லாம் வளமையுடன் பூத்திருக்கும் காலமாகவும், மக்கள் மகிழ்ந்திருக்கும் காலமாகவும் திகழ்வதால், வசந்த காலம் என்று சித்திரை, வைகாசி காலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

இக்கருத்தை வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி பகவான் ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார்.

“சைத்ர: ஸ்ரீமான் அயம் மாஸ: புண்ய: புஷ்பிதகானன:”
சித்திரை மாதமும் திருமாலும் ஒன்று.

ஏனெனில்,

* மாதங்களுக்கு ஆதி சித்திரை. அனைத்துலகுக்கும் ஆதிமூலம் திருமால்.
* சித்திரை மாதம் ஸ்ரீயோடு வளமையோடு கூடியிருக்கிறது. திருமாலும் ஸ்ரீயோடு திருமகளோடு கூடியிருக்கிறார்.
* சித்திரை மாதத்தில் செய்யும் நற்செயல்கள் நமக்குத் தூய்மையைத் தருகின்றன. அவ்வாறே திருமாலும் நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.
* சித்திரை மாதத்தில் செடிகளில் பூ பூத்திருக்கும். அது செடிகளின் தலையில் மகுடம் வைத்தாற்போல் இருக்கும்.

எனவே சித்திரை மாதத்தை முடிசூடும் மாதம் என்றே சொல்லலாம். அதுபோலத்தான் திருமாலும் எப்போதும் தலையில் கிரீடத்தோடு திகழ்கிறார்.இத்தகைய ஒற்றுமைகள் இருப்பதால் சித்திரை மாதமும் திருமாலும் ஒன்று என்று வால்மீகி கூறுகிறார். தமிழில் இளவேனில் காலம் என்று சித்திரை, வைகாசி மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. வேனில் என்றால் வெயில் என்று பொருள். மழை, பனி, குளிர் உள்ளிட்டவை எல்லாம் விலகி, சூரியன் வெளிவரும் காலமான படியால், இது இளவேனில் காலம் என்றழைக்கப்படுகிறது. வெயில் அதிகமாக இருக்கும் காலமாக வசந்த காலம் இருப்பதால், வசந்த காலத்தில் மாலை வேளையில் மன்னர்கள் சோலையில் இளைப்பாறுவார்கள்.

இந்த வசந்த காலத்தில் பல்வேறு திருத்தலங்களில் வசந்த உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. பொதுவாக அனைத்து திருக்கோயில்களிலுமே வசந்த மண்டபம் இருப்பதை நாம் கண்டிருப்போம். அம்மண்டபத்தைச் சுற்றி அழகிய தோட்டங்களும், பொய்கைகளும் இருப்பதைக் காணலாம். சோலைகளில் இளைப்பாறும் காலமான வசந்த காலத்தில், மாலை நேரத்தில், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி இறைவன் இளைப்பாறுகிறார்.

- ஸ்ரீநிவாசன்