வசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு ஒன்பது நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுகிறது.
 
வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் உற்சவம் நிறைவடைய வேண்டும் என்பது மரபு. இந்த வருடம் மே மாதம் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை திருவரங்கத்தில் இந்த வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியளவில் தனது ஆஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், 6 மணியளவில் வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். அங்கே எழுந்தருளியபடி விசேஷ அலங்காரமும், பிரசாத நிவேதனமும், சூர்ணாபிஷேகமும் கண்டருளிய நம்பெருமாள், இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, 10 மணியளவில் மீண்டும் தனது ஆஸ்தானத்தை அடைந்தார்.

ஆழ்வார்களுள் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார், அரங்கனுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்வதற்காக ஒரு அழகிய நந்த வனம் அமைத்திருந்தார். பின்னாளில் திருமங்கை ஆழ்வார் அரங்கனுக்கு மதில் கட்டிய போது, அந்த அழகிய நந்தவனத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மதிலைச் சற்றே வளைத்துக் கட்டினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த நந்தவனத்தில் தான் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறுகிறது.

ஆரம்ப காலத்தில் திருவரங்கத்திலுள்ள ராமானுஜர் சந்நதியில் தான் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெற்று வந்ததாகச் சொல்கிறார்கள். விஜயநகர அரசர்களின் காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் அமைத்த நந்தவனத்தின் மத்தியில் புதிய வசந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டதால், அப்போது முதல் நந்த வனத்திலுள்ள வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கண்டருளுகிறார்.

வசந்த மண்டபத்திலிருந்து மீண்டும் சந்நதிக்கு எழுந்தருளும் போது, திவ்வியப் பிரபந்தத்தைக் கேட்டுக்கொண்டே ஆனந்தமாகத் திரும்புவார். அப்போது வழியில் ஸ்ரீரங்க நாச்சியார் சந்நதியின் வாசலில் நின்று தாயாரின் திருமுகத்தைப் பார்த்தபின் மூலஸ்தானத்தை அடைவார். ஏழாம் திருநாளான மே 16-ம் தேதியன்று நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார்.

ஒவ்வொரு உற்சவத்திலும் ஏழாம் திருநாளன்று கோயில் குதிரில் நெல் உள்ளிட்ட தானியங்கள் எவ்வளவு சேர்ந்துள்ளன என்ற கணக்கை நம்பெருமாள் சரிபார்ப்பது வழக்கம். அதை நெல் அளவு கண்டருளல் என்பார்கள். நெல்லும் தானியங்களும் ஒருநாட்டின் வளத்துக்கு அடையாளமாக இருப்பதால், அக்கால மன்னர்கள் நெல் அளவு பார்ப்பதன் மூலம் நாட்டின் வளமையைக் கணிப்பார்கள்.

அதுபோல், அனைத்துலகுக்கும் அரசனான ரங்கராஜனும், உலகின் க்ஷேமத்தை அறிவதற்காக நெல் அளவு கண்டருளுகிறார்.வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான மே 18-ம் தேதியன்று மாலை 5 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்த நம்பெருமாள், 7 மணியளவில் சந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி கண்டருளி, அதன்பின் 7.45 மணியளவில் வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். சுமார் 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தை அடைந்தார்.

 - அரங்கதாசன்