திருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்



பங்குனி மாதம் பௌர்ணமி முதல் சித்திரை மாதம் பௌர்ணமி வரை உள்ள காலத்துக்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களும் திருமலையில் மலையப்ப சுவாமிக்கு வசந்த உற்சவம் வருடம் தோறும் நடைபெறுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் இவ்வுற்சவம் கொண்டாடப்படுகிறது.

வசந்த உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் மலையப்ப சுவாமி, அங்கே வாசனை திரவியங்கள் நிறைந்த தீர்த்தத்தில் ஸ்நபன திருமஞ்சனம் கண்டருள்கிறார். கோடைக் காலத்தில் இறைவனைக் குளிர்விப்பதற்காக இத்திருமஞ்சனம் நடக்கிறது. நிறைவு நாளான மூன்றாம் நாளன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியுடன், ராமன் - சீதை - லட்சுமணன் - அனுமன் மற்றும் ருக்மிணி - சத்யபாமா சமேத கிருஷ்ணனும் புறப்பாடு கண்டருளி, வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி அனைவரும் திருமஞ்சனம் கண்டருள்கிறார்கள்.