வசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன்




* 5-7-2019 தேதி முதல் 14-7-2019 தேதி வரை


வசந்த காலத்தில் பல்வேறு திருத்தலங்களில் இறைவனுக்கு வசந்த உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்த்ரபுரம் எனும் திருவந்திபுரத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இறைவனை விட அந்த இறைவனை நமக்குக் காட்டித்தரும் குரு உயர்ந்தவர் அல்லவா அத்தகைய குருவான வேதாந்த தேசிகனுக்குச் சிறப்பான முறையில் பத்து நாட்கள் வசந்த உற்சவம் திருவஹீந்த்ரபுரத்தில் வருடந்தோறும் நடைபெறுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம், ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று நிறைவடையும். இவ்வருடம் ஜூலை மாதம் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை இவ்வுற்சவம் நடைபெறவுள்ளது.

தினமும் காலையில் திருமஞ்சனம் கண்டருளும் தேசிகன், மாலையில் வீதிப் புறப்பாடு கண்டருளுவார். வசந்த உற்சவத்தின் முதல் ஆறு நாட்கள் மாட வீதிகளிலும், அடுத்த நான்கு நாட்கள் பெரிய வீதிகளிலும் புறப்பாடு கண்டருளுவார். அதன்பின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்து அடியவர்களுக்கு அருட்பாலிப்பார். திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாளைப் பாடுகையில், “யானும் நீயே என்னுள் உறைதலின்!” என்று பாடினார் தேசிகன். “எனக்குள் உயிராக நீ இருக்கிறாய். உனக்கு உடலாக அடியேன் இருக்கிறேன். இந்த உடல்-உயிர் உறவை இட்டு யானே நீ என்று சொல்லலாம்!” என்று பெருமாளைப் பார்த்துச் சொன்னார் தேசிகன்.

அதன் நினைவாக உற்சவத்தின் ஏழாம் திருநாளன்று, வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரத்திலும், எட்டாம் திருநாளன்று நாச்சியார் திருக்கோலத்திலும், ஒன்பதாம் திருநாளன்று பரவாசுதேவன் அலங்காரத்திலும் வேதாந்த தேசிகன் காட்சியளிப்பார். நிறைவு நாளான ஆனி கேட்டையன்று காலையில் திருமஞ்சனம் கண்டருளியபின், ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் ஔஷதகிரி மலையை அடையும் தேசிகன், நண்பகலில் ஹயக்ரீவரோடு ஒரே ஆசனத்தில் அமர்ந்து திருமஞ்சனம் கண்டருளுவார். அப்போது தேசிகன் இயற்றிய ஹயக்ரீவ ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்படும்.

குடந்தை உ.வே.வெங்கடேஷ்