ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்




அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 44


விரும்பித் தொழும் அடியார் என்பதால் அடியார்கள் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக உமையம்மையை தொழுகிறார்கள் என்பதாக இப்பாடல் கூறுகிறது. இறைவனை தொழுவது சாலச்சிறந்தது என்பதனால் அந்த நன்மையை வலியுறுத்த அபிராமி பட்டர் கீழ்க்கண்ட வகைகளில் முயல்கிறார். ஒன்று தீயதை விலக்கு இறைவனை வணங்கு ‘‘ஒரு தீங்கில்லையே ’’ நூற் பயன் . நன்மையை அடைய இறைவனை தொழு.. ‘‘தனம் தரும் கல்வி தரும் ’’ - 68 உண்மையை உணவ இறைவனைத் தொழு ‘‘அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே -’’ 16 வையம், துரகம், மதகரி, மாமகுடம் சிவிகை. பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே - 52.

இந்த பாடல் வரிகளின் மூலம் அபிராமிபட்டர் இறையருளினால் ஏற்படும் நன்மைகளை சூட்டி காட்டி அவள் திருவடிகளின் அன்பு செய்ய ஆசை காட்டுகிறார். இது பொருள் வகையால் ஆசை காட்டுதல் என்ற பண்பை வெளிப்படையாக சூட்டிகாட்டுகிறது. ஆசையை வெவ்வேறு விதத்திலே அடியவர்கள் வரையறுத்துக் காட்டுகிறார்கள். அந்த வகைகளைப் பார்த்து அவைகளை ஒப்பிட்டு இப்பாடல் வரிகளை விளக்குவது என்பது அதன் கருத்தாழத்தை அறிய உதவும் ‘திரு மூலரின் பாடலில் ஈசனோடாயினும் ஆசை அநுமின்’’ ஆசையானது அறுத்து விட வேண்டிய பண்பு. துன்பத்திற்கு காரணமான பிறவியை தோற்றுவிக்கும் என்கிறார் வள்ளுவர்,

 ‘‘பிரக்கிருதி சாமோகி மர்த்யவர’’ என்கிற வடசொல்லிற்கு ஆசை மனிதனின் இயல்பு என்கிறது வேதம். காமதகன மூர்த்தி என்று இறைவனுக்கும் பெயர் இறைவன் ஆசையை அழித்தவன், அபிராமிபட்டரோ உமையம்மையின் விழிகளே ஆசை அனைத்தையும் நிறைவேற்றும் என்கிறார், என்றாலும் அவரே ஆசை கடல் என்கிறார்.
ஆன்றோர்களின் வார்த்தையை நன்கு உணர்ந்த அபிராமிபட்டர், மனிதனின் இயல்பானதும், அறுத்து விட வேண்டியதும், துன்பத்திற்கு காரணமாகிற ஆசையை எந்த வகையிலும் கடக்க முயற்சி செய்து தோல்வியே அடைகிறார்கள்.

‘‘ அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில்
அல்லற்பட இருந்தேனை ’’-

சக்தி என்பது நால்வகை பொருள்களில் கையாளப்படுகிறது. சிற்ப சாத்திரமானது இவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ராகபாசம், நாகபாசம், பந்த பாசம், காலபாசம் என வரையறுத்திருக்கிறது. அபிராமிபட்டர் குறிப்பாக காலபாசத்தைப் பற்றி பேசுகிறார். பிற பாசங்களை அறிவதனால் மட்டுமே காலபாசத்தை தெளிவுறப் புரிந்து கொள்ள முடியும். இனி அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்.

ராகபாசம் :- என்பது ஆசையினாலே தூண்டப்படுவதாகும் சற்று குறைவான துன்பத்தை பயக்கும் (உதா) ஆசைப்பட்ட பொருள் கிடைக்காத போது வரும் துன்பம்.

நாகபாசம் :- என்பது அறியாமையினாலே வரும் துன்பத்திலிருந்து விடுபட செய்யும், நெடிய முயற்சியாலன்றி போக்க வல்லதல்ல, மனதை ஒரு நிலைப்படுத்துவதாலும், புலனடக்கத்தினாலும், பிரம்மச்சரிய விரதத்தினாலும் அடையப்படுவது குண்டலினி சக்தியாகும். (இது பாம்பு வடிவாகும்) இது தட்சிணாமூர்த்தி கையில் இருக்கும் பாசமாகும்.

பந்தபாசம் :- ஆன்மா எப்போது ஒரு உடலை அடைகிறதோ அப்போதே பாசமும் வந்து சேர்ந்து விடும் (உதா) நெல்லில் உமிபோலே செம்பில் களிப்பு போல. இவை இறையருளால் மட்டுமே நீக்கவல்லது. தானாக முயன்றாலும் நீக்கி கொள்ள முடியாதது.

காலபாசம் :- மேல் உள்ள மூன்று பாசத்தையும் விடக் கொடுமை செய்வது காலபாசம் மட்டுமே , இறையருள், தன்முயற்சி காலத்தினால் ஏற்படும் பரிபக்குவம், இவை அனைத்துமே இருந்தாலன்றி இதிலிருந்து தப்பிக்க முடியாது. அத்தகைய பெரிய வலுவுடையது காலபாசம் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றார்.

துறவினால் - ராகபாசத்தையும், வழுவாமையாகிற நெடிய தவத்தினால் நாகபாசத்தையும், அருளினால் பந்த பாசத்தையும் நீக்கி கொள்ளலாம். நீக்கிக் கொள்ளவே முடியாது என்பது காலபாசமே, ஆசையின் வடிவான பாசத்தை கொண்டவள் உமையம்மை ‘‘ராகஸ்வரூப - பாசாட்யாயை ’’ என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.

சிற்பசாத்திரம், திருக்கடையூர் தலவரலாறு மற்றும் செவிவழி செய்தி திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியினிடத்து இன்றும் எமனிடம் பாசக் கயிறு இருப்பதை காணலாம்.
காலணாகிறவன் எப்போதும் பாசத்தை கையில் வைத்து கொள்வதில்லை என்பதையும், உடலை விட்டு உயிரை பிரித்தலாகிற செயலை செய்கிற போது மட்டுமே பாசக் கயிற்றை கையில் எடுப்பார். கொடிய பாசத்திலிருந்து தப்பிக்க முடியாத கடினமான தன்மையை விளக்குவதோடு தன் மீது உமையம்மை கொண்ட கருணையையும் தெளிவுற விளக்கவே ‘‘அல்லற்பட இருந்தேனை என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

இந்த வார்த்தையை கால வழு என்ற இலக்கணத்தின் வழி சிந்தித்தால் அபிராமி பட்டர், தான் எப்போதும் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர் காலத்திலும் துன்புற்று இருந்தேன்.இருக்கிறேன். இருப்பேன் என்று காலத்தினால் தொடர்ந்த துன்பத்தை அடைந்தார் என்பது தெரிகிறது. ‘‘நின் பாதம் எனும் வாசக்கமலம்’’- உமையம்மையை தாமரையோடு ஒப்பவைத்து என்னுவது மென்மை கருதியும் அழகு நிறம், குளிர்ச்சி, பருமன், தேன் இவை கருதியே, தாமரையை சார்ந்தது நீர் மற்றும் சேர் மலர் மலர்வதற்கான சூரியன் இவை அத்துணையும் பட்டராலே வெவ்வேறு இடங்களில் பேசப்படுகிறது.

அப்படி தாமரையை வசிப்பிடமாகக் கொண்டது வண்டு (தேனீ) மட்டுமே தேனீ நோக்கிலே தாமரையை பற்றி பேசினால் தாமரையானது சகல வசதிகளுடன், உணவு, மகிழ்ச்சி, பாதுகாப்பு இவைகளோடு கூடிய வண்டின் இருப்பிடமாகும். இவையாவும் மற்ற பூக்களில் இல்லாத தனி சிறப்பாகும் மற்ற பூக்களில் தேனீ தங்க முடியாது இடம் இருக்காது, பூக்கள் சிறியதாக இருக்கும் ஆனால் தாமரை மலையில் குவியும் போது தேன் உண்ட வண்டு தாமரையின் உள்ளேயே இருக்கும்.

அதனால் தேனீக்கு மிகுந்த பாதுகாப்பான  இடமாகும் மற்ற பூக்களை விட தாமரையில் தேன் மகிழ்ச்சியாக இருக்கும். தேனீ எப்பொழுதும் பூமியின் புழுதிகளால் பாதிக்கப் படாமல் இருப்பதற்கு மிக தூய்மையாக காற்று உள்ள உயர்வான இடத்திலேயே தேன் அடையை கட்டும், அதுபோல் குளத்தின் நடுவின் தாமரை உள்ளதால் குளிர்ச்சியானதாகவும் தூய்மையானதாகவும் இருப்பதால் தேனீக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. அதுபோல மனிதர்களின் தேவைகள் அனைத்தையும் அபிராமியின் பாதக்கமலர்களே நிறைவேற்றும் என்பதால் நின் பாதம் என்னும் வாசக் கமலம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

இப்பாடலில் தாமரையின் உள்ளே தேனீ தங்கும் இடமாக பொருள் செய்து இருக்கின்றார், தேனீயின் வசிப்பிடமாக இருப்பதால் தாமரையை வாசக்கமலம் குறித்தார். உமையம்மையை சாக்த உபாசகர்கள் தன்மை முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலையில் உபாசனை செய்கிறார்கள். இந்த பாடலில் அபிராமிபட்டர் குறிப்பிடுவது முன்நிலையில், [ இறைவியை நேரே கண்டு பேசுகிறார் ] அப்படி உமையம்மை முன்நிலையில் நின்று பேசுவது தேவர்க்கும் அறிய செயலாகும்.

ஆனால் அபிராமி பட்டரோ ‘‘நின்’’ என்கின்ற வார்த்தையால் முன்நின்று பேசுகிறார் . அப்படி பேசுவதும் இயலாத காரியம் என்பதை

‘‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத நின் திருமூர்த்தி’’ - 87
‘‘மொழி தருமாறி ’’- 94 என்ற வரியால் நன்கு உணரலாம்.

அப்படி இருந்தும் ‘‘நின்’’ என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருப்பது அவருக்கு அபிராமியிடத்து இருந்த அளவற்ற பக்தியும், அபிராமிக்கு அவர் மீது இருக்கும் கருணையின் ஆழம் ‘‘நின்’’ என்ற வார்த்தையின் வழி நன்கு உணரலாம். ‘‘பாதம் என்னும் வாசக்கமலம் ’’ - என்ற வார்த்தையால் அபிராமியின் பாதத்தை தாமரையாகவும், வசிப்பிடமாகவும், குறிப்பிடுகிறார்.

‘‘நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல்’’ அடியவர்கள் மலர் கொண்டு உமையம்மையை வணங்குகிறார்கள். அந்த மலர்கள் 100க்கும் மேலாக ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு சிறப்பு மலர் என்றும் இந்த தேவதைக்கு இந்த மலர் பிடிக்கும் என்றும், சில தேவதைகளுக்கு சில மலர்கள் வைக்க கூடாது என்றும், ஆகமங்கள் மலர்களைப் பற்றி அதிகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் உமையம்மைக்கு மிகவும் விரும்பிய மலராக தாமரையானது கூறப்பட்டுள்ளது.

அம்மலரை உமையம்மைக்கு அணிவிப்பவர்கள். இறைவியின் நெஞ்சில் நீங்கா நிலை பெறுவர் என்று ஆகமங்கள் குறிப்பிடுகிறது. இதையே ‘‘பத்மினி, பத்மபிரியா பத்ம தலாய தாட்ஷி ’’ என்று எல்லாம் குறிப்பிடப்படுவதிலிருந்து அறியலாம். அப்படிப்பட்ட தாமரையை உமையம்மைக்கு அணிவித்தால், விரும்பிய பலனோடு ஏற்றத்தையும் மோட்ஷத்தையும் ... என்கிறது.

‘‘தலை மேல் வலியவைத்து’’ - குருவினிடத்தில் மந்திரம் பெற்று ஆகமங்களில் கூறிய பூசை நெரியின் வண்ணம் உமையம்மைக்கு தாமரை சாந்தி வழிபாடு செய்தால், உமையம்மை தன் அருள் சக்தியை வழங்குவாள், அதற்கு தீட்சை என்று பெயர். அந்த தீட்சையானது உமையம்மையோடு இடையறா தொடர்பை ஏற்படுத்த கொள்வதற்கான சாதனமாகும்.

இந்த தீட்சையினால் உபாசகனின் நினைவில் உள்ள எண்ணத்தை உமையம்மையும், உமையம்மையின் எண்ணத்தை உபாசகனும், ஒருவருக்கு ஒருவர் மாறுதலின்றி சரியாக புரிந்து கொள்வதற்கு உதவும். அத்தகைய தீட்சையை செம்மையாக உபாசனை செய்வதற்கு, உபாசகனின் பக்குவம் சார்ந்து உமையம்மையே நேரடியாக தன் திருவடியை உபாசகனின் தலையில் சூட்டியருள்வாள்.அந்த அருள் குறிப்பைத்தான் ‘‘நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து’’ என்பதாக குறிப்பிடுகின்றார்.

அதில் குறிப்பாக வலியவைத்து என்று குறிப்பிட்ட தன் காரணம், அபிராமிபட்டர் தான் முறையாக குருவினிடம் பணிந்து வித்தையை கற்கவில்லை, பூசனை நூல்களை நன்கு கற்று அவைகளில் குறிப்பிட்டுள்ளபடி, முறையாக பூசனை புரியவில்லை. உள்ளன்பும் இல்லை, மாறாக இறைவியின் மீது வலுத்த கோபமும், மிகுந்த ஆசைகளையும் இயல்பாக கொண்டவராக அபிராமி பட்டர் தன்னை குறிப்பிடுகின்றார்.

இழி பண்புகள் இல்லாத உயர்ந்த பண்புகளை மட்டுமே கொண்ட ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன் அமரர்தங்கோன் போதில் பிரமன், புராரி, முராரி பொதிய முனி காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிவர் - போற்றுவர் தையலையே - 97 தேவர்கள் இருக்கும் போது, இந்த பண்பை இயல்பாக கொண்ட வரும், அறியாமையாமையால் அபிராமியின் அருளைப் பெறாமல் இருந்த என்னை, வலிய வந்து திருவடி சூட்டி அருளியது உமையம்மையின் கருணையே, தன் முயற்சியல்ல என்பதை நமக்கு வெளிப்படுத்துவதற்காகவே

 ‘‘நாயேனையும் ஒரு பொருளாக நயந்தவந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் ’’ - 61 என்பதாலும் ‘‘நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து ’’ என்பதாலும் அறியலாம்.

‘‘ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ’’ இறைவியானவள் தன்மீது வைத்திருக்கின்ற கருணையையும், அன்பையும், தனக்கு செய்திருக்கிற அருளையும் ‘‘என் சொல்லுவேன்’’ என்ற வார்த்தையால் கவிதை வடிவாகவோ, கருத்து கட்டுரையாகவோ, மொழிக்குள் வரையறுத்து, வார்த்தைக்குள் அகப்படுத்தி இறை அனுபவத்தை சொல்லுதல் என்பது இயலாது என்பதனாலேயே ‘‘என் சொல்லுவேன்’’ என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

சொல்ல முடியாததை விட்டுவிட வேண்டியது தானே ?என்று நமக்குள்ளே ஒரு கேள்வி எழும், இறைவியைப் பற்றிய கருத்துக்களை சொல்ல இயலாது என்பதை ‘‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத ’’ என்பதாலும் சொல்லக் கூடிய திறன் தனக்கு இல்லை ‘‘வல்லபம் ஒன்றரியேன்  (பாடல் எண்-66) என்பதனாலும் நமக்கு
அறிவுறுத்துகிறார்.

     பிறகு எப்படி சொன்னார். பொய்யும், மெய்யும், இயம்பவைத்தாய் ... - 57 உலகியல் அறிவாகிய பொய்யையும் இறையியல் உண்மையாகிற மெய்யையும் பற்றி சொல்லவைத்தது உமையம்மையே என்பதை வலியுறுத்தவே ’’ இயம்பவைத்தாய் ’’ - 57 தான் சொல்லவில்லை என்பதனை நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இந்த அனைத்து
கருத்துக்களையும் மனதில் கொண்ட ‘‘ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ’’ என்று கூறுகிறார்.

‘‘ஈசர் பாகத்து நேரிழையே ’’ என்பதனால் சாக்த உபாசகர்கள் உமையம்மையை ஐம்பத்தி ஒன்றிற்கும் மேற்பட்ட வடிவத்தில் வழிபாடு செய்கிறார்கள் அதில் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு பயனைத்தருவதாகும். அந்த வகையில் உமையம்மையின் வடிவமானது சிற்பசாத்திரம் சார்ந்து, சிவனுடன் இணைந்ததாகவும், தனியாக உள்ளதாகவும், உடன் உறைவதாகவும், பிற தேவதைகளுடன் இணைந்ததாகவும் என்று பல்வேறாக பிரிக்கின்றனர். இவை அனைத்தையும் அபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார்.

சிவனோடு இணைந்த கங்காதரர் -
‘‘... தலை வந்த ஆறும் .... (பாடல் எண் - 98)
தனியாக ...‘‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லி .’’ நூல்பயன்
கல்யாண சுந்தரர் :- நின் துணைவரும் நீயும் (பாடல் எண் - 89)
செம்முகனும் :- வல்லி நீ செய்த வல்லபமே... 65 என்ற வார்த்தைகளால் தெளிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘‘ஈசர்பாகத்து நேரிழையே’’ என்பதனால் சிவனோடு இணைந்த திருமேனியை குறித்தார். இது ஆகம நோக்கில் அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும். இந்த உமையம்மையை வழிபாடு செய்வதனால் எல்லா தெய்வத்தையும், அதனதன் தன்மையை உணர்ந்து வழிபாடு செய்யும் வல்லமை உபாசகனுக்கு தோன்றும். அனைத்து உருவத்தையும், அதற்குரிய மந்திரத்தையும், வழிபாட்டு முறைகளையும், வெவ்வேறாக ஆகமங்கள் விளக்கி கூறுகிறது.

அவை அனைத்தையும் அறிந்து உணர்ந்து வழிபாடு செய்து பயன் பெறுவது என்பது ஒருவரால் இயலாது, ஒருவர் பெற்ற ஆயுளினாலும் வணங்கி பயன் பெற இயலாது.
அர்த்தநாரீஸ்வரரின் மந்திரத்தை அறிந்து உச்சரித்து வழிபாடு செய்தால் அது அனுபவத்தில் மிக எளிமையாக சாத்தியப்படும், ‘‘எங்கு எத்தெய்வம் கண்டீர் அங்கு அத்தெய்வமாகி மாதெருபாகனார் தான் வருவார் ’’ என்கிறது சைவம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்