கழற்சிங்க நாயனாரை ஆட்கொண்ட கயிலை நாதன்



* கழற்சிங்க நாயனார் குருபூஜை - 1.6.2019

‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத்தொகையில் போற்றப்படும் சிறப்பினை உடையவர்  ஆவார். கழற்சிங்கநாயனார் பல்லவர்களது குலத்தில் அவதரித்தவர். கழற்சிங்கர் சிவபெருமானது திருவடிகளையே வழிபட்டு வந்தார். அரசராய் அரசாட்சியும் செய்து வந்தார். இவர் சார்ந்த  பல்லவர்  குலம் சோழ மரபினுடன்  தொடர்புடைய பிரிவு ஆகும். இம்மரபினர்க்கு உரிய கொடி இடபக்கொடி ஆகும். தன் காலில் வீரக்கழலையணிந்த சிங்கம் போன்றவர் என்பது  தெரியவே கழற் பெருஞ்சிங்கனார் என்ற அடையை இடையில் வைத்தார் சேக்கிழார். இதனுள் கழல் என்பது  அடைமொழி ஆகும். சிங்கன் என்பது அவர்தம் பெயராகும்.

சிறந்த சிவபக்தியுடைமையால் அறியவேண்டிய மெய்ப்பொருளை அறிந்திராதலின் ‘அறிவினில்’ என்னும் சொல்லால் அவரைக் குறித்தார்  சேக்கிழார். உலகியற் பொருட்கள் பலவும் தன் கண்ணில் பட்டாலும்  அவற்றை அறிவினுள்  ஒரு பொருட்டாகக் கொள்ளமாட்டார் என்பதனாலேயே ‘அறிவினில் அறியா’ என்று குறிக்காது  ‘அறிவினில்குறியா’ என சிறப்பித்துக் காட்டினார் சேக்கிழார்.

காடவர் குலத்து மன்னராகிய  கழற்சிங்கர்  பொன்னாலாகிய மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திய சிவபெருமான்  திருவருளினாலே போர்க்களம் பல சென்றார். பகைவர்களைப்  போர்களில் அழித்து  வடபுலத்தவர்களது நாடுகளையும் வென்று தன் கையில் கொண்டார். மேலும் நாடு நீதி நெறியிலே செல்லும் வண்ணம் நன்னெறியினை வளர்த்து அரசாண்டு வந்தார். இதனுள் நீதிநெறி  எனக் குறிக்கப்படுவது அறநெறியாம் உலகியல் நெறியும், நன்னெறியாம் சிவநெறியும் ஆகும். பிறர் நாட்டினைக் கவர வேண்டும் என்னும் எண்ணம் இன்றி அரச நீதி முறையினால் சேரும் அருளினால் போர் செய்தமையால் ‘அருளினால் அமரிற் சென்று’ எனச் சிறப்பித்தார் சேக்கிழார் பெருமான்.    

கழற்சிங்கர் தன் தேவியாருடன்  சிவபெருமான் எழுந்தருளி அருட்பாலிக்கும்  திருக்கோயில்கள் பலவும் சென்று வணங்கி அக்கோயில்களுக்கு திருத்தொண்டுகளைச் செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் காலத்து ஒரு நாளில் சிவநகர் என்னும்படி நிலைபெற்ற பெருமையினை உடைய திருவாரூரினைச் சென்றடைந்தார். அந்நகரில் உள்ள திருக்கோயிலினுள் பிறவிப் பிணி நீங்க அருட்பாலித்து வரும் தியாகேசப்பெருமானை வழிபடலானார்.

இவரது பட்டத்து அரசி  கழற்சிங்கர் இறைவனைப் பணிந்து வணங்கிய பொழுது அவருடன் நில்லாது கோயிலினைச் சுற்றி அதன் பெருமை கண்டுவந்தனள் என்றும் இறைவர்க்காக வைத்த புதுப்பூவை மோந்து பின்னர்க் குற்றம் செய்தனள் என்றும், வருவது இந்நாயனாரின் வரலாறு என்பதனால்  அரசர் பணியச் சென்றார் என்று, வேறாக பிரித்து அரசி செல்லவில்லை என்பதனையும் கூறினார் சேக்கிழார்.

கழற்சிங்கர் மந்திரியர், புரோகிதர், சேனாபதியர், தூதர், சாரணர் என்போர் அடங்கிய ஐவகைக் குழுக்கள் சூழ இறைவனுடைய கோயிலினுள்ளே சென்று இறைமுதல்வராகிய புற்றிடங் கொண்டாரை வணங்கிய பொழுது, பட்டத்து அரசி அக்கோயிலை வலமாக வந்து அங்கு உள்ள பெருமைகளை எல்லாம் தனித்தனியே பார்த்து வந்தாள். திருக்கோயிலுள் இருந்த தெய்வத் திருமேனிகளின் எழிலிலும் சிற்பங்களின் அழகிலும் ஓவியங்களின் உன்னதக் கலையழகிலும் உள்ளம் பறிகொடுத்தாள் பட்டத்து மாதரசி. அவ்வாறு வரும்பொழுது இறைவனுக்குப் பூத்தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில்  புதியபூ விழுந்து கிடந்தது. அத்தகைய பூவின் இயற்கைப் பொலிவிலும் மணத்திலும் சிந்தை பறிகொடுத்த தேவி அம்மலர் இறைவனுக்கு உரியது என்பதனையும் உணரும் சிந்தை அற்றவளாய்  உடன் எடுத்து மோந்தனள்.

கோயிலை வலங்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்

சாயல்மா மயிலே போல்வாள் தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்ததொன்று எடுத்து மோந்தாள்.

மேற்கண்ட பாடலில் பட்டத்தரசி புதுப்பூவினை மோந்தாள் என்று குறித்தாலே போதுமானது. ஆயினும் எடுத்து மோந்தாள் எனச் சேக்கிழார் குறித்தது அரசி எடுத்ததற்கு ஒரு தண்டனையும் மோந்ததற்கு பிறிதோர் தண்டனையுமாய் இருவேறு தண்டனைகளைப் பெறப் போகிறாள் என்பதனைக் குறித்தற்கே  ஆகும். இவ்வாறு பட்டத்தரசி புதுப்பூவை மோந்த செயலைக்  கண்ட  செருத்துணையார் என்னும் நாயனார் மலரினைப் பூமண்டபத் திருமுற்றத்தினுள் இருந்து எடுத்து மோந்தவள் அரசி என்றும் கருதாது விரைவாக ஓடிப்போய்க் கருவியினை எடுத்துக்கொண்டு வந்து தாமரை மலரில்  வீற்றிருக்கும் இலக்குமி போன்ற அத்தேவியது மூக்கினைப் பிடித்து அரிந்தார். இதனை,

‘‘புதுமலர் மோந்த போதில்; செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள் எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.’’

என்ற பாடல் விளக்கி நிற்கும். செருத்துணை நாயனார் அரசரை அணுகி தேவி இறைவனுக்குரிய மலரினை எடுத்து மோந்த  செயலின் தன்மையைக் கூறினார். தன் எதிரில் நிற்பவன், அரசன் என்று அறிந்தும் அஞ்சாது அரசியின் செயலைக் கூறிய செருத்துணையாரின் வீரச்செயலை,

‘‘அந்நிலை யணைய வந்து செருத்துணை யாராம் அன்பர்
முன்னுறு நிலைமை யங்குப் புகுந்தது மொழிந்த போது,
மன்னரும் அவரை நோக்கி மற்றிதற்கு உற்ற தண்டந்
தன்னையவ் வடைவே யன்றோ தடிந்திடத் தகுவ தென்று’’

என்ற பாடல் விளக்கி நிற்கும். மன்னரும் அவரை நோக்கி  மற்று இச்செயல்களுக்குப் பொருந்திய தண்டனையை அக்குற்றங்கள் புகுந்த அடைவுப்படி அன்றோ தண்டிக்கத்தக்கது என்று கூறினார். மேலும் தமது இடுப்பிற் கட்டிய உடைவாளை உருவி அந்தப் பூவினைத் தொட்டு முன்னர் எடுத்த கைதான் முதலில் துணிக்கப்பட வேண்டியது என்று சொல்லித் தமது அரசியின்   கரங்களை அணிந்த வளையலோடும் அப்பொழுதே துணித்தார்.

‘‘கட்டிய வுடைவாள் தன்னை உருவி யக் கமழ்வா சப்பூத்
தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துனிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல்பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தார் அன்றே.’’

கை தொட்டு எடுத்துத்தரப் பின் மூக்கு முகர்ந்தது ஆதலின் கையே முதற் குற்றவாளியாம், அதனை முதலில் தண்டித்தலே தகுதி என்னும் குறிப்புத் தோன்றவே பாடலில்  ‘தொட்டு முன் எடுத்த’ என்ற தொடர் காரணக் குறிப்புடன் நின்றது. சிவன் பணி என்னும் கடமையின் முன்னர் இவ்வுலக பாசபந்தங்கள் எல்லாம்  வலிமையற்று ஒழிந்தன என்பதே அடிமைத்திறத்தின் அருமைப்பாடாம். இவ்வாறு அரசரால் தண்டிக்கப் பட்டமையாலே  அரசி சிவபெருமானுக்கு இழைத்த குற்றத்தின் நீங்கி நற்கதியடைந்தாள்.

இக்குறிப்புத் தோன்ற முன்னர் ‘பவமறுத்தாட் கொள்வார்’ என சேக்கிழார் குறித்தாமையை ஈண்டு ஒப்பு நோக்கி மகிழலாம். இச்செயல்  உலகியலில் வன்மையான செயல்போலக் காணப்படினும் இது கருணைச் செயலே ஆகும். இவ்வாறு அரசர் தமது   தேவியின் செங்கையினை  உடைவாளினால் துண்டித்த போது, சிவத்தொண்டர்களின் அரகர முழக்கமாகிய ஒலியும் தேவர்களின் முழக்கமும் கூடிப் பெருக,  தெய்வமணமுடைய கற்பகப் பூமழையும் வானில் இருந்து அப்பொழுதே பெய்தது.

‘‘ஒருதனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மிருவிய தெய்வ வாச மலர்மழை பொழிந்த தன்றே.’’

இத்தகைய அருமையான திருத்தொண்டினை ஆற்றிய அரசர்  நீண்ட காலம் தமது உரிமையாகிய அரசாட்சியினையும் திருத்தொண்டினையும் அருமையுறச் செய்து  விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உயர்ந்தவராகிய சிவபெருமானது   திருவருட் சிறப்பினால் செம்மை தரும் சிவந்த திருவடி நிழலில்  இருக்கும்  பேறு பெற்றார்.

அரியஅத் திருத்தொண் டாற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே செய்யசே வடியி னீழல்

பெருகிய உரிமை யாகும் பேரருள் எய்தி னாரே கழற்சிங்கரின் இத்தகைய செயற்கரும் செயல்  சிவபெருமானுக்குப் பட்டத்தரசி இழைத்த குற்றத்தினை மாற்றியதுடன், தனது பட்டத்தரசி என்றும் பாராது உலகப்பற்றினை நீக்கிய அரசனின் உயர்வினையும் சிவபெருமான் திருவடியைப் பற்றிய பாங்கினையும் எடுத்துரைத்து நிற்கிறது. எனவே இச்செயல் திருத்தொண்டு எனப்பட்டது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாகிய சிவபெருமான்பால் கொண்ட பற்றினால் தவறிழைத்த  பட்டத்தரசியின் கரம் துணித்து கண்ணுதலானின் கருணைத்திறம் கொண்டு உய்தி பெற்ற கழற்சிங்கரின் குருபூசை வருகின்ற வைகாசி மாதம் பதினெட்டாம் தேதி ( 01 - 06 - 2019 ) பரணி நட்சத்திரத்தில் வருகின்றது. அந்நன்னாளில் திருக்கோயில் சென்று கழற்சிங்கநாயனாரின் கழலடி போற்றி அவர்தம் அருள் பெற்று உய்வோமாக!

முனைவர் மா. சிதம்பரம்