யார்தான் அறிவார் பிறப்பின் மர்மத்தை?



திருமூலர் திருமந்திர ரகசியம்

தமிழில் சொல்லாடல்கள் அதிகம். தற்போது உள்ள மின்கணினிகள் கூறும் தகவல்களைவிட, போன தலைமுறையில், விஞ்ஞான சாதனங்கள் வெளிப்படாத காலத்தில், அதுவும் கிராமப்புறங்களில் இருந்த பெரியவர்களின் சொல்லாடல்கள் மிகவும் வியப்பூட்டும். அப்பெரியவர்களின் சொல்லாடல்கள் எல்லாம், அவர்களின் சொந்த அனுபவத்தில் விளைந்தவை. அவற்றில் ஒன்று, ‘மண் குதிரை (குதிரையை அல்ல) நம்பி ஆற்றில் இறங்காதே’  என்பது.

ஆறுகளில் சிலசமயம் தண்ணீர் வற்றி (முன்பெல்லாம் ஆறுகளில் தண்ணீர் ஓடியது, தயவு செய்து நம்புங்கள்!) நடுநடுவே ஆங்காங்கே, மணல் மேடுகள் சிறு சிறு திட்டுகளாக இருக்கும். அவற்றைக் ‘குதிர்’ என்பார்கள். அக்‘குதிர்’களை நம்பி, அதில் இறங்கி நடக்க முடியாது. காரணம், அவை சிலசமயம் மணல் புதைகுழிகளாக இருக்கும். அது உறுதியான ஒரு மேடு என்று நம்பிக் காலை வைத்தால், உள்ளே இழுத்து விடும்.‘‘ஆற்றில் நீர் குறைந்து, ஆங்காங்கே மணல் மேடு (குதிர்)கள் தெரிகின்றன. ஆற்றில் இறங்கி, சுலபமாக அக்கறைக்குச் சென்று விடலாம்’’  என எண்ணி ஏமாறக்கூடாது.

இதையே ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்றார்கள் முன்னோர்கள். இதே போன்றதொரு சொல்லாடல்தான், ‘பெத்த வயத்துல பிரண்டைய வெச்சிக் கட்டிக்கணும்’ என்பதும். குழந்தை பிறந்ததும், தாயின் வயிற்றில் சில தழும்புகள் ஏற்படும். அத்தழும்புகள் மறைவதற்காக, வயிற்றில் பிரண்டையை வைத்துக் கட்டுவார்கள். தழும்புகள் மறைந்து, வயிறு பழைய நிலைக்கே திரும்பும். இப்படிப்பட்ட ஒரு சொல்லாடலைச் சொல்லிப் பாடம் நடத்துகிறார் திருமூலர்.

இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே
- (திருமந்திரம்-486)

கருத்து: தாயின் கருவில் கரு உயிர்க்கக் காரணமான தந்தைக்கும், அக்கருவைச் சுமக்கும் தாய்க்கும், குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பது தெரியாது. இதையெல்லாம் அறிந்த பிரம்மதேவரோ, இந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லாமல் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்த பரம்பொருள் அந்த உயிரோடு அங்கேயேதான் தங்கியிருக்கிறார். இந்த மாயையை அறிய முடியாத புதிரை, அறிய முடியாமல் நானும் தவிக்கின்றேன்.

‘இட்டவர் அறியார்; ஏற்றவர் காணார்’

- அற்புதமான சொல்லாடல். இது எப்படி? இட்டவர் - தந்தை; ஏற்றவர் - தாயார். நாம் பிறந்திருக்கிறோம் என்றால், இதற்கான விதையை இட்டவர் - தந்தை. அதை ஏற்று, நம்மைக் கரு சுமந்து பெற்றவர் - தாயார்.தான் இட்டது, ஆணா, பெண்ணா? பிறக்குமா பிறக்காதா? அக்குழந்தை என்னவாக ஆகும்? அதன்நிலை என்ன? - எதையுமே தந்தை அறிய மாட்டார்; அவருக்குத் தெரியாது. சரி! தந்தையின் நிலைதான் இப்படி என்றால், அதை ஏற்ற தாயாருக்கும் எதுவுமே தெரியாதாம். அதாவது, ‘ஏற்றவர் (தாயார்) கண்டிலர்’ என்கிறார். தான் கருச்சுமந்து, மாதா மாதம் அது தன் வயிற்றிலே வளர்ந்தாலும், பத்து மாதங்கள்வரை அக்குழந்தையைத் தாயார் பார்த்ததில்லை, பார்க்க முடியாது.

அதாவது, குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரியாதது மட்டுமல்ல; தன் வயிற்றுக்குள்ளேயே குழந்தை வளர்ந்தாலும், அதன் வளர்ச்சியை உணரமுடியுமே தவிர தாயாரால் பார்க்க முடியாது என்பதையே ‘கண்டிலர்’ என்கிறார் திருமூலர். தந்தை அறிய மாட்டார், தாயாரால் பார்க்க முடியாது என்பதற்காக, நாம் தாயின் வயிற்றிலேயே இருந்துவிட முடியுமா? பத்து மாதங்கள் ஆனதும் பிறந்து விடுகிறோம். என்ன இது? பெற்றவர்கள்தான் அறியவில்லை, பார்க்கவில்லை, பிறந்த குழந்தையாவது தன் விருப்பப்படி ஏதாவது செய்ய முடிகிறதா என்றால், இல்லை. ஆகவே, நம் பிறப்பு நம் கையில் இல்லை.

அடுத்ததாக, நம்மைப் படைப்பதாகச் சொல்லும் பிரம்ம தேவரைப் பார்க்கலாம். அவராவது தன் விருப்பப்படி, தன் இஷ்டப்படிப் படைக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. அவரவர் செய்த புண்ணிய, பாவங்களுக்கு ஏற்றவாறுதான் படைக்கிறார் பிரம்ம தேவர். அவருக்கும் சுதந்திரம் கிடையாது. பிரம்ம தேவருக்கு நம்முடைய புண்ணிய பாவங்கள் முழுமையாகத் தெரியும். ஆனால், அவற்றை நமக்குச் சொல்ல மாட்டார்; வேறு யாருக்கும் சொல்லவும் மாட்டார். இதை, ‘தட்டான் அறிந்தும் ஒருவருக்கு உரைத்திலன்’ என்று கூறினார் திருமூலர். தாமரையை இருக்கையாகக் கொண்ட பிரம்ம தேவரை, ‘தட்டான்’ எனத் திருமூலர் குறி்ப்பிடுவது, புதுமையான சொல்லாட்சி.

இவ்வாறு சொல்லி வந்த திருமூலர், கருவிலிருக்கும் ஜீவராசியுடன், பரம்பொருளும் இருப்பதாகக் கூறுகிறார். உண்மைதானே! கடவுள் அருள் இல்லாவிட்டால், கருவறையில் இருந்து நாம் வெளியே வரமுடியுமா? வெளியே வந்துவிட்டோம். தெய்வம் அப்போதும் நம்முடன்தான் இருக்கிறது நாம் வளர, வளர நம் செயல்கள் ஒவ்வொன்றிலும், தெய்வம் தன் இருப்பை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், அதை நம்மால் உணர முடியவில்லை. ‘‘தெய்வத்தின் இருப்பை உணர்ந்து அனுபவிக்க முடியாமல்  ஏதோ தடுக்கிறது. அந்தப் புதிரில் இருந்து விடுபட இயலாமல் நான் தவிக்கிறேன்’’ என்கிறார் திருமூலர். தெய்வத்தை உணர்ந்து அனுபவிக்க விடாமல், மாயை தடுக்கிறதாம். இவரும் தவிக்கிறாராம்.

கைலையில் சிவனுடன் இருந்து சிவனருளை முழுமையாகப் பெற்று, பொதிய மலையில் அகத்தியரைத் தரிசிக்க விரும்பியவர், மூலனின் உடலில் புகுந்து பசுக்களின் துயர் தீர்த்தவர், அருந்தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் எனப்  பலவிதங்களிலும் பேரருள் பெற்ற திருமூலர், தெய்வ அருளை உணர்ந்து அனுபவிக்க விடாமல் மாயை தடுக்கிறது; நான் தவிக்கிறேன் எனக் கூறுவதை எப்படி நம்ப முடியும்? செல்வத்தின் அருமை, பெருமை திடீர் பணக்காரர்களுக்குத் தெரியாது. உழைத்துச் சேர்த்த செல்வத்தின் அருமை, பெருமை நற்செல்வந்தர்களுக்குத் தெரியும்.

அவர்கள் ஒருபோதும் தங்கள் செல்வப் பிரதாபங்களைச் சொல்லித் தண்டோரா போடமாட்டார்கள். அடக்கமாக வாழ்ந்து, அடுத்தவர்களையும் நல்வழியில் உயர்த்தப் பாடுபடுவார்கள். அதுபோல, ஞான நிலையின் உச்சத்தில் இருக்கும் திருமூலர் தற்பெருமை பேசாமல், தெய்வ அருளை உணர விடாமல் அறியாமை - மாயை - தடுக்கிறதே எனச்சொல்லி, ‘‘பயப்படாதீர்கள்! ஆண்டவன் அருளை அடையவிடாமல் தடுப்பது அறியாமை (மாயை)தான். அந்த அறியாமையை நீக்குமாறு தெய்வத்திடம் முறையிடலாம் வாருங்கள்!’’ என்று நம்மையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இறைவனிடம் முறையிடுகிறார்:

பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும் பொன்வகையாகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.
- (திருமந்திரம் -2054)

கருத்து: தொட்டதை எல்லாம் தங்கமாக மாற்றும் ஆற்றல் பெற்ற ‘பரிசவேதி’யைப்போல, குருநாதரின் பரிசம் பட்ட சீடர்கள் எல்லோரும், மூவகையான அழுக்குகளும் நீங்கி சிவகதி பெறுவார்கள். பரிசவேதி - எனும் கல் தன்னைத் தொட்டதை எல்லாம், தான் தொட்டதையெல்லாம், தங்கமாக மாற்றும் ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட பரிசவேதியைப் போன்றவர் குருநாதர். அவர் தன் சீடர்களைத் ‘தீண்டுதல்’ மூலமாக, ஞானவான்களாக மாற்றுவார். சீடர்கள், முக்குற்றங்களான ஆணவம் - கன்மம்- மாயை என்பவை நீங்கி, சிவகதியை அடைவார்கள்.

நமக்குப் புரிவதற்காக, பரிசவேதியைச் சொல்லி குருநாதரை சமப்படுத்தி இருக்கிறாரே தவிர, எப்படிப் பார்த்தாலும் பரிசவேதியை விடப் பன்மடங்கு பல விதங்களிலும் உயர்ந்தவர் குருநாதர். இதை நமக்கு நுணுக்கமாக உணர்த்துகிறார் திருமூலர். பரிசவேதி ஒரு கல்லாகச் சொல்லப்படும்; குருநாதரோ, கல் அல்ல. பரிசவேதி தானே போய் எதையும் தீண்டித் தங்கமாக மாற்றாது; குருநாதரோ தானே போய் ‘தீட்சை’ எனும் தீண்டுதல் மூலமாக அருள்புரிவார். பரிசவேதிக்கு மனம் கிடையாது, மனதாலேயே மற்றவற்றைத் தங்கமாக்கும் சக்தி அதற்குக் கிடையாது;

குருநாதருக்கோ மனம் உண்டு, மனதாலேயே மற்றவர்க்கு அருள்புரியும் தன்மையும் உண்டு. இப்படிப்பல வகைகளிலும் பரிசவேதியை விடப் பன்மடங்கு உயர்ந்தவர் குருநாதர். அப்படிப்பட்ட குருநாதர் தீட்சை தரும் விதங்கள் அற்புதமானவை. ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, திருவடி தீட்சை, மானச தீட்சை எனப் பலவிதங்களிலும் குருநாதர் அருள்புரிவார். ஸ்பரிச தீட்சை-கரங்களால் தீண்டுவதன் மூலம் நம் குற்றங்களை நீக்கிக் குருநாதர் அருள்புரிவது. நயன தீட்சை - தன் பார்வையாலேயே நம் குற்றங்களை நீக்கிக் குருநாதர் அருள்புரிவது. திருவடி தீட்சை-தன் திருவடிகள் மூலமாக நம்மைத் தீண்டி,

நம் குற்றங்களை நீக்கிக் குருநாதர் அருள்புரிவது. மானச தீட்சை-தீட்சைகளிலேயே மிகவும் அற்புதமானது இது. குருநாதரை நெருங்க வேண்டாம்; அவர் கரங்களோ, கண்களோ, திருவடிகளோ சீடன் மீது படவேண்டிய அவசியமே இல்லை. குருநாதர் எங்கிருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், மனதால் நினைப்பதன் மூலமே சீடனுக்கு அருள்புரியும் தீட்சை இது. அருந்தமிழில் அற்புதமான கருத்துகளைச் சொல்லும் திருமூலர், நம்மை மனதில் நினைத்து நமக்காக ‘மானச’ தீட்சை அளிக்கும் பாடல் இது. குருவாக அவர் இருந்து குற்றங்களைப் போக்கட்டும்! குறைவில்லா ஆனந்தத்தைக் குடும்பத்தில் சேர்க்கட்டும்!

(தொடரும்)

- பி.என்.பரசுராமன்