காதலிப்பதற்கும் ஞானம் வேண்டியிருக்கிறது!



பகவத் கீதை - 63

யஜ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
யேன பூதான்யசேஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி (4:35)

‘‘இந்த ஞானத்தை அடைந்துவிட்ட பிறகு, நீ உனக்குள்ளிருக்கும் மோகத்தை விரட்டிவிடுவாய். இந்த ஒரு நிர்ச்சலனமான நிலையில் உன் அறிவின் ஆதாரத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும். அந்த ஆதாரமே நான் என்பதை நீ தெரிந்து கொள்வாய். உடனே நீ என்னில் ஒன்றிவிடுவாய். சச்சிதானந்த பூரணத்துவத்தைப் பெற்றிடுவாய்.’’ஞானம் நம்மை வந்தடைகிறது என்றால், அது சூரியப் பிரகாசமாய் நம்மிடம் இருக்கும் இருளை ஓட்டுகிறது என்று பொருள். தங்கள் அறைகளை நிரப்பவேண்டும் என்ற நிபந்தனையோடு தன் இரு மகன்களுக்கும் கொஞ்சம் பொருள் கொடுத்தான் ஒரு தந்தை.

‘நிரப்புவது’ என்பதை மூத்த மகன் அளவீடாக எடுத்துக்கொண்டான். அந்த வார்த்தையை அப்படியே அர்த்தம் பண்ணிக்கொண்டான். கூடவே தனக்குத் தரப்பட்டிருக்கும் பொருளில் எதை வாங்கினால் தன் அறையை நிரப்ப முடியும், எவ்வளவு மிச்சம் பிடிக்க முடியும் என்றும் யோசித்தான். முடிவாக விலை மலிவாக இருக்கக்கூடிய வைக்கோலை வாங்குவது என்றும், அதை அறை முழுவதும், ஒரு இண்டு, இடுக்கு விடாமல் அடைத்து வைப்பது என்றும் திட்டமிட்டான். ஜன்னல் கதவு வழியாகக் கொஞ்சம் வெளியே நீட்டிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை, அது தனக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைக்குக் கூடுதல் மரியாதை செலுத்துவது போலாகும் என்றும் நினைத்துக்கொண்டான்.

அதன்படியே அறை முழுவதும் வைக்கோலைப் போட்டு அடைத்து நிரப்பி, அந்த செலவு போக மிச்சப்படுத்திய காசையும் கொண்டுபோய் தந்தையிடம் கொடுத்து விவரத்தைச் சொன்னான். இரண்டாவது மகன் கொஞ்சம் யோசித்தான். ஒரு அறையில் பொருட்களை நிரப்புவது என்றால், அந்தப் பொருட்களையும், அது பிடித்துக்கொண்டிருக்கும் இடத்தைத் தவிர மீதமுள்ள அறைப் பகுதியையும் உபயோகத்திற்குள்ளானவையாக மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இவனைப் பொறுத்தவரை நிரப்புவது என்பது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.

இந்த கர்மத்தைத் தான் சிரத்தையுடன் மேற்கொள்ளவேண்டும். ஏனோ, தானோவென்று கடமையாற்றக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். ஆகவே ஒரு விளக்கை வாங்கிவந்தான். திரி பொருத்தி தீபமாய் ஏற்றினான். பளிச்சென்று ஒளிர்ந்த விளக்கு அறை முழுவதும் பிரகாசமாய்ப் பரவியது. அந்த அறையே புதுப் பொலிவு பூண்டது. இரண்டாவது மகன் செயல்பட்டது ஒரு ஞானியின் கோணத்தில். தனக்கென்று எந்த விருப்பு, வெறுப்பையும் கொள்ளாமல், எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்காமல் வினையாற்றும்போதுதான் நேர்மறையாக அந்தச் செயல் நிறைவேறும்.

அறையை நிரப்புவதில் அவன் ஆர்வம் கொள்ளவில்லை. எதனால் நிரப்புவது என்பதைத்தான் யோசித்தான். ஒளி மிகுந்த அவனுடைய மனம் விளக்கை சிபாரிசு செய்தது. அதை அவன் அப்படியே ஏற்றுக்கொண்டான். இத்தகைய ஆக்கபூர்வமான சிந்தனையே அவன் ஒரு ஞானி என்பதைக் காட்டுகிறது. ஒளியால் நிரம்பிய அந்த அறை அவனுக்கு மட்டுமல்லாமல், அந்த அறையை யார் பயன்படுத்தினாலும் அவருக்கும் பயனாகும் என்ற பொதுநோக்கு சிந்தனை அவனுடையது. அடைப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருந்த மூத்த மகன் அந்த எண்ணத்தை நிறைவேற்றிவிட்டான்தான், அனால்.

அதனால் அவனுக்கே எந்தப் பயனும் இல்லை. ஆமாம், அவனாலும் அந்த அறைக்குள் போக முடியாது, தங்க முடியாது! நிரப்புவதாகிய எண்ணத்தை இவன் மோகித்தான். அதனால் வேறு எந்த ஆக்கபூர்வமான எண்ணமும் தோன்றவில்லை. சொன்ன காரியத்தை முடித்துவிட்டேன் என்ற பெருமையை அடைய இவன் முற்பட்டதால், அந்த விளம்பரத்தை மோகித்ததால், இவன், அடுத்து எந்த யோசனையும் தோன்றாமல், அந்த எண்ணத்தோடே நின்றுவிட்டான். பொதுவாக மோகம் என்பது சுயநல அடிப்படையில் எழுவதுதான். தான் பெற்ற பிள்ளையை ஆரோக்கியமானவனாக, கல்வி அறிவு மிகுந்தவனாக, நற்பண்புகள் நிறைந்தவனாக ஒரு பெற்றோர் வளர்க்கிறார்கள் என்றால்,

தாம் வாழும் சமுதாயத்துக்கு ஒரு நல்லக் குடிமகனை அவர்கள் வழங்குகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் உள்ளத்தில் ஒரு மூலையில், ‘இவன் பின்னாளில், நம் இயலாமைக் காலத்தில் நம்மைப் பராமரிப்பான்’ என்ற சுயநல எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களால் தம் சொந்தப் பிள்ளையிடமிருந்து ஆதரவை, அரவணைப்பை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். இது உறவுகளுக்கிடையேயான பாச மோகம் மட்டுமல்ல, நண்பர்களுக்கிடையேயான நட்பு மோகத்துக்கும் பொருந்தும். வயதான காலத்தில், உடல்நலம் தளர்ந்து, முற்றிலும் பிறர் தயவிலேயே வாழவேண்டிய முதியவர்கள்,

அந்நிலையில், ‘என்னை ஏன் இன்னும் இந்த உலகத்தில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய், இறைவா! என்னை உடனே அழைத்துச் சென்றுவிடு,’ என்று ஆற்றாமையால் பிதற்றுவார்கள். உண்மையிலேயே அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க யமன் அவர் எதிரே வருவானானால், முதியவர் அவனைத் தவிர்க்கவே முனைவார். ‘சரி, இதுவரை மகன் தன்னை கவனிக்கவில்லை, இனிமேலாவது கவனிக்காமல் இருப்பானா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, மோகம், அவர் மனசுக்குள் மரணிக்காமல் ஜீவித்திருக்கிறது. ஆகவே அப்போதும் அவர் தன் மகனைத்தான் நம்பியிருக்கிறார்.

அதாவது. இன்னும் வாழ விரும்புகிறார். தன் இயலாமையையும் மீறி வாழ விரும்புகிறார். தன்னைத் தொடர்ந்து மகனோ அல்லது வேறு யாராவதோ காப்பாற்றிகொண்டே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்த்தலில் வாழ விரும்புகிறார். ‘வாழ விரும்பவில்லை, ஆனால் எப்படி இறப்பது?’ என்பது நியாயமான கேள்வி. இறப்பு வரும்போது வரட்டும், அதுவரை யதார்த்தத்தை விட்டு விலக விரும்புவதாகச் சொல்லிக்கொள்வானேன்? இது நாம் வசதியாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் எதிரொலிதானே? வீட்டிற்குள்ளேயும் எல்லா சௌகரியங்களுடன் வாழ்கிறோம், நடைபாதையிலும் மக்கள் வாழ்கிறார்கள்,

மருத்துவமனைகளில் கோமா கட்டத்திலும் நோயாளிகள் வாழ்கிறார்கள் - எல்லோருக்கும் ஒரே குறிக்கோள்: இறக்கும்வரை வாழவேண்டும்! அதுவரையிலான வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்ற எதிர்பார்த்தலில்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். இந்த எதிர்பார்த்தலில்தான் மோகம் ஒளிந்துகொண்டிருக்கிறது. ஒரு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்தந்த வயது விருப்பங்கள் நிறைவேறவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இறைவனிடம் முறையிடுகிறோம்.

அவரும் நம் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஆனாலும் நமக்கு நம்பிக்கை பிறப்பதில்லை. சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமைய நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது. ஆனாலும் அந்த வீட்டில் பலவகை வசதிகளை அடைய ஆசைப்படுகிறோம், அவையும் நமக்குக் கிடைக்கின்றன. ஆனாலும் மனசு அடங்குவதில்லை. மேலும், மேலும் எதிர்பார்க்கிறது.

காரணம், பிற்காலத்தில், நாம் உடலளவில் வலுவிழந்துவிடுவோம், அப்போதைய சூழலில் நம் விருப்பங்கள் நிறைவேறாமல் போய்விடக்கூடும் என்ற அவநம்பிக்கையும் கூடவே வளர்வதுதான். இவ்வளவு செய்த இறைவன் அந்த காலகட்டத்திலும் நம்மைக் கைவிட்டுவிட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கை வளராததுதான் காரணம். இப்போதே சேர்த்து வைத்துக்கொண்டால், கற்பனையால் மட்டுமே கணிக்கக்கூடிய நம் எதிர்காலத்தில் நேரக்கூடியதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அசௌகரியங்களிலிருந்து மீண்டுவிடலாம் என்ற தப்புக் கணக்குதான் காரணம்.

மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச்  சாய்த்துவிடு - அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு -அல்லாலுயிர்ப்
பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -அல்லாலிதைச்
செத்த வுடலாக்கு  
இந்த பதர்களையே - நெல்லாமென்
எண்ணி இருப்பேனோ
எந்த பொருளிலுமே - உள்ளேநின்
றியங்கி இருப்பவளே.
உள்ளம் குளிராதோ பொய்யாணவ
ஊன மொழியாதோ?
கள்ள  முருகாதோ -அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலு
மேவி இருப்பவளே!

- என்றார் மகாகவி பாரதியார். அனைத்திலும் மேவியிருப்பவளிடம் சரணாகதி அடைந்துவிட்டால், நாம் மோகத்தை வென்றுவிடலாம் என்பது அவருடைய நம்பிக்கை. கிருஷ்ணனும் இதைத்தான் சொல்கிறார். உன் அறிவின் ஆதாரமான என்னைப் புரிந்துகொள், என்னுள் ஐக்கியமாகிவிடு என்கிறார். ‘பொருட்களை உள்ளபடி காணாதிருப்பது மயக்கம். மெய்ஞ்ஞானம் உதயமாகுமிடத்தில் எல்லாப் பொருட்களும், உயிர்களும் ஒரே பரம்பொருளிடத்தில்தான் ஒன்றியிருக்கிறது என்பது பிரத்தியட்சமாகும். ஒன்றென உணர்வது ஞானம், பலவாகக் காண்பது அஞ்ஞானம்,’ என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளைத் தான் மணமுடிக்காவிட்டால், தான் இவ்வுலகில் வாழ்வதில் அர்த்தமேயில்லை, அதனால் தற்கொலை செய்துகொள்வேன்,’ என்று சூளுரைக்கிறான். இப்படிச் சொன்ன பலர் அவ்வாறு தற்கொலை செய்துகொள்ளாமல், இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு விடுகிறார்கள் என்பது ஒரு பக்கம்! ஆனால் தற்கொலை செய்துகொள்பவன், அவள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற அவநம்பிக்கையில்தான் அவ்வாறு செய்கிறான். அதாவது. அவன் தன் காதலில் உறுதியில்லாதவனாக இருக்கிறான். அல்லது அது புறத்தோற்றக் கவர்ச்சியாக மட்டுமே அந்தக் காதல் இருந்திருக்கிறது.

அதேபோல தான் காதலிக்கும் பெண் இறந்துவிடுகிறாள் என்றால், சிறிது காலத்துக்குப் பிறகு இவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், குடும்பம் நடத்துகிறான். இவனுடைய வாழ்க்கையில் எந்த ஆழ்ந்த நிபந்தனையும் இல்லை -  தற்கொலை செய்துகொள்பவன் போல! ஒரு பெண் தனக்கு மனைவியாக வேண்டும் என ஒருவன் தீர்மானிப்பானானால், அவன் இந்தக் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். தன் குடும்பம், தன் வாரிசுகள், ஒட்டுமொத்த எதிர்காலம் என்ற சிந்தனைச் சங்கிலி அவனுக்குள் தொடருமானால்,

அதற்கு அவனிடத்தில் பதில் இருக்குமானால், அது உண்மைக் காதலாக இருக்க முடியும், இல்லாவிட்டால் அது வெறும் மோகம்தான்! காதலிப்பதற்கும் ஞானம்
வேண்டியிருக்கிறது! இதேபோலதான் சேமிப்பும். ‘பின்னால் என்னவாகுமோ!’ என்ற சந்தேக பயத்தின் ‘புத்திசாலித்தன’மான நடவடிக்கை. தன் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான சௌகரியங்களுடன் கூடிய, சுகபோகமான வாழ்க்கைக்கான செலவைவிட அதிகம் சேமிப்பதும் மோகம்தான். வெளியே புழக்கத்துக்கு விடாமல் பூட்டிப் பூட்டி வைத்து, தினமும் அதை அழகு பார்க்கும் ‘கறுப்பு’ மோகம்!

முகமது நபி அவர்கள் இரவில் உறங்கப்போகுமுன் தான் அன்று சம்பாதித்தையெல்லாம் பிறருக்கு தானமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவார். தனக்கென்றோ, சேமிப்பாகவோ, நாளைய சாப்பாட்டுக்காகவென்றோ ஒரு காசுகூட வைத்துக்கொள்ள மாட்டார். ‘ஏனிப்படி செய்கிறீர்கள்?’ என்று உடன் இருப்பவர்கள் பதறுவார்கள். ‘நாளைக்கு நான் இருக்கவேண்டும் என்பது இறைவனின் விருப்பமானால், நாளைக்கு எனக்குத் தேவையானதை இறைவன் அளிப்பான்’ என்று பதிலளிப்பார் நபிகள்.

அதாவது. தன் அன்றையைத் தேவைகளைப் பூர்த்தி செய்தது போக மிச்சமுள்ள பணத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவதாகிய இவருடைய பரோபகாரத்தில் இறைவன் குடிகொண்டிருக்கிறான், இவர் மூலமாக பிறருக்கும் தன் அருளை வழங்குகிறான் என்றுதானே பொருள்? ஒட்டுமொத்தமாக ஒரேநாளில் எல்லாவற்றையும் துறந்துவிட்ட துறவி அல்ல அவர். தினமும் சம்பாதிக்கிறார், தினமும் அதை அப்படியே துறந்துவிடுகிறார். அது அவரால் சாத்தியமாகியிருக்கிறது. இறைவனும் அவர் மூலமாகத் தன் பிற மக்களின் பராமரிப்புப் பணியை விஸ்தரிக்கிறார்!‘வேண்டும்’ என்ற மோகத்தைவிட, ‘வேண்டாம்’ என்ற துறவு மனோநிலைக்கு ஞானம் வேண்டும். இந்த ஞானத்தின் ஆதாரமே பரந்தாமன்தான் என்பதை உணரும்போது யாருக்குமே மோகத்தை வெல்வது என்பது எளிதாகிவிடும்.

(தொடரும்)

- பிரபுசங்கர்