சிவலிங்கத் திருமேனியில்தான் எத்தனை சிறப்புகள்!உசிலம்பட்டி

பல நூறாண்டுகளுக்கு முன் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது பொய்கைப்பட்டி கிராமம். அந்த வனப்பகுதியில் பொய்கை ஒன்று உள்ளது. அந்தப் பொய்கையின் பெயர் நச்சுப் பொய்கை. பாண்டவர் காலத்தில் அது நச்சு கலந்த பொய்கையாக இருந்ததாம். பாண்டவர்கள் வனவாசத்தின்போது இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்தார்கள். இந்தப் பொய்கையில் தருமனைத் தவிர  மற்ற நால்வரும் நீர் அருந்த, நால்வருமே மாண்டனர். சகோதரர்கள் நால்வரும் மாண்டதைக் கண்டு துடித்த தருமர் இறைவனை நோக்கி பிரார்த்திக்க, இறைவன் தருமர் முன் தோன்றி “உங்கள் தருமம் உங்களைக் காக்கும்.

உன் சகோதரர்கள் உயிர் பெற்று எழுவர்”  எனக்கூறி மறைய நால்வரும் உயிர் பெற்று எழுந்தனர். இது செவி வழி வரலாறு. நச்சு கலந்த அந்தப் பொய்கையின் நீரை அந்த நால்வரும் அருந்தி உயிரை விட்டதால், அந்தப் பொய்கை நச்சுப் பொய்கை என அழைக்கப்பட்டது. இன்றும் அந்தப் பொய்கை அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது. அந்தக் காட்டுப் பகுதியில் தினசரி மாடு மேய்க்க செல்வான் சிறுவன் ஒருவன். தனக்கு தாகம் எடுக்கும்போதெல்லாம் அந்தப் பொய்கைக்குச் சென்று தண்ணீர் பருகி தாகம் தீர்த்துக் கொள்வது அவன் வழக்கம். தான் மேய்க்கும் மாடுகளையும் அந்தப் பொய்கைக்கு ஓட்டி சென்று நீர் அருந்தச் செய்வான்.

அந்தச் சிறுவன் ஒருநாள் காட்டில் ஒரு சிவமேனியைக் கண்டான். பதறிப்போன அவன் ஊர் மக்களிடம் ஓடிவந்து அந்தத் தகவலைக் கூறினான். சிவபக்தர் ஒருவர் ஊர் மக்கள் உதவியுடன் அந்தத் திருமேனியை அருகில் உள்ள கிராமமான உசிலம்பட்டிக்குக் கொண்டு வந்தார். அங்கே உசிலை மரங்கள் நிறைந்த தோப்புப் பகுதியில் ஒரு சிறிய கொட்டகை போடப்பட்டு அந்த சிவத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. உசிலைவன நாதர்  என்ற திருநாமத்துடன் தற்போது அருள் பாலித்து வருகிறார் இறைவன். இறைவி பெயர் சொர்ண ரேகா.

உசிலை மரங்கள் நிறைந்த கிராமம் அது. எனவே அந்தக் கிராமத்திற்கு உசிலம்பட்டி என்ற பெயரே விளங்குகிறது. இறைவனும் உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் சிறிய ஆலயத்தில் அமர்ந்து அருள் பாலித்து வருவதுடன் இந்த ஆலய தல விருட்சமாக உசிலை மரமே விளங்குகிறது. இந்த ஈசனின் திருமேனி உளி படாத திருமேனி. அத்துடன் இறைவனின் திருமேனியில் வியக்கத் தக்க பல அதிசயங்களைக் காணலாம். ஈசனின் தலையில் இடது பக்கம் சந்திர பிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப் பகுதியின் பின் பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி போல மூன்று பட்டையான கோடுகள் உள்ளன.

இறைவனின் இடையைச் சுற்றி தங்க ரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபக்கம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இத்தனை அதிசயங்கள் மிக்க இறைவனின் லிங்கத் திருமேனி வேறெங்கும் உள்ளதா என்பது சந்தேகமே! இந்த அதிசய இறைவனுக்கு மட்டுமன்றி இறைவிக்கும் தனி சந்நதி உள்ளது. இந்த ஆலயத்தில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. சிவராத்திரி திருவிழா மிகவும் கோலாகலமாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று 6 கால பூஜையும் விடிய விடிய பட்டிமன்றமும் நடைபெறுகின்றன. சுமார் 1000 பேர்களுக்கு அன்று அன்னதானமும் வழங்கப்படுகிறது.

மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேக வைபவத்தின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். சித்திரை முதல் நாள், மாதப் பௌர்ணமி, நவராத்திரி, மற்றும் மார்கழி 30 நாட்களும் இறைவனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன மார்கழி 30 நாட்களும் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் தருகின்றனர். ஆலயத்தின் எதிரே சற்றுத் தொலைவில் ஒரு உயர்ந்த புற்று உள்ளது.

சில நாட்களில் புற்றிலிருந்து நாகதேவன் தலையை மட்டும் உயர்த்தி இறைவனை தரிசிக்கும் காட்சியை பக்தர்கள் பலர் கண்டதுண்டு! இப்போதும் இந்தச் சம்பவம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. சிலிர்க்க வைக்கும் காட்சி இது. காலை 7 முதல் 9 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். குழந்தைப் பேறு கிடைக்க இங்கு வந்து இறைவனை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு கைமேல் பலன் கிடைப்பது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள். திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த திட்டுக் காட்டுப்பட்டி என்ற பகுதியில் உள்ளது இந்த ஆலயம். மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

- ஜெயவண்ணன்