கோடியில் உழலாமல், கேடின்றி வாழ்வோம்!



குறளின் குரல் - 78

வள்ளுவர் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்று எண்ணைப் போற்றுகிறாரே, அவர் முக்கியமான பேரெண் ஆகிய கோடி என்ற எண்ணை எப்படியெல்லாம் கையாள்கிறார் என்று பார்ப்போமா? கோடிக்குப் பல பொருள் உண்டு. தெருக்கோடி என்றால் தெருவின் கடைசிப் பகுதி என்று பொருள். கோடி வேட்டி என்றால் புதிய வேட்டி என்று பொருள். நூறு லட்சங்கள் சேர்ந்தால் எண்ணிக்கையில் அது கோடி எனப்படுகிறது. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!’ என்கிறது ஒரு பழமொழி. எதையும் ஒரு கோடி காட்டினால் போதும், புத்திசாலிகள் புரிந்துகொண்டு விடுவார்கள்!

ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப
கோடியும் அல்ல பல!
(குறள் எண் 336)
 
- என்கிறது 'நிலையாமை’ என்னும் அதிகாரத்தில் வரும் ஒரு குறள். ஒரு பொழுதேனும் எப்படி வாழ்வது என்று அறியாதவர்கள் மனத்தில் பல கோடி ஆசைகளைக் கொண்டிருப்பது எத்தனை விந்தை என இந்தக் குறளில் அதிசயிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நிகழ்காலத்தில் வாழாமல் கோடிக்கணக்கான எதிர்கால ஆசைகளை மனத்தில் தேக்கியவாறே பல மனிதர்கள் வாழ்கிறார்கள். எனவே அவர்கள் உண்மையில் வாழ்வதே இல்லை! ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி பூஜை செய்யும்போது முன்னே வந்து அமர்ந்தாள் ராணி ராசமணி தேவி.

அவள்தான் பரமஹம்சரைத் தான் கட்டிய காளிகோயில் பூஜாரியாக நியமித்தவள். ஒருவகையில் பார்க்கப் போனால் பரமஹம்சர் அந்த ராணியிடம் ஊழியம் செய்பவர்தான். ஆனால், காளிக்கன்றி யாருக்கும் தலை வணங்காதவர் அல்லவா அந்த மகான்! தன் தவ ஆற்றலால் எதிரே உள்ளவர்களின் எண்ணங்களைக் கூட மிகச் சரியாக ஊகித்துவிடக் கூடியவர் அவர். தமது சீடர்களின் மனத்தை அவர்கள் இதயத்தை விட்டு வெளியே எடுத்து, தான் விரும்பியவாறு பிசைந்து
வேறுவகையில் உருவாக்கி மீண்டும்,

எடுத்த மனத்தைத் தன் சீடர் இதயத்தின் உள்ளேயே வைத்துவிடும் ஆற்றல் பெற்றவர் அவர் என்று சொல்வதுண்டு. தான் யார்முன் அமர்ந்திருக்கிறோம் என்ற எச்சரிக்கை உணர்வின்றி, பூஜை நேரத்தில் நீதிமன்றத்தில் உள்ள தன் சொத்து தொடர்பான வழக்கில் சிந்தனையைத் தேக்கியிருந்தாள் ராணி ராசமணி. பரமஹம்சர் விறுவிறுவென்று ராணியை நோக்கி வந்தார். அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். 'இங்கு வந்துமா வழக்கைப் பற்றியும் நீதி மன்றத்தைப் பற்றியும் சிந்தனை? காளியை நினை!’ என கர்ஜித்துவிட்டுப் போனார். மற்ற ஊழியர்கள் அரண்டு போனார்கள்.

அன்றோடு பரமஹம்சரின் வேலைக்குச் சீட்டுக் கிழிந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. ராணி மிகப் பெரிய பக்தை. பரமஹம்சரின்மேல் அவள் கொண்ட மரியாதை அந்த அடியால் அதிகமாயிற்றேயன்றிக் குறையவில்லை. தன் உள்மனத்தைக் கூட மிகச் சரியாக ஊகிக்க கூடிய பரமஹம்சரை அவள் வியந்து போற்றினாள் என்பது பரமஹம்சரின் புனிதத் திருச்சரிதம் சொல்லும் தகவல். நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வதே மனிதர்கள் சரியாக வாழும் நெறி. 'நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில்மேல் பூனை.

இன்றுதான் நம் கையில் உள்ள வீணை. அதை மீட்டி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ என ஒரு கவிதையில் அறிவுறுத்துகிறார் பிரபல சுயமுன்னேற்றக் கவிஞர் தாராபாரதி. பல இளைஞர்கள் தங்கள் வாழ்வில் முன்னேறாததற்குக் காரணம் அவர்கள் நிகழ்காலத்தில் வாழாமல் கற்பனைக் கனவுகளோடு எதிர்காலத்தில் வாழ்வதே. எதிர்காலம் பற்றிய கனவிலேயே வாழ்வைக் கழித்தால் என்ன பயன்? அந்தக் கனவு நனவாவதற்கு நிகழ்காலத்தில் வாழ்ந்து கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியமல்லவா?

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.’
(குறள் எண் 377)

தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்வியல் நெறிப்படி வாழாதவர்கள், கோடிக் கணக்கில் செல்வம் சேர்த்திருந்தாலும் அந்தச் செல்வத்தின் பலனை அவர்களால் நுகர இயலாமல் போய்விடும். ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் இறுதியில் ஒருவாய் உணவைக் கூடச் சுவைத்துச் சாப்பிட இயலாமல் போவதை நாம்தான் பார்க்கிறோமே! வாழ்வின் இறுதிக் காலத்தில் தேவைப்படுவது பணமல்ல, ஆரோக்கியமே.

'நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.’
(குறள் எண் 817)
 
சிரித்துப் பேசும் போலி நண்பர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு சிறப்புடையதாகும். ஏனெனில் பகைவரை எளிதில் அடையாளம் கண்டு விலகி வாழ முடியும். ஆனால், போலி நண்பர்களை அடையாளம் காண இயலாததால் அத்தகையவர்களால் கெடுதலே மேலோங்கும்.
ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் என்ற புகழ்பெற்ற நாடகத்தில் காவியக் கதாநாயகனான சீசரை இறுதியில் ஒரு குழு தாக்குகிறது.

அவர்களிடம் போராடுகிறான் சீசர். ஆனால், அந்தக் குழுவில் தன் நண்பன் ப்ரூட்டசும் இருப்பதைப் பார்த்து அவன் விரக்தி அடைகிறான். 'நீயூமா ப்ருட்டஸ்?’ (யு டூ ப்ரூட்டஸ்?) எனக் கேட்டவாறே அவன் கொல்லப்பட்டு இறக்கிறான் என்பதை ஆங்கில நாடக இலக்கியம் விளக்குகிறது. சீசர் திருக்குறளைப் படித்திருந்தால் ப்ரூட்டஸ் என்கிற அந்தப் போலி நண்பனை முன்னரே இனங்கண்டிருந்திருப்பான்!

'பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வர்
எழுபது கோடி யுறும்.’
(குறள் எண் 639)

அடுத்துக் கெடுக்கும் மந்திரிகளை விட வெளிப்படையான பகைவர் எழுபது கோடி மடங்கு நல்லவர் ஆவார் என்கிறார் வள்ளுவர். 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்கிறது இன்னொரு குறள். மந்திரி, மன்னன் தவறு செய்யும்போது இடித்துரைக்க வேண்டுமே அல்லாது தாளம்போடக் கூடாது என்பது வள்ளுவர் கருத்து. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் மன்னன் சீவகன் அவன் அமைச்சனான கட்டியங்காரனால் துன்பத்திற்கு ஆளானதை திருத்தக்க தேவர் விவரிக்கிறார்.

'நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்’ என்ற நமது தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தமது மனோன்மணீயம் என்ற காப்பியத்தில் மன்னனுக்குத் தீங்கு செய்த மந்திரி குடிலனைப் பற்றி எழுதுகிறார். தலையாட்டி பொம்மைகளாக மந்திரிகள் இருப்பதைப் பற்றித் தெனாலிராமன் கதையொன்று விவரிக்கிறது. கத்தரிக்காய் மேல் ஆசைகொண்ட மன்னர் கிருஷ்ண தேவராயர், அதை அதிகம் விரும்பிச் சாப்பிட்டார். கத்தரிக்காய் உயர்ந்த கறிகாய் என்று தெனாலிராமனிடம் புகழ்ந்தார்.

'ஆம், அதனால்தான் இயற்கை அந்தக் காயின் தலையில் மட்டும் அழகிய கிரீடத்தை வைத்து அழகு பார்க்கிறது!’ என அதன் எழிலைப் புகழ்ந்தான் தெனாலிராமன். அரசருக்குக் கத்தரிக்காய் பிடிக்கிறது என்பதால் அன்றுதொட்டு கத்தரிக்காய்க் கறி, கத்தரிக்காய்க் கூட்டு, கத்தரிக்காய்க் குழம்பு என்று நாள்தோறும் கத்தரிக்காய் சமைக்கப்பட்டது. அதிகக் கத்தரிக்காய் சாப்பிட்டதால் அரசர் சொறியும் சிரங்கும் வந்து அவதிப்பட்டார். கத்தரிக்காய் தோலுக்கு ஆகாது என்றும் இனி உணவில் அதை விலக்க வேண்டும் என்றும் சொன்னார் மருத்துவர். இப்போது 'கத்தரிக்காய் மிக மோசமான காய்’எனத் தெனாலிராமனிடம் அலுத்துக் கொண்டார் மன்னர்.

'ஆம்! அதிலென்ன சந்தேகம், அதன் கெடுதலை அறிந்துதான் இயற்கை அதன் தலையில் ஆணியடித்து வைத்திருக்கிறது!’ என்றான் தெனாலிராமன்! மன்னர் திகைத்தார். 'நான் சொல்வதற்கேற்ப மாற்றிச் சொல்கிறாயே?’ எனக் கடிந்துகொண்டார். தெனாலிராமன் சிரித்தவாறே பதில் சொன்னான்: 'அதனால் என்ன மன்னா? நீங்கள் தான் என் மன்னர். உங்களுக்கேற்றபடிப் பேசுவதே என் கடமை. கத்தரிக்காயா என் மன்னர்?' தனக்கேற்றபடிப் பேசும் மந்திரிகளை நம்பக் கூடாது என்ற உண்மையை அவ்விதம் தெனாலிராமன் மன்னன் கிருஷ்ண தேவராயருக்குப் புகட்டினான் என்கிறது கதை.

'அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.’
(குறள் எண் 954)

நற்குடிப் பிறந்தோர் அவர்களுக்குப் பலகோடி கிட்டுவதாக இருந்தாலும் தங்களுக்கு இழுக்குத் தரும் செயலைச் செய்ய மாட்டார்கள். அப்படி நற்குடிப் பிறந்த மன்னன் ஒருவன் சங்க காலத்தில் இருந்தான். பாண்டிய மன்னர்களுள் ஒருவனான அவன் பெயர் இளம்பெருவழுதி என்பது. ஒருமுறை கப்பலில் போகும்போது கடல் அவனை அள்ளி விழுங்கியது. எனவே தன் புலமை காரணமாகப் புகழ்மிக்க அந்த மன்னன், பின்னாளில் 'கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி’
என அழைக்கப்படலானான்.

மிகுந்த கருத்துச் செறிவுடைய ஒரு புறநானூற்றுப் பாடலை அவன் எழுதியுள்ளான். 'நற்குடிப் பிறந்தோர் பலகோடி கிட்டினும் இழுக்குத் தரும் செயலைச் செய்ய மாட்டார்கள்’ என வள்ளுவம் இரண்டே வரிகளில் சொல்லும் கருத்தை அந்தப் பாடல் ஒன்பது வரிகளில் அழகுறச் சொல்கிறது.

'உண்டா லம்மஇவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்,
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.’
(புறம் 182)
 
'இந்திரனே வந்து அமிர்தம் தந்தாலும் சான்றோர் தனித்துண்ண மாட்டார். யாரையும் வெறுக்க மாட்டார். அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுவர். அதைத் தீர்ப்பதற்கான செயல்களில் உறங்கவும் மாட்டார். புகழுக்காக உயிரையும் கொடுப்பர். பழிவரும் என்றால் உலகையே தருவதாக இருந்தாலும் அச்செயல் செய்ய உடன்பட மாட்டார். எதன்பொருட்டும் மனக்கவலை கொள்ள மாட்டார். தன்னலம் கருதாது பிறர் நலமே போற்றும் அத்தகைய பெரியவர்களால் அல்லவா இந்த உலகம் நிலைபெற்றுள்ளது?’ என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சொல்லும் கருத்துகள் எல்லாம் வள்ளுவத்தின் விளக்கம் தானே?

'கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு
அடுக்கிய கோடி உண்டாயினும் இல்.’
(குறள் எண் 1005)

பல கோடி சேர்த்திருந்தாலும் பிறர்க்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர்க்கு அந்தக் கோடிகள் இருந்தாலும் இல்லாதது போன்றதுதான் என்கிறார் வள்ளுவர். 

'பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?’

- என தாம் எழுதிய 'நல்வழி’ என்ற நூலில் ஒளவையார் எழுப்பும் கேள்வி வள்ளுவத்தை ஒட்டியதுதான்.

'பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.’
(குறள் எண் 816)
 
அறிவிலிகளின் நட்பை விட அறிவுடையோரின் பகைமை கோடி மடங்கு நல்லது என்கிறது வள்ளுவம். அறிவிலிகள் நண்பர்களாக இருந்தால் அவர்களின் அறிவற்ற செயல்களால் நமக்குத் துன்பங்களே நேரும்.

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.’
(குறள் எண் 1061)

தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல் உவப்போடு வாரிக் கொடுக்கும் வள்ளலே ஆயினும் அவரிடம் சென்று யாசிக்காமல் இருப்பது கோடி நன்மை தரக் கூடியது என்கிறது இக்குறள். 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்!’ என்று பிச்சையெடுத்து வாழும் நிலையை உலகை ஆக்கியவன் ஏற்படுத்தியிருந்தால் பிச்சையெடுப்பவர்களைப் போலவே அவனும் அலைந்து கெடட்டும் எனச் சீறியவராயிற்றே வள்ளுவர்! இப்படி கோடிகள் திருக்குறளில் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கிறோம். ஒளவையாரின் தனிப்பாடல் ஒன்று ஆறு கோடிகளை அடக்கிப் பாடப்பட்டுள்ளதும் இங்கு நினைவுகூரத் தக்கது.
`
'மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.’
'உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம் மனையில்
உண்ணாமை கோடி பெறும்.’
'கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.’
'கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடை நாக்
கோடாமை கோடி பெறும்.’
வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி வாழ்ந்தால், நாம் ஆயிரத்தில் ஒருவராக அல்ல கோடியில் ஒருவராகவே உயரமுடியும். அதற்குத் தேவை வள்ளுவத்தைப்  பின்பற்றி வாழ வேண்டும் என்ற திட சித்தம் மட்டுமே.

- திருப்பூர் கிருஷ்ணன்