முருகனுக்குக் கட்டுப்பட்டு நிற்கும் நவகிரகங்கள்!



அருணகிரி உலா - 69

திருவாரூரிலிருந்து புறப்படும் நாம் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழியாக, வங்கக் கடற்கரையில், காட்டுப் பகுதிக்குள் விளங்கும் ‘கோடியக்கரை’ சென்றடைகிறோம். வேதாரண்யத்திற்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இப்பகுதியில் ‘பாயின்ட் கேலிமர் பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ளதால் காட்டிலாகாவினரின் அனுமதி பெற்ற பின்னரே உள்ளே செல்ல முடிகிறது. உப்பளங்கள் நிறைந்த மணற்பாங்கான பிரதேசத்தைக் கடக்கும்போது பறவைகள் சரணடையும் அடர்ந்த காடுகளைக் காண முடிகிறது. கடற்கரையிலிருந்து 1½ கி.மீ. தொலைவிலுள்ள குழகர் கோயிலில் வாழும் சிவனாரைப் பார்த்து சுந்தரர் கேட்கிறார்:

‘காடேல் மிக வாலிது, காரிகை அஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடித் தொண்டர் சாலவும் தீயர் சழக்கர்
கோடிக்குழகா! இடங்
கோயில் கொண்டாயே!’
 
‘கோடிக்குழகனே! நீ உறையும் இக்காடோ மிகப் பெரியது. உன் துணைவியார் பயப்படும்படியாக மரப்பொந்திலுள்ள ஆந்தைகளும், கூகைகளும் கூடிச் சேர்ந்து பேரொலி கிளப்புகின்றன. இங்கு வாழும் வேடர்கள் மிகக் கொடியவர்கள், வஞ்சகர்கள் (சழக்கர்). இங்கு வந்து நீ குடியேறக்காரணம் என்னவோ?’ என்பது பாடலின் பொருள்.‘உமது துணைவியார் பயப்படும்படியான இக்காட்டுப் பிரதேசத்தில் வந்து குடிகொண்டது ஏன்?’ என்று சிவபெருமானைப் பார்த்துக் கேட்கும் உரிமை, தம்பிரான் தோழரான சுந்தரருக்கு மட்டுமே உரித்தானதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சுந்தரர், தம் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரோடு சிலகாலம் இங்கு வந்து தங்கியிருந்ததாக அறிகிறோம். அருணகிரியார் கோடியக்கரையில் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். கடலோரம் நிற்கும் கலங்கரை விளக்கம்போல் நின்று பக்தரைக் காக்கும் குழகரின் குழவியை நாடி வந்து இங்கு திருப்புகழ் பாடியுள்ள அருணகிரிநாதருடன் சேர்ந்து நாமும் கோயிலுக்குள் செல்வோம். கோடியக்கரைச் சிவனாரை ‘கோடி குழகர்’ என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அருணகிரியார் ‘குழகர் கோடி நகர்’ என்கிறார்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தைத் தேவர்கள் எடுத்துக் கொண்டபின் மீதியிருந்த அமுதை வாயுவின் கையில் கொடுக்க, அவர் விண்வழியே கொண்டு செல்லும்பொழுது அது கீழே விழுந்து லிங்கமாய் உறைந்த இடம் இது என்பர். எனவே இறைவன் அமுதகடேச்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். குழக முனிஸ்வர் வழிபட்ட தலமாதலால் ‘குழகர் கோயில்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. கோயிலில் குழக முனிவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு ராஜகோபுரம் ஆறு நிலைகளுடையது. நுழைவாயிலருகே விநாயகரை வணங்குகிறோம். கொடிமரம் இல்லை.

கருவறையில் கோடி குழகர் லிங்க வடிவில் விளங்குகிறார். அழகான வடிவம். சதுரமான பீடம். பிராகாரத்தில் அமிர்த விநாயகரையும், அமிர்த சுப்பிரமணியரையும் தரிசிக்கிறோம். முருகப் பெருமான் ஆறு திருக்கரங்களும், ஒரு திருமுகமும் கொண்டு விளங்குகின்றான். ஒரு கரத்தில் அமிர்த கலசமும், மற்ற கரங்களில் நீலோற்பலம், தாமரை, வச்சிரம், வேல் இவற்றைத் தாங்கி அபய ஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறான். மயில் வடக்கு நோக்கி நிற்கிறது. ஒரே வரிசையில் நிற்கும் நவகிரகங்கள் முருகனுக்குக் கட்டுப்பட்டு நிற்பதாகக் கூறுகின்றனர். முருகனுக்கெனத் தனிக் கொடிமரம் உள்ளது. கையில் அமிர்தகலசம் ஏந்தியுள்ள இம்முருகனின் வடிவம்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. ‘நீலமுகிலான’ எனத்துவங்கும் கோடியக்கரைத் திருப்புகழை முருகப் பெருமானுக்குச்
சமர்ப்பிக்கிறோம்.

‘நீல முகிலான குழலான மடவார்கள், தன
   நேயமதிலே தினமும் உழலாமல்,
நீடு புவியாசை, பொருளாசை மருளாகி, அலை
   நீரில் உழல் மீனதென முயலாமல்,
காலனது நா அரவ வாயிடு தேரையென
   காய மருவு ஆவி விழ அணுகாமுன்
காதலனுடன் ஓதும் அடியார்களுடன் ஆடி, ஒரு
   கால் முருகவேள் எனவும் அருள்தாராய்.’

பொருள்: கரிய மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட மாதர்கள் மேலுள்ள ஆசையிலே நான் தினமும் அலைச்சலுறாமலும், மண், பெண், பொன் மீதானவற்றின் மேல் மிகுந்த ஆசை கொண்டு அதன் காரணமாக அலை வீசும் கடல் நீரின் நடுவே தத்தளிக்கும் மீனைப்போல சுழன்று சுழன்று துன்பமடையாமலும், எமதூதர்களின் அதட்டுகின்ற பேச்சினால், பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல் கத்திக்கொண்டு உடலில் தங்கி இருக்கின்ற உயிர் வெளியே வராதபடியும் காப்பாயாக. (எமராஜனின் தூதர்கள், ஆட்களைப் பிடித்துப் போகும்போது அவர்களை விரட்டி ஏசிக்கொண்டு போவார்கள் என்பதை சுப்ரமண்ய புஜங்கம் 21 ஆவது பாடலிலும் காணலாம்.)

‘‘எல்லையில்லாத் துன்பம் தரும் எமதூதர் வந்து என்னைக் கோபத்துடன்  ‘கொல்லு, எரி, குத்து’ என என்னை மிரட்டிக்கொண்டு போக முனையும் தருணத்தில், குமரா! நீ கணமேனும் தாமதியாமல் வேலும் மயிலும் கொண்டுவந்து அபயம் தருவாயாக’’ என்பது அப்பாடல். மற்றொரு திருப்புகழில் அருணகிரியாரும் ‘‘நமனுடைய தூதர்...வசைகளுடனே தொடர்வார்கள்’’ என்று கூறுகிறார். அன்புடன் உன்னைப் புகழ்கின்ற உன் அடியார்களை நாடிச்சென்று ஒருமுறை முருகவேளே என்று ஓதுவதற்கு உனது திருவருளைத் தரவேண்டும். பாடலின் பிற்பகுதி பின்வருமாறு:

‘‘சோலை பரண்மீது நிழலாகத் தினை காவல்புரி
   தோகை குறமாதினுடன் உறவாடிச்
சோரனென நாடி, வருவார்கள், வன வேடர்விழ
   சோதி கதிர் வேலுருவு மயில்வீரா
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு
   கூடி விளையாடும் உமை தரு சேயே
கோடு முக ஆனை பிறகான துணைவா, குழகர்
   கோடி நகர் மேவி வளர் பெருமாளே.’’

‘வள்ளிமலைச் சோலையிலே பரண்மீது மரங்களின் நிழலில்  தினைப் பயிரைக் காவல் செய்து வந்த மயில் போன்ற அழகுடைய குறவள்ளியுடன் சல்லாபித்து அவளை நீ கொண்டு செல்ல, ‘நம் பெண்ணைத் திருடிக் கொண்டு ஓடும் இந்தக் கள்வனைப் பிடிங்கள்’ என்று ஓடிவந்த வனவேடர்கள் மடிந்து வீழும்படி ஒளி வீசிய வேலைச் செலுத்திய மயில் வீரனே! ‘அழகுடையதும், பூசிக்கொள்பவர்களுடைய வினையைச் சுட்டெரிக்கக் கூடியதுமான விபூதியைத் தரித்திருக்கும் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானுடன் சேர்ந்த ஞானத் திருவிளையாடல்களைப் புரியும் பார்வதியின் திருக்குமாரனே!

தந்தம் உள்ள முகத்தைக் கொண்ட விநாயகப் பெருமானின் பின் வந்த சகோதரனே! குழகர் கோயில் என்றும் திருக்கோடியக்கரை என்றும் அழைக்கப்படும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் குமரனே!’ வேடர்கள் முருகப் பெருமான் மீது அம்பு செலுத்தினர் என்ற குறிப்பு கந்தபுராணத்தில் வருகிறது. முருகவேள் வள்ளியைக் கவர்ந்து சென்றபோது, வேடர்கள் பேரொலி எழுப்பிய வண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்து வளைத்தனர்.

‘‘உம்மீது அம்பு செலுத்திய அவர்கள்மீது வேலை ஏவுங்கள்’’ என்று வள்ளி முருகனை வேண்டியபோது, கொடிமேல் நின்ற சேவல் ஒரு கொக்கரிப்புப் பேரொலி செய்ய, வேடர்களனைவரும் வீழ்ந்து மாண்டனர். பின்னர் நாரதரின் வேண்டுகோளின்படியும், முருகன் சொற்படியும் வள்ளி, ‘அனைவரும் எழுந்திருங்கள்’’ என்று கூற, வேடர்கள் உயிர் பெற்றெழுந்தனர். கந்தபுராணமும் தணிகைப் புராணமும் சேவலின் ஆர்ப்பால் வேடர்கள் மாண்டு வீழ்ந்தனர் என்று கூற, முருகன் தன் வேல் கொண்டு வேடரை வீழ்த்தியதாக அருணகிரிநாதர் பாடுகிறார்.

‘‘கொடிய வேட்டுவர் கோகோகோ என
   மடிய நீட்டிய கூர் வேலாயுத’’
-என்று சிராப்பள்ளியிலும்,
‘‘அம் குறப்பாவாய், வியாகுலம் விடு விடு என்று
   கைக் கூர் வேலை ஏவிய இளையோனே’’
 
- என்று காங்கேயத்திலும் பாடியுள்ளார். கோயிலின் கருவறைக் கோட்டத்தில் சட்டநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, தேவியுடன் கூடிய ஐயனார் ஆகியோரை வணங்கலாம். சுற்றுப்பிராகாரத்தில் பைரவர், சூரியன், சந்திரன், சண்டிகேசர் ஆகியோரைத் தரிசித்து முகமண்டபத்தில் காட்டுப்பகுதியைக் காக்கும் காடுகிழானையும் அஞ்சனாட்சியையும் தரிசிக்கிறோம். கோயிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ள கடலும் (ருத்ர தீர்த்தம்) கோயிலிலுள்ள அமுதுக் கிணறுமே இத்தலத்திற்கான தீர்த்தங்கள்.

சுந்தர பாண்டியன் காலத்தில் மீனவர்கள் ஒன்றிணைந்து கோயில் பூசைக்காகப் பொருளுதவி செய்தனர் என்றும் கோயிலுக்கென பக்தர்கள் பலர் பொன்னும் பொருளும் உதவினர் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரை தேடி வரும் பறவைகளுக்கும், இறை தேடி வரும் பக்தகோடிகளின் ஆன்மாவிற்கும் சரணாலயமாகத் திகழும் குழகரை வணங்கிக் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறோம். நமது அடுத்த இலக்கு வேதாரண்யம் எனும் திருமறைக்காடு ஆகும். ஏழு திருமுறைகளில் இடம் பெற்றிருக்கும் பெருமை உடைய திருத்தலம்.

இறைவன், வேதாரண்யேசுவரர். இறைவி, வீணாவாத விதூஷணி, யாழைப் பழித்த மொழியம்மை, வேதநாயகி என்று பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறாள்.  முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தான் பெற்ற ஏழு மரகத விடங்கர்களுள் ஒன்றான புவனி விடங்கரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்த மகிமை உடையது. வேதங்களனைத்துமே இங்கு இறைவனை வழிபட்டதால் வேதாரண்யம் எனப்படுகிறது. கடல் நீர் ‘வேத தீர்த்தம்’ எனப்படுகிறது.

விசேஷ நாட்களில் இங்கு நீராடுதல் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராமபிரான் இத்தலத்து வீரஹத்தி விநாயகரை வழிபட்டு வீரஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டார் என்கிறது புராணம்.முன்னொரு காலம் வேதங்கள் இங்கு இறைவனை வணங்கிவிட்டுக் கதவுகளை மூடிச்சென்றன. அப்பரும், ஞானசம்பந்தரும் இங்கு வந்தபோது, வேதங்கள் மூடிச்சென்ற கதவுகள் திறக்கப்படாததால், பக்தர்கள் வேறு வழியே சென்று இறைவனைத் தரிசித்து வந்ததைக் கண்டனர்.

‘பண்ணின் நேர் மொழியாள்’ எனத் துவங்கும் பத்துப் பாடல்களைப் பாடி, இறுதியாக
‘அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானீரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக் காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே’

- என்று முடிக்க, கதவுகள் திறந்தன. இருவரும் உள்ளே சென்று கடவுளை வணங்கினர். பின்னர் சம்பந்தப் பெருமான் பதிகம் பாட கதவுகள் மீண்டும் திருக்காப்பிட்டுக் கொண்டன. அர்த்த மண்டபத்தின் வடகீழ்ப்புறம் இத்திருக் கதவுகள் உள்ள திருவாயில் உள்ளது. வாயிலின் தென்புறம் இருவரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. நீண்ட மதிற்சுவர்களை உடைய கோயிலின் கிழக்கு மேற்குத் திசைகளில் ஐந்து நிலைகளுடைய ராஜ கோபுரங்கள் உள்ளன.

இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கோயில்கள் உள்ளன.  மேற்குக் கோபுர வாயில் அருகில் வீரஹத்தி விநாயகர், குமரப் பெருமான் ஆகியோர் உள்ளனர். கிழக்குக் கோபுர வாயில் வழியே உள்ளே செல்லும்போது, கொடிமரம், பலிபீடம், நந்தி, பிள்ளையார் மண்டபம், தலமரமான வன்னி இவற்றைக் காணலாம். இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றை தரிசித்து, கருவறையிலுள்ள லிங்கத்தைத் தொழுகிறோம்.

பின்புறம் சுவரில் அகத்தியருக்கு அருளிச்செய்த ஈசனின் திருமணக்கோலம் காணலாம். தென்புறம், திருவாரூர் போலவே நந்தி ஆயத்த நிலையில் நிற்க, நீலோற்பலாம்பாளுடன், பத்ம சிம்மாசன ஹம்ஸ நடன புவனி விடங்கராம் தியாகராஜர் காட்சி அளிக்கிறார். மரகத லிங்கத்திற்கு காலை, மாலை இருவேளைகளிலும் அபிஷேகம் நடைபெறுகிறது. கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, வேத விநாயகர் ஆகியோரைத் தரிசித்து வரும்போது தனிச்சந்நதியில் தேவியருடன் உள்ள முருகப் பெருமானை வணங்குகிறோம்.

‘சூழும் வினைகள், துன்ப நெடும்பிணி, கழிகாமம்,
சோரம் இதற்குச் சிந்தை நினைந்துறு துணையாதே
ஏழை என் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
ஆழி அடைத்துத் தம் கை இலங்கையை எழுநாளே
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் மருகோனே
வேழ முகற்குத் தம்பி எனும் திரு முருகோனே
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே.’’

- என்ற திருப்புகழை முருகனுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி