நீதிநெறி உள்ள ஒருவருக்காக பூமி குளிர்ந்திருக்கும்!



மகாபாரதம் - 81

அது அரச சபை. அங்கே முக்கியமானவர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்யும் முன்பு அதைப் பற்றி தங்களுடைய அபிப்ராயத்தைச் சொல்லுவார்கள். விராட தேசத்தை நோக்கி படையெடுத்துப் போக வேண்டும் என்று துரியோதனன் விருப்பப்பட்டபோது அதைப் பற்றி அவர்களுடைய குருவான துரோணாச்சாரியார் பேசத் துவங்கினார்: ‘‘பஞ்ச பாண்டவர்களுடைய பலமே அவர்கள் ஒற்றுமைதான். யுதிஷ்டருக்கு கட்டுப்பட்டு அந்த நான்கு மகாரதர்களும் அமைதியாக இருப்பதுதான். தமையனைக் காட்டிலும் பலமாக இருந்தாலும், வித்தைகள் தெரிந்திருந்தாலும் அவர் கண் அசைவில் ஒரு உத்தரவு இட்டப் பிறகு அதைத்தான் பிடித்துக் கொள்வார்களே தவிர தங்களை வெளிக்காட்ட மாட்டார்கள்.

அது பீமனாக இருக்கலாம் அல்லது அர்ஜுனனாக இருக்கலாம். ஆகவே, அவர்களுக்கு அனுகூலமான நேரம் வந்து விட்டது என்றுதான் அர்த்தம். நம்மை விட இந்த அஞ்ஞான வாசத்திலிருந்து விடுபட வேண்டும் என்று காத்திருக்கின்ற அவர்கள், அந்த நாளை மிகத் தெளிவாக அறிந்திருப்பார்கள். என்னுடைய அபிப்ராயத்தில் இன்னும் சில நாட்களில் அந்த அஞ்ஞான வாசம் முடிகிறது. எனவே, விரைவாக முழு பலத்தோடு நாம் விராட தேசம் போக வேண்டும். அங்கு இருப்பார்களா என்றுத் தெரியவில்லை. இருப்பார்கள் என்று நினைத்துதான் அங்கு போகிறோம். ஒருவேளை அவர்கள் அங்கு இருக்கலாம்.

ஆனால், அதை புரிந்து கொள்வது கடினம். அவர்கள் மனிதனை மயக்கி விடுவார்கள். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். எல்லா கோணங்களிலும் யோசித்து நாம் இந்தப் படையெடுப்பை நடத்த வேண்டும். எளிதான விஷயமாக துரியோதனன் இதை நினைத்து விடக் கூடாது.’’துரோணாச்சாரியார் பேசிய பிறகு பீஷ்மர் பேசினார்:‘‘பாண்டவர்கள் தோற்றுவிடுவார்கள் என்றா நினைக்கிறாய்? இல்லை துரியோதனா. அவர்கள் தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாதவர்கள். தர்மத்தோடு இருப்பவர்களுக்கு என்றைக்கும், எவராலும் தோல்வி ஏற்பட்டதேயில்லை.

அவர்கள் வேதம் கூறும் நல்ல விஷயங்களைக் கடைபிடிக்கிறவர்கள். அமைதியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தால் யார் அசைத்தாலும் பொங்காதவர்கள். எது அசைத்தாலும் தன்னை வெளியே காட்டிக் கொள்ளாதவர்கள். தருமரைப் பற்றி உனக்கு இன்னும் புரியவில்லை. எந்த தேசத்தில் தருமராஜர் இருக்கிறாரோ அந்த தேசத்தில் உள்ள அரசருக்கு எந்தத் தீமையும் நேராது. அவர் இருக்கின்ற ஊரில் மக்கள் மிக சௌக்கியமாக இருப்பார்கள். அங்கு எல்லா விஷயங்களும் மிக நேர்மையாக நடைபெறும். தன்னைச் சுற்றி ஒருபொழுதும் தவறு நடக்க தருமராஜர் அனுமதிப்பதில்லை.

மக்களை நல்வழிப்படுத்துவதில் அவர் மிகவும் கெட்டிக்காரர். விராட தேசத்தில் மிகப் பெரிய பொக்கிஷத்தோடு ஹோமங்களும், யக்ஞங்களும் நடந்து கொண்டிருக்கும். தனித்தனி மனிதர்கள்கூட ஒழுக்கத்தோடு இருப்பதை விரும்புகின்றவர்களாகவே இருப்பார்கள். அப்படி போதிக்கப்படும்படியான நடவடிக்கைகளை தருமர் எடுத்திருப்பார்.‘‘விராட தேசத்தில் சரியான அளவில் மழை பொழிகிறது. நீர் நிலைகள் நிரம்பியிருக்கின்றன. பசுக்கள் மிக வளமையாக இருக்கின்றன. தானியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. மத்ஸ்ய தேசம் மிக செழிப்பாக இருக்கிறது என்று நான் தூதுவர்கள் மூலம் அறிந்தேன்.

பாண்டவர்கள் இருக்கிறார்களா என்று தேடுவதைவிட அந்த தேசம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அங்கு பாண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விடலாம். மத்ஸ்ய தேசத்தில் பெரும் அளவு வேத ஒலி கேட்கிறது. பெரும் தட்சிணை அளிக்கின்ற யாகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரசமுள்ள பழங்களும், நறுமணம் மிக்க மலர்களும் அங்கு அதிகம் கிடைக்கின்றன. காற்று மிதமாக வீசுகிறது. இயற்கையின் உபாதை எதுவும் இல்லை என்றெல்லாம் ஒற்றர்கள் சொல்லுகிறபோது, இவ்வளவு செழிப்பாக ஒரு இடம் இருக்க வேண்டுமென்றால் அங்கு தருமபுத்திரர் இருக்கிறார் என்று அர்த்தம்.

இது உன்னை இழிவு செய்யக் குறித்துச் சொல்லவில்லை. தருமருடைய குணம் அப்படி. அதை நீ புரிந்து கொள்ள வேண்டும். யுதிஷ்டர் இருக்கின்ற இடத்தில் ரூப, ரச, ஸ்பரிச, கந்த, சப்த விஷயங்கள் அனைத்தும் நன்மையோடு தொடங்கும்.

மனதை மகிழ்ச்சியுறச் செய்யும் காட்சிகள் காணக் கிடைக்கும். அப்படிப்பட்ட இடத்தில் தருமபுத்திரர் நிச்சயம் இருப்பார். இந்த இடம் இவ்வளவு செழிப்பாக இருப்பதாலேயே பஞ்சபாண்டவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று அர்த்தம். பஞ்சபாண்டவர்களும் இருக்கக்கூடும் என்ற உன்னுடைய கூற்றை நான் இவ்விதமாக ஆமோதிக்கிறேன். என் பேச்சை சரியாக புரிந்து கொள். நீதிநெறி உள்ள ஒரு மனிதருக்காக பூமி குளிர்ந்திருக்கும் என்பதை புரிந்து கொள். உனக்கு பிடித்தமான மொழியில் நான் பேச இயலாது. உண்மையை நான் இப்படித்தான் சொல்வேன்.’’

துரியோதனனை ஆதரித்தும் ஆதரிக்காமலும் அதே சமயம் தருமபுத்திரரை வாயாற புகழ்ந்தும் பீஷ்மர் பேசியது துரியோதனனுக்கு உவப்பாக இல்லை. ஆனால், வயதில் மூத்தவர் என்பதாலும், சபையில் முக்கியமானவர் என்பதாலும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.‘‘துரியோதனா, அஞ்ஞாத வாசத்தின் தவணைக்காலம் முடிந்து விட்டது என்பதை முதலில் புரிந்து கொள். நீ எவ்வளவு விரைவாகப் போனாலும் அஞ்ஞாத வாசம் முடியவில்லை, நான் கண்டுபிடித்து விட்டேன் என்று குற்றம் சொல்ல இயலாது. நேற்றோடு அது முடிந்து விட்டது. இன்று இந்த விடியற்காலையில் அவர்கள் சுதந்திரப் புருஷர்களாக இருக்கிறார்கள். அது அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஏனெனில் இதிலிருந்து விடுதலையாக அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி, படையெடுப்பு என்று பேசுகிறாய். பாண்டவர்களுடைய பலம் என்ன, உன்னுடைய பலம் என்ன? உன்னுடைய நண்பர்கள் யார், அவர்கள் பலம் என்ன, யாரை முன் வைத்து நீ அர்ஜுனனையும், பீமனையும் எதிர்க்கிறாய் என்பதை புரிந்து கொண்டு செயல்படு. விராட தேசத்தை தாக்கினால் பஞ்சபாண்டவர்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுவார்களா? போகவே மாட்டார்கள். இதுவரை தங்களை காப்பாற்றிய விராடனுக்கு நன்றி சொல்லும் வண்ணம், வெகு நிச்சயம் இந்தப் போரிலே இறங்குவார்கள். தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். காரணம் அஞ்ஞாதவாச நேரம் முடிந்து விட்டது.

யுத்தத்திற்கு போவதற்கு முன்பு இந்த பலத்தை எடை போட்டு பார்த்து பகைவனுடைய பலம் அதிகம் என்றுத் தெரிந்தால் அவனோடு ராசியாகி விடுவது நல்லது. அவனுக்கு பொன், பொருள் கொடுத்து நட்பை விரும்புகிறேன் என்று சொல்லி யுத்தத்தை தவிர்ப்பது நல்லது. மாறாக மிகுந்த பலத்தோடு நீ இருக்கிறாய் என்று நினைத்தால், விராட தேசத்தின் பசுக்களை கவர்கின்ற வேலையை செய்யலாம். அப்பொழுது நாம் கடுமையாக எதிர்க்கப்படுவோம் என்பது நிச்சயம். பாண்டவர்களை எடை போடுவது மட்டும் செய்யாது, உன்னுடைய படையை உற்சாகப்படுத்து. உத்தம, மத்திய படைகளுக்கு சரியான சம்பளம் போயிருக்கிறதா என்று பார். ஒரு படையெடுப்புக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று பார்.

பாண்டவர்களை நோக்கி போகிறோம் என்கிறபோது அவர்கள் பயமின்றி இருக்கிறார்களா என்று கண்டு கொள். உற்சாகப்படுத்து. வெறியேற்று. யாரை முன்னிறுத்தி போர் செய்யப் போகிறாய் என்பதை புரிந்து கொண்டு செயல்படு. அந்த தேசம் சுபிட்சமாக இருக்கிறது, மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள். காரணம், தருமபுத்திரர் இருக்கின்ற இடம் சுபீட்சமாகத்தான் இருக்கும். இது ஒரு நல்ல அடையாளம்.’’இது துரியோதனனுக்கு ஆதரவான பேச்சா அல்லது எதிரான பேச்சா, இது பாண்டவர்களை பாராட்டுகின்ற பேச்சா அல்லது துரியோதனனை சும்மா இரு என்று சொல்லாமல் சொல்கிறார்களா என்பது கண்டுபிடிப்பது கடினம்.

கிருபாச்சாரியார், பீஷ்மர், துரோணாச்சாரியார் மூவருமே துரியோதனனுடைய செய்கைகளில் பட்டும்படாமலும், ஒரு அரசன் கட்டளையிட்டால் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தார்களே தவிர, சொந்த கோபம் என்று அவர்களுக்கு இல்லை. மாறாய் பாண்டவர்கள் மீது அவர்கள் மூவருக்கும் மிகப் பெரிய பாசம் இருந்தது. பீஷ்மர் சொன்னதைப் போல தருமபுத்திரருடைய இருப்பால்தான் மத்ஸ்ய தேசம் சுபிட்சம் பெருகியது என்று சொல்ல முடியாது. மத்ஸ்ய தேசம் எப்பொழுதுமே சுபிட்சமானதுதான். ‘‘அந்த மத்ஸ்ய மன்னன் எனக்கு எதிராக பேசியவன். தருமபுத்திரருக்கு உண்டானதை எப்படி துரியோதனன் எடுத்துக் கொள்ளலாம் என்று கேள்வி கேட்டவன்.

இது ஒன்று போதும், அங்கு படை எடுக்க. அதன் செழிப்புகள் எனக்கு முக்கியமில்லை. ஆயினும் மத்ஸ்ய தேசத்தில் படையெடுத்து பசுக்களை கவர்ந்து, தானியங்களை கொள்ளை எடுத்து அந்த தேசத்தை சின்னாபின்னப்படுத்துவேன். ஏனெனில் அங்கு தருமபுத்திரர் தன் சகோதரர்களோடு இருந்தார் அல்லவா, அதற்கு தண்டனை செய்வேன். மத்ஸ்ய தேசத்தில் மிகச் சிறந்த பசுக்கள் இருக்குமென்றால், நாம் விராட தேசத்தை அடித்து குலைக்க வேண்டும். அந்த பசுக்கள் அஸ்தினாபுரம் வரவேண்டும். எப்பொழுது படையெடுக்கலாம். யார் தலைமை தாங்குவார்?’’ கேட்டு விட்டு கர்ணனைப் பார்த்தான் துரியோதனன்.

அப்பொழுது த்ரீகர்த்த நாட்டு மன்னனான சுதர்மா எழுந்து நின்றான். அவன் கர்ணனைப் பார்த்து வணங்கினான்.‘‘முன்பு மத்ஸ்ய சால்வ தேசத்து படைவீரர்கள் பலமுறை முற்றுகை இட்டு எனக்கு தொந்தரவு அளித்திருக்கிறார்கள். மத்ஸ்ய நாட்டு சேனாதிபதியான கீசகன் தன் சகோதரர்களோடு அடிக்கடி படையெடுத்து என்னை பலமாக துன்புறுத்தியிருக்கிறான். விராட மன்னரும் இதற்கு துணையாக வந்து அவரும் என் தேசத்தை களங்கப்படுத்தியிருக்கிறார். கீசகன் இருக்கின்ற தைரியத்தில் எந்தக் காரணமும் இன்றி யுத்தம் செய்திருக்கிறார். கீசகன் துஷ்டன். மிகுந்த கொடுமையாளன். கோபிஷ்டன். தன்னுடைய புஜ பலத்தால் மிகப் பெரிய புகழை பெற்றிருந்தான்.

அவன் கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருக்கிறான். அது பீமனாகவே இருக்கட்டும். அவன் ஒழிந்தது சந்தோஷம். கீசகன் இல்லாது அந்த விராட மன்னனை அடித்து நொறுக்குவதற்கு இதுதான் சமயம். நானே முன்னிருந்து படைகளை நிறுத்தி, என்னுடைய படைகளை கொண்டு போய் விராட தேசத்திற்கு உள்ளே நுழைந்து அந்த பசுக்களை கொள்ளையடிக்கிறேன். விராட மன்னனை துன்புறுத்துகிறேன். எனக்கு பக்கபலமாக கர்ணனும், கௌரவ வீரர்களும் இருந்தால் போதுமானது. தானியங்கள் மிகுந்த அந்த விராட தேசத்தில் படையெடுப்போம். நம்முடைய மக்களுக்கு வாரி வழங்குவோம். அவர்களுடைய பசுக்கள் அனைத்தையும் நம்முடையதாக்குவோம். இந்த போர் கொள்ளையால் நம்முடைய பலமும், சுபிட்சமும் பெருகும் என்பதற்கு எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.’’

கர்ணன் சுதர்மாவை கை வீசி ஆதரித்தான். வாழ்த்துச் சொன்னான். ‘‘இந்த சுதர்மா சரியாகச் சொல்கிறார். இவர் முன்னே போய் நாம் பின்னே போவதுதான் சரியான வழியாகும். நாம் இவருக்குத் துணையாகப் போகிறோம். என் நண்பனை போருக்கு அழைத்து தொந்தரவு செய்தாயே, என் நண்பன் வந்திருக்கிறான். அவனுக்கு துணையாக நானும் வந்திருக்கிறேன் என்று ஒரு காரணம் போதும். அஞ்ஞாத வாசம் முடிந்தால் என்ன, முடியாவிட்டால் என்ன. இன்னும் ஒளிந்துதானே இருக்கிறார்கள். தங்களை வெளியே காட்டிக் கொள்ளவில்லையே. நாம் விராடனை எதிர்க்கப் போகிறோம்.

என்ன விளைவு என்பதை நிதானமாக யோசித்துப் பாண்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடவில்லை. புரிந்து கொள்ளுங்கள். விராட மன்னனை தண்டிக்கப் போகிறோம்’’ என்று சொல்லி சிரித்தான். சபையும் சிரித்தது. துரியோதனன் சந்தோஷமாகி தன் தம்பி துச்சாதனனைப் பார்த்து, ‘‘இதை பெரியோர்களிடம் சொல்லி, அவர்கள் ஆசி பெற்று மிகப் பெரிய படையோடு மத்ஸ்ய தேசம் நோக்கி நாம் நகர வேண்டும். சுதர்மா முன்னே போகட்டும். ஒருநாள் கழித்து நாமும் பின் தொடர்ந்து போய் விராட தேசத்தை அழித்து, ஒழித்து விராட மன்னனை சிறை பிடிப்போம். அந்தப் பசுக்களை

துரியோதனனுடைய படை போருக்கு தயாராகியது. அஞ்ஞாதவாசத்தின் நேரம் முடிந்து விட்டது. பதிமூன்று ஆண்டுகளும் நன்றாக கழிந்து விட்டன என்று பாண்டவர்களுக்குத் தெரியும். ஆயினும் ஒரு சுபநாளில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைதியாக இருந்தார்கள். கீசகனுடைய வதத்திற்குப் பிறகு விராட மன்னர் விழித்துக் கொண்டார். தன்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்ற எண்ணத்தில் சகலரையும் உற்றுப் பார்த்து வந்தார். கங்கன் என்று பெயர் சொல்லிக் கொண்டு தனக்கு நல்லது சொல்லும், பொழுதுபோக சூதாடும் அந்தப் பெரியவரை மிக மரியாதையோடு பார்த்தார்.

பதிமூன்றாம் ஆண்டின் இறுதி நாள் சுதர்மா பெரும் படையோடு மத்ஸ்ய தேசத்தை நோக்கி வருகிறான் என்பது தூதர்கள் மூலமும், ஒற்றர்கள் மூலமும் கேள்விப்பட்டார்கள். மத்ஸ்ய தேசம் போருக்குத் தயாராகியது. கீசகன் இல்லாததால், மற்ற தளபதிகள், படை வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஆயுதங்களை தயார் செய்தார்கள். விராட மன்னனும் சந்தோஷமாக கவசங்களை தரித்து பலமுறை பல்வேறு திக்கில் உள்ள தன் படைகளை நேரிடையாக பார்வையிட்டான்.
மத்ஸ்ய தேசத்தின் விளிம்பில், விராட நகருக்கு வெகு தொலைவில் பசுக்கள் கூட்டத்தை விராட மன்னனின் இடையர்கள் பாதுகாத்து வந்தார்கள். பெரும் புல்வெளிகளில் மேய்த்து வந்தார்கள்.

சுதர்மா தன் படையினால் அந்த பசுக்கூட்டத்தை வளைத்துக் கொண்டான். இடையர்கள் கம்புகளாலும், உலக்கைகளாலும், மணிக்கயிறுகளாலும் தங்களைச் சுற்றி வந்த அந்த வீரர்களை கடுமையாக எதிர்த்தார்கள். சுற்றி வளைத்த வீரர்கள், படைத்தளபதி ஆணைக்கிணங்க இடையர்கள் மீது கடுமையாக அம்பு மழை பொழிந்தார்கள். இடையர்கள் அடிபட்டார்கள். காவலனான கோபன் என்பவன் தேரின் மீது ஏறி விராட நகரத்திற்கு போனான். மன்னரைக் கண்டு கீழ் இறங்கி ஓடினான். மன்னர் மந்திரிகளோடு அரசவையில் அமர்ந்திருந்தார்.‘‘மகாராஜா திகர்த்த நாட்டு படைவீரர்கள் எங்களை போரில் வென்று அடித்து துவைத்து உங்களுடைய லட்சக்கணக்கான பசுக்களை ஓட்டிக் கொண்டு போகிறார்கள்.

அவற்றை நாம் எப்படியேனும் மீட்டு வரவேண்டும்.’’ என்று பதறினான். பசுக்கள் கவரப்படுகின்றன என்றுத் தெரிந்து விராட மன்னர் கோபமடைந்தார். விராட மன்னனின் மூத்தப் புதல்வன் சங்கன் கவசம் அணிந்து தயாரானான். தேரில் விராட மன்னன் ஏறிக்கொள்ள, கங்கன் அருகே வந்தார்.‘‘ஒரு சிறந்த முனிவரிடம் நானும் அஸ்திரப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு தனுர் வேதமும் தெரியும். ஆகவே நானும் கவசம் அணிந்து, தேரில் அமர்ந்து பசுக்களை மீட்பதற்கு வருகிறேன். நம்முடைய சமையல் அறையில் பல்லவன் என்கிற சமையற்காரன் இருக்கிறான். அவன் மகா வீரன். பல மல்யுத்த வீரர்களை, விலங்குகளை உங்கள் கண் எதிரே அடித்து நொறுக்கியவன்.

இந்தப் போரில் அவன் உதவி செய்வான். கோசாலையின் தந்திபாலனையும், குதிரைகளின் க்ரகந்திகனையும் ஒரு தேர் கொடுத்து அமர்த்துங்கள். பசுக்களுக்காக போராட இவர்கள் மிகவும் விரும்புவார்கள்,’’ என்று ஆலோசனை சொன்னார். கங்கனுடைய வார்த்தைகளுக்கு எப்போதும் அதிகம் மதிப்பு கொடுக்கின்ற விராட மன்னன் சரி என்று தலையசைத்தான். தன் தம்பியிடம் ‘‘இவர் சொன்ன அந்த போர் வீரர்களுக்கு நல்ல தேரை கொடு. தனித் தனி கொடி கொடு,’’ என்றான். அவர்களுக்கு தனித்தனி தேர் கொடுக்கப்பட்டது. அர்ஜுனன் அல்லாத அந்த நால்வரும் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். முன்னும் பின்னும் தேரை ஓட்டிப் பார்த்தார்கள். அரசர் கொடுத்த கவசங்களை வணங்கி வாங்கிக் கொண்டார்கள்.

அந்த அரண்மனையை விட்டு அரண்மனை சேவகர்களாகவே வெளியே வந்தார்கள். பசுக்கள் மறித்து கடத்தி போகப்பட்ட இடத்தை அவர்கள் அடைந்தார்கள். பசுக்களின் கால் தடங்கள் எங்கு போகின்றன என்பதை வெகு எளிதாக நகுலனும், சகாதேவனும் அடையாளம் காட்டினார்கள். விராடனின் படை சுதர்மாவின் படையை பின் தொடர்ந்தது. குறுகிய நேரத்தில் அவர்கள் த்ரிகந்தர்களை பிடித்து விட்டார்கள். சுதர்மாவின் படைகளைத் தாண்டி முன்னே போய் நின்று மடக்கி கடுமையாக அடிக்கத் துவங்கினார்கள். தூசு பறந்தது. விலங்குகளின் ஓட்டம் பயங்கரமாக இருந்தது. வீரர்களின் வெறி கூச்சலும், வெட்டுப்பட்ட காயத்தின் அலறலும் அதிகமாக இருந்தன.

கடுமையாக அம்பு மழை பெய்தது. அந்தி சாயும் நேரத்தில் மின்மினிப் பூச்சி போல மேலே அம்புகள் பறந்தன. பசுக்களை விட்டுப் பிரியாத இடையர்கள் அந்த பசுக்கூட்டத்தை யுத்த களத்திலிருந்து ஓரமாக ஓட்டிக் கொண்டு போய் மடக்கி நிறுத்த, கடும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. தருமராஜர் விதவிதமாக வியூகங்கள் அமைத்து சுதர்மாவின் படையை வளைத்து தாக்கத் துவங்கினார். எந்தப் பக்கமும் போக முடியாதபடி பல்லாயிரக்கணக்கான வீரர்களை மத்ஸ்ய வீரர்கள் அடித்தார்கள். மடமடவென்று தருமர் வியூகம் மாற்றுகின்ற கலையை கண்டு வியந்தார்கள். அவர் கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள்.

(தொடரும்)

- பாலகுமாரன்