மரத்தில் ஒட்டிக்கொண்ட மாங்கனி!கூகூர்

திருஞான சம்பந்தரால், அவரது க்ஷேத்திரக் கோவையில் ‘நல்ல கூரூர்’ என்று குறிப்பிடப்பட்ட தலம்தான், தற்காலத்தில் ‘கூகூர்’ என்றழைக்கப்படுகிறது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் ஆம்ரவனேஸ்வரர். இறைவி, மங்களாம்பிகை. ‘ஆம்ரம்’ என்றால் மா மரம். மாமரங்கள் அடர்ந்த வனத்தில் எழுந்த ஈசன் என்பதால் ‘ஆம்ரவனேஸ்வரர்’ ஆனார். கோயிலுக்கு வடபுறம் ஓடுவது திருமலைராஜன் ஆறு. பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, பல தலங்களைத் தரிசித்தனர். அந்தவகையில் அவர்கள் இந்தத் தலத்திற்கு வந்து ஈசனை வழிபட்டுள்ளனர் என்கிறது தல புராணம்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் துர்வாசர், அர்ஜுனன் ஆகியோரது சிலா ரூபங்கள் ஆலயக் கோஷ்டத்தில் உள்ளன. பஞ்சபாண்டவர்கள் இவ்வழியே வந்தபோது, இங்குள்ள ஒரு மாமரத்தில் ஒரே ஒரு மாங்கனி மட்டும் இருக்கக் கண்டாள் திரௌபதி. அதைப் பறித்துத் தருமாறு பீமனிடம் கேட்டாள். ஆசையுடன் அவள் கேட்ட மாங்கனியை, மரத்திலிருந்து கீழே விழ வைத்து விடலாம் என்றெண்ணி, பருமனாக இருந்த அந்த மரத்தைப் பிடித்து உலுக்கினான் பீமன். மரம் அசையவே இல்லை. பிறகு வந்த அர்ஜுனனாலும் அது முடியவில்லை. பின்னர் நகுலன், சகாதேவன் வந்தனர்.

நான்கு பேரும் சேர்ந்து உலுக்கியும் பலன் இல்லை. அப்புறம் தருமர் வந்தார். ஐந்து பேரும் சேர்ந்து உலுக்கினர். மாங்கனி கீழே விழுந்தது. அதை திரௌபதியிடம் எடுத்துக் கொடுத்தனர். அவள் அதை சாப்பிட முயன்றாள். அப்போது, அவ்வழியே வந்த ஒரு துறவி, திரௌபதியைப் பார்த்து, ‘‘என்ன காரியம் செய்ய முற்பட்டாய்? இந்த மரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு மாங்கனி மட்டுமே காய்க்கும். தவ முனிவரான துர்வாசர் வந்து கேட்டுக் கொண்டால் மாத்திரமே, மாங்கனி அவர் மடியில் விழும். இந்தப் பழத்தை நீ வைத்திருப்பதா? இதை உடனே மரத்திலேயே வைத்து விடு!’’ என்றார்.

சொல்லிவிட்டு அவர் போய் விட்டார். பாண்டவர்களும் திரௌபதியும் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘தவறு செய்து விட்டோமே! தனிப்பட்ட நம் ஒருவரின் முயற்சிக்கே இந்தக் கனி கிடைக்கவில்லை என்னும்போதே, நாம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். துர்வாச முனிவர் கோபக்காரர். அவர் வருவதற்குள் மீண்டும் இந்தப் பழம் மரத்தில் ஒட்டிக்கொண்டுவிட வேண்டும்’’ என்றார் தருமர். அது சாத்தியமா? ஆனால், கிருஷ்ணர் நினைத்தால் அவரால் இப்படியான அரிய செயலைச் செய்ய முடியும் என்று எண்ணிய தருமர், கிருஷ்ணரைப் பிரார்த்தித்தார். அடுத்த கணமே கிருஷ்ணர் அங்கு தோன்றினார். ‘‘என்ன தர்மபுத்திரா? என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்.

தர்மர், நடந்ததைச் சொன்னார். ‘‘ஆக, திரௌபதியின் கையில் இருக்கும் கனி, மீண்டும் மரத்திலேயே போய்ச் சேர்ந்து விடவேண்டும், அவ்வளவுதானே?’’ என்று கேட்டார் கிருஷ்ணர். பாண்டவரும், திரௌபதியும் ஒருமித்த குரலில் ‘‘ஆமாம்’’ என்றனர். மாங்கனியைத் தரையில் வைக்கச் சொன்னார் கிருஷ்ணர். வைத்தார்கள். அவர்களை நோக்கிய கிருஷ்ணர், ‘‘உங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் இருந்து ஒரு உண்மையான தகவலைக் கூற வேண்டும். அந்த உண்மைத் தகவலுக்கு ஏற்ப, இந்தக் கனி மெல்ல மெல்ல மேலே ஏறிப் போகும். ஏறிப் போய் கடைசியில் திரௌபதி முடிக்கும்போது மரத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். பொய் சொன்னால், கனி மரத்தில் ஒட்டாது’’ என்றார்.

தருமர் முதலில் சொன்னார்: ‘‘என் பெரிய தந்தையின் புத்திரனான துரியோதனனும் மற்றும் அவனுடைய சகோதரர்களும் நல்லறிவுடன் நலமாக வாழ்ந்தால், அனைவருமே சுகமாக இருப்போம். இதுவே நான் சொல்ல விரும்புவது!’’ தருமர் இப்படி சொல்லி முடிக்கவும், தரையில் இருந்த மாங்கனி சற்று உயரே எழும்பியது. அடுத்து பீமன், ‘‘மாற்றான் குடியைக் கெடுத்த துரியோதனன் மற்றும் அவனுடன் இணைந்தவர்களைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போடுவேன். சகுனியைக் கொல்வேன். துச்சாதனன் உதிரம் குடிப்பேன். திரௌபதி தன் கூந்தலை அள்ளி முடியும்படி செய்வேன்’’ என்றான், ஆவேசத்துடன். மாங்கனி இன்னும் சற்று மேலே ஏறியது.

இவ்வாறு அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் தங்கள் மனதில் இருந்த உண்மைக் கருத்தைச் சொல்லச் சொல்ல, சிறிது சிறிதாக மாங்கனி மேலே எழும்பிச் சென்று, இறுதியில் அந்த மரத்துடன் ஒட்டிக் கொண்டது. எல்லோரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர். ‘‘நல்லவேளை, துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகாமல் தப்பினோம்’’ என்று தருமர் நிம்மதி அடைந்தார். கிருஷ்ணரை அனைவரும் பணிவுடன் வணங்கினர். இந்த புராணச் சம்பவம் நடந்த இடமே இந்த ‘கூகூர்.’மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய ஆலயம்.

கடந்த நான்காண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் கண்டதால் கோபுரமும் கோயிலும் புதுப்பொலிவுடன் விளங்குகின்றன. ஆதித்த சோழனால் கட்டப்பட்ட ஆலயம். அவன் பெயரால் இதற்கு ‘ஆதித்தேஸ்வரம்’ என்றும் இங்குள்ள இறைவனுக்கு ஆதிதேஸ்வரர் என்றும் பெயருண்டாம். கல்வெட்டில் உள்ள செய்தி இது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் பலி பீடம், நந்திதேவர் மண்டபம். இதையடுத்து வலதுபக்கம் தெற்கு நோக்கிய நிலையில் அம்பாள் தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறார். நின்ற திருக்கோலத்தில் மங்களாம்பிகை! பெயருக்கு ஏற்ப மங்கள ரூபம்.

ஆலயத்தின் உள்ளே முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் துவார பாலகர்கள், தம்மை வடித்த சிற்பியின் கைத்திறனுக்கு சான்று கூறும் விதமாக எழிலும் கம்பீரமும் கொண்டு காணப்படுகின்றனர். அதை அடுத்து அர்த்த மண்டபத்தில் விநாயகர், திருஞானசம்பந்தர், அர்ஜுனன், சுப்பிரமணியர். ஈசன் ஆம்ரவனேஸ்வரர் உயரமான பாணத்தோடு லிங்கத் திருமேனி கொண்டுள்ளார். இவ்வாலயத்து பைரவர் சக்திமிக்கவர். இவர் பிரமாண்ட வடிவத்தில் நின்று பொலியும் காட்சி எவரையும் ஈர்க்கும் அருள் திறம் பெற்றது. சோழ மன்னன் ஒருவனுக்கு ஏதோ கடும் நோய் ஒன்று வந்தது.

அரண்மனை வைத்தியர்கள் செய்த சிகிச்சை எதுவும் பலன் தரவில்லை. சில சிவனடியார்களின் யோசனைப்படி இத்தலத்தில் உள்ள பைரவரை வணங்கி, நலம்பெற இங்கு வந்தான். ஆலயத்துக்கு அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் தினமும் நீராடி, ஆம்ரவனேஸ்வரரை தரிசித்து, அதன் பின் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தான். சில நாட்களிலேயே அவனது நோய் முற்றிலும் குணமாயிற்று. இத்தகவல் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. கோயில் மூலஸ்தானத்தில் உள்ள கற்றளி வெளிச்சுவர் முழுவதும் கல்வெட்டுகளாகவே உள்ளன.

கோயில் தெற்குப் பிராகார கோஷ்டத்தில் துர்வாசருக்குப் பெரிய சிலா ரூபம். வடக்குப் பிரகார கோஷ்டத்தில் உள்ள அஷ்டபுஜ துர்க்கை காண்போரைக் கவர்ந்திழுக்கும் மகத்துவமான சிற்ப வடிவம். தன் கரங்களில் இவள் ஏந்தியுள்ள ஆயுதங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த துர்க்கையின் இடது கரத்தில் மணிக்கட்டின் மீது ஒரு கிளி அமர்ந்திருக்கிறது. பக்தர்கள் தங்கள் கோரிக்கையை இந்தக் கிளியிடம் சொன்னால் அது, அந்தத் துர்க்கையிடம் கூறி, பிரார்த்தனையை நிறைவேறச் செய்யுமாம். இப்படி ஒரு ஐதீகம் இந்த கோயிலில்!

அம்பாளின் கையிலோ, தோளிலோ கிளியைப் பார்த்து வந்த நமக்கு, துர்க்கையின் கரத்தில் கிளி இருப்பது ஒரு வியப்பான விஷயம்தான்! பழம்பெருமைமிக்க இந்த ஆலயத்துள் நுழைந்து ஈசனையும், அம்பிகையையும் தரிசித்து வணங்கி விட்டு வெளியே வரும்போது, சோலைக்குள் சென்று அருவியில் குளித்து விட்டுத் திரும்புவது போல் மனதுக்கு சுகமாக உள்ளது. கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் பேருந்து வழித்தடத்தில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயிலை அடுத்துள்ளது கூகூர்.

- ஆர்.சி.சம்பத்