இறைவனின் அருளுக்கு வழிகாட்டியது



திருவரங்கம், திருவட்டாறு, திருவனந்தபுரம், திருவில்லிபுத்தூர், திருப்பேர் நகர், திருமோகூர், சிங்கவரம் குன்று, திருஅன்பில், திருவெஃகா, திருஇந்தளூர், பள்ளிகொண்டா ஆகிய பிரசித்தி பெற்ற பள்ளி கொண்ட பெருமாள் ஆலயங்களுக்கு நேரில் சென்று தரிசித்த மனநிறைவினைத் தந்திருந்தது ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, பள்ளிகொண்ட பெருமாள் தரிசனம்  என்ற கட்டுரை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பல்வேறு ஊர்களில், பல்வேறு நிலைகளில் ‘அறிதுயில்’ கொள்ளும் பெருமாளின் புகழ் குறித்தும், வைகுண்ட ஏகாதசியின் பெருமைகள் குறித்தும், சயனத்திருக்கோலங்களின் வகைகள் குறித்தும் அருமையாக விளக்கிய விதம் இனிமையாக இருந்தது.
- முனைவர்.இராம.கண்ணன், திருநெல்வேலி.

அஞ்சனை மைந்தன் அனுமன் பக்தி சிறப்பிதழாக வலம் வந்த ஆன்மிகம் பலன் இதழுக்கு ரத்ன மகுடமாக மின்னியது. இருபத்து நான்கு மணி நேரம் ராம ஜபம் ஒலிக்கிற புதுதில்லி ‘ஹனுமான் மந்திர்’ ஆலயம் பற்றிய சிறப்புக்களை விவரித்த கட்டுரை. தலைநகர் சென்றால் இந்த ஆலயம் சென்று ஹனுமானை தரிசிப்பேன். ஜகம் புகழும் ஹனுமானின் மகத்துவம் கூறும் ‘அகத்தூய்மை அருள்வாய் ஆஞ்சநேயா’ கவிதை முகமலர்ச்சி ஏற்படுத்தி முத்திரை பதித்துவிட்டது. ஆயிரம் நாமங்களால் அனந்தனைப் பணிவோம்! என்ற அற்புதத்தலைப்பில் பெருமாளைப் போற்றிடும் கட்டுரைத் தொடர் ஆரம்பமே ஆவலைத் தூண்டி விட்டது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

பொறுப்பாசிரியர் தன் தலையங்கத்தில் ‘நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது’ என்ற தலைப்பே யோசிக்க வைத்தது. படிக்கப் படிக்கத்தான் இயற்கையின் சீற்றத்தை அனுமானித்திருப்பதை தெளிவாக்கிய விதம், தற்காத்துக்கொள்ள பிரார்த்தனை, இறைவன் கொள்ளும் இரக்கம், அத்தனையும் சிந்தித்தும் சீர் தூக்கிப் பார்க்கவும் வைத்துள்ளது வாசக அன்பர்கள் அனைவருக்குமே புரிந்திருக்கும். கூட்டுப்பிரார்த்தனையின் மகத்துவமும் இறைவனின் அருளுக்கு வழிகாட்டியது பாராட்டுக்கள்.
- எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி.

‘ஆன்மிகம் பலன்’ ஆஞ்சநேயர் பக்தி ஸ்பெஷல் அருமையிலும் அருமை. அவரின் பெருமைகளும், ஸ்லோகம் அத்தனையும் மெய்மறக்கச் செய்தது. வைகுண்ட ஏகாதசி திருநாளின் கட்டுரைப் படங்கள் அனைத்துமே பக்தர்களுக்கு ஆன்மிக வரப்பிரசாதமாக இருந்தது. ‘தொடரட்டும் ஆன்மிகம் பலன்’ பணி.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

ஸ்ரீவைகுண்ட ஏகாதசி அன்று பதினோரு தலங்களின் சயனக் கோலப் பெருமாள்களின் மூலவர் மற்றும் உற்சவரை தரிசிக்கச் செய்ததோடு அந்த தலங்களின் சிறப்புகள் மற்றும் சயனத்தின் பெயர் ஆகியவற்றை தெரிவித்திருந்தது ஆன்மிக வாதிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. மேலும் ஆயிரம் நாமங்கள் கொண்ட விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு பெயரின் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் பற்றிய புதிய தொடர் வெளியிட்டது ஒரு வாசகர் பயன்பாடு சார்ந்த முயற்சியாகும். வாசகர்கள் சார்பில் பாராட்டுகிறேன்.
- K.சிவக்குமார், சீர்காழி.

பகவத்கீதை அடுத்த இதழில்...