உயிரையும் உடலையும் பிணைத்த தெய்வம்



திருமூலர் மந்திர ரகசியம்

‘‘சார்! நேத்திக்கி என் பர்ஸைக் காணோம். வீட்டுல எங்கியோ வெச்சிட்டேன். என் பேத்தி எடுத்துக் கொண்டு வந்து குடுத்தா. யப்பா... எவ்வளவு சமத்து.’’ ‘‘பைக் சாவிய, ஆஃபீஸ்ல எங்கியோ வெச்சிட்டேன். பக்கத்து சீட்காரர் கொண்டு வந்து குடுத்தார். முகம் கழுவின இடத்துல வெச்சிட்டு வந்திட்டேனாம். மனசாற தேங்க்ஸ் சொன்னேன்.’’ இதுபோல, நமக்கு உதவி செய்தவர்களைப் பலவிதங்களிலும் பல முறை பாராட்டியிருப்போம். சற்று சிந்தித்துப் பார்த்தால், பர்சையோ அல்லது மோட்டார் பைக் சாவியையோ, நம்மால் வேறொன்று வாங்க சம்பாதிக்க முடியும் அல்லது பெற்றுக் கொள்ள முடியும். ஆனால்...

நம் உடம்பு! மிகவும் ஆச்சரியகரமான நம் உடம்பை நம்மால் திரும்பப் பெறவே முடியாது. ஆமாம்! பேச, கேட்க, பார்க்க, நுகர எனப் பலவிதங்களிலும் நம் உடம்பு நமக்கு உதவி செய்கிறது. ‘‘இது நல்லாயிருக்கே! நீங்க சொல்ற எல்லாத்தையும் இன்னிக்கு கம்ப்யூட்டர், செல்போன் எல்லாம் செய்யிதே! என்ன ஆச்சரியம் நம்ம உடம்புக்கு?’’ என்ற எண்ணம் எழுந்தால், மின் சாதனங்கள், கைபேசி முதலானவை எல்லாம் நம் கட்டளைக்குக் கீழ்படியுமே தவிர, தாமே தீர்மானித்துச் செயல்படாது. மேலும் நல்லவைகளைப் பார்த்தால் மகிழவோ, கெட்டவற்றைப் பார்த்தால் வருந்தவோ, எந்தக் கைபேசியும் செய்யாது. மகிழ்ச்சி, சுகம் - துக்கம், போக்கு - வரத்து, மனைவி - குழந்தைகள், பேரன் பேத்தி, உற்றார் உறவினர் என அனைவருடனும் குலவி மகிழ்தல் என்பன எல்லாம் மனிதர்களான நமக்கு மட்டுமே உண்டு. இயந்திரம் கைபேசிகளுக்குக் கிடையாது.

ஆகவே இந்த உலகிலேயே மிக மிக உயர்ந்த ஒரு சாதனம் என்றால், அது நமது உடம்பு மட்டுமே! இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.

என் பால் மிடைந்து நரம்பு வரி கட்டிச்
செம் பால் இறைச்சி திருந்த மனை செய்து
இன் பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நண் பால் ஒருவனை
நாடுகின்றேனே
(திருமந்திரம்-461)

கருத்து: எலும்புகளால் நெருக்கமாகப் பின்னி, நரம்புகளாகிய கயிற்றைக் கொண்டு இறுகக் கட்டி, ரத்தமும் சதையும் கொண்டு அழகான இந்த உடம்பாகிய வீட்டை உருவாக்கி, இன்பத்திற்கு இடமான உயிரை இந்த உடம்பில் நிலைபெறச் செய்த இறைவனிடம் கொண்ட நேசத்தால் (நட்பால்) உயிரையும் உடலையும் தந்தருளிய ஒப்பற்ற அந்தப் பரம்பொருளை  சரணடையவே விரும்புகிறேன்.

‘தன்னை உணர்ந்த தத்துவஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்’ - என மற்றொரு பாடலில் சொன்ன திருமூலர், இப்பாடலின் மூலம் நம் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்க முயல்கிறார். உடம்பை வீடாக உருவகப்படுத்தியிருக்கும் அற்புதமான பாடல் இது. உடம்பென்னும் வீடு, எலும்புகளால் பின்னப்பட்டு, நரம்புகள் என்னும் கயிறுகளைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறதாம். எலும்புகளில் ஒன்று விலகிப் போனாலும், கயிறுகளான நரம்புகளில் ஒன்று தளர்ந்து போனாலும் போதும். உடம்பான வீடு குலைந்து போய் விடும். இந்த இரண்டு மட்டுமல்ல!

ரத்தமும் சதையும் கொண்டு இந்த உடம்பான வீடு உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ரத்தமும் சதையும் நல்ல முறையில் இருக்கும்வரைதான் உடம்பாகிய வீடு நன்றாக இருக்கும். அந்த இரண்டும் நிலைகுலையத் தொடங்கினால், உடம்பாகிய வீடு நிலைகுலைந்து போய் விடும். ரத்தமும் சதையும் எப்படி நிலைகுலையும்? என்ற எண்ணம் எழுந்தால்... சற்று யோசிக்கலாம் வாருங்கள்!

இன்று பெரும்பாலானவர்களுக்கு ரத்தக் கொதிப்பு இருப்பதாகச் சொல்கிறோமல்லவா? அது பிறந்த குழந்தைக்கு இருக்கிறதா? இல்லையே! குழந்தையாக இருந்தபோது அமைதியாக இருந்த ரத்தம், மனிதன் வளர்ந்தவுடன் கொதிப்படைகிறதே! ஏன்? எப்படி? ஆத்திரம், அவசரம், கோபம், தாபம், ஆசை என பலவிதங்களாலும் தாக்கப்பட்டு ரத்தம் சூடேறுகின்றது. ரத்தக்கொதிப்பு வருகிறது. அதன் விளைவாக உடம்பு, அதாவது சதை நிலைகுலைகிறது.

என்ன விபரீதம் இது! நகர்ந்து போனால் நிலைகுலையச் செய்யும் எலும்புகளும், சற்று தளர்ந்து போனாலும் கவலை கூடாரம் போட வைக்கும் நரம்புகளும், நம் கோபதாபங்களால் தாக்கப்பட்டு நம்மைக் கீழே தள்ளும் ரத்தமும் (ரத்தக் கொதிப்பு); உள்ளே நிகழ்பவைகளின் காரணமாக வெளித்தோற்றத்திலும் பலவீனத்தை வெளிப்படுத்தும் உடம்பும் (சதையும்) கொண்டு, நம் உடம்பாகிய வீடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், இந்த உடம்பு அழகாக (திருந்த) உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார். ‘‘அட! என்னங்க அழகா இருக்குது’’ என்று எண்ண வேண்டாம். காது, கண், மூக்கு, வாய், கை, கால் என அனைத்துமே நல்லமுறையில் தானே இருக்கின்றன! பிறகென்ன?’’ இந்த இடத்தில்தான் திருமூலர் மிகவும் முக்கியமான தகவலைச் சொல்கிறார்.

இவ்வளவு நேரம், எலும்பு - நரம்பு - ரத்தம் - சதை ஆகியவைகளைக் கொண்டு கட்டப்பட்ட வீடு இந்த உடம்பு என்று சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், உடம்பில் உயிர் இருப்பதாகச் சொல்லவில்லை. இப்போது சொல்கிறார், ‘‘உயிரையும் உடலையும் தெய்வம் சேர்த்து வைத்தது; இன்பத்திற்கு இடமான உயிரைச் சேர்த்து வைத்தது’’ என்கிறார். உண்மைதானே! உடம்பில் உயிர் இல்லை என்றால், அந்த உடம்பால் என்ன லாபம்? உடலையும் உயிரையும் இணைக்க நம்மால் ஆகாது, தெய்வத்தால் மட்டுமே முடிந்தது அது. ‘‘அப்படிப்பட்ட அந்தப் பரம்பொருளை நான் நேசத்தால், நட்பால் சரணடைய விரும்புகிறேன்’’ எனப் பாடலை முடிக்கிறார் திருமூலர்.

உடம்பில் உள்ளவற்றைச் சொல்லி, அதில் உயிரை இணைத்த பரம்பொருளைச் சொல்லி, அப்பரம்பொருளை அன்போடு, நட்போடு நாடுவதாகச் சொல்லும் இப்பாடல், நம்மையும் பரம்பொருளிடம் சரணடையச் சொல்லி அறிவுறுத்துகிறது. அதாவது, உடம்பு நல்ல நிலையில் இருக்கும்போதே, தெய்வத்திடம் சரணடையச் சொல்கிறது. அதுவும் அன்போடு சரணடையச் சொல்கிறது. ஆம்! கோபம், தாபம் ஆகியவைகளால் உடலைச் சீர்குலைத்துக் கொள்ளாமல் அன்போடு ஆண்டவனிடம் சரணடையச் சொல்லி அறிவுறுத்துகிறது. உடம்பை வீடாகச் சொல்லும் இதே தகவல் கந்தர் அலங்காரத்திலும் இடம் பெற்றுள்ளது.

தோலால் சுவர் வைத்து
நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளைமுதுகு
ஓட்டி கை நாட்டி நரம்
பாலார்க் கையிட்டு தசை கொண்டு
மேய்ந்த அகம் பிரிந்தால்
வேலால் கிரி துளைத்தோன் இரு
தாளன்றி வேறு துணையில்லையே
(கந்தரலங்காரம்)

உடம்பென்னும் வீடு தோலால் சுவர் வைக்கப்பட்டுள்ளது. தச வாயுக்கள் என்னும் பத்து காற்றுக்களை சுமத்தி, இரண்டு கால்களால் எழுப்பி வைக்கப்பட்டுள்ளது. (மேற்கை மரம் போல) முதுகு வைத்து (கொடுங்கை போல) இரு கைகளும் வைக்கப்பட்டுள்ளன. நரம்புகளைக் கொண்டு இறுகக் கட்டி மேலே சதையைப் பரப்பி மூடப்பட்டுள்ளது என அருணகிரிநாதரும் திருமூலர் கூறியதைப் போலவே உடம்பை வீடாக உருவகப்படுத்தியிருக்கிறார்.

அந்த உத்தமர்களின் வாக்குப்படி, உடலையும் உயிரையும் இணைத்து நம்மை வாழவைத்த பரம்பொருளின் பதம் பணிவோம்! பாவமெல்லாம் பறந்தோடிப்போகும்! உடம்பை வீடு என்று விவரித்த திருமூலர் அந்த உடம்பைக் கொண்டு ஒருவன் செய்த செயலை விவரிக்கிறார்.

தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரிந்து அமரா என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே
(திருமந்திரம் - 350)

கருத்து: இருபது தோள்கள் கொண்ட ராவணன், கயிலை மலையைத் தூக்க முயன்று, அதன் அடியில் சிக்கி அலறினான். பெரும் ஆற்றல் பெற்ற அவன், சிவபெருமானை நோக்கி அபயக்குரல் எழுப்பியபின் அவனுக்கு நீங்காத அருளைச் செய்தார் சிவபெருமான். தெரிந்த கதைதான் இது. இதைக் கொண்டு இப்பாடலில் பாடம் நடத்துகிறார் திருமூலர். ராவணன் கைலாய மலையைத் தூக்க முயன்றான். ஏன்? ஒரு சமயம் ராவணன் புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாய வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது விமானம் தடைபட்டது. குனிந்து பார்த்தால் கைலாய மலை இருந்தது.

ராவண விமானம் தடைபட்டதைப் பார்த்த நந்திபகவான், ‘‘தசக்கிரீவா! இந்த கயிலை மலை. இதன் மேல் விமானத்தில் போகக் கூடாது. சுற்றிப் போ!’’ என்றார். ஆணவ வசப்பட்ட ராவணன், ‘‘இந்த மலை இங்கு இருந்தால் தானே? பெரும் ஆற்றல் பெற்றவனாக்கும் நான். என் இருபது கரங்களாலும் இம்மலையைத் தூக்கி அந்தப் பக்கமாக வீசி விடுகிறேன் பார்!’’ என்று கூவி, கயிலைமலையைத் தூக்க முயற்சித்தான். விளைவு? மலையின் அடியில் அகப்பட்டு அலறினான். சிவபெருமானைக் கூவித் துதிக்க, சிவபெருமான் அருள் செய்தார்.

இந்தக் கதையின் அடிப்படை உண்மையை ஆராயலாம் வாருங்கள்! ராவணனை நம் பிரதிநிதியாகவும் பொறி புலன்களும், அவற்றின் செயல்பாடுகளும் பத்து தலைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. நம் செயல்பாடுகளின் மூலம் உயர்கிறோம். உயர உயர ஆணவம் தலை எடுக்கிறது. அதன் விளைவாக தெய்வ வடிவாகச் சொல்லப்படும் மலை முதலானவைகளை அழிக்க முற்படுகிறோம். அத்தவறால் நாம் தண்டிக்கப்படும்போது துயரம் தாங்காமல் அழுகிறோம், ராவணனைப் போல!

நம் அழுகையைக் கண்டு தெய்வம் இரங்கி நமக்கு அருள்புரிகிறது; ராவணனுக்குச் சிவபெருமான் அருள் செய்ததைப் போல! தவறு செய்து தண்டிக்கப்பட்ட ராவணன், இறைவனிடமிருந்து அருள் பெற்ற பிறகாவது திருந்தினானா என்றால், அதுதான் இல்லை. சீதா தேவியைத் தூக்கிப் போய், அதன் காரணமாகத் தண்டிக்கப்பட்டான். என்ன பலன்? நம் தவறுகளின் மூலம் நாம் தண்டிக்கப்படும்போது துயரம் தாங்காமல் புலம்புகிறோம். அத்தவறுகள் மன்னிக்கப்பட்டு மறுபடியும் நல்வாழ்வு வாழ வாய்ப்பு வழங்கப்படும்போது, ஊக்கம் பெற்ற நாம் முன்பை விடப் பெரும் தவறை (ராவணன் சீதையைத் தூக்கிப் போனதைப் போல)ச் செய்கிறோம். நம் கதை முடிந்து விடுகிறது.

ராவணன் கதையை வைத்துத் திருமூலர் பாடம் நடத்துகிறார். திருமூலர் சொல்லும் இந்த மலை தூக்கிய நிகழ்ச்சிக்குப் பிறகே, ‘ராவணன்’ எனப் பெயர் பெற்றான் அவன். அதுவரை, ராவணனுக்குத் ‘தசக்கிரீவன்’ என்றே பெயர் இருந்தது. ராவணன் என்ற சொல்லுக்கு ரோதனம் இடுபவன் என்பது பொருள். இறை உண்மையை உணராமல் தானும் அழுது அடுத்தவர்களையும் அழச் செய்யும் அனைவரும் ராவணர்களே! திருமூலர் சொல்வதை நெஞ்சில் பதிப்போம்! துயரங்கள் எல்லாம் பஞ்சாய்ப்போம்!

பி.என்.பரசுராமன்