சந்தோஷம் அருள்பவரே சனிபகவான்!காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின்! ஏழரைச்சனிக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவ பூர்வமாகப் பேச வைக்கிறது. இப்படிப்பட்ட சனிப் பெயர்ச்சியானது கடந்த 19:12:2017 அன்று நிகழ்ந்தது. இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. அதேபோல சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டியதும் இருக்கிறது. இதைத்தவிர குறிப்பிட்ட சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஊழ்வினையை காட்டும் கிரகம் பொதுவாகவே சனி பகவான் மாற்றம் கொடுப்பவராகவே இருக்கிறார். கூண்டுக்குள் சிறைபட்டிருந்த வாழ்க்கையை, வெளியே சிறகடித்துப் பறக்கச் செய்கிறது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து மோதல்களை உருவாக்கி அவர்களை விட்டு விலகச் செய்யும், புதிய பாதையை உருவாக்கும். கிணற்றுத் தவளை என்ற குறுகிய வட்டத்தை விசாலமான பெரிய வட்டமாக்கும். உலகம் பிரமாண்டமானது எனும் உண்மையை உணர்த்தும்.

‘அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமன் போன்ற உறவுகள் எல்லாம் நிரந்தரமல்ல, எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். மாறாத உன் பத்து விரல்கள்தான் உனக்கு நிரந்தரம். எனவே, உன்னை நீயே பாதுகாத்துக்கொள்’ என்று உபதேசிப்பார். ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும்.

சனி என்பதே ஊழ்வினை கிரகம்தான். அதாவது, பூர்வ ஜென்ம பலன்களை பிரதிபலிக்கும் கிரகம். தனக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத நபர்களை அறிமுகப்படுத்துவதும், அவர்கள் மூலம் நல்லது கெட்டது என்று பாடம் நடத்துவதும் சனியின் தனித்தன்மை. நல்ல படிப்பறிவு இருந்தாலும், ஏழரைச் சனி காலத்தில்தான் அனுபவ அறிவு வளரும். நடுநிலை மாறாமல் பலன்களை கொடுக்கக் கூடியவர் சனிபகவான்.

அவர் நேர்மையின் உச்சம். எதையும் கொடுத்து சரிசெய்ய முடியாது. ‘‘பேப்பர் கரெக்டா இருந்தா பில் தானா பாஸாகும்’’ என்று சொல்லும் ஊழியரின் நாவில் சனிபகவான் இருக்கிறார். தாய், தந்தைக்கு அன்னமிடாமல், எறும்புப் புற்றுக்கு நொய்யரிசி போட்டு பரிகாரம் செய்பவரை சனிபகவான் ஏற்பதில்லை. மனம் திருந்தி சரணடையும்வரை சனி விடமாட்டார். தன்னுடைய தவிர்க்க முடியாத கடமைகளை மனசாட்சியோடு செய்து கொண்டிருப்பவரை நிறைவடையச் செய்பவர் அவர். சொந்த சகோதரனின் சொத்தை அநியாயமாக எழுதி வாங்கிக் கொண்டுவிட்டு, அந்தப் பக்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்துபவரை சனி சும்மாவிட மாட்டார். இதற்கு அது சரியாகிவிட்டது என்று சனி சமாதானம் செய்து கொள்வதில்லை.

அடிப்படை அறமே சனியின் ஆதார சுருதி. உனக்கென்று என்ன கொடுக்கப்பட்டதோ அதை  வைத்துக்கொண்டு வாழ். தட்டிப் பறிக்காதே. தறி கெட்டுப் போவாய் என்பதே சனியின் முழக்கம். பிரபஞ்சத்தில் எதெல்லாம் அளவிடமுடியாதோ அவை அனைத்துமே சனியின் ஆதிக்கத்திற்குட்பட்டதுதான். பசிபிக் கடல் முதல் எவரெஸ்ட் சிகரம் வரை எதெல்லாம் ஆச்சரியங்களையும் ஆழங்களையும் கொண்டிருக்கிறதோ அவை அனைத்துமே சனியின் அதிகாரத்திற்குட்பட்டதுதான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று அல்லது நான்கு முறை ஏழரைச் சனி வரும். பிறந்த உடனேயே சில வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது, முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள். இரண்டாவது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது இரண்டாவது சுற்று. அதற்கடுத்து மூன்றாவது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, கங்கு அல்லது மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.

பிறக்கும் போது சனி பகவான் யோகாதிபதியாக இருந்தார் என்றால், சிலர் நான்காவது சனியையும் கடந்திருப்பவர்களையும் பார்க்கிறோம். அதனால், மூன்றாவது சனியை கங்குச் சனி அல்லது மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் மூன்று பாகங்கள் ஒன்று. முதல் இரண்டரை விரயச் சனி. இரண்டாவது இரண்டரை ஜென்மச் சனி, மூன்றாவது இரண்டரை பாதச் சனி.

இதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்து கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் ஈகோவை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார். மகரத்திற்குள் மாயாஜாலம் இப்போது மகர ராசிக்கு ஏழரைச் சனி தொடங்கப் போகிறது. தனுசுக்கு ஜென்மச் சனியாக ராசிக்குள் நுழையப் போகிறது. விருச்சிகத்திற்கு இரண்டாம் இடமாக ஏழரையின் கடைசி இரண்டரை வருடங்கள் நடக்கப் போகின்றன.

முதலில் மகரத்தைக் குறித்துப் பார்ப்போம். 1994க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும். ஏனெனில், இப்போதுதான் முதன் முதலாக ஏழரைச் சனிக்குள் வருவார்கள். அதாவது முதல் சுற்றுக்குள் வருவார்கள். அதிலும் குறிப்பாக மூன்று வயதாக இருந்தால் தாய், தந்தையருக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும். பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்துநீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது.

‘‘அவங்க சொன்னாங்க... இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். இதுபோல 8 வயதிலிருந்து 14, 16 வயது வரை இருப்பவர்களுக்கு உடல்நலனில் ஏதேனும் பாதிப்பை அளித்தபடி இருக்கும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்...’’ என்று பல விதங்களில் பாதிப்புகள் இருக்கும். 19 வரையுள்ள ஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. ஏட்டறிவு, எழுத்தறிவு, சொல்லறிவு எல்லாவற்றையும் தாண்டிய அனுபவ அறிவைத்தான் ஏற்றி வைப்பார்.

பதினாறு வயதுக்கு மேல் இருபத்தியிரண்டு வயதில் இருப்பவர்களுக்கு சிறுசிறு விபத்துகள் வரும். கிட்டத்தட்ட இரண்டாவது சுற்றாக இருப்பதால் வளர்ச்சியைக் குறித்த பிரச்னைகள் இருந்தாலும் முன்னேற்றத்தையே தரும். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்.

கெடுத்துக் கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘தன்னால்தான் எல்லாமும் நடக்கிறது. எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வவளத்தால்தானே சில பிரச்னைகளை உருவாக்குவார்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் இரண்டாவது சனியாக பொங்கு சனி கொடுப்பார். என்ன, சில நேரங்களில் சனி கண்ணை மறைப்பார். பிளாட் அப்ரூவல், மற்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஏழரைச் சனி, சில நேரத்தில் போன ஜென்மத்தில் யாரையாவது நாம் ஏமாற்றி இருந்தால் அவன் ஏதாவது போலி டாக்குமென்டை காண்பித்து காசு வாங்கிக் கொண்டு ஓடிவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால், முன் பணம் கொடுக்கும் போதும், பத்திரப் பதிவு செய்யும் போதும் வாரிசுதாரர்கள் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டார்களா என்பதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், முதல் தாரத்தின் பையன் கையெழுத்து போட்டுவிட்டான், 2வது தாரத்தின் பையன் அயல்நாட்டில் இருக்கிறான் என்பதை மறைத்துவிட்டார்கள்.

வாங்கி இரண்டு வருடம் கழித்து வந்து தகராறு செய்து, எனக்கு 10 லட்சம் கொடுத்தால்தான் இந்த வீட்டில் இருக்க விடுவேன். இல்லையென்றால் வழக்கு தொடருவேன் என்பது போன்ற பிரச்னைகள் ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும். இதையெல்லாம் சட்ட ரீதியாக தெளிவுபடுத்திக் கொண்டு வாங்கினால் ஒரு பிரச்னையும் கிடையாது. ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் எதுஎதுவோ சாப்பிடும்போது தயிர் சாதத்தோடு அமைதியாக இருங்கள்.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாவது சுற்றாக வரும். இதுதான் கடைசிச் சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. தன்னுடைய அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தி உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.  எதுநடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ஆசைகளைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை இந்த சுற்றில் மறக்காதீர்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். சிறுசிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும்.

மன அழுத்தம் மிகுந்திருக்கும். இறுக்கத்தோடு இருக்க வைக்கும். பழைய பகையை நினைத்து பழிவாங்க வேண்டுமென்ற துடிப்பு இருக்கும். எனவே, இதைக் களைவது நல்லது. பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்களைக் களைவது நல்லது. இதில் சூரியனின் ஆதிக்கத்தில் இருக்கும் உத்திராட நட்சத்திரக்காரர்கள், செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற அவிட்ட நட்சத்திரக்காரர்கள் கூடுதலான ஏமாற்றங்களையும், நம்பிக்கை மோசடிகளையும் எதிர் கொள்வார்கள். ஆனால், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு ஏழரையின் தாக்கம் கொஞ்சம் குறையும்.

ஏனெனில், சந்திரனும், சனியும் நல்ல நட்பு கொண்டவர்கள். இயல்பு நிலையில் ஒத்துப் போவார்கள். இரண்டுமே தட்பமானது. குளுமையைக் கொடுக்கக் கூடியது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயமே மகர ராசி சனிக்குரிய வீடாக இருப்பதாலும், விரயச் சனி தொடங்குவதாலும் சுப விரயங்களாக இருக்கும். சகோதர, சகோதரிக்கு திருமணமும், சொத்தையும் உருவாக்கும். இடம் பெயர வைக்கும்.  

கோதண்டத்தில் கோலோச்சும் கரியவன் தனுசு ராசிக்கு இப்போது ஜென்மச் சனியாக வருவதால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயருதல், ஏதேனும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுத்துதல் என்றெல்லாம் இருக்கும். மூலம் நட்சத்திரத்திலேயே 2019 மார்ச் மாதம் வரையில் சஞ்சரிக்க இருப்பதால் மேற்கண்ட தொந்தரவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி குறையும். ஹீமோக்ளோபின் எண்ணிக்கையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வைத்தியம் பார்க்க நேரிடும். 

பணம் கொடுக்கல் வாங்கலில் அதீத கவனம் தேவை. தாம்பத்யம் சிக்கலாகும். எல்லா வேலைகளையுமே தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். செயல் திறனும், செயலூக்கமும் குறையும். எந்தவொரு விஷயத்தையும் சொன்ன நேரத்தில் சொன்னபடி செய்ய முடியாது போகும். இதனால் இனம் புரியாத சோகமும், உளச்சோர்வுமே மிஞ்சும். பேருந்து மற்றும் ரயிலை தவற விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்...

கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’கே.பி.வித்யாதரன்