இரக்கம்தான் கண்ணுக்கு அழகு!



குறளின் குரல் - 74

இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா? இரக்கமே ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது. மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது? சச்சரவுகள் ஏது? மனம் மென்மைப்படும் போது இரக்கவுணர்வு தானாய் மனத்தில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரிகம் அடைந்ததன் வெளிப்பாடுதான் அவனது இரக்க உணர்வு. கண்ணோட்டம் என்ற ஐம்பத்தெட்டாம் அதிகாரத்தில், பத்து குறட்பாக்களில் மனிதனின் இரக்கவுணர்வைக் கொண்டாடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இரக்கம் மனிதனுக்குக் கட்டாயம் தேவை என்பதைப் பல வகைகளில் நிலை நிறுத்துகிறார்.

`கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

இரக்கம் என்ற அழகிய சிறந்த பண்பு மக்களிடம் இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது.

`கண்ணோட்டத் துள்ள துளவியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

உலக வாழ்வு நாம் பிறரிடம் காட்டும் அருளால்தான் நடைபெறுகிறது. இரக்கமில்லாதவர் உலகில் வாழ்வது இந்த மண்ணுக்குச் சுமை.

`பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்.
 
பாடலோடு பொருந்தவில்லை என்றால் அதற்கமைந்த இசையால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல இரக்கமில்லாத விழிகளால் எந்தப் பயனும் விளைவதில்லை. 

`உளபோல முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்ட மில்லாத கண்.
 
அடுத்தவர் துன்பத்தைக் கண்டும் அருள் செய்யாத கண்கள், முகத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், அவகைளால் என்ன நன்மை விளையும்?

`கண்ணிற் கணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும்.

 ஒருவனுடைய கண்ணுக்கு அழகு செய்யும் ஆபரணமாக அமைவது அருட்பார்வையே ஆகும். அந்த அருட்பார்வை இல்லாவிட்டால், கண்களை முகத்தில் உள்ள புண்கள் என்றே கருத வேண்டும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துண்கண் ணோடா தவர்.

கண் பெற்றிருந்தும் இரக்கமில்லாதிருப்பவர், மண்ணோடு பொருந்திய மரம் போன்றவரே ஆவர்.
 
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்
கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
 
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே ஆவர். பொதுவாக கண்ணுடையவர் யாரும் இரக்கமில்லாதவராக இருப்பதுமில்லை.

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
 
தம் செயலுக்குச் சேதம் வராமல் செயல் புரிவதோடு இரக்கமுடையவராயும் வாழ்பவர்க்கு இந்த உலகம் உரிமையாகிறது.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
 
தண்டிக்க வேண்டிய குற்றம் செய்த பகைவரிடத்தும் இரக்கம் காட்டி அவரைக் காப்பதே சிறந்த பண்பாகும்.

பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
 
மிகச் சிறந்த நாகரிகத்தை வேண்டுபவர், தம் நண்பர் தமக்கு நஞ்சைக் கொடுக்கிறார் என்று தெரிந்தாலும் அதை அவர் மனம் வருந்தக் கூடாதே என உண்ணும் தன்மை கொண்டிருப்பர்.
 
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்...
 
என்ற வரிகளில் நற்றிணைப் பாடலொன்று (355), நண்பர் கொடுத்தால் நாகரிகமுடையவர் அந்த நஞ்சை உண்பார்கள் என்ற இதே கருத்தைப் பேசுகிறது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு. கங்கை நதிநீரில் ஒரு தேள் எப்படியோ விழுந்து மிதந்தது. அது இறந்துவிடுமே என இரக்கத்தோடு அதைக் கையால் எடுத்துத் தரையில் விட முயன்றார் ஒரு துறவி. ஆனால், அந்தத் தேள் அவர் தன்னைக் காப்பாற்ற முனைவதை உணராமல் அவரை ஒரு கொட்டுக் கொட்டிவிட்டு மீண்டும் அதே தண்ணீரில் விழுந்தது. மறுபடியும் அதைக் காப்பாற்ற முயன்றார் துறவி.

மீண்டும் கொட்டியது அது. பின் மறுபடி நீரில் விழுந்தது. துறவி அதைக் காப்பாற்ற முயல்வதும் அது கொட்டுவதும் இப்படியாகப் பலமுறை நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான் பக்கத்தில் நின்ற ஒருவன். `சுவாமி! தேள் கொட்டுவது உங்களுக்கு வலிக்கவில்லையா? பிறகு எதற்கு இந்த இரக்க சிந்தனை? அதைத் தண்ணீரிலேயே விட்டுவிடுவது தானே? என்று பணிவோடு கேட்டான்.

இரக்கம் நிறைந்த துறவி, `தேளின் சுபாவம் கொட்டுவது. என் சுபாவம் காப்பாற்றுவது. தனக்கு உயிரே போகும் தறுவாயிலும் அது தன் சுபாவத்தை விடவில்லை. அப்படியிருக்க வெறும் கொட்டு வலிக்கு பயந்துகொண்டு அதைக் காப்பாற்றுகிற என் சுபாவத்தை நான் ஏன் விடவேண்டும்? என்று கேட்டாராம்! இரக்கம் என்பது தன்னைத் துன்புறுத்துபவர்கள் மேலும்  காட்டப்பட வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது இந்தக் கதை. 

இரக்கத்தின் பேரெல்லையைக் `கொடை மடம் என்று பழந்தமிழ் குறிப்பிடுகிறது. படர்வதற்குக் கொழுகொம்பில்லாமல் காற்றில் அலைந்து தவித்த முல்லைக் கொடியைப் பார்த்தான் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள்பாரி. அவன் மனதில் இரக்க உணர்ச்சி பொங்கி எழுந்தது. தான் பயணம் செய்து வந்த தேரை அந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்தி அதில் அதைப் படர விட்டான். பின் மிகுந்த மன நிறைவோடு தேரின்றி நடந்து அரண்மனை வந்து சேர்ந்தான்.
 
பாரியின் கொடைத் தன்மையைப் புகழ்ந்து வஞ்சப் புகழ்ச்சியாகக் கபிலர் பாடிய பாடல் ஒன்று புகழ்பெற்றது. என்னவோ பாரியை வள்ளல் வள்ளல் என்று எல்லோரும் கொண்டாடுகிறீர்களே? சரிதான். பாரி மட்டுமல்ல, மழை கூடத்தான்  தன் கொடைத்தன்மையால் உலகைக் காப்பாற்றுகிறது! அதைப் பாராட்ட ஆளைக் காணோம்! என்று நயம்படப் பாரியைப் புகழ்கிறார் புலவர் கபிலர்.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே!
(புறநானூறு: பாடல் 107.)

கடையெழு வள்ளல்கள் எழுவருமே இரக்கத்தால் தங்களிடம் இருந்ததையெல்லாம் வாரி வாரிக் கொடுத்தவர்கள்தான். குளிரால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன். ஆயுளை நீட்டிக்கும் அரிய கருநெல்லிக் கனி தனக்குக் கிடைத்தபோது, தமிழ் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்த் தொண்டு செய்யும் அவ்வைக்கு அந்தக் கனியின் தன்மையைச் சொல்லாமல் அதை உண்ணக் கொடுத்து மகிழ்ந்தான் அதியமான். காரி, ஓரி, ஆய், நள்ளி எனக் கடையெழு வள்ளல்கள் அனைவருமே தங்களின் இரக்க உணர்வால் இலக்கிய வரலாற்றில் நிலைபெற்று விட்டார்கள்.
 
கடையெழு வள்ளல்கள் என்கிறபோது, முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள் யார் யார் என்ற கேள்வியும் எழத்தானே செய்யும்? அப்படிப் போற்றப்படுபவர்கள் புராணப் பாத்திரங்கள். `செம்பியன், சகாரி, விரதன், நிருத்தி, துந்துமாரன், சாகரன், நளன், ஆகியோர் முதல் எழு வள்ளல்கள் என்ற பெருமையைப் பெறுகிறார்கள். `அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், வக்ரன், கண்ணன், சந்தன்,  ஆகியோர் இடையெழு வள்ளல்கள் எனக் கொண்டாடப் படுகிறார்கள். வள்ளுவர் சொல்லும் கண்ணோட்டம் என்ற இரக்க குணத்தால் மக்கள் மனத்தில் நிலையான இடம்பெற்றவர்கள் இந்த வள்ளல்கள் அனைவருமே. 
 
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் ராமலிங்க வள்ளலார். பயிர் வாடுவதைப் பார்த்து வள்ளலாரின் உயிர் வாடியது. தாவரங்கள் உள்பட அத்தனை ஜீவராசிகளையும் ஆழ்ந்து நேசிக்கிற மனமும் அனைத்தின் மேலும் இரக்கம் கொள்ளும் உயர்ந்த கண்ணோட்டமும் இருந்தாலன்றி இப்படிப்பட்ட வரியை எழுதத் தோன்றுமா? முல்லைக் கொடி என்ற தாவரத்தின் மேல் இரக்கம் கொண்டு தேரைக் கொடுத்த பாரியின் மரபில் வந்த வள்ளல் தானே வள்ளலார்? அதனால்தான் பாரியை வள்ளல் என்கிறோம். இவரை வள்ளலார் என்கிறோம்!

வள்ளலார் தாவரத்தைப் பார்த்து இரங்கியதைப் போல் பாரசீகக் கவிஞன் உமர்கயாம் களிமண்ணைப் பார்த்து இரங்கினான். களிமண்ணைப் பானை செய்வதற்காகக் குயவன் பிசைந்து வனைகிறபோது களிமண்ணுக்கு வலிக்குமே எனப் பதறுகிறது உமர்கயாம் மனம். அந்தச் சிந்தனையை அப்படியே அழகிய எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை. கவிதை வரிகள் இதோ:
 
மண்ணை எடுத்து ஒரு குயவன்
மயக்கிப்  பிசையும் வேளையிலே
திண்ணை அருகே சென்றிருந்தேன்
செய்யும் செயலும் கண்டிருந்தேன்.
அண்ணா மெல்ல மெல்ல என
அமைந்த அழுகைக் குரல் கேட்டேன்!
கண்ணில் காணாத் தன்நாவால்
களிமண் கரைவது என உணர்ந்தேன்!
 
(உமர்கயாம் பாடல்கள்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.) தாவரத்திற்கு உயிரும் உணர்வும் உண்டு என்று கண்டுபிடித்தார் ஜகதீஷ் சந்திரபோஸ். மண்ணுக்கும் கல்லுக்கும் ஏன் எல்லா ஜடப் பொருளுக்கும் உயிர் உண்டு, அவற்றை ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்!, என்றார் அரவிந்த அன்னை. எனவே இரக்கம் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிடமும் இருக்க வேண்டும் என்றாகிறது.
  
தெய்வத்தின் குணமே கூட இரக்கம்தான். கருணைதான். அதனால்தான் ஒரு கீர்த்தனையில் `நீ இரங்காயெனில் புகல் ஏது? என அம்பிகையை நோக்கிக் கேள்வி எழுப்புகிறார் பாபநாசம் சிவன். தன் அளவற்ற இரக்க குணத்தாலேயே வானில் உறையும் தெய்வம் கலியுகத்தில் கல்லில்
இறங்கியுள்ளது என்கிறார் மூதறிஞர் ராஜாஜி.
 
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா என்கிறது அவர் எழுதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய புகழ்பெற்ற குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகள். தெய்வம் கருணையே வடிவானது. அது தன் இரக்க குணத்தை விட்டுவிட்டால் உலகம் நடைபெறாது. தெய்வம் மனிதர்களுக்குக் கொடுக்கும் சோதனைகள் கூட உடல் நலத்திற்காக மருத்துவர் கொடுக்கும் கசப்பு மருந்தைப் போலத்தான்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே!

என்று இறைவன் தரும் துன்பங்களும் அவனது இரக்கத்தால்தான் என்பதை உணர்ந்து பாடுகிறார் குலசேகர ஆழ்வார். இரக்கமே தெய்வ நிலையின் அடிப்படை. மனிதர்கள் சக மனிதர்கள்மேல் இரக்க குணத்தோடு செயல்படும்போது தெய்வநிலை நோக்கி உயர்கிறார்கள். மனிதர்கள் தெய்வநிலை அடையவேண்டும் என்ற நோக்கத்திலேயே இரக்கத்தை வலியுறுத்திக் கண்ணோட்டம் என்ற அதிகாரத்தை எழுதுகிறார் திருவள்ளுவர். அண்மைக் காலத்தில் தன் இரக்கத்தால் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கித் திருப்பியவர் அன்னை தெரசா.

சாலையோரத்தில் கைவிடப்பட்ட தொழுநோயாளிகளைக் கூடத் தன் கரத்தால் அள்ளியெடுத்துத் தன் இருப்பிடம் கொண்டுவந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தவர். இரக்க மனத்தோடு இருந்தாலும் பிறருக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லையே, பின் என் இரக்கத்தால் என்ன லாபம் என வருந்துவோருக்கு வழிகாட்டுகிறது திருமூலரின் திருமந்திரம். பிறரிடம் இனிய உரை பேசுவது கூடச் சிறப்பானதுதான் என்கிறது அது.

`யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!

நாம் கண்ணோட்டம் உடையவர்களாய் இருந்தால், அடுத்தவர்களிடம் நமக்கு இரக்கம் இருந்தால், அவர்களைக் கட்டாயம் நம் பேச்சால் துன்புறுத்த மாட்டோம். இன்சொல் என்பதும் இரக்கவுணர்வின் வெளிப்பாடே என்பதை உணர்ந்துகொண்டால் வன்சொல் பேசித் துன்புறுத்த வாய் வராது.  ஆனால் அப்படி நாம் நடந்து கொள்கிறோமா? சொந்தச் சகோதரர்களிடம் கூட நமக்கு இரக்கம் வருவதில்லையே? உடன்பிறந்த ரத்த உறவுகள்மேல் ஒருதுளியேனும் பாசம் இருந்தால், உலகில் இத்தனை சொத்துச் சண்டைகள் வருமா? அதனால்தான்
 
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ - கிளியே
செய்கை மறந்தாரடீ!

என்று பாடுகிறார் மகாகவி பாரதி. வள்ளுவரின் கண்ணோட்டம் என்ற அதிகாரத்தைப் பயின்று அதன்வழி நடப்போம். முகத்தில் புண்ணுடையவர்களாய் நடந்து கொள்ளாமல் கண்ணுடையவர்களாய் நடந்துகொள்வோம்.

திருப்பூர் கிருஷ்ணன்