பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி



அபூர்வ ஸ்லோகம்

ஆருத்ரா தரிசனம்
2-1-2018

உமாபதி சிவாச்சாரியர் என்பார் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், பதினான்காம்  நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு சைவ நூல்களைப் பயின்றவர். சிதம்பரம் கோயிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார்.

இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கினர். தில்லை கோயிலில் பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். ஒருமுறை கோயில் கொடியேற்றத்தின்போது இவரின் முறையை வேறொரு அந்தணருக்கு வழங்கியிருந்தனர். ஆனால், அவர் கொடியேற்றும்போது கொடி ஏறவில்லை. அச்சமயத்தில் ஈசனின் அருளால் உண்மையை உணர்ந்தவர்கள் உமாபதி சிவத்தை அழைத்தனர்.

தாங்களே வந்து கொடியேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர். அப்போது உமாபதி சிவம் ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்ததோடு கொடியேறுவதற்காக நான்கு பாடல்களை கொடிக்கவி எனும் பெயரில் பாடினார். இந்த பாடல்கள் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக திகழ்கின்றது. கீழேயுள்ள கொடிக்கவியை நெஞ்சில் பக்தியோடு பாடி தில்லைக் கூத்தனின் திருவடி படர்வோம்.

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள்ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந்
திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி
கட்டினனே.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே  தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங்  கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.