உருமாறிய உத்தமர்கள்!



மகாபாரதம் - 77

அந்தணர் வேடம் தரித்து அரசவையில் உட்கார்ந்த யுதிஷ்டிரரை விராட மன்னன் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கண்கள் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. வேறு பக்கம் திரும்பினாலும் மறுபடியும் அவர் முகத்தையே பார்த்தார். இத்தனை தெளிவான முகமா, இத்தனை சீரான அமைப்பா, ஒரு அந்தணருக்கு இத்தனை கம்பீரம் உண்டா. இது க்ஷத்திரிய குணம் அல்லவோ. உட்காருவதும், நடப்பதும், நிற்பதும், உடல் அசைவுகளெல்லாம் சாதாரண ஆசனத்தில் உட்கார்ந்தாலும், சிங்காசனத்தில் உட்காருவதுபோல் இருக்கிறதே, இவர் பார்ப்பதும், மற்றவர் பார்க்கும்போது தலையசைப்பதும் மன்னர்கள் செய்யக் கூடியதல்லவா.

அந்தணருக்குண்டான பயம் இவர் உடம்பில் இல்லையே. இவர் கண்களில் வெளிப்படவில்லையே. விசாரிக்க வேண்டுமா. என்ன வேண்டுமானாலும் விசாரித்துக்கொள் மன்னா என்ற துடிப்புடன் அல்லவா இருக்கிறார். விராட மன்னனாகிய நான் மட்டும் அல்ல, வேறு எந்த மன்னனும் எனக்கு ஒப்புமையானவன் அல்ல. நான் எல்லோருக்கும் மேல் என்பது போல் அல்லவா அவர் பார்வையும், சிரிப்பும் உள்ளது. அந்தணர்கள், நல்ல வேதம் படித்தவர்களும், நல்ல தபஸ் உள்ளவர்களும், ரிஷி என்ற இடத்திற்கு நகர்வதற்கு தயாரானவர்களும் இப்படி இருப்பார்கள்.‘‘அந்தணரே எங்கிருந்து வருகிறீர்கள். உங்கள் பெயர் என்ன? எந்தக் கலையில் நீங்கள் வல்லவர்கள், எனக்குச் சொல்லுங்கள்.

உங்களைப் பார்த்த மாத்திரத்தில் உங்களோடு நட்பாக இருக்க வேண்டும் என்கிற விழைவு என் மனதில் ஏற்படுகிறது. நட்பாக இருப்பதற்கு தகுதியான யோக்கியதை என்று ஒரு எண்ணம் வருகிறது. எது குறித்தும் உங்களுடன் ஆலோசனை செய்து தெளிவு பெறலாம் என்ற நினைப்பு ஓடுகிறது. என்னுடைய எண்ணங்கள் சரியாகத்தான் இருக்கும். அந்தணரே சொல்லுங்கள்’’ என்று விராட மன்னன் கை கூப்பினான்.

‘‘நான் அஸ்தினாபுரத்திலிருந்து வருகிறேன். அங்கே யுதிஷ்டிரரிடம் நான் நட்பாக இருந்தேன். அவருக்கு பேச்சுத் துணையாக, ஆலோசகனாக, விவாதம் செய்பவனாக, கலைகள் பற்றி விவாதிப்பவனாக, அனுபவம் பகிர்பவனாக இருந்தேன். அவர் எனக்கு எந்தக் குறைவும் வைக்கவில்லை. ஒரு அரசனைப் போல எல்லாவித சௌகரியங்களும் எனக்கு செய்து கொடுத்தார். என் பெயர் கங்கன். யுதிஷ்டிரர் என்னை கங்கன் என்றுதான் அழைப்பார். நான் சூதாடுவதில் வல்லவன்.

பாய்ச்சுகளை உருட்டிப் போட்டு காய்களை நகர்த்தி விளையாடுவதில் கெட்டிக்காரன். இதனாலேயே யுதிஷ்டிரருக்கு என் மீது பிரியம். நானும் அவரும் மணிக்கணக்கில் கட்டங்களில் காய்கள் நகர்த்தி விளையாடுவோம். என்னிடமிருந்து பல சூட்சுமங்களை அவர் கற்றுக் கொண்டார். நீங்கள் விருப்பப்பட்டால் உங்களோடு பேசவும், விவாதிக்கவும், ஆலோசனை சொல்லவும், ஏன் அவ்வப்போது சூதாடவும் நான் துணையாக இருப்பேன்.’’
விராட மன்னன் எகிறி கை கொட்டினான்.

‘‘இப்படிப்பட்ட ஆளை அல்லவா தேடிக் கொண்டிருந்தேன். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆளை தேட வேண்டியிருக்கும். ஆலோசனை சொல்பவருக்கு விவாதிக்கின்ற திறமை இருக்காது. விவாதிப்பவர் சூதாட மாட்டார். இவையெல்லாம் கலந்து என் விருப்பத்திற்கேற்ப நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இந்தக் கணமே என் அரசவையில் ஒரு முக்கியமான மனிதராக சேர்ந்து விடுங்கள். கங்கரே, உங்களுக்கு என்ன விதமான சௌகரியங்கள் வேண்டும்?’’ ‘‘என் தகுதிக்கு கீழான மனிதர்களோடு நான் விவாதிக்கக் கூடாது. தோல்வி அடைந்த யாரும் தோற்ற செல்வத்தை திருப்பி கொடுக்க கேட்கலாகாது. இதில் என்னை ஏமாற்றுபவரை நீங்கள்தான் தண்டிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் தோற்றால் அவ்விதமே நடந்து கொள்ள வேண்டும்.’’

‘‘இது நிச்சயம். இது அடிப்படையான விஷயம். உம்மோடு அல்ல யாரோடு சூதாடினாலும் இது தானே விதி. இதை நான் எப்படி மீறுவேன். உமக்கு கீழான மனிதரோடு நீர் பேச வேண்டிய அவசியமே இல்லை. நீர் தாராளமாக என்னுடைய அரசவையில் இருக்கலாம்’’ என்று சொல்ல, அவருக்கு தனக்கு அருகிலேயே புதியதாய் ஒரு ஆசனம் அமைக்கச் சொல்லி, அந்த அரசவையில் அவர் ஒரு முக்கியமான மனிதர் என்பதை உரக்க அறிவித்தான். மற்ற மந்திரிகளும், சேனாதிபதிகளும், நிர்வாகஸ்தர்களும் எழுந்து நின்று கங்கன் என்ற தருமருக்கு கை கூப்பினார்கள். அவரை யார் என்று அந்த அரசவையோ, அந்த அரசனோ, மற்ற மந்திரிகளோ புரிந்து கொள்ளவில்லை.

தசைகளோடு தம் தம் என்ற கனமான நடையோடு உயரமும் அகலுமுமாய் பீமன் அரசவைக்குள் நுழைந்து தொலைவிலிருந்து அரசனைப் பார்த்தான். குனிந்து கும்பிட்டான். மற்ற அத்தனைப் பேரை விட உயரமாய் இருந்த பீமனைப் பார்த்ததில் விராட மன்னனுக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. அட, இவ்வளவு பயங்கரமான உருவத்தோடு ஒருவன் இருக்கிறான். ஆனால் குனிந்து வணங்கியது வேறுவிதமாய் இருக்கிறது. இது நிஜமான பணிவா, பொய்யா. இத்தனை பலம் உள்ளவன் எப்படி இவ்வளவு பணிவாக இருக்கிறான்.

முதுகில் பாதியல்லவா குனிந்தது. ‘‘யாரப்பா அங்கே? அந்த உயரமான மனிதனை அழைத்து வா. நான் இன்னும் நெருக்கத்தில் அவனை பார்க்க விரும்புகின்றேன்.’’ பீமசேனன் கையில் மத்தும், கரண்டியும், கருப்பு நிற கத்தியும் இருந்தன. அவன் இடுப்பில் கருப்பு ஆடையும், தோளில் கருப்புத் துண்டும் போட்டுக் கொண்டிருந்தான்.
 
பீமன் மறுபடியும் பணிவாக வணக்கம் செய்தான். அது விராட மன்னனுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஒரு கந்தர்வனைப்போல, அரசிளம்குமரனைப் போல, இளவரசு பட்டம் கட்டி மன்னனாவதற்கு தயாராக இருப்பவன் போல இருக்கின்ற இந்த வாலிபன் ஏன் இப்படி வணக்கம் செய்கிறான் என்று சிரிப்பைக் கொடுத்தது. ‘‘யாரப்பா நீ? என்ன வேண்டும்?’’‘‘உங்களிடம் வேலை வேண்டும்.’’ ‘‘என்னிடம் வேலையா? என்ன வேலை?’’ ‘‘நான் ஒரு சமையற்காரன். மகாராஜா யுதிஷ்டிரரிடம் நான் சமையல் வேலை செய்தேன்.

அவர் வனவாசம் போனபிறகு வேறு எங்கும் எவரோடும் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு இங்கு வேலை கொடுங்கள். நான் அற்புதமாக சமைப்பேன். புதிய புதிய பதார்த்தங்களை செய்வதில் நான் வல்லவன். அப்படிப்பட்ட விஷயத்தை நீங்கள் ருசித்திருக்க மாட்டீர்கள். இந்தத் தேசத்தின் பல்வேறு மக்கள், பல்வேறு விதமான தானியங்களை, பல்வேறு விதமான பக்குவத்தில் சமைக்கிறார்கள். இவை அனைத்தும் எனக்கு கலதரப்பாடம். ஒருமுறை என் உணவை ருசித்தவர்கள் என்னை விட மாட்டார்கள்.’’

‘‘அப்படியா, எனக்கு உண்பதில் விருப்பம் உண்டு. என் குடும்பத்திற்கே அதில் ஆசை உண்டு. நல்லது. இவ்வளவு தேஜஸூம், கட்டுக்கோப்பான உடலும் உள்ள உன்னை வேலைக்காரனாக வைத்துக் கொள்வதில் எனக்கு சந்தோஷம்.’’ ‘‘சமையல் மட்டுமல்ல, அவ்வப்போது நான் மல்யுத்தமும் செய்வேன். உங்கள் மல்யுத்த வீரர்களை என்னால் அடக்கி உட்கார வைக்க முடியும். விலங்குகளோடும் நான் சண்டை புரிவது வழக்கம். என்னையும் ஒரு விலங்கையும் ஒரு கூண்டில் அடைத்து விட்டால் அதை கொன்று தூக்கிப் போட்டு விட்டு நிதானமாக வந்து உங்களிடம் பரிசுக்காக கை ஏந்துவேன்.”

விராட மன்னன் வாய் விட்டுச் சிரித்தான். அந்தக் கொலைக் காட்சியை மனதிற்குள் நினைத்து சந்தோஷப்பட்டான். ‘‘நீ வேலைக்கு சேர்ந்தாகி விட்டது. சமையல் அறைக்குப் போ. அங்கு போய் என் கட்டளைகளை நீயே கூறு. அந்த சமையற்காரனுக்கு தலைவன் என்று உன்னை நிர்மாணித்துக் கொள். யாராவது மறுப்பார்கள் என்று நினைக்கிறாயா?’’ அடிக்குரலில் கேட்டார். ‘‘விராட தேசத்து மக்கள் நல்லவர்கள்.

மரியாதை தெரிந்தவர்கள். அவர்கள் என்னை மனமாற ஏற்பார்கள்.’’ ‘‘சாமர்த்தியமான பேச்சு. ஒரு பணியாளனுக்கு இந்தப் பேச்சு வராது. அவன் கர்வம்தான் காட்டுவான். நீ வேலைக்காரன் அல்ல என்பதே இந்த அடக்கத்தைச் சொல்கிறது. போய் சமையல் அறையில் உன் பொறுப்பை எடுத்துக் கொள். இன்றே சமைத்து உணவு வகைகளை அனுப்பு’’ என்று கட்டளையிட்டான்.

பல்லவன் என்ற பெயரில் பலவானான பீமசேனன் அங்கு சமையற்காரனாக வேலைக்கு சேர்ந்தான். பல்லவன் என்றுதான் அவனை புரிந்து கொண்டார்களே தவிர பஞ்சபாண்டவர்களில் ஒருவன் க்ஷத்திரியன், வீரன், பலசாலி, பீமன் என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்தப் பெண்மணி வெகு அழகு. ஆனால் அழுக்கான உடைகளோடு இருந்தாள். கேசங்கள் சரியாக வாரப்படாமல் இருந்தது. பாதணிகள் இல்லாது வெறும் காலோடு கற்கள் உறுத்தாமல் இருக்க விலகி விலகி நடந்தாள். நீண்ட கைகள். சிவந்த சிறுவாய். கூர்ந்த மூக்கு. பெரிய கண்கள்.

கனம் பொருந்திய முலைகள். குவிந்த அடிவயிறு. நீண்ட தொடைகள். அவள் இருபுறமும் பார்ப்பதும், தயங்குவதும், மெல்ல நடப்பதும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தன. கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றுதான் அப்படி நடந்தாளோ என்றுத் தோன்றியது. அந்த ஊரை முதன் முதலில் பார்ப்பது போல, ஏதேனும் உண்ணக் கிடைக்குமா என்று யாசிக்கும் பிச்சைக்காரியைப்போல அவள் ஒவ்வொரு வீடாக ஏறிட்டு பார்த்து வந்தாள். அப்படி அவள் தேடுவதை பார்த்ததுமே அவளை அழைத்துப் பேச வேண்டும் என்று அங்குள்ள மக்களுக்குத் தோன்றியது. அதை திரௌபதியும் விரும்பினாள்.

‘‘யாரம்மா நீ? களைப்பாக காணப்படுகிறாய். வீடு வீடாக நோட்டமிடுகிறாய். பசிக்கு உணவு தேடுகிறாயா அல்லது வேறு ஏதேனுமா? எந்த ஊர் நீ? யார் நீ?’’ ‘‘நான் சைலேந்தரி” ‘‘அட, தாதிப் பெண்ணா? என்ன தேடி வந்திருக்கிறாய்?’’ ‘‘வேலை தேடி வந்திருக்கிறேன். யாரிடமாவது பணிப்பெண்ணாக இருக்க விரும்புகின்றேன்.’’ ‘‘உன்னுடைய அழகு, நீ நிற்பது, நடப்பது, சிரிப்பது எல்லாம் பார்க்கும்போது அரசகுலத்தவளைப் போல தென்படுகிறாய். உன்னை சாதாரண மனிதர்கள் வேலைக்கு வைத்துக் கொள்வார்களா. இல்லை. அரசியிடம் போய் கேள்.’’

ஒரு உயர்ந்த மாடத்திலிருந்து விராட மன்னனின் மனைவி மக்கள் அந்த அழகிய பெண்ணோடு பேசுவதைப் பார்த்தாள். தன் தாதிகளை அழைத்து அவளை அழைத்து வரச் சொன்னாள். சுதேஷணை அழைக்கிறாள் என்றதும் மற்றவர்கள் பணிவாக விலகிக் கொண்டார்கள். ‘‘பெண்ணே கவனமாக இரு. விராட மன்னனின் மனைவியே உன்னை அழைக்கிறாள். நான் சொல்லி வாய் மூடவில்லை. உனக்கு அரசியினுடைய அழைப்பே வந்து விட்டது. போ. போய் நல்லபடியாக இரு.’’ என்று வாழ்த்தினார்கள்.

சைலேந்தரி அவர்களை வணங்கி நகர்ந்தாள். வணக்கம் சொல்வது கூட கம்பீரமாக இருக்கிறது. இவள் வேலைக்காரியா அல்லது நூறு வேலைக்காரியை வைத்துக் கொண்டிருக்கிற எஜமானியா, புரியவில்லை என்று மக்கள் வியப்போடு அவள் போவதைப் பார்த்தார்கள். ‘‘இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?” ‘‘நான் கிருஷ்ண பரமாத்மா மனைவி ருக்மிணியிடம் வேலை செய்திருந்தேன். பூமாலை தொடுப்பதும், நல்ல உடைகளை சரியானபடி மடித்து வைப்பதும் எனக்குத் தெரியும்.

மற்றபடிக்கு படுக்கை விரித்துப் போடுதலும், உடைகளை தோய்த்து உலர்த்துவதும், சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வைத்து அலம்புவதும் செய்ய முடியும்.” ‘‘போதும் போதும். அவையெல்லாம் செய்ய வேண்டாம். என்னைப் போன்ற அரசிக்கு தோழியாக இருப்பவள், பாத்திரம் தேய்த்துப் போடுவதும், படுக்கை தட்டிப் போடுவதும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு வேறு பெண்கள் இருக்கிறார்கள். வேறு என்ன தெரியும்?” ‘‘நல்ல மூலிகைகளை தேர்ந்தெடுத்து அரைத்து முகத்திற்கு பற்று போட்டு சரியான நேரத்தில் எடுத்து விடுவேன். முகம் கூடுதல் பொலிவு பெறும். கண்ணுக்கு மை தயாரிப்பேன். உதடு பூச்சு, நெற்றித் திலகம் போன்றவைகளை என்னால் தயார் செய்ய முடியும். சுமாரான அழகுடைய பெண்கள் என் கை பட்டதும் பேரழகியாக மாறுவார்கள்.”

‘‘அது புரிகிறது. இவ்வளவு அழகான நீ ஒரு இடத்தில் வேலை செய்கிறாய் என்பது நம்பவே முடியவில்லை. அரசியினுடைய முக லட்சணங்களும், தேவஜாதி பெண்களுடைய உடல் வாசனையும் உன்னிடம் இருக்கின்றன. உன்னை எப்படி வேலைக்கு வைத்துக் கொள்வது என்று பயமாகவும் இருக்கிறது. என் அந்தப்புரத்துக்கு வரும் அரசன் உன்னைப் பார்த்தால் உடனடியாக என்னை ஒதுக்கி விட்டு உன்னை அடைய முயற்சிப்பான். உன்னிடம் பேரம் பேசுவான்.

மனிதர்களை காமமுறும்படி செய்யும் வனப்பு உன்னிடம் இருக்கிறது. விலகி நிற்கின்ற உன்னை எனக்கே அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்போது ஆண்களுக்கு இருக்காதா, உன்னை முகர வேண்டும், முத்தமிட வேண்டும், இறுக்கிக் கட்டிக் கொண்டு இன்பமுற வேண்டும் என்று எவனுக்கும் தோன்றும். எனவே, உன்னை வேலைக்காரியாக வைத்துக் கொள்ளலாம் என்றாலும் வேண்டாம் விஷப்பரிட்சை என்று எண்ணம் வருகிறது. என் புருஷன் மோகத்தை ஜெயித்தவன் அல்ல.’’

‘‘அப்படி அல்ல தாயே. நான் திருமணமானவள். ஐந்து கந்தர்வர்கள் எனக்கு புருஷர்களாக இருக்கிறார்கள். அந்த கந்தர்வர்கள் யாரும் அறியாது ரகசியமான இடத்தில், ரகசியமான நேரத்தில் என்னை சந்திப்பார்கள். நான் அவர்கள் பாதுகாப்பில்தான் இருக்கிறேன். யாரையும் மயக்குகின்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னிடம் மயங்கி நெருங்கினால் என் புருஷர்கள் கடுமையாக தண்டிப்பார்கள். எனவே, உங்கள் புருஷனைப்பற்றி கவலைப்படாது அவரிடம் இந்த எச்சரிக்கையை மட்டும் சொல்லி விடுங்கள். உங்களிடம் பணி புரிய நான் விரும்புகின்றேன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று கைகூப்ப, சுதேஷணா எழுந்து சென்று அவளை அணைத்துக் கொண்டாள். நீ வேலையில் சேர்ந்து விட்டாய் என்றாள்.

குளித்து வேறு உடை உடுத்தி, மெல்லிய முகப் பூச்சும், உதட்டு சாயமும், கரும் மையும் தீட்டி, நீண்ட பின்னலில் பூ சொறுகி வந்து விழுந்து வணங்கிய திரௌபதியைப் பார்த்து சுதேஷணை மயங்கினாள். இவளை வேண்டுமென்று எடுத்துக் கொள்வதா, வேண்டாம் என்று விலக்குவதா, ஏதோ கந்தர்வர்கள் கணவர்கள், இவளைத் தொட்டால் அவர்கள் சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று சொல்கிறாள். ஆனால், இவளாக நினைத்து என் புருஷனை மயக்கினால் என்ன செய்ய. ஆனால், இவள் முகத்தைப் பார்த்தால் அப்படிப்பட்டவள் அல்ல என்று தோன்றுகிறது.
 
‘‘சைலேந்தரி, என்னிடம் பணிப்பெண்ணாக இரு. நான் உனக்கு வேண்டியதை செய்வேன். நீ என்ன விரும்புகின்றாயோ அதை உனக்கு அளிப்பேன்.’’ ‘‘எனக்கு வேறு எதுவும் வேண்டாம் தாயே. பிறர் உண்ட எச்சிலை என்னை உண்ணச் சொல்லக் கூடாது. எவர் காலையும் கழுவச் சொல்லக் கூடாது. உங்களுக்கு அலங்காரம் செய்வதில் உங்களை நான் மகிழ்ச்சியுறச் செய்வேன். நெருக்கமாவேன்” என்று சொன்னாள்.

மாலினி என்கிற திரௌபதி, விராட ராஜன் அரண்மனையில் அவன் மனைவி சுதேஷணை அந்தப்புரத்தில் சைலேந்தரி எனச் சொல்லப்படுகின்ற அலங்காரம் செய்யும் தாதியாக வேலைக்குச் சென்றாள். அவள் திரௌபதியாக இருப்பாள், அவள் சொல்லும் கந்தர்வர்கள் பஞ்சபாண்டவர்கள் என்கிற சந்தேகம் எதனாலோ எவருக்கும் எழவே இல்லை.

அடேயப்பா, இந்த வாலிபன் என்ன உயரம். ஆனால் உதட்டில் சாயம் எழுதியிருக்கிறான். புருவங்களுக்கு மேல் அலங்காரம் செய்திருக்கிறான். நெற்றிக்கு திலகம் இட்டிருக்கிறான். காதில் பெண்கள் அணியும் தோடும், ஜிமிக்கியும் அணிந்திருக்கிறான். பெண்கள் அணியும் நகைகளும், வங்கியும், கங்கணமும் வைத்திருக்கிறான். வளையல் அணிந்திருக்கிறான். கெட்ட கேட்டுக்கு இடுப்பில் ஒட்டியாணம் வேறு. இவன் ஆணா பெண்ணா. இரண்டும் இல்லை. கடவுள் செய்த பிழை. அலி.

ஆனால், என்ன கோரமப்பா. இத்தகைய வாலிபன் பெண் வேடம் தரித்தவன் போல் காணப்படுகிறானே தவிர, இவன் அடித்தால் செத்துப் போவோம். கைகளில் உறுதி தெரிகிறது. இவ்வளவு அகலமான தோள் போர் செய்யத்தான் உதவும். ஆனால், அலிகளிலும் வீரன் உண்டே. இது கடவுள் பிழை என்று சொல்வதுகூட தவறு. போன ஜென்மத்து சாபம். ‘‘வாலிபனே, நீ பெண் போல எதற்காகவோ வேடம் தரித்திருக்கிறாயே தவிர, நீ உண்மையில் அலி அல்ல.’’ ‘‘என் பெயர் பிருகன்நளை. நான் பூ வேலை செய்வேன். குண்டலங்கள் அமைப்பேன். நான் நாட்டியத்தில் வல்லவன்.

பெண்களுக்கு நாட்டியம் சொல்லித் தரவும், பாட்டுப் பாடவும், வாத்தியக் கருவிகள் வாசிக்கவும் என்னால் சொல்லித் தர முடியும். ஏன் இந்த அலி உருவம் என்று கேட்டீர்களானால் அது ஒரு துக்ககரமான விஷயம். அதை உங்களுக்குச் சொல்வதில் எந்தப் பலனும் இல்லை. மாறாக எனக்கு வேதனைதான் அதிகரிக்கும். தயவு செய்து அந்தக் கேள்வியை தவிர்த்து விடுங்கள். என்னை என் உருவத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அந்தப்புரத்து உள்ள பெண்கள் அனைவருக்கும் நான் அமைதியையும், சந்தோஷத்தையும் தருவேன். எந்த நேரமும் சிரிப்பும், பாட்டுமுமாக இருக்க வைப்பேன்.’’

‘‘நம் அந்தப்புரத்து பெண்களை அழைத்து வா. இவன் அலிதானா என்று சோதனை செய்.’’ நாலைந்து முதிர் பெண்கள் வந்தார்கள். அர்ஜுனனை தனியே கூட்டிக் கொண்டு போனார்கள். அலி என்று உறுதி செய்தார்கள். வெட்கத்தோடு அர்ஜுனன் வந்து நின்றான். ‘‘சரி நீ என்ன சொல்லித் தரப் போகிறாய் என்பது முக்கியமல்ல. உன்னைத் தாண்டி வேறு எந்த ஆடவரும் என் அந்தப்புரத்திற்குள் நுழைந்து விடமுடியாது. உன் அனுமதி இன்றி வேறு எவரும் நடமாட முடியாது.

அப்படி மீறி எவரேனும் பகைவர் வந்தால் என் பெண்டிரை காப்பாற்றி வந்தவரை விரட்டி அடிக்கின்ற பாதுகாப்பாக நீ இருப்பாய். எனவே அதுவே முக்கியப் பணி. மற்றபடி ஆட்டமோ, பாட்டமோ நீ செய்து கொள். அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று சொன்னாயே, அது முக்கியம்’’ என்று மன்னர் சொல்ல, பிருகன்நளை என்ற பெயரில் அர்ஜுனன் சிவந்த உடைகளோடும், பெண்களுக்கான பூச்சுகளோடும் அலங்காரத்தோடு அந்தப்புரத்திற்கு ஆடிப் பாடி குதித்துப் போனான். அவனைப் பார்க்கும் போது வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.

உலகமே வியக்கின்ற பேராண்மை மிக்க அந்த வீரன் காலத்தின் கோலமாக ஆண்மைக்கு நேர் எதிர்பதமாக இருக்கின்ற அலி உருவம் தரித்து இன்னும் ஒரு வருடம் கழிக்க வேண்டும் கவலையோடு அந்த அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். ‘‘யாரப்பா நீ? தேரைச் சுற்றி வருகிறாய். குதிரைகளை தடவுகிறாய். உன்னைக் கண்டதும் குதிரைகள் கால் மாற்றி கனைக்கின்றனவே. புதியவர்கள் வந்தால் குதிரைகள் பின்னடையும். எகிறும். முகம் திருப்பிக் கொள்ளும். கிட்டே வராதே என்று கனைக்கும். ஆனால், பல் தெரிய சிரித்து, உன்னோடு முகம் வைத்து உன்னை முகர்ந்து பார்த்து குதிரைகள் கொஞ்சுகிறது என்றால் நீ வேலை தெரிந்தவன். நீ யார்?”

‘‘நான் யுதிஷ்டிரரிடம் குதிரைச் சேவகனாக இருந்தேன். குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பதில் நான் நிபுணன். பல மன்னர்களால் நான் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன். குதிரைகளை வளர்ப்பது மட்டுமல்ல, அவைகளை தேரில் பூட்டி ஓட்டுவதிலும் நான் வல்லவன். பல்வேறு குதிரைகளின் ஜாதி அறிவேன். பொல்லாத குதிரைகளை துஷ்டத்தனம் நீக்கி சாதுவாக்குவேன். அவைகளுக்கு நல்ல சிகிச்சை செய்யவும் எனக்குத் தெரியும். என்னை க்ரந்திக் என்று அழைப்பார்கள். குறிப்பாய் யுதிஷ்டிரர் என்னை மிகவும் நேசித்தார். இந்திரனுடைய தேரோட்டி மாதலியைப் போலவும், தசரத மன்னரின் தேரோட்டி சுமந்திரர் போலவும், ஜமதக்னி புதல்வர் பரசுராமன் தேரோட்டி சுமகன் போலவும் நான் உங்களுக்கு சாரதியாக இருப்பேன்.’’

‘‘க்ரந்திகா, எனக்கு குதிரைகள் என்றால் விருப்பம். என் குதிரைகளை பாதுகாக்கும் வேலையை உடனே செய். பொறுப்பு ஏற்றுக் கொள். நல்ல குதிரைகள் கிடைத்து விடும். நல்ல பயிற்சியாளர் கிடைப்பது கடினம். உன் வரவு நல்வரவாகட்டும். இன்றே இப்பொழுதே வேலையில் சேர்ந்து கொள்’’ என்று விராட மன்னன் உத்தரவிட, அவன் வணங்கி குதிரை கொட்டகைக்குப் போனான். சகாதேவன் மகா கெட்டிக்காரன். மனித மனங்களை படிப்பவன். அடுத்தது என்ன நடக்கும் என்பதை சூட்சுமமாக அறிபவன். அவன் அரசனைப் பார்க்கவில்லை. மாறாக பசுக்களின் கொட்டகைக்குப் போனான்.

விதம்விதமான சப்தம் எழுப்பி பசுக்களின் கவனத்தை திருப்பி, தொடுதலின் மூலம் அவைகளோடு பேசி, கழுத்தை வருடிக் கொடுத்து, நெற்றியைத் தடவி முதுகில் அடித்து லேசாக அணைத்துக் கொண்டு முழங்காலால் வயிற்றில் அடித்து பல்வேறு விதமான தடவல்கள் மூலம் அவைகளை குதூகலிக்கச் செய்தான். பசுக்கள் ஆனந்த கிளர்ச்சியோடு மா... மா... என்று பல்வேறு விதமாக குரலை எழுப்பின.

பசுக்களின் சத்தம் அரசனை திசை திருப்பியது. மேல் மாடியிலிருந்து பசுக் கொட்டிலை நோக்க, அங்கே ஒருவன் தலையில் துண்டு கட்டி, கழுத்தில் கயிறு போட்டு பசுக்களோடு பேசுவதும், விதம் விதமாக சப்தம் எழுப்புவதும், அவைகளை தடவுவதும், அடிப்பதுவுமாக இருந்தான். அந்த பளீர் என்ற சப்தம் எழுப்பும்படி பசுக்களுக்கு உற்சாகமூட்டியது. கன்று குட்டிகள் ஓடிவந்து அவனை முட்டின. அவன் மிக கவனமாக நகர்ந்து கொண்டான் அல்லது கைகளால் தடுத்து நிறுத்தி விலக்கினான்.

இல்லையெனில் அந்த முட்டலுக்கு தரையில் விழுந்திருக்க வேண்டும். கொஞ்சம் எகிறிய கன்றை சட்டென்னு கழுத்து கயிறை எடுத்து அதன் மீது வீசி இறுக்கிக் கொண்டு போய் வேறு கொட்டிலில் வைத்தான். கன்றுக்குட்டி கொட்டிலில் அடைபட்டு எகிறிக் கொண்டிருந்தது. ‘சும்மா கிட’ என்பது போல மொழியற்ற மொழியில் அவன் பசுக்களோடு பேசினான்.

(தொடரும்)

பாலகுமாரன்