சுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு!



ஆதித்யேஸ்வரர்
இந்திய புராணங்களின்படி ‘ஆதித்தியன்’ எனப்படும் சூரியர்கள் பன்னிரண்டு பேர்கள் ஆவர். சூரியனைச் சிவபெருமானின் வடிவமாகவே கூறுவது சைவநன்மரபாகும். சிவபெருமானின் ‘எட்டு வடிவங்களில்’ ஒன்றாகச் சூரியன் விளங்குகிறான். சைவர்கள் சூரிய வழிபாட்டைச் சிறப்புடன் போற்றுகின்றனர். சிவபூஜையின் ஒரு அங்கமாகச் சூரிய வழிபாடு விரிவுடன் செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அமைந்துள்ள அஷ்ட பரிவாரங்களில் ஒருவனாகச் சூரியன் திகழ்கின்றான். சிவபெருமானின் வடிவமான உருத்திரர் சூரிய மண்டலத்தில் இருந்தவாறு உலக உயிர்களுக்கு ஒளியையும் உயிர்ச்சத்தையும் அளிக்கின்றார் என்பர்.

ஆதலால் சூரியனைச் சிவசூரியனாகக் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர். இந்த கட்டுரையில் சூரியனைச் சிவபெருமானாகக் கூறும் வேத, ஆகம புராணப் பகுதிகளையும் காணலாம். மேலும், சிவனருளால் அவருடைய அம்சமாகவே தோன்றிய சூரியர்கள், அவர்கள் சிவவழிபாடு செய்து பேறுபெற்றத்  திருத்தலங்கள், சூரியனின் ஒளிக் கதிர்கள் படர்ந்து சிவவழிபாடு செய்யும் திருத்தலங்கள் ஆகியவற்றை விரிவாகக் காணலாம். சூரியனைப் பற்றிய பல்வேறு செய்திகள் புராணங்களில் பரவலாகக் கிடைக்கின்றன.

சிவாலயங்களில் சூரியன் சந்நதி
சிவாலயங்களில் சிவசூரியனுக்குத் தனியே சந்நதி அமைக்க வேண்டுமென்பதைச் சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன. ஆலயத்தின் தென்கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவசூரியன் எழுந்தருள்கின்றார். பாண்டிய, சோழ நாட்டுப் பெருங்கோயில்களில் சூரியனுடன், அவனுடைய மனைவியரான உஷா, பிரத்யுஷா ஆகிய இரு தேவியரும் எழுந்தருளியுள்ளதைக் காண்கிேறாம். இவ்வாறு எழுந்தருளும் சூரியன் இரண்டு கரங்களைக் கொண்டு, அவற்றில் தாமரை மலர்களை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். இருபுறம் அமையும் தேவியர் ஒருகையில் தாமரை மலர் ஏந்தியும் மறுகையைத் ெதாங்கவிட்டவாறும் காட்சியளிக்கின்றார்கள். சில தலங்களில் சூரியனுக்கு நான்கு கரங்களும் அமைகின்றன.

இத்தகைய திருவடிவங்களில் மேற்கரங்கள் இரண்டில் தாமரை மலர்களும் கீழ்க்கரங்களில் அபய, வரத முத்திரைகளும் அமைகின்றன. சிவாலயங்களில் காலைசந்திப் பூஜையை சூரிய பூஜையில் இருந்து தொடங்குவதே வழக்கமாகும். சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசியில் பிரவேசிக்கும் ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியிலும், இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சூரியனுக்கு அமைய வேண்டிய சந்நதியைத் தனிக் கோயிலாக விநாயகர், சண்டீசர் உள்ளிட்ட பரிவார தேவர்கள் புடை சூழ அமைக்கலாம் என்று பூஜாபத்ததி நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால் அத்தகைய சந்நதிகளைத் தமிழகத்தில் பரவலாகக் காணமுடியவில்லை. பெரும்பாலான சிவாலயங்களில் பிராகாரத்தின் தென்கிழக்கில் சிறு மேடையின் மீது சூரியன் தனியாகவோ, தேவியருடனோ எழுந்தருளியிருக்கவே காண்கிறோம். சில தலங்களில் சின்னஞ்சிறு சந்நதிகளும் அமைகின்றன. இந்த சந்நதிகள் சிறு விமானத்துடன் ஒற்றைக் கவசம் கொண்டதாக அமைகின்றன. சிவாலயங்களில் சூரியனுக்கென நாட்பூஜை - மாதப் பிறப்பு பூஜையைத் தவிர தனி விழாக்களே உலாத்திருமேனிகளோ அமைக்கும் வழக்கம் இல்லை.

சிவசூரிய லிங்கம்
ஆகமங்கள் காட்டும் சிவசூரியனைக் காணலாம். சிவசூரியன் நான்கு முகமும், எட்டு தோள் களும் உடையவராய் சிவந்த ஆடைகள் அணிந்து கமலாசனத்தில் வீற்றிருக்கின்றார். இவரைச் சுற்றி கிழக்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர், தெற்கில் அகோரர், மேற்கில் சத்யோஜாதர் ஆகிய மூர்த்திகள் அமர்ந்துள்ளனர். மேலும் இவருடைய முன்புறம் பாஸ்கரனும், வலப்புறம் பானுமூர்த்தியும் பின்புறம் ஆதித்யனும், இடப்புறம் ரவியும் ஆகிய சூரியர்கள் வீற்றிருக்கின்றனர். இந்தச் சூரியர்கள் நால்வரும் நான்கு முகமும் நான்கு கரங்களும் கொண்டவர்கள். இவர்களுடன் இவர்களுடைய தேவியரான வித்தாரை, சுதாரை, போதினி, யாப்யாயனி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

மேலும், சூரியனின் தாமரை மலர்போன்று அமைந்துள்ள பிரபூதம் எனும் ஆசனத்தையும் அதனைத் தாங்கும் விமலம், சாரம், ஆராத்யம் பரமசுகம் எனும் நான்கு சிங்கங்களையும் காண்கிறோம். இந்தப் பீடத்தைச் சுற்றி 1. தீப்தை 2. சூட்சுமை 3. ரூஜா 4. விபூதி 5. விமலை 6. அமோகை 7. நான்கு கரத்துடன் கூடிய வித்துயுதா 8. பத்தரை ஆகிய அஷ்டசக்திகளும் நான்கு முகமுடைய சர்வதோமுகி ஆகிய பீடசக்தியும் எழுந்தருளியிருப்பர். இதனை விளக்கும் வகையில் வடநாட்டில் பல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சூரியலிங்கம் எனப்படும்.

இதன் மையப் பகுதியில் சிவசூரியன் லிங்கமாக விளங்குகின்றார். இதன் நான்குபுறங்களிலும், நான்குமுகங்களும், நான்கு தோள்களும் கொண்டவர்களான ஆதித்யன், பானு, பாஸ்கரன், ரவி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அவர்களுக்கு மேலே உச்சியில் அகோரர், வாமதேவர், சத்யோஜாதர், தத்புருஷர் ஆகியோர் சின்னஞ்சிறு விமானங்களில் எழுந்தருளியுள்ளனர். இவர்களைச் சுற்றி அஷ்டசக்தி, பீடசக்தி, கந்தவர்கள், முனிவர்கள் ஆகியோரைக் காண்கிறோம். இத்தகைய சூரியலிங்கத்தையே அருகில் உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

சூரிய மண்டலத்தில் விளங்கும் சிவசூரியன்
சூரிய மண்டலத்தில் திகழும் உருத்திரன் எனும் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக நான்கு முகங்களும் எட்டு தோள்களும் கொண்டவராகக் காட்சியளிக்கின்றார். சிவமகாபுராணம் இத்திருமேனியைச் சிறப்புடன் குறிக்கின்றது. அதன் விரிவை இனிக் காணலாம். ஒரு சமயம் எந்த பூஜையைச் செய்தால் நற்கதி பெறலாம் என்று தேவர்கள் கேட்க பரமேஸ்வரன் சூரிய மண்டலத்தில் நின்று அவர்களுக்குக் காட்சி தந்தார். அப்போது அவர் கோடி மின்னல்கள் திரண்டது போன்று ஒளி பொருந்தியவராக விளங்கினார்.

எட்டு கரங்கள், நான்கு முகங்கள், பன்னிரண்டு கண்கள், பாதி சிவனும், பாதி சக்தியுமான அர்த்தநாரீஸ்வரவடிவம். தலையில் ஜடாமண்டலம், சிவந்த சந்தனம் பூசி, சிவந்த பூக்களால் ஆன மாலையைச் சூடி, சிவந்த ஆடை தரித்து சிவந்த கற்களிழைத்த ஆபரணங்களைப் பூண்டு நின்றார். அவருடைய கிழக்கு முகம் மஞ்சளாகவும், தெற்கு முகம் சிவப்பாகவும், மேற்கு முகம் வெளுப்பாகவும், வடக்கு முகம் பவழ வண்ணமாகவும் விளங்கியது.

அவரைச் சுற்றி உத்ரா, போதிநீ, அத்யாநீ, ஏகவக்த்ரா முதலிய நான்கு சக்திகள் காணப்பட்டனர். அவர் அருகில் ஒளிப்பிழம்பாக தேவி நின்றாள். அவர்களுக்கு வலப்புறம் பிரம்மனும் இடப்புறம் திருமாலும் நின்றனர். அம்பிகையைச் சுற்றி அவளுடைய சக்தி கணங்கள் நின்றனர். அவர்களுக்கிடையே நவகிரகங்கள் காணப்பட்டனர். சூரியன் சிவன் வடிவாகவும் சந்திரன் அம்பிகை வடிவாகவும் காட்சியளித்தார்கள். இக்காட்சியைக் கண்ட தேவர்கள் அளவில்லா மகிழ்ச்சியுடன் போற்றி வழிபட்டனர்.

அப்போது பெருமான் என்னை சூரிய மண்டலத்தின் மத்தியில் தியானம் செய்து சூரியனை வணங்கினால் எல்லாவித இன்பங்களையும் பெறுவர். சிவலிங்கத்தை அர்ச்சிப்பதே மேலான சிறந்த பூஜை என்று திருவாய் மலர்ந்தார். அன்று முதல் ஆன்றோர்கள் சூரிய மண்டலத்தில் விளங்கும் சிவபெருமானைக் காலையிலும், மாலையிலும் வணங்குகின்றனர். அப்படி வணங்கும்போது கீழ்க்காணும் மந்திரத்தைக் கூறுவது மரபாகும்.

ஸௌர மண்டல மத்யஸ்தம்
ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம்
நீலக்கிரீவம் விரூபாக்ஷம் நமாமி
சிவமவ் யயம்

இதன் பொருள் : சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவரும் சம்சார நோய்க்கு மருந்தானவரும், நீலமான கழுத்துள்ளவரும், நெற்றியில் கண்ணுள்ள வரும் ஒப்பற்றவருமான சிவபெருமானை வணங்குகிறேன் என்பதாகும். சிவபுராணம் கூறும் இத்தகைய சிற்பத் திருமேனியைக் கோயில்களில் வழிபாட்டில் காண முடியவில்லை என்றாலும் அபூர்வமாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள வெளிப்புறக் கோட்டங்களில் தென்கிழக்கில் கிழக்கு நோக்கி அமைந்த கோட்டத்தில் சிவமகாபுராணம் காட்டும் சிவசூரியனைக் காண்கிறோம்.

இவருக்கு முன்புறம் இடம், வலம் ஆகியவற்றில் அமைந்த முகங்கள் அழகுடன் திகழ்கிறது. பின்னால் உள்ள முகம் தெரியவில்லை. தலையைச் சுற்றிலும் சூரிய மண்டலம் திகழ்கிறது. எட்டு கரங்களில் தாமரை, தண்டம், கபாலம், கத்தி, ஜபமாலை, பாசம், அங்குசம், வரதமுத்திரை ஆகிய ஆயுதங்கள் உள்ளன. நின்ற நிலையில் அமைந்துள்ள இத்திருமேனி ஒருபால்பெண்மைக்குரிய ஸ்தனத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

புராண அடிப்படையில் அமைக்கப் பெற்ற இந்த சிவசூரியனை அறிந்து கொள்ளாததால் பல அறிஞர்கள் இத்திருமேனிக்கு மனம் போன போக்கில் தமது விருப்பப்படி பல பெயரிட்டு வழங்கியுள்ளனர். பலர் இத் திருமேனியை மகாமாயை என்று குறிப்பிட்டுக் குழப்பியுள்ளனர். தேவாரமும், உபநிஷதங்களும் கூறும் சிவசூரியன் சிவபெருமான் சூரிய மண்டலத்தில் விளங்குகின்றார் என்பதை சாந்தோக்ய உபநிஷத்தும் தைத்ரீய சங்கிதையும் சிறப்புடன் குறிப்பிடுகின்றன. இனி அப்பகுதிகளையும் அதற்கிணையாக அமைந்த தேவாரப் பாடல்களையும் காணலாம்.

சாந்தோக்ய உபநிஷதம் (1-6-6-7) பொற்றொடியோடும். பொன்வண்ணக் கேசத்தோடும், நகம் உள்ளிட்ட மேனிமுழுவதும் (கபி எனப்படும்) சூரியனால் விகசிதமாகிய இரண்டு தாமரைபோலும் கண்களும் உடையவர். இந்த பொன் போன்ற புருஷர் ஞாயிறு மத்தியில் விளங்குகின்றார் என்று கூறுகிறது. இதில் சிவபெருமானைப் பற்றிய வர்ணனை நேரடியாக இல்லாவிட்டாலும் அடுத்து வரும்  தைத்ரீய சங்கிதை பெருமானின் நீலகண்டத்தையும், செந்நிறத்தையும் சிறப்புடன் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

இது சூரிய மண்டலத்திலிருந்து உதயாஸ் தமனஞ் செய்விக்கும் பொருட்டுச் சிவபெருமான் பிரவிருத்திக்கின்றார். இவர் நீலகண்டமும் செந்நிறமும் கொண்டவர். சூர்ய வடிவாக விளங்கும் இவரைக் கோபாலரும், மாலையில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் உயிரினங்களும் பார்க்கின்றனர். அவ்வியல்பினராகிய அவர் (அகக்கண்ணுக்குப் புலப்படின) எங்களுக்கு ஆனந்தம் விளைப்பாராக’’ என்று கூறுகின்றது. இந்தக் காட்சி மாலைக் காலத்தினை வர்ணிக்கின்றது. மாலைக் காலத்தில் முனிவர்கள் சூரியனையும் அவனுள் பிரகாசிக்கும் சிவபெருமானையும் வணங்குவதைக் குறிப்பிடுகிறது. இதற்கு இணையான தமிழ் மறையான தேவாரப் பாடலை இனிக் காணலாம்.

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரன்வுரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கன்மனமாவரே
(திருநாவுக்கரசர் - ஆதி புராணக்குறுந்தொகை)

இதன் பொருள்: மாலைக் காலத்தில் (அருக்கன் எனப்படும்) சூரியனை அனைவரும் வணங்குகின்றனர். அந்த சூரிய வடிவம் சிவபெருமான் அல்லவோ? இருக்கு முதலான நான்கு மறைகளும் ஈசனைத்தான் தொழுகின்றன என்ற கருத்தை அறியாதவர் கல் மனத்தைக் ெகாண்ட மூடரல்லவோ? என்பதாகும். மேலும் தைத்ரீய ஆரணியகம் எனும் உபநிஷதம் அண்டகடாகத்தைச் சூழ்ந்த இருளுக்கு ேமலே ஆதித்தினின் வண்ணமாகப் பிராகாரத்துடன் விளங்கும் பரமேஸ்வரனாகிய அவரை அறிந்தவன் சிவமாகவே ஆகிறான். இதைத்தவிர மோட்சத்திற்கு வேறு வழியே இல்லை என்று கூறுகிறது. இதற்கு இணையாக அப்பரடிகள் (சித்தத்தொகை திருக்குறுந்தொகையுள்)

அண்டமாரி ருளூடு கடந்தும்ப
ருண்டு போலுமோ ரொண்சுடரச்சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவாரெல்லாம்
வெண்திங்கள் கண்ணி வேதியரென்பரே
என்று அருளிச் செய்துள்ளார்.

இதன் பொருள்: அண்டத்தின் மேல் ஓட்டையும் கடந்து பரவி நிற்கும் இருளில் சிவபெருமான் மிகுந்த கதிர்களையுடைய சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். அவரை அறிந்தவர்கள் தலைசிறந்தவர்களாவர் என்பதாகும். இதனையொத்த எண்ணற்ற வடமொழி மறைகளிலும் அதற்கிணையான தென்மொழி மறையிலும் சூரியனைப் பற்றிய சிவசூரியனைப் பற்றிய சிறப்புச் செய்திகளைப் பரவலாகக் காண்கின்றோம்.

சூரியப்பிரபை வாகனம்
கிரக மண்டலங்களில் மிகவும் பிரகாசமானது சூரிய மண்டலமாகும். சூரியனின் கதிர்களால் உலகம் வெம்மையும், உயிர்ச் சக்தியையும் பெறுகின்றன. சூரியன் சிவபெருமானின் வடிவமாகவே திகழ்பவன். இதனை உணர்த்தும் வகையில் பெருந் திருவிழாவின் இரண்டாம் நாள் காலையில் சூரியப்பிரபை வாகனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளி வைத்து விழாக் காண்கின்றனர். மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜ மூர்த்தியையும் சூரியப் பிரபையில் எழுந்தருளி வைத்து விழாக்காணும் மரபு பரவலாகக் காணப்படுகின்றன.

உலகைப் படைக்க எண்ணிய சிவமூர்த்தி முதலில் ஒளி பொருந்திய சூரியனைப் படைத்தார். பின்னர், அம்மண்டலத்தில் வீற்றிருந்து உலகனைத்தையும் படைத்து ஐந்தொழில் விளங்கச் செய்தார். அந்நாளே திருவாதிரை ஆகும். எனவே, ஐந்தொழிலைத் தனது திருவடிவால் விளக்கி நிற்கும் நடராஜப் பெருமானை திருவாதிரை நாளில் சூரிய மண்டலத்தில் எழுந்தருளி வைத்து விழாக்காணும் நெறி பின்பற்றப்படுகின்றது. விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் உலகம் தோன்றுவதற்கு முன்பு அண்டவெளியில் ஒரு மாபெரும் வெடிப்பு உண்டாயிற்று என்றும், அதிலிருந்து முதலில் தோன்றியது. திருவாதிரை நட்சத்திர மண்டலம் என்றும் அதன் பிறகு படிப் படியாக அண்டவெளியில் பலவும் தோன்றின என்று குறித்துள்ளனர்.

இக்கருத்து புராணக் கருத்துடன் ஒத்துள்ளது அதிசயமானதாகும். சூரியப்பிரபை வாகனத்தில் பெருமானைத் தரிசிப்பவர்கள் ஞானம் புகழ், ஆகியவற்றைபெறுவர் என்பது நம்பிக்கையாகும். கங்கை கொண்ட சோழபுரத்துக் கமலயந்திரம் சில தெய்வங்களுக்கு அவர்களுடைய உருவத்தை அமைக்காமல் அவர்களுக்குரிய யந்திரத்தை அமைத்து வழிபடுவது ஒருவகையான பூஜை முறையாகும். இவ்வகையில் சிலகோடுகளையும், வட்டங்களையும் பீடத்தில் அமைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இவை யந்திர ஸ்தாபனம், ஸ்ரீபீடம் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு சூரியனுக்கு அமைக்கப்பெற்ற யந்திரபீடம் ஒன்று கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் ஆலயத்தில் உள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் பாதையில் அமைந்துள்ள ஊராகும். இதற்குக் கமலயந்திரம் என்பது பெயராகும். இதன் நடுவில் சூரியனை உருவமாக அமைக்காமல் நடுவில் பொகுட்டுடன் கூடிய பெரிய தாமரை மலராக அமைத்துள்ளனர். இம்மலர் இரண்டு அடுக்குகளைக் கொண்ட இதழ் வட்டங்களால் ஆனதாகும். இந்த மலரினைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் சூரியனின் அஷ்டபரிவாரங்கள் உருவமாக அமைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிவாரங்களில் ஒருவரான அருணன் தேரைச் செலுத்தும் பாவனையில் மேற்கில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளார்.

தென் மேற்கு முனையில் தேஜஸ்சண்டி காணப்படுகின்றார். பீடத்தில் பூவேலைகளும் அதன் இடைவெளிகளில் தேவகீதங்களை இசைக்கும் கணங்கள் காட்டப்பட்டுள்ளனர். இது அபூர்வமான கலைப்படைப்பாகும். சோழமன்னர்கள் சிவமூர்த்திகளின் தனிச் சிற்பங்களைச் செய்வதை விடுத்து அம்மூர்த்திகளோடு தொடர்புடைய புராணங்களையும் கருத்தில் கொண்டு புதிய நோக்கில் தெய்வ வடிவங்களை அமைத்தனர். அவ்வகையில் அமைக்கப்பெற்ற சிறப்பான சிற்பங்களே தாராசுரம்.

ஐராவதேஸ்வரர் கோயில் சூர்யமண்டல உருத்திரரும் இந்த சூர்ய மண்டலம் அல்லது சூர்ய சக்கரமுமாகும். இதில் தாமரை மலரே பிரதானமாகக் காட்டப்பட்டிருப்பதால் இதனைக் கமலயந்திரம் என்று கூறுகின்றனர். இதில் எட்டுதிக்கிலும் அஷ்டபரிவாரங்கள் அமைந்திருப்பதை எட்டு கிரகங்கள் என்பதாகக் கொண்டு நடைமுறையில் இதனை நவகிரகம் என்றே எழுதியும் பேசியும் வருகின்றனர். இக்கருத்து ஆய்வுக்குரியதாகும்.

சூரியன் வழிபட்ட திருத்தலங்கள்
சூரியன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற திருத்தலங்கள் அவன் பெயராலும் அவனுடைய பரிபாயப் பல்வகைப் பெயர்களாலும் அழைக்கப் படுகின்றன. இவ்வகையில் ஆதித்திய புரங்கள், பாஸ்கரபுரிகள், பருதிபுரம், சூரிய க்ஷேத்திரம் ஞாயிறு, தலைஞாயிறு என்று பல திருத்தலங்கள் விளங்குகின்றன. இவை இரண்டு வகைப்படும். இவற்றில் முதல் வகையான திருத்தலங்கள் சூரியன் தேவவடிவில் இருந்து ஆகமங்களில் கூறியபடி சிவலிங்கத்தை அமைத்து வழிபட்டு பேறுபெற்றத் திருத்தலங்களாகும்.

இவை மங்கலக்குடி, பருதிநியமம், திருநாகேஸ்வரம் போன்றவைகளாகும். இரண்டாவது வகையில் அமைபவை ஆண்டின் சில நாட்களில் சூரியன் தன் ஒளிக்கதிர் களால் கோபுரவாயில், பலிபீடம், கொடி மரம் ஆகியவற்றைத் தாண்டிச் சென்று மூலவராகிய லிங்கத்தை ஜோதிமயமாக்கும் திருத்தலங்களாகும். இவற்றில் முதல்வகைத் திருத்தலங்களை இப்பொழுது காணலாம்.

கச்சபேசமும் சூரிய வழிபாடும்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பெரிய ஆலயங்களில் ஒன்று கச்சபேஸ்வரர் ஆலயமாகும். இங்கு முருக்க மரத்தின் நிழலில் ஜோதிலிங்கமாக கச்சபேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரைச் சூரியன் வழிபட்டுப் பேறு பெற்றான் என்பர். அவன் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து ஜோதிலிங்கமான கச்சபேசப் பெருமானுடன் இஷ்டசித்தீஸ்வரர், ஞானசித்தீஸ்வரர், யோகசித்தீஸ்வரர், தர்மசித்தீஸ்வரர், வேதசித்தீஸ்வரர் ஆகிய லிங்கங்களையும் எழுந்தருளி வைத்து வழிபட்டு எண்ணியதை எல்லாம் அடைந்தான் என்பர். இங்கு சூரியன் அமைத்த குளத்தின் நான்கு பக்கங்களும் முறையே இஷ்டசித்திதீர்த்தம், ஞானசித்தி தீர்த்தம், வேதசித்தி தீர்த்தம் எனவும் அதன் மையப்பகுதி சூரியதீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இக்குளத்தின் தென்கிழக்குப் பகுதியில் பெரிய விசாலமான முற்றத்தில் பஞ்ச சந்தி விநாயகர், துர்க்கை, பைரவர், சூரியன், ஐயனார் ஆகிய ஐந்து சந்நதிகள் அமைந்துள்ளன. தென்புறம் கச்சபேஸ்வரர் ஆலயமும் தென்மேற்கு முனையில் முருக்க மரமும் அதன்கீழ்  கச்சப வடிவத்தில் திருமால் சிவலிங்கத்தை வழிபடும் ஐதீகச் சிற்பமும், தென்கரையில் இஷ்டசித்தீஸ்சரமும் அமைந்துள்ளன.

கருவறையில் ஜோதிர்லிங்கமாக கச்சபேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அவருக்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் அமைந்துள்ளனர்.இக்கோயிலில் சூரியன் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று விளங்கும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. அன்று ஏராளமான மக்கள் இங்கு மண்டை விளக்கு எடுத்தல் என்னும் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். இந்நாட்களில் கச்சபேஸ்வரர் சோமாஸ்கந்தர் திருவிழாக் காண்கின்றனர்.

கார்த்திகை மாதம் முழுவதும் சூரிய உதயத்தில் இங்கு நீராடி ேஜாதிர்லிங்கத்தை வழிபட்டுச் சூரியனை வழிபடுபவர் பூர்வீக சொத்துக்களை அடைவதுடன் நோய்நொடி இன்றி வாழ்வர். குறிப்பாக கண்ணில் நோயுள்ளவர்கள் இவ்வாறு ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் கண் சம்பந்தமான நோய்கள் இப்பிறவியில் நீங்குவதுடன் இனிவரும் பிறவிகளிலும் வராது என்பது நம்பிக்கையாகும்.

மயூரசர்மன் என்னும் கௌட தேசத்து மன்னன் ஒருவன் வடமொழி இலக்கியங்களில் பெரும்புலமை படைத்தவனாக இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் வினைவசத்தால் இரண்டு கண்களும் பழுதாகிப் பார்வை போய்விட்டது. அவன் பல இடங்களுக்கும் சென்று இறுதியில் காஞ்சிபுரத்தை அடைந்தான். அவன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தின் மகிமையைக் கேள்வியுற்று இதில் முறைப்படி நீராடி சூரியனையும் கச்சபேஸ்வரரையும் வணங்கிப் போற்றி மீண்டும் தமது பார்வையை அடைந்தான் என்று வரலாறு கூறுகின்றது.

அதன் பயனாக அவர் சூரியன் மீது இயற்றியதே ‘சூர்ய சதகம்’ என்ற நூலாகும். இதனை ‘மயூக சதகம்’ எனவும் அழைப்பர். சூர்ய சதகத்தின் சில பாடல்களும் வரலாற்றுக் குறிப்பும் இக் கோயிலில் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளதென்பர். ‘சூரியனுக்கு உரியது அரசமரமாகும். இங்கு அவனருளால் உண்டான பெரிய அரசமரம் உள்ளது. அதன் கீழே குழந்தைப்பேறு இல்லாதவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பூர்வஜென்ம வினைகள் தீர்ந்து குழந்தைப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

பரிதி நியமம்
பரிதி என்றால் சூரியன் - நியமம் என்றால் கோயில். சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற கோயில் பரிதி நியமம் என்று அழைக்கப்படுகின்றது என்பர். இந் நாளில் இக் கோயில் பருத்தியப்பர் கோயில் என வழங்குகிறது. சுவாமிக்கு பாஸ்கரேஸ்வரர் பருதியப்பர் எற் பெயர்கள் வழங்குகின்றன. இது தாங்க முடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன் குளிர்ச்சியுடன் திகழச் சித்திரைமாதப் பெளர்ணமி நாளில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் என்பர். சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் முன்னேயுள்ளது. சூரியன் பூஜித்ததை நினைவுகூறும் வகையில் பங்குனிமாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது படர்கின்றன. அம்பிகையின் பெயர் மங்கலநாயகி என்பதாகும்.

இக் கோயிலைத் திருநாவுக்கரசர் ‘பருதி நியமத்தார் பன்னிருநாள்’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதனை பன்னிருநாள் பருதிநியமம் என்று குறித்து பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன் வழிபட்டான் என்பர். இது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இது சூரியனின் கோயிலாக இருந்து பின்னாளில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு கருவறைக்கு முன்பு அமைந்துள்ள நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் சூரியன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்கழுக்குன்றமான பாஸ்கரபுரி
சிவபெருமான் அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1. வைகருத்தன், 2. விலசுவான், 3. மார்த்தாண்டன், 4. பாஸ்கரன், 5. இரவி, 6. லோகப்பிரகாசன், 7. சாக்கி, 8. கவிக்கிரமன், 9. ஆதித்தன், 10. சூரன், 11. அஞ்சுமாலி, 12. திவாகரன் என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர். ஒரு சமயம் இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர். பிரம்மன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி ஆணையிட்டார்.

அவர்கள் அப்படிப் பணி செய்யும் காலத்தில் உதய வேளையில் மந்தேகர் முதலிய அசுரர்கள் தடைகளை உண்டாக்கினர். அவர்கள் மீண்டும் பிரம்மனை அடைந்து தமது குறையை முறையிட்டனர். அவர் அவர்களைத் திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று வழிபடும்படி கூறினார். அதன்படியே அவர்கள் உருத்திரகோடியாகிய திருக்கழுக்குன்றத்தை அடைந்து சிவபெருமானை வழிபட்டனர். அங்கு அவர்களுடைய பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி காட்சியளித்து தடைகள் நீங்கி உதிக்க அருள்பாலித்தார்.

எனவே திருக்கழுக்குன்றத்திற்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்தியபுரி என்பன பெயராயிற்று. இதனைத் திருக்கழுக்குன்றத்து உலா. திருக்கழுக்குன்ற புராணம் முதலியவற்றால் அறியலாம். சூரியன் வழிபட்ட ஆவினன்குடி ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் கூடி திருக்கயிலாய மலையை அடைந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர். அப்போது மகதி என்ற யாழை ஏந்திய நாரதன் சூரியனை நோக்கி நீ ஒளி பரப்பாவிடில் உலக உயிர்கள் வருந்துமே என்றான். அதைக் கேட்ட சூரியன் அகங்காரம் கொண்டு அப்படித்தான் நான் ஒளிபரப்பவில்லையென்றால் உலக உயிர்கள் அழியும் என்றான். இந்த அகங்காரத்தால் தன் கதிர்களை மறைத்துக் கொண்டு உலகத்தை இருளில் மூழ்கடித்தான்.

இதை அறிந்த சிவபெருமான் தனது கண்களை விழித்தார். இவ்வாறு நீண்ட காலம் கடந்தன. சூரியன் இல்லாமலேயே சிவனின் விழி ஒளியினால் இந்த உலகம் செழிப்புடன் நடைபெற்றது. இதனை உணர்ந்த அவன் சிவபெருமானைப் பன்முறை வணங்கி ஆற்றாதவனாய் மண்ணுலகம் வந்து நெல்லி மரக்காட்டில் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தான். அவனாலும் காமதேனுவாலும், திருமகளாலும் போற்றப்பட்டதால் அப்பதி திரு+ஆ+இனன் குடி என்றாயிற்று. அதுவே பழனிமலையின் அடிவாரத்தில் திருவாவினன்குடியாக இன்று விளங்கி வருகிறது.

திருச்ெசம்ெபான்பள்ளி நாதர்உருத்திரகோடியாகிய திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு சூரியர்கள் வழிபட்டார்கள் என்பதைக் கண்டோம். அவர்கள் வழிபட்ட இன்னொரு சிறப்பான தலம். திருச்ெசம்ெபான்பள்ளியாகும். இந்நாளில் செம்பொன்னார் கோயில் என அழைக்கப்படும் இத் தலம் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ளது.

பன்னிரண்டு சூரியர்கள் இங்குவந்து ஒரு தீர்த்தம் அமைத்தனர். அதுவே இந்நாளில் சூர்ய புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது என்பர். இதன் மத்தியில் இந்திரனால் உண்டாக்கப்பட்ட கிணறு ஒன்றும் உள்ளதென்பர். இப்பன்னிருவர் சூர்ய பூஜை செய்து பேறு பெற்றதை விளக்கும் வகையில் சித்திரை மாதம் (ஏழாம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை) பன்னிரண்டு நாட்களுக்கு சூரியனின் கதிர்கள் கருவறையில் விழுந்து சிவலிங்கத்தை ஒளிமயமாக்குகின்றது. இக்காட்சி கண்டுகளிக்கத்தக்கதாகும்.

இந்நாட்களையொட்டி ஒன்பது நாட்கள் பெருந்திருவிழா) என்பது  பெயராகும். இதனை சூரியனே சிவபெருமானுக்கு நடத்தியதாக ஐதீகம். சூர்யனுக்கு உரிய உலோகம் தங்கம் எனப்படும் பொன்னாகும் அதன் பெயரால் இந்த ஊருக்கு பொன் கோயில் என்று பொருள்பட செம்பொன்பள்ளி, செம்பொன்னார் கோயில் எனவும் இறைவனின் பெயர் சொர்ணபுரீஸ்வரர் எனவும் அமைந்திருப்பதும் எண்ணத்தக்கதாகும்.

சூரியன் வணங்கும் சோற்றுத் துறையார் அங்கதிரோன் அவனை அண்ணலாய் கருத வேண்டாவெங்கதிரோன் வழிேய போவதற்கு அமைந்து கொண்மின் அங்கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி ‘‘செங்கதிரோன் வணங்கும்’’ திருச்சோற்றுத் துறையனாரே. - திருநாவுக்கரசர் தஞ்சை மாவட்டத்தில் திருஐயாற்றை ஒட்டி அமைந்த தலம் திருச்சோற்றுத் துறையாகும். இங்கு சூரியன் பெருமானுக்கு வழிபாடு செய்து பேறு பெற்றான் என்று அப்பரடிகள் பாடியருள்கின்றார். சூரியன் இப்பெருமானுக்கு பெருந் திருவிழாவை நடத்தி மகிழ்ந்தான் என்று தல புராணம் கூறுகின்றது. இங்கு ஆதித்த சோழன் பல திருப்பணிகளைச் செய்துள்ளான் என்பர்.

ஆதித்தனோடு அரவம் வழிபடும் நாகேஸ்வரம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் எனும் தலத்தில் சந்திரனும், துவாதச ஆதித்யர்களும் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். அவர்களையடுத்து அவர்களுக்குப் பகையான நாகங்களும் இங்கு வழிபட்டன. இதனால் இதனை பகைமறந்து பரமனடி தொழும் இடம் எனப்படும். இவ்வாறு சந்திர சூரியர்களும், நாகமும் தொழுததை தமிழ்மறையான தேவாரம்.

‘ஞாயிறும், திங்களும் கூடி வந்தாடு நாகேச்சுரம் எனவும்
சந்திரனோடு சூரியர் தாமுடன் வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணி கொண்டருள் மைந்தர்போன் மணி நாகேச் சரவரே.

- அப்பர் சுவாமிகள்என்றும், கூறிமகிழ்கிறது. ஆதவன் வழிபடும் திருஆடானை - ஆதிரத்தினேஸ்வரர் அதிதியின் புதல்வனான ஆதித்தன். பிரம்மனைக் குறித்து தவம் செய்தான். அவர் அவனுக்கு அனேக வரங்களைத் தந்து ஒற்றைச் சக்ரத்தேரையும் குதிரையையும் கொடுத்து மேருமலையை வலம்வந்து உலகிற்கு ஒளியூட்டும்படி ஆணையிட்டார். அப்படி அவன் தன்பணியைத் தொடங்கும்போது அவனுடைய தேர் நகரவில்லை. இதனால் வருந்திய அவன் மீண்டும் பிரம்மனைக் குறித்து தவம் செய்தான். பிரம்மன் அவன் முன் தோன்றி, ‘‘அன்பனே, சிவபெருமானைத் தியானியாது தொடங்கும் செயல் எவ்வாறு நன்கு நடைபெறும்’’ என்று சொல்லி அவனுக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்து பூமியில் நவரத்னமயமான லிங்கத்தை பூசித்து சிவனருள் பெருவாய் என்றார்.

அதன்படியே அவன் பாரிஜாதவனம் என்று புகழப்பெறும் திருவாடானைக்கு வந்து பாரிஜாத மரத்தின் கீழ் நீலரத்தினத்தால் சிவலிங்கத்தையும் சினேகவல்லி என்ற அம்பிகையையும் அமைத்து தன் பெயரால் ஒரு தீர்த்தத்தையும் அமைத்து வழிபட்டான். அவனுடைய தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் காலச்சக்கரம் சுழலும் வரை அவன் சூரிய பதவியில் இருந்து சிறப்படைய அருள்பாலித்தார் என்பர்.

மேலும் இங்கு சூரியன் காசியில் வணங்கியது போலவே பன்னிரண்டு லிங்கங்களை அமைத்து வழிபட்டான் என்று தலபுராணம் கூறுகின்றது. அவை சூசகலிங்கம், கோடீஸ்வரர் லிங்கம், மாவடிநாதர், ஜோதீஸ்வரர், அந்தரங்கேசர், முக்தேசுவரர், பத்ரீஸ்வரர், சக்தீஸ்வரர், வைடூர்யலிங்கம், கோமேதலிங்கம், கபஸ்தீசுவரர், கிரணேஸ்வரர் என்பனவாகும். காசியில் உள்ளது போலவே இங்கும் கபஸ்தீஸ்வரர் எனும் பெயரில் லிங்கம் இருப்பதையும் இங்கு காண்க. ஆனால் இந்நாளில் இவை எங்கெங்கு உள்ளன என்பதை அறியமுடியவில்லை.

இத்தகைய சிறப்பு பெற்ற திருவாடானை சிவகங்கையில் இருந்து 33 மைல் தொலைவிலும் காளையார் கோயிலிருந்து 21 மைல் தொலைவிலும் உள்ளது. அருணன் தொழும் ஆனைமேல் அழகியான் திருமீயச்சூர் எனும் தலத்தில் சூரியன் மேகநாதர் எனும் சிவபெருமானையும் செளந்தர நாயகியாகிய அம்பிகையையும் ஐராவதம் எனும் யானை மீது அமர்த்தி வழிபட்டான் என்பர். இதனை நினைவு கூறும் வகையில் இங்குள்ள கருவறை தூங்கானை மாட வடிவில் உள்ளது அம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

திருமீயச்சூர் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளத்தில் இருந்து கம்பூர் செல்லும் சாலையில் 2 கி.மீட்டரில் உள்ளது. மங்கலன் வழிபடும் மங்கலக்குடிமங்கலக் குடியீசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வனும் விண்ணோடு மண்ணும் நேர்சங்கு சக்ரதாரி சதுமுகன் அங்ககத்தியனும் அர்ச்சித்தாரன்றே தேவாரத்தில் சிவபெருமானைச் சூரியன் வழிபட்டதாக குறிப்புள்ள தலங்கள் சிலவேயாகும். அவற்றிலொன்றே திருமங்கலக்குடியாகும். இங்கு சூரியனும் எட்டு கிரகங்களும்  சிவபெருமானை வழிபட்டன என்பர்.

அதற்கான புராணக்கதை வருமாறு:
ஒரு சமயம் காலவர் எனும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது தமக்கும் தனது சந்ததிகளுக்கும் கிரகநிலை மாறுதல்களால் கடுந்துன்பம் நேரப்போவதை அறிந்தார். எனவே நவகிரகங்களைக் குறித்து தவம் செய்தார். நவகிரகங்கள் அவர் முன்னே தோன்றின. அவர் அவற்றை மகிழ்வித்து வணங்கித் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் நேராதிருக்க வரம் வேண்டுமென்று கேட்டார்.

நவகிரக நாயகர்களும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்பாலித்தனர். இதையறிந்த நவகிரக தேவதைகளின் அதிபர்களும், காலதேவனும் கோபம் கொண்டனர். ஒருவனின் விதியை மாற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. வரம்பு மீறி வரமளித்ததால் நீங்கள் குஷ்டநோய் பிடித்துத் துன்புறுங்கள் என்று சாபம் கொடுத்தனர். இதனால் வருந்திய நவகிரகங்கள் பூமிக்கு வந்து சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தனர். அவர்களுக்கு சிவபெருமான் அருள்புரிந்து நோய் நீக்கம் செய்தார்.

மங்கலனாகிய சூரியனால் வழிபடப்பட்டதால் இவ்வூர் மங்கலக்குடி என்றானதென்பர். இங்கு சூரியனால் வழிபடப்பட்ட பெருமான் பிராணவரதேஸ்வரர் என்றும் அம்பிகை மங்களநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இதன் அருகில்தான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்ட பின்னரே சூரியனார் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதியாகும். இங்கு கார்த்திகை மாதம் ஞாயிறு தொடங்கி (மொத்தம் பன்னிரண்டு) ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து இங்குள்ள மங்கல தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை நிவேதித்து வழிபட்டால் தொல்லை தரும் பரம்பரை வியாதிகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாகும்.

- பூசை.ச. அருணவசந்தன்