பிரசாதங்கள்



திருவாதிரை தினைக் களி

என்னென்ன தேவை?

தினை அரிசி அல்லது பச்சரிசி - 1 கப்,
பயத்தம்பருப்பு - 1 கைப்பிடி,
சுத்தமான வெல்லம் - 1½ கப்,
தண்ணீர் - 2½-3 கப்,
பொடித்த ஏலக்காய் - 6,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
நெய் - 50 கிராம்,
முந்திரி - 8.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தினை அரிசி, பயத்தம்பருப்பை சேர்த்து வாசனை வரும்வரை நன்கு  சிவக்க வறுத்து, ஆறியதும் ரவைபோல் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்ததும் ரவையைத் தூவி கைவிடாமல் கட்டித் தட்டாமல் கிளறவும். நன்கு வெந்து வந்ததும் பொடித்த வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறவும். நன்கு களி பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்து உடைத்த முந்திரியை கலந்து அலங்கரித்து பரிமாறவும்.

டிரை ஃப்ரூட்ஸ்-நட்ஸ் போளி

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு: மைதா மாவு - 200 கிராம்,
உப்பு - 1 சிட்டிகை,
விரும்பினால் மஞ்சள் தூள் - 2 சிட்டிகை,
எண்ணெய் - 100 கிராம்.
பூரணத்திற்கு: காய்ந்த திராட்சை,
பேரீச்சம்பழம், உலர்ந்த அத்தி,
செர்ரி - 1/2 கப்,
நட்ஸ் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், கிர்ணி விதை - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பொடித்த ஏலக்காய் - 2,
பாகு வெல்லம் - 200 கிராம்,
நெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை எண்ணெயைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கலந்து பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து அதன் மீது எண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும். நட்ஸ், டிரை ஃப்ரூட்சை லேசாக வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தில் 1/2 கப்
தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு கரைந்ததும் வடித்து, மீண்டும் அடுப்பில் வைக்கவும். இதில் நட்ஸ், டிரை ஃப்ரூட்சை போட்டு கலந்து கிளறி பூரண பதத்திற்கு வந்ததும் இறக்கவும். பூரணம் ரெடி.

மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து சொப்பு போல் செய்து, அதன் உள்ளே 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, வாழை இலையில் வைத்து எண்ணெய் தடவி வட்டமாக தட்டி, சூடான தவாவில் போட்டு நெய் விட்டு இருப்புறமும் வேகவிட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய் போளி, பருப்பு போளி, கோவா போளி, பனீர் போளி, சர்க்கரைவள்ளிக்
கிழங்கிலும் போளி செய்யலாம்.

வெண்பொங்கல்

என்னென்ன தேவை?

புது பச்சரிசி - 2 கப்,
பாசிப்பருப்பு - 1 கப்,
பொடித்த இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
நெய் - 1/4 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
முந்திரி - 20, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பின் அரிசியுடன் சேர்த்து கழுவி குக்கரில் 6-7 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். விசில் அடங்கியதும் மூடியை திறந்து உப்பு சேர்த்து கலந்து மசித்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொங்கலில்  கொட்டி கலந்து பரிமாறவும்.

காய்கறி ஃப்ரை

என்னென்ன தேவை?

குடமிளகாய், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வாழைக்காய், அவரைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் விருப்பமான காய்கறிகள் அனைத்தும் சேர்த்து - 1 பெரிய கப்,
இஞ்சி - சிறிது.
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கடலை மாவு - 1/4 கப்,
சோள மாவு - 1/4 கப்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி இட்லி தட்டில் ஒரு ஆவி போட்டு அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் மசாலாத்தூள், கடலை மாவு, சோள மாவு கலந்து பிசறி அரை மணி நேரத்திற்கு வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பிசறி வைத்த காய்கறிகளை உதிர்த்துப் போட்டு ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் கைவிடாமல் வறுத்தெடுத்து பொங்கலுடன் பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகளை வதக்கிய பின் கடலை மாவு, சோள மாவு தூவி வதக்கலாம்.

அக்காரவடிசல்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
பால் - 6 கப்,
தண்ணீர் - தேவையான அளவு,
வெல்லம் - 1½ கப்,
நெய் - 3/4 கப்,
பொடித்த ஏலக்காய் - 2,
முந்திரி, காய்ந்ததிராட்சை - தலா 10,
குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். குங்குமப்பூவை 1 டேபிள்ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும். சுத்தமான வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சி கொள்ளவும். மிதமான தீயில் குக்கரை வைத்து பச்சரிசி, பாசிப்பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் 4 கப் பால் சேர்த்து கொதி வந்ததும் மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் மூடியை திறந்து மீதி பாலைச் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து வெல்லப்பாகை சேர்த்து சிறிது நெய் ஊற்றி 2 நிமிடம் கிளறி குங்குமப்பூ பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். பின்பு மீதியுள்ள நெய், வறுத்த முந்திரி, திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: தினை, சாமை, சம்பா, குதிரைவாலி அரிசியிலும் செய்யலாம்.

ஏழுக்கறிக் கூட்டு என்ற கதம்ப கூட்டு

என்னென்ன தேவை?

பூசணிப்பத்தை - 1,
உருளைக்கிழங்கு -2,
சேனைக்கிழங்கு - 1/4 துண்டு,
அவரைக்காய் - 10,
கத்தரிக்காய் - 3,
சிறிய வாழைக்காய் - 1,
கொத்தவரங்காய் - சிறிது,
கொண்டைக்கடலை - 1 கைப்பிடி,
புளி - சிறிது,
பச்சைமிளகாய் - 2,
மஞ்சள் தூள், உப்பு - தேவைக்கு.

வறுத்து அரைக்க:
காய்ந்தமிளகாய் - 8,
தனியா - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1 கப்.

தாளிக்க: எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை சுத்தம் செய்து ஒரே அளவு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்ததை சிறிது எண்ணெயில் வறுத்து, கடைசியில் தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளோடு உப்பு, மஞ்சள் தூள், வெந்த கொண்டைக்கடலை, வறுத்து பொடித்த பொடிகள், புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி அனைத்தையும் கலந்து கெட்டியான கறியாக வந்ததும் இறக்கி திருவாதிரைக் களியுடன் பரிமாறவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி