புதிய ஆண்டு, புதிய சிந்தனை!புதுமை, புதியது, புத்தாக்கம் என்ற வரிசையில் புத்தாண்டும் மலர்கிறது. ‘அதே வருஷம், அதே மக்கள், அதே உறவுகள், அதே நட்புகள், இன்னும் ஒரு வருடம், என்ன புதுமை வாழ்கிறது?’ என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் புதுமையின் சிறப்பை உணராதவர்கள் என்றே சொல்லலாம்‘நேற்றுபோல் இன்று இல்லை, இன்றுபோல் நாளை இல்லை’ என்பதுதான் புதுமையின் இலக்கணம். புதுவருடத்தில் மாதங்கள் மாறாமல் இருக்கலாம், தேதிகள் மாறாமல் இருக்கலாம். ஆனால், வருட எண் மா றுகிறது; அந்தந்த தேதிகளுக்கான கிழமை களும் மாறுகின்றன என்பதை நாம் ஆழமாக சிந்திப்பதில்லை. அதே மாதம், அதே தேதி ஆனால், கிழமை வேறே என்பதே புதுமையின் அதாவது மாற்றத்தின் ஓர் அம்சம்தான்.

சூரியன் அதேகிழக்கில்தான் உதிக்கிறது, அதேமேற்கில்தான் மறைகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பார்த்தும் வருகிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் சூரியன் தெற்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ தன் பயணப்பாதையை மாற்றிக் கொண்டுதான் வருகிறது என்பதையும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். மாற்றம், அதாவது புதுமை எல்லா அம்சங்களிலும் இருக்கிறது, நம்மிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருடத் துவக்கத்தின்போதும் புது சங்கல்பங்களை - புது கொள்கைகளை - வகுத்துக் கொண்டு புதிய பாதையில் மனதையும், வாழ்க்கையையும் செலுத்த முயற்சிக்கிறோம்.

அதாவது, நமக்கே புரிகிறது, கடந்த ஆண்டில் நாம் முழுமையாக, ஆக்கப் பூர்வமாக சிந்திக்கவில்லை, செயல்படவில்லை என்று. அதிலிருந்து விடுபட்டு புதுசிந்தனைகளுடன், புதுமனத்தெம்புடன், பிறருக்கு நன்மை தரும் செயல்களில், வரும் ஆண்டிலிருந்தாவது ஈடுபடவேண்டும் என்பது புரிகிறது. ஆனால், இந்த உத்வேகம், வருடம் துவங்கி சில நாட்களிலேயே வாடிவிடுவதுதான் பெரிய சோகம். எத்தனையோ காரணங்களால் அந்த முயற்சியை நம்மால் தொடர இயலாமல் போகிறது.

ஆனால், உண்மையாகவே நாம் முழுமனதோடு அந்த முயற்சியில் இறங்குகிறோம் என்றால், நமக்கு இறைவனின் கருணையும், ஆதரவும், அருளும் தேவைப்படுகிறது. ‘இந்த வருடத்திலிருந்து…’ என்று நினைக்க ஆரம்பிக்கும்போதே, ‘கடவுளே எனக்கு உறுதுணையாக இரு,’ என்றும் கூடவே வேண்டிக் கொண்டோமானால், குறைந்தபட்சம், எதிர்மறை எண்ணங்கள் நம்முள் தோன்றாமல் இருக்கும், அதனால் எதிர்மறை வினைகளை நாம் ஆற்றாமல் இருப்போம். இது நிச்சயம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வணக்கங்கள், வாழ்த்துகள்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)