அற்புதம் மிளிரும் அர்ச்சாவதாரங்கள் கருவறையில் திருமணக்கோலம்!



தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகில் திருவீழிமிழலை அமைந்துள்ளது. இக்கோயிலில் நேத்ர அர்ப்பணேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். இவர் கருவறையில் லிங்க வடிவமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்திற்குப் பின்னால் சுவரில் பார்வதி-பரமேஸ்வரர் திருமணக் கோல உருவம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அம்பாளின் திருப்பெயர் சுந்தர குஜாம்பிகை.

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய பீடத்தின்மீது கல்யாண சுந்தரமூர்த்தியைக் காணலாம். காத்யாயன முனிவரின் மகளான காத்தியாயினியை மணந்து கொண்ட மாப்பிள்ளையாகக் காட்சி தருகின்றார், இறைவன் கல்யாண சுந்தரமூர்த்தி. அம்மையைத் தழுவிய கோலத்தில் நின்றிருக்கும் அவரது பாதத்தில் தாமரையாக சார்த்தப்பட்டிருக்கிறது திருமாலின் திருவிழி! இவருக்கு மாலை அணிவித்து வழிபடுவோருக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மூல மூர்த்தியாகவும் உற்சவ மூர்த்தியாகவும் திருமண கோலத்தில் இறைவன் காட்சி தருவது இங்கு மட்டுமே. கருவறை வாயிலில் அரசாணைக்கல் ஒன்று உள்ளது. திருமணத்தின்போது மணமேடையில் வழிபடு பொருட்களில் ஒன்று இது! கோயிலின் கிழக்கில் ஒன்றும், மேற்கில் ஒன்று என இரு பலிபீடங்கள் உள்ளன. இவற்றின் மீதுதான் சம்பந்தருக்கும், அப்பருக்கும் படிக்காசு வைத்து அருளினார் இறைவன். அது என்ன சம்பவம்?
 
திருஞானசம்பந்தரும், அப்பரும் இணைந்து பல தலங்களை தரிசித்தபடியே இத்தலத்திற்கும் வந்தனர். இங்கு சிலகாலம் தங்கி, திருவீழியழகரைப் போற்றித் துதித்தனர். அச்சமயம் நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாயினர். தொண்டர்களின் பசியைப் போக்க இருவரும் இறைவனிடமே முறையிட்டனர். அவர்கள் கனவிலும் இறைவன் தோன்றி பஞ்சம் தீரும்வரை தொண்டர்களின் பசியைப் போக்க ஒவ்வொருவருக்கும் படிக்காசு தருவோம் என்று கூறியருளினார்.

அவ்வாறே சம்பந்தருக்கு கிழக்கு பீடத்திலும், அப்பரடிகளுக்கு மேற்கு பீடத்திலும் படிக்காசு கிடைக்கச் செய்தார். அதைக்கொண்டு பிற இடங்களிலிருந்து உணவுப்பொருட்களை வரவழைத்து அவர்கள் மக்களின் பசியைப் போக்கினர். இவ்வாறு நாட்டில் பஞ்சம் தீரும்வரை படிக்காசு பெற்றுவந்த செய்தியை அங்குள்ள பல கல்வெட்டுகளில் காணலாம். இதை மேலும் நிரூபிக்கும்விதமாக மேற்கு பலிபீடத்தின் அருகே படிக்காசுப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

இவரருகே சம்பந்தரும், அப்பரும் நின்றபடி காட்சியளிக்கிறார்கள். இந்த பிள்ளையார்தான் இறைவன் ஆணைப்படி பலிபீடத்தில் படிக்காசுகளை வைத்தருளியவர்! இத்தலத்தில்தான் மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதத்தைப் பெற்றார். ஒருசமயம் ஜலந்தராசுரன் சிவபெருமானை எதிர்த்துப் போரிட, ஈசன் தம் கால் விரலால் பூமியில் ஒரு வட்டத்தை சக்கரமாக வரைந்தார்.

அந்தச் சக்கரத்தை எடுத்து அவன்மீது வீசி அவனை வீழ்த்தினார். அசுரன் மறைவுக்குப்பிறகு அவனது புதல்வர்கள் அவனைப் போலவே தேவர்களை எதிர்த்தனர். இவர்களை சக்ராயுதத்தால்தான் வதம் செய்யமுடியும் என்றுணர்ந்த மஹாவிஷ்ணு அதை ஈசனிடமிருந்து பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சிக்கத் தொடங்கினார்.

ஆனால், அவரை சோதிக்கும் வகையில் ஆயிரம் மலர்களில் ஒன்று குறையுமாறு செய்தார் ஈசன். அர்ச்சித்துக்கொண்டே வந்தபோது ஒரு மலர் குறையகூடும் என்று கணக்கிட்ட மஹாவிஷ்ணு, அந்த நேரத்தில் போய் ஒரு மலரைக்கொண்டு வருவதாக இருந்தால் வழிபாடு தடைபடுமே என்று யோசித்தார்.

உடனே தன் கண் ஒன்றையே அகழ்ந்தெடுத்து அதையே மலராகப் பாவித்து அர்ச்சனையை முடித்தார். உடனே, சிவபெருமான் காட்சி கொடுத்து அவருக்கு சக்ராயுதத்தைத் தந்தருளினார். மகாவிஷ்ணு தமது கண்ணை அர்ப்பணித்த தலம்தான் இந்த ‘திருவீழிமிழலை’. சிவபெருமானின் திருவடியில் கண்ணுடன் சக்கரமும் அமைந்திருப்பது இச்சம்பவத்திற்கான சான்றாகும்.

- ஏ.கிருஷ்ணன்