பிரசாதங்கள்



(தெலுங்கு வருடப் பிறப்பு (29.03.2017) ஸ்பெஷல்)

சந்திரலேகா ராமமூர்த்தி

கோஸம்பரி

என்னென்ன தேவை?

எலுமிச்சம்பழம் - 1,
வெள்ளரிக்காய் - 1,
பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,
தேங்காய் - 1/2 மூடி,
கேரட் - 1,
சிறிய மாங்காய் - 1,
உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
ஊறிய பாசிப்பருப்பு அல்லது முளைக்கட்டிய பச்சைப்பயறு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காய், தேங்காய், கேரட், மாங்காய் அனைத்தையும் துருவிக் கொள்ளவும். பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து வடித்த பச்சைப்பயறு, உப்பு, சர்க்கரை மற்றும் பிற பொருட்கள் அனைத்தையும் கலந்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டியும் பரிமாறலாம். கெட்டித்தயிர் கலந்தும் பரிமாறலாம். தக்காளியை சிறிதாக நறுக்கி கலந்தும் பரிமாறலாம்.

ஒப்பிட்டு

என்னென்ன தேவை?

பூரணத்திற்கு - பிஸ்தா, முந்திரி, ஊறவைத்து தோலுரித்த பாதாம் - தலா 10,
உலர்ந்த அத்திப்பழம், காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4,
தேங்காய் கொப்பரை - 1 கப்  (பொடித்தது),
பொடித்த வெல்லம் - 1 கப்,
துருவிய கோவா - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

மேல் மாவிற்கு:
மைதா - 1½ கப்,
கேசரி கலர் பவுடர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர்,
உப்பு - தலா 1 சிட்டிகை,
நெய் - சிறிது,
நல்லெண்ணெய் - 1 கப் அல்லது தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை, அத்திப்பழம் அனைத்தையும் 10 நிமிடம் ஊறவைத்து கொப்பரையுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் வெல்லத்தைச் சேர்த்து பாகு காய்ச்சி, அரைத்த நட்ஸ் கலவை, ஏலக்காய்த்தூள், கோவா சேர்த்து கலந்து பூரணமாக வந்ததும் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கேசரி பவுடர், சிறிது நல்லெண்ணெய், உப்பு கலந்து, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிைசந்து, மேலே சிறிது எண்ணெய் விட்டு 15 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பின் சிறிய சப்பாத்திகளாக இட்டு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி கை விரலால் போளியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

ஆந்திர மினி நிப்பட்டு

என்னென்ன தேவை?

கலந்த சிறுதானிய மாவு - 1½ கப்,
புழுங்கல் அரிசி மாவு - 1/2 கப்,
வறுத்து திரித்த உளுத்தமாவு - 1/4 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1½  டேபிள்ஸ்பூன்,
எள் - 1 டீஸ்பூன்,
பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு,
எண்ணெய் -  தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை தனியாக ஊறவைக்கவும். சிறுதானிய மாவு, உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, எள், புழுங்கல் அரிசி மாவு, சூடான 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகு சேர்த்து கெட்டியாக பிசைந்து, ஊறவைத்த கடலைப் பருப்பை வடித்து சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.

பின் நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து துணியில் மெல்லியதாக உள்ளங்கை அளவில் தட்டி அல்லது மூடி கொண்டு மினி தட்டையாக வெட்டி, தட்டையை முள் கரண்டியால் குத்தி வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தட்டையை போட்டு மிதமான தீயில், சத்தம் அடங்கியதும் பொன்னிறமாக சுட்டெடுத்து பரிமாறவும்.

தத்யோன்னம்

என்னென்ன தேவை?

சாமை அரிசி அல்லது குதிரைவாலி அரிசி - 1 கப்,
தேங்காய் - 1 மூடி,
கெட்டியான புளிப்பில்லாத தயிர் - 1 கப்.

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது, 
பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது (அனைத்தையும் பொடிக்கவும்),
நெய் - 2 டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
வெண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

தேங்காயை அரைத்து தேங்காய்ப் பால் எடுக்கவும். சாமை அல்லது குதிரைவாலி அரிசியை ஊறவைத்து குழைவாக சாதமாக வேகவைத்துக் கொள்ளவும். சாதத்தை மசித்து ஆறவிடவும். அத்துடன் தயிர், உப்பு சேர்த்துக் கலந்து, தேங்காய்ப் பால் சேர்க்கவும். பின் தாளிக்க கொடுத்ததை நெய்யில் தாளித்து தயிர் சாதத்தில் கலந்து கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து படைத்து பரிமாறவும்.

குறிப்பு: குழந்தைகளுக்காக வெண்ணெய், மாதுளை முத்துகள், பச்சை திராட்சை, துருவிய கேரட் கலந்து பரிமாறலாம்.

உண்டலு

என்னென்ன தேவை?

காப்பரிசி (சிவப்பு புட்டு அரிசி) - 1 கப்,
பொட்டுக்கடலை - 1/4 கப்,
எள் - சிறிது,
தேங்காய் அல்லது கொப்பரை - 1/4 கப் (துருவவும்),
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெல்லம் - 1/2 கப் (பொடிக்கவும்).

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் காப்பரிசியை போட்டு வாசனை வரும்வரை சிறு தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். கொப்பரை துருவலை லேசாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் காப்பரிசி, கொப்பரை, பொட்டுக்கடலை, எள், ஏலக்காய்த்தூள், நெய் அனைத்தையும் கலந்து வைக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் 1/4 கப் சேர்த்து நூல் பதத்திற்கு வந்ததும், கலந்த கலவையில் கொட்டி, சிறிது நெய்யை கையில் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து படைத்து பரிமாறவும்.

தர்பூசணி பாயசம்

என்னென்ன தேவை?

பால் - 4 கப்,
ஜவ்வரிசி - 1/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
ஊறவைத்த பாதாம் - 10,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
தர்பூசணி பழத் துண்டுகள்.

எப்படிச் செய்வது?

தர்பூசணியை ஸ்கூப் கரண்டியை கொண்டு சிறு சிறு கோலி குண்டு வடிவத்தில் எடுத்து கொள்ளவும். அல்லது பொடித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட்டு, ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். கண்ணாடி போல் வரும்பொழுது சர்க்கரை, ஊறிய பாதாமை அரைத்து சேர்க்கவும். அனைத்தும் கொதித்து பாயசம் பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஏலக்காய்த்தூள் தூவி ஆற விடவும்.

பரிமாறும் முறை - ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் கொஞ்சம் பாயசம், பின் தர்பூசணி துண்டுகள், மீண்டும் பாயசம் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்