உருவ-அருவ விநாயகர்



வேலூரிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது சேண்பாக்கம். 1677ம் வருடம், துக்கோஜி என்ற மராட்டிய மந்திரியின் கனவில் தோன்றிய கணபதி, தன்னுடைய பதினொரு மூர்த்தங்கள் அத்தலத்தில் புதைந்திருப்பதாகவும் அவற்றைக் கொண்டு கோயில் கட்டுமாறும் அறிவுறுத்தினார். உடனே துக்கோஜி அழகான சிறிய கோயிலை அமைத்தார்.

கோயிலில், பாலவிநாயகர், நடன விநாயகர், ஓங்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்தி-புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து, ஓம் எனும் பிரணவ வடிவத்தில் இருக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளும்.

விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தைச் சொல்லும் ஞான மூர்த்திகள் அவை. ஏனெனில் அந்த விநாயகர்கள், எந்த உருவமுமற்று வெறும் கோளங்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் உற்றுப் பார்த்தால், விநாயகர் நிழலாய் மறைந்திருப்பது புலப்படும். இதுதான் சேண்பாக்கத்தின் சிறப்பம்சம். ஆறாவதாக உள்ள செல்வ விநாயகர் தினமும் அபிஷேகம் பெறுகிறார்.

வண்ணம் மாறும் லிங்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது. இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இந்த வண்ண மாற்றம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. இந்த சிவலிங்கத்தின் முழு உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் கடந்து கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்தும் ஆலயமாக இது விளங்குகிறது.

புடவை அணியும் பெருமாள்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து பெரும்புதூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆப்பூர் கிராமம். இங்கு, ‘ஒளஷதகிரி’ மலையில் ஸ்ரீநித்யகல்யாண பிரஸன்ன வேங்கடேச பெருமாள், தனித்து கொலுவிருந்து அருள்பாலிக்கிறார். எனப்படுகிறது.

இந்த மலைப் பிரதேசம் முற்றிஎனவே, பெருமாளுக்குப் புடவை சாரத்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ‘‘திருமணம், வேலை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் வந்து வழிபட்டால் குறைகள் தீர்கின்றன. த்ரிபங்க நிலையில் தாயாரை தன்னுள்ளே ஐக்கியமாக்கி அருளும் அபூர்வ பெருமாள் இவர்.

வில்லேந்திய வேலவன்

வேலும், வில்லும் ஏந்திய முருகன் மூர்த்திகள் தமி்ழ் நாட்டுக் கோயில்களில் பல உண்டு. அவற்றில் பிரசித்தி பெற்றவை திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் விளங்கும் தனுஷ் சுப்பிரமணியன் மற்றும் பழைய காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த சாயாவனம் என்னும் சாய்க்காட்டிலே, குயிலினும் நன்மொழி அம்மை சமேத சாயவனேஸ்வரர் கோயிலில் அருளும் முருகன். ஐயாறப்பன் கோயிலில் கல்லுருவிலே இருப்பவரே சாய்க்காட்டிலே செப்புருவில் திகழ்கிறார். சாய்க்காடு மூர்த்தி, பேரழகர், மூன்றடி உயரம், அதற்கேற்ற ஆகிருதி. வேல், வில் இரண்டையும் ஏந்தி நிற்கிறார். வில்லையும் வேலையும் சேர்த்துத் தாங்கும் வகையாக இடை வளைத்து, தலை சாய்த்து நிற்கும் மயிலின் தோற்றம் பக்திப் பரவசமளிக்கிறது.

சந்தனக்கட்டையே பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்று கருங்குளம். மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள், சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செலுத்துகிறார். இத்தலத்தைப் பொறுத்தவரை மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கிவிட்டுதான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது.

வாதநோய் நீக்கும் வாதமுனி

விஷமங்களேஸ்வரர் ஆலயத்தின் எதிரே சற்றுத் தொலைவில் வாதமுனி என்ற தெய்வம் சிறு கல்பீட அமைப்பாக உள்ளது. வாதமுனிக்கு சனி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி, அஸ்வினி, பூரம், ஆயில்ய நாட்களில் நல்லெண்ணெய் மற்றும் வாதநாராயண எண்ணெயை அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். சகல வாதநோய்களையும் குணப்படுத்த வல்லதாம் இந்த எண்ணெய்.

குறிப்பாக இதயம் அல்லது மூளை பாதிக்கப்பட்டு, அதனால் உடலின் ஒரு பகுதி செயலிழந்தோர், ஏழைகளுக்கு புடலங்காய், முருங்கைக்காய், தட்டப்பயிறு ஆகியவை கலந்த உணவு வகைகளை தானமளித்தும், தேங்காய்ப் பூவையும், சர்க்கரையையும் கலந்து வாதமுனியை அர்ச்சித்து வந்தால் வாத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருச்சி-முசிறி சாலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள துடையூரில் இந்தக் கோயிலை தரிசிக்கலாம். 

தொகுப்பு: ந.பரணிகுமார்

விசித்ர விநாயகர்கள்

* கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவர் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீகம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.

* கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.

* அரியலூர், ஜெயங்கொண்டத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப் பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

* தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக்குடியில் அமைந்துள்ளது அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்பு கொண்டிருக்கிறது.