அரும்பூ மரத்தைச் சுற்றிவந்தால் அரும்பேறு கிடைக்கும்



திரிசூலம்

திரிசூலம் எனும் இத்தலத்தின் திருப்பெயரில் திரி என்றால் மூன்று என்று பொருளாகும். சூலம் என்பது ஆயுதத்தை குறிக்கிறது. சூலத்தில், மேல் நோக்கிய மூன்று கூர்மையான பகுதிகள் உள்ளன. அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஒரு பொருளின் மேல் ஆசை கொள்வது இச்சை, அப்பொருளை அடையத் தொடங்கும் செயலே கிரியா. இவை எதுவுமே இல்லாமல் எல்லாவற்றையும் தன்னிடத்தே ஒடுக்கிக் கொள்வதுதான் ஞான சக்தி.

இந்த முத்தொழிலையும் ஒருங்கே செய்பவராக இறைவன் விளங்குகிறார் என்பதையே திரிசூலம் உணர்த்துகிறது. எனவே, அதையே சிவபெருமான் தன்னுடைய ஆயுதமாகக் கொண்டிருக்கிறார். ஜீவன்களுக்கு இச்சையையும், கிரியையும், ஞானத்தையும் வழங்கி தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் கருணை கொண்டவர். இத்தலத்திற்கான பல பெயர்களில் மூன்று குறிப்பிடத்தக்கவை - பிரம்ம புரி, திருச்சுரம், திருநீற்றுச் சோழநல்லூர்.

பிரம்மன் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்கிற திருப்பெயரும் ஏற்பட்டது. அடுத்து திருச்சுரம். சுரம் என்றால் மலை. இத்தலத்தின் நான்கு புறமும் மலை சூழ்ந்திருப்பதாலும், மலைகளே வேத வடிவிலுள்ளதாலும் திருச்சுரம்; இறைவன், திருச்சுரமுடைய நாயனார். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதால் திருநீற்றுச்சோழநல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டது.

திருச்சுரமுடைய நாயனார் என்கிற பெயரே மறுவி திரிசூலநாதர் என்றானது. அதேபோல திருச்சுரம் என்கிற  பெயரிலிருந்தே திரிசூலம் என்ற பெயரும் மருவியது. மாபெரும் ராஜகோபுரம் இல்லை என்றாலும் உள்ளுக்குள் நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தின் மேல் ஈசன் மடியில் பிள்ளையாரும், இறைவியின் மடியில் முருகனும் அமர்ந்திருக்கும் காட்சி அற்புத தரிசனமாகும். அடுத்ததாக கொடிமரத்தடியில் மூஞ்சூறு மேல் அமர்ந்து வரப்பிரசாதியான பிள்ளையார் காட்சி தருகிறார்.

இவருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். தாமரை வடிவில் பலிபீடம் அமைந்துள்ளது. அடுத்துள்ள நந்தி மண்டபம் முழுவதும் சுதைச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. மண்டபத்திற்குள் பிரதோஷ நந்தி ஈசனை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறார். இக்கோயில் கஜ பிரஷ்ட விமானம் அல்லது தூங்கானை மாடம் என்ற கட்டிட அமைப்பை கொண்டதாகும். அதாவது யானையின் பின்புறம் போன்று கருவறை அமைந்திருக்கும்.

சந்நதி விமானத்தின் மீது அம்பாள், ஐந்து கலசங்களோடும் சக்தி, பிராம்மி, விஷ்ணு துர்க்கையோடு காட்சியளிக்கிறாள். நேர் மண்டபத்தை ஒட்டி ஆஞ்சநேயர், ஐயப்பன், சீடர்களுடன் அமர்ந்த கோலத்தில் ஆதிசங்கரர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். அடுத்ததாக அரும்பூ மரத்தடி பிள்ளையாரை தரிசிக்கலாம். இந்த அரும்பூ மரத்தைச் சுற்றி வருபவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

வலதுபுறம் ஆருத்ரா தரிசன மண்டபம். அதன் முகப்பில் மாணிக்கவாசகர் திகழ்கிறார். நவகிரக சந்நதியின் மேல் முகப்பில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் காட்சி அளிக்கிறார். உள்ளே பிற கிரகங்கள் தத்தமது வாகனங்களில் அமைந்திருக்கிறார்கள். தனிச் சந்நதியில் மார்க்கண்டேஸ்வரர் மற்றும் ேஷாடச லிங்கத்தைக் காணலாம். இது சோழர் கால அமைப்பைக் கொண்டது.

இக்கோயிலுக்குள் 1500 வருடத்து பழமையான சுரங்கம் இருப்பதாகக் கூறுகிறார்கள். இது அருகேயுள்ள பஞ்ச பாண்டவர் மலைவரை செல்கிறதாம். சோமாஸ்கந்தர், ரிஷபதேவர், வாலி, சுக்ரீவன், கண்ணப்ப நாயனார் ஆகியோரின் சிற்பங்கள் கல் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தில் ஆறு தூண்கள் உள்ளன. அவற்றின் ஒன்றில் சரபேஸ்வரர் இறகுகள் இல்லாமல் காணப்படுகிறார்.

சரபமூர்த்தி என்பது நரசிம்ம மூர்த்தியின் கோபத்தை அடக்க வந்த சிவசொரூபமாகும். இச்சிற்பம் தெற்கு நோக்கி உள்ளது. அர்த்தமண்டபத்தை அடுத்த கருவறையில் திரிசூலநாதர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். நாகாபரணத்தில் மேலும் அழகாக ஜொலிக்கிறார். இத்தலத்து அம்பிகை, திரிபுரசுந்தரி. தாமரை மலர் பீடத்தின் மீது, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இந்த அம்பிகைக்கு நவராத்திரியில் 18 சுமங்கலிப் பெண்கள் மற்றும் 18 பெண் குழந்தைகளை கொண்டு கன்யா பூஜை நடத்தப்படுகிறது. ஒன்பது நாட்களும் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, புஷ்ப அர்ச்சனை செய்யப்படுகிறது. தை வெள்ளி, ஆடி வெள்ளிக் கிழமைகளில் பூப்பாவாடை அணிவிக்கப்படுகிறது. அர்த்த மண்டப தேவகோஷ்டத்தில் முதலில் தெற்கு நோக்கி  நாக யக்ஞோபவீத கணபதியாக அதாவது நாகத்தை பூணூலாக அணிந்து நாகதோஷத்தை தீர்ப்பவராக விநாயகர் அருள்கிறார்.

வீராசன தட்சிணாமூர்த்தி இடது பாதத்தை மடித்தும், வலது பாதத்தின் அடியில் முயலகனை மிதித்தபடியும் அமர்ந்துள்ளார். இது மிகவும் சிறப்பான அம்சமாகும். அருகேயே சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அடிமுடி காண முடியாத லிங்கோத்பவ மூர்த்தி மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மா நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சண்டிகேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் உள்ளார். விஷ்ணு துர்க்கை வடக்கு நோக்கி நின்றவாறு காட்சியளிக்கிறாள்.

திருச்சுற்று சந்நதிகளில் சீனிவாச பெருமாள், காசி விஸ்வநாதர், மார்கண்டேயர், நடராஜர் - சிவகாமி, பைரவர், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகன் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். கோயிலின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதுவொரு பிரார்த்தனை தலமாகும். தாம் கோரியதை நிறைவேற்றிவைக்கும் இறைவனுக்கு பக்தர்கள் வஸ்திரம் அணிவித்து விசேஷ அபிஷேகம் செய்கின்றனர்.

பிரதோஷம், மஹாசிவராத்திரி வழிபாடுகள் தவிர, கார்த்திகை தீபத்தன்று மலையின் நான்கு உச்சியிலும் தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. நான்கு கால பூஜைகளோடு ஆருத்ரா தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றன. சென்னை விமான நிலையம் மற்றும் பல்லாவரத்திற்கு அருகே  அமைந்துள்ளது திரிசூலம்.
 

- ராஜீவ்குமார்

இடி ஏந்திய பைரவர்

வால்மீகிக்கு அருளிய ஈசன் எழுந்தருளிய தலம், திருப்புற்றூர்; இப்போது திருப்பத்தூர் என வழங்கப்படுகிறது. இந்த சிவாலயத்தில் நாய் வாகனம் இல்லாத பைரவரை யோகபைரவராக தரிசிக்கலாம். பொதுவாக பைரவருக்கு ஆடைகள் அணிவிப்பதில்லை. இந்தக் கோயிலில் வெண்பட்டாடை அணிவிக்கிறார்கள்.

வலது கையில் இடியை ஏந்திய அபூர்வ திருக்கோலம் இவருக்கு. அவர் திருமுன் பைரவ யந்திரமும் பைரவ மேருவும் உள்ளன. பைரவர் சம்பகாசுரனை அழித்த விழா நவம்பர் மாதத்தில் 6 நாட்கள் சம்பகசஷ்டி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது எட்டு வித பைரவர்களையும் முன்னிருத்தி அஷ்டபைரவ யாகம் நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு. இந்த பைரவரின் உடலில் 12 ராசிகளும் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். எனவே இவர் கிரகதோஷங்களிலிருந்து நிவாரணம் தருபவராக விளங்குகிறார்.