மழலைப் பேறு அருளும் மகாதேவன்



ஆகாயம்

ராஜபாளையம் - விருதுநகர் மாவட்டம்

பஞ்ச பூத தலங்கள் - 5


தேவதானம் - அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிந்தது கலைமான் ஒன்று. பசியாற்றிக்கொள்ள, தரையில் பரவியிருந்த கொன்றைத் தழைகளைப் பெருவிருப்பத்துடன் உட்கொண்டது. அதேசமயம், அந்தக் குவியலுக்குள் சிவலிங்கம் ஒன்றையும் அது கண்டது. உடனே பக்தி மேலிட, அன்றுமுதல் தினமும் அங்கே வந்து அந்த சிவனை வணங்கியது. அதே காட்டில் மேய்ச்சலுக்காக வந்த ஒரு பசுவும் அந்த சிவலிங்கத்தைப் பார்த்தது.

தானும் பக்தி கொண்டு அதனை வழிபட்டது. பக்தி பெரிதும் மிகவே, தனது பாலைச் சுரந்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தது. இவ்விரு விலங்குகளும் ஒன்றுக்கொன்று தெரியாமலேயே தம் பக்தியை இறைவனுக்கு சமர்ப்பித்தன. ஒருநாள் சிவலிங்கத்தின் அருகில் சாணம், கோமியம் என கிடப்பதைக் கண்ட கலைமான். தன்னைத் தவிர வேறு ஒரு பிராணியும் அங்கே வருகிறது என்பதைப் புரிந்துகொண்டது.

அது எந்தப் பிராணி என்பதை அறிந்துகொள்வதற்காக சற்றுத் தொலைவில் மறைந்திருந்தது. சற்று நேரத்தில் வந்த பசுவைக் கண்ட கலைமான், இறைவன் உறையும் அந்த இடத்தின் தூய்மையைக் கெடுத்தது இதுதான் என்பதைப் புரிந்துகொண்டு தன் கொம்புகளால் அதனைத் தாக்கியது. பசுவும் மானை எதிர்த்தது. மோதல் கடுமையாகிவிடும் போலிருக்கவே, அவை இரண்டுக்கும் காட்சி கொடுத்தார் இறைவன். அவற்றுக்கிடையே சமரசம் செய்துவைத்து, அவற்றுக்கு முக்தியும் அளித்தார். 

வெகுநேரமாக வீட்டிற்குத் திரும்பாததால், தன் பசுவைத் தேடி வந்த இடையன் அந்த லிங்கம் அமைந்திருந்த இடத்துக்கு வந்தபோது, இறைவன் தன் பசுவுக்கும், கலைமானுக்கு இறைவன் தரிசனமளித்ததைக் கண்டு பிரமித்து சிலையாக நின்றான். இறைவனோடு தன் பசுவும், கலைமானும் சட்டென்று மறைந்துவிடவே, சுதாரித்துக்கொண்டு ஊருக்குள் திரும்பி அனைவரிடமும் தான் கண்டதைச் சொல்லிப் பரவசப்பட்டான்.

அன்று முதல் அவன் தன்னுடைய எல்லாப் பசுக்களிடமிருந்தும் பாலைக் கறந்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான். அருகிலிருந்த செடி, மரங்களிலிருந்து மலர்கள் பறித்து லிங்கத்தின் மீது தூவி பூஜித்தான். தான் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றோடு, பழங்கள், தேன், வாசனைச் சாந்து, குங்கிலியம் ஆகியவற்றை சேகரித்து வந்து காணிக்கைப் பொருட்களாகப் படைத்தான். ஊர் மக்களும் திரளாக வந்து இறைவனை வணங்கி நின்றார்கள்.

கொன்றை மரத்தின் கீழ் இறைவன் வீற்றிருப்பதால் அவர் ‘திருமலைக் கொழுந்தீசர்’  எனப் பெயர் பெற்றார். இதே இடத்தில் பார்வதிதேவியும், கங்கையும் இறைவனைக் காண தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனால் இங்கு அருள்பாலிக்கும் தேவிக்குத் ‘தவம் பெற்ற நாயகி’ என்று பெயர். தேவியார் விரும்பியபடி அம்மையப்பராக பெருமான் பக்கத்தில் ஒரு பாறையில் அமர்ந்தார். அப்பாறை ‘திருவோலக்கப்பாறை’ எனப் பெயர் பெற்றது.
  
பாண்டிய நாட்டை ஆண்டுவந்த வீரபாகு என்னும் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்தது. அவன் இந்தச் சிவனை வணங்கி, தோஷம் நீங்கப்பெற்றான். அதன் பிறகு சிவனே எல்லாம் என்று இங்கேயே தங்கி விட்டான். இச்சமயத்தில் சோழ மன்னன் விக்கிரமச் சோழன், பாண்டியன் மீது படையெடுத்தான். சிவன் முன் தன்னிலை மறந்து கிடந்த பாண்டியனை சிறைபிடிக்க தனது படையை ஏவினான்.

அப்போது சிவபெருமான் போர்வீரனாய்க் கோலம் பூண்டு, சோழனுடன் போரிட்டு அவனையும் அவன் படைகளையும் விரட்டி பாண்டினைக் காத்தார். இவ்வாறு பாண்டியனுக்கு ‘சேவகம்’ செய்ததால் இறைவனுக்கு ‘சேவகத்தேவர்’ என்ற பெயரும் உண்டானது. வீரபாகு பாண்டியன் மீது வெஞ்சினம் கொண்ட விக்கிரம சோழன், பாண்டியனிடம் நட்பு பாராட்டுவது போல நடித்து, நச்சு தோய்ந்த ஆடை ஒன்றை தயாரித்து, தனது தூதுவன் மூலம் பாண்டியனுக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பினான்.

அம்மையப்பர் பாண்டியனின் கனவில் தோன்றி, ‘நாளை உனக்கு அன்பளிப்பாக வரும் ஆடையை என் மீது போர்த்து’ என உத்தரவிட்டார். அவ்வாறே வந்த ஆடையை பாண்டியன் சிவன் மீது போர்த்த கண்ணைக்கூசும் வெளிச்சத்துடன் அந்த ஆடை பற்றி எரிந்தது. பாண்டிய மன்னரை இம்முறையும் இறைவன் காத்தார். இதனால் இறைவனுக்கு ‘நச்சாடை தவிர்த்தருளிய தேவர்’ எனப் பெயர் வந்தது. பாண்டியனும் இறைவனுக்குப் புதிய கோயில் கட்டி, தினசரி வழிபாட்டிற்கும் ஏற்பாடுகளைச் செய்தான்.

இறைவன் மீது நச்சாடை போர்த்தியபோது எழுந்த பேரொளியால் பார்வை இழந்தான், அந்தத் தீச்செயலுக்குக் காரணமான சோழமன்னன். உடனே தான் செய்த தவறை எண்ணி வருந்திப் பெருமானுக்குப் பல திருப்பணிகள் செய்தான். தான் தங்கிய பாசறைக்கு ‘விக்கிரம பாண்டியன்’ எனப் பெயரிட்டு ‘சோழபுரம்’ என்ற ஊரையும் அமைத்தான். இறைவன் பேரருள் கொண்டு அவனுக்குப் பார்வையை மீட்டுக் கொடுத்தார்.

சோழனுக்கு ‘கண் கொடுத்த சிவனும்’, ‘கண் எடுத்த சிவனும்’ அருகருகே திருக்கொழுந்தீஸ்வர் ஆலயம் அருகே உள்ளனர். தனக்குப் பார்வை தந்தருளிய சிவனுக்கு சேத்தூரில் ஒரு ஆலயம் கட்டி வணங்கினான் சோழமன்னன். அது ‘திருக்கண்ணீசர் ஆலயம்’ என்றழைக்கப்படுகிறது. கோயிலுக்கு முன் மிகப் பெரிய தெப்பக் குளம். அதைக் கடந்தால் முகப்பு வாயில் வரவேற்கிறது. தொடர்ந்து உள்ளே நுழைந்தால் கொடிமர மண்டபம்.

அங்கே கோயில் உருவாக காரணமான சேத்தூர் ஜமீன்தார் ஆதி சின்மயத்தேவர், அவரது மனைவி மனோன்மணியம் ஆகியோரின் திருவுருவ சிலைகள் கைகூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகின்றன. அவர்களை நாமும் வணங்கியபடியே உள்ளே நுழைகிறோம். கொலு மண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கர்ப்பகிரகத்தில் சிவபெருமானை தரிசிக்கலாம். தானே தோன்றிய லிங்கம் அது. மூர்த்தி சிறியதுதான் ஆனால் கீர்த்தி பெரியது.

ஆகாயத்தலமான இந்த ஆலயத்தில் எம்பெருமான் அம்மையப்பராக, நச்சாடை தவிர்த்தருளிய சாமியாக, கருணையோடு நமக்கு காட்சியளிக்கிறார். கோயிலை வலம் வருகிறோம். தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி என இறை உருவங்களை கோபுரத்தைச் சுற்றி தரிசிக்கலாம். கன்னிமூல விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய அனைத்து தெய்வங்களும் பிரமாண்டமான உருவில் அமைந்துள்ளார்கள்.
 
எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இக்கோயில் வெளிச்சுற்று பிராகாரத்தில் உயரமான இடத்தில் திருக்கொழுந்தீஸ்வரரும், அருகே கண்கொடுத்த சிவன், கண் எடுத்த சிவன் இருவரும் கொலுவிருக்கின்றனர். அங்கிருந்து இறங்கினால் அம்மன் தவம் புரிந்த இடத்தைக் காணலாம். கோயில் தல விருட்சமான திருக்கொன்றை மரம் அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த மரத்தடியில்தான் அம்மன் தவமிருந்தாள் என்ற புராணம் நினைவுக்கு வர, அங்கேயே மெய்மறந்து நிற்கிறோம்.

கோயிலுக்கு முன்புறம் நாகலிங்க மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டி வருவோருக்கு இம்மரம் அந்தப் பேற்றினை அருள்கிறது. இந்த மரத்திலிருந்து நாகலிங்கப் பூவை பறித்து சுவாமி பூஜையில் வைத்துத் தருகிறார்கள். இதை பிரசாதமாக உட்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இந்த அருளைப் பெறுவதற்காக அனைத்து மதத்தினரும், வெளி மாநில பக்தர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
 
சோழனுக்கு கண்கொடுத்த, கண் கண்ட தெய்வம் அம்மையப்பர் என்பதால், அவரை தரிசித்து கண்நோய் தீர்ந்து செல்பவர்களும் பலர். நச்சாடை தன் மீது போர்த்தவைத்து பாண்டிய மன்னரை காத்தது போல, தன்னை அண்டி வந்தவர்களின் கடன் மற்றும் தீராத நோய்களைத் தான் ஈர்த்துக்கொண்டு பக்தர்களைக் காக்கும் பேரருளாளனாக இறைவன் திகழ்கிறார். 
 
இக்கோயிலில் சிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக் கணக்கில் இங்கே பக்தர்கள் கூடுகிறார்கள். தவிர, பிரதோஷம், கார்த்திகை, மாத வெள்ளிக்கிழமைகள், சோமவார (திங்கட்கிழமை) பூஜைகள் விமரிசையாக நிகழ்த்தப்படுகின்றன. மாசி மகம் அன்று அம்மன் தபசு நிகழ்ச்சிக்காக தேவதானம் முருகன் இங்கு வந்து தவமிருப்பது விசேஷமானது. ஐப்பசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் கந்த சஷ்டியும், ஏழாம் நாள் திருக்கல்யாணமும் குறிப்பிடத்தக்கவை. தைப்பூசத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும்.
    
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் உள்ள தேவதானம் கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆட்டோ வசதி உண்டு காலை 7 முதல் 10 மணி, மாலை 4 முதல் 7 மணிவரை கோயில் திறந்திருக்கும். கோயில் தொடர்பு எண்கள்: 9488752715, 9843546648. 

படங்கள்: பரமகுமார்.    

முத்தாலங்குறிச்சி காமராசு

ஓருடலாக ராகு-கேது!

திருப்பாம்புரத்தில் வண்டுவார்குழலி சமேத திருபாம்புரநாதர் ஆலயத்தில் ராகுவும், கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனி சந்நதியில் ஒரே சிற்பமாக எழுந்தருளியுள்ளார்கள். ராகுகாலத்தில் இச்சந்நதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுகின்றனர்.
   
தடைபட்ட திருமணம், புத்திரதோஷம், கடன் தொல்லை, காலசர்ப்ப தோஷம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாம்புரம் வந்து பாம்புரேஸ்வரர், வண்டார் குழலி, ராகு-கேதுவுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு இன்னல்கள் தீர்ந்து நலம் பெறுகிறார்கள். திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது திருப்பாம்புரம்.