அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்மா



மகாபாரதம் - 59

நகுஷன் என்கிற அந்தப் பாம்பினுடைய பிடி தளர்ந்தாலும் பீமன் தப்பித்துப் போகவில்லை. தன்னுடைய தமையனாருக்கும், அந்த சர்ப்பத்திற்கும் உண்டான வாதத்தை நின்றபடி மிகக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தான். ‘‘உடம்பினுடைய இந்திரியங்களில் மனம் பற்றிக் கொண்டிருக்கிறது. பற்றிக் கொண்டிருக்கிற மனம் அந்த இந்திரியங்களின் சுகத்தோடு உடம்பின் வெளியே வந்து அந்த சுகங்களுக்கான காரியங்களை, காரணங்களை தேடுகிறது.

அப்படி வெளியே கிளம்புகின்ற மனம் புத்தியின் துணையோடு போகிறது. எல்லா நேரமும் புத்தியினுடைய முழு ஆதரவும் மனதிற்கு கிடைத்துவிடுவதில்லை. இந்திரியத்தின் சுகமே மனதில் மேலோங்கி புத்தியினுடைய எச்சரிக்கையோ அல்லது தந்திரமோ மனதிற்கு எட்டாமல் போகிறது. வலிமையற்ற மனிதன் இந்த விஷயத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போகிறான்.

எவனுக்கு ஞானம் இருக்கிறதோ புத்தியைத் தவிர, இந்திரியத்தைத் தவிர, மனதைத் தவிர, வேறு ஒரு ஆத்ம ஞானம் இருக்கிறதோ அவன்தான் எளிதாக இதை தடுத்து நிறுத்தி எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறான்.’’ ‘‘எனக்கு முற்றிலும் புரியவில்லை. மனம், புத்தி இந்த இரண்டினுடைய லட்சணத்தைச் சொல்’’ என்று மறுபடியும் சர்ப்பத்தை தருமபுத்திரர் கேட்டார்.

புத்தியினுடைய குணம் மனம்.
புத்தியினுடைய விகசிப்பு மனம்.
புத்தியினுடைய விரிவாக்கம் மனம்.

இந்த புத்தி மனம் என்ற விஷயத்தோடு சேர்ந்து அலையாமல் ஆத்மாவோடு சேர்ந்திருப்பின் ஆத்மாவை சுற்றிக் கொண்டிருப்பின் அதனுடைய இயல்பு வேறுவிதமாக மாறிப் போகிறது. அப்படி சுற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் ஞானிகளும், பெரியோர்களும்  கட்டளையிடுகிறார்கள். மனதோடு லயித்திருக்காமல் ஆத்மாவோடு லயித்திருக்க வேண்டும். உள்ளே உன் உள் மனம் என்ன சொல்கிறது என்று இந்த புத்தி விசாரிக்க வேண்டும். ஆனால், பல நேரங்களில் புத்தி அதைச் செய்ய தவறிவிடுகிறது’’.

‘‘அற்புதமாகப் பேசுகிறாய் நகுஷா. இந்த விஷயத்தை இதைவிட எளிதாகச் சொல்கிறவர் எவரும் இல்லை.’’ ‘‘எது புத்தி, எது மனம் என்பதை ஒருவன் அமைதியாக இருந்து ஆராயத் துவங்கினால் அவனுக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கும். ஆத்மாவானது எங்கு இருக்கிறது, என்ன செய்கிறது என்று அறிய முடியும். புத்தியிலும், மனதிலும் மனதை நிலைப்படுத்தியவனுக்கு ஆத்மா மறைபொருளாகத்தான் இருக்கும்.’’

‘‘இவ்வளவு ஞானமுள்ளவனான நீ ஏன் சர்ப்பமாக பிறந்திருக்கிறாய். எந்த மோகத்தால் நீ இந்த இழிநிலையை அடைந்தாய்?’’ என்று கேட்டார். ‘‘உன்னுடைய அறிவுக்கும், நீ இப்பொழுது இருக்கின்ற இருப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே, இது வருத்தமுடையதாக இருக்கிறதே’’ என்று குரல் நெகிழப் பேசினார்.

பாம்பின் குரல் அதைவிட நெகிழ்ச்சியாக இருந்தது. ‘‘என்னுடைய சாபம் கலைவதற்கு என்று வந்திருக்கின்ற சாதுவே, தருமபுத்திரா, உன்னை வணங்குகின்றேன். முன்னொரு காலத்தில் நகுஷன் என்ற அரசனாக இருந்தேன். என் புத்தி மிகக் கூர்மையாக இருந்தது. எந்த விலங்கை பார்த்தாலும் அந்த விலங்கினுடைய சக்தி எனக்கு வந்து விடும். எந்த மனிதருடைய கூர்மையான அறிவும் எனக்கு புலப்பட்டு விடும்.

அவர்களுடைய பலத்திற்கு அதிகமான பலத்தை உடனடியாக நான் பெறுவேன். அப்படியிருந்த சௌகரியத்தினால் நான் மிகுந்த அகங்காரத்தோடு இருந்தேன். என்னிடம் தோற்றவர்களை நான் என்னுடைய அடிமைகளாக இருக்க வேண்டுமென்று சொன்னேன். என்னுடைய பல்லக்கை சுமக்க வேண்டுமென்று வற்புறுத்தினேன். நான் அநீதி செய்கிறேன் என்பதை என் புத்தி எனக்கு எடுத்துச் சொல்லவில்லை.

என் மனம் மயங்கிவிட்டது. புத்தியினுடைய விகசிப்பாக மனம் இது சரிதானே என்று அதை ஆமோதித்தது. மனம் புத்தியை பாராட்டியது. புத்தி ஆத்மாவின் அருகே போய் இல்லாது தன் விகசிப்பான மனதையே கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் நாம் செய்கின்ற காரியங்கள் தவறாகத்தான் போகும். புத்தியும், மனதும் நடுநிலையில் இல்லாதபோது எல்லா செயல்களும் குழப்பமாகத்தான் போகும்.

என் பல்லக்கை சுமந்து கொண்டிருந்த அகத்தியர் குள்ளமாக இருந்ததால், தள்ளாடியதால், தோள் கொடுத்து தூக்க முடியாமல் அவஸ்தைப் பட்டதால் அவரை எச்சரிக்க என் காலால் அவரை எட்டி உதைத்தேன். சர்ப்ப சர்ப்ப என்றேன். அந்த அந்தணர் திரும்பி, போ. சர்ப்பமாகப் போ என்று சினந்து கூறினார். அந்த க்ஷணமே என் உயிர் பிரிந்து கீழே பூமியில் சர்ப்பமாக விழுந்தேன்.

ஒரு பிராமணருடைய சாபம் மிகுந்த வலிமையுடையது. கற்றோருடைய ஞானம் மிகப் பெரிய வலிமையுடையது. அது எவரையும் கண்டிக்கின்ற தன் மையுடையது. அறிவிற்கும், மனதிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மாவிலேயே லயித்திருப்பவரை பகைத்துக் கொள்ளக் கூடாது. எனக்கு இது புரியவில்லை.

நான் சர்ப்பமாக கீழே விழும்போது, இதற்கு விமோசனமும் உண்டல்லவா என்று கேட்டபோது, அவர் உன்னுடைய பெயரைச் சொன்னார். இதோ நான் விமோசனம் பெற்றுவிட்டேன். உம்மோடு நான் பேசிக் கொண்டிருந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷம்தான் மறுபடியும் என்னுடைய வாழ்க்கையை எனக்கு நினைவுபடுத்தியது. ஆத்மாவில் லயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உன்னுடைய ேபச்சுதான் தூண்டியது.

இதனால்தான் எப்போதும் கற்றவருடைய சந்நிதானத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். விலங்குகளின் சந்நிதானத்தில்தான் நான் இவ்வளவு நாளும் வாழ்ந்தேன். வேட்டையாடிக் கொண்டும், மாமிசத்தை உண்டு கொண்டும், வஞ்சனைகள் செய்து கொண்டும் நான் உயிரோடு இருந்தேன். வெகு நாள் கழித்து இப்பொழுதுதான் சாதுவானவனும், ஞானமானவனுமான உன்னை சந்திக்கிறேன்.

உன்னைச் சந்தித்த இந்த க்ஷணமே எனக்குள் என் மனம், என் புத்தி என் ஆத்மாவோடு லயப்பட்டுவிட்டது. இந்த லயம் என் சாபத்தை விலக்கிவிட்டது. எனவே, தருமபுத்திரா, சகல நன்மைகளும் உனக்கு கிடைக்கட்டும். நீ நீடூழி வாழ்க’’ என்று ஆசிர்வதித்தது. பீமனும் கை கூப்பினான். மிகப் பெரிய விமானம் ஒன்று அருகே வந்து நிற்க, நகுஷன் கை கூப்பியபடி மனித ரூபத்தில் அதில் ஏறிப் போனான். பாம்பு துகளாக மறைந்து போயிற்று.

நகுல சகாதேவர்கள் பாஞ்சாலி இருக்கின்ற இடத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சுற்றி சில அந்தணர்கள் இருந்தார்கள். நடந்ததை நடந்தபடி பீமன் அவர்களுக்கு கூறினான். அந்த பிராமணர்களும், பாஞ்சாலியும், நகுல சகாதேவர்களும் வெட்கப்பட்டார்கள். கை கட்டி, தலை குனிந்து பீமன் தருமருக்கு முன் அடக்கமாக நின்றான். அவன் கண்களில் நீர் நிறைந்து கன்னம் வழிந்தது.

மெல்ல தருமர் பேச ஆரம்பித்தார். ‘‘பீமா, அர்ஜுனா, உடம்பு வலிவோ, அஸ்திரங்கள் வலிவோ நம்மை மேலேற்றாது. அது இழந்து போன ராஜ்ஜியத்தை திரும்ப கொடுக்கும் அல்லது கூந்தலை முடியமாட்டேன் என்று சொன்ன உன் மனைவியினுடைய சபதத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். மீண்டும் ஒரு சுகமான வாழ்க்கைக்கு நாம் நகர்ந்து போவோம்.

இந்த வனத்திலிருந்து நம்முடைய அஸ்தினாபுரத்திற்குப் போய் ஆட்சி செய்வோம். ஆனால், அது முடிவு அன்று அர்ஜுனா. அது முடிவில்லை சகோதரர்களே. இது முடிவல்ல பாஞ்சாலி. வேறொரு விஷயம் இருக்கிறது அந்தணர்களே. எவனொருவன் தன் புத்தியை, மனதை ஆத்மாவோடு இடையறாது சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறானோ, எப்பொழுதும் ஆத்மாவின் நினைவில் இருக்கிறானோ அவனால் செயற்கரிய காரியங்களை செய்ய முடியும்.

அவனால் இப்பொழுது இருக்கின்ற நிலைைய பக்குவமாக ஏற்றுக் கொள்ள முடியும். இனி வரப்போகின்ற நிலைமையையும் அழகாக எதிர்கொள்ள முடியும். செய்வது அனைத்தையும் மேலே ஒரு காரியம் செய்து கொண்டிருக்கிறது என்று ஆத்மா அறிவுறுத்தும். அந்த அறிவு இருக்கிறவரை அவனை எந்தத் துன்பமும் அசைக்காது. துன்பமில்லாத வாழ்வு என்பது இதுதான். மற்றபடி வனம் துன்பமா, நகரம் துன்பமா என்கிற பேதங்களெல்லாம் ஆத்மாவை அடைந்தவனுக்கு லட்சியமே இல்லை.’’

பாசுபதாஸ்திரம் கொண்டு வந்த அர்ஜுனனும், விலங்குகளை அடித்து நொறுக்கி, அரக்கர்களை கொன்ற பீமனும், துச்சாதனனால் கலைக்கப்பட்டு கேசத்தை விரித்துப் போட்டு, துரியோதனன் ரத்தத்தை தலையில் துடைப்பேன் என்று பெரும் சபதமிட்ட திரௌபதியும் தருமருக்கு முன்னே நாணினார்கள். அவருக்கு முன்னே ஒரு சிறு பிராணியாய் தன்னை உணர்ந்தார்கள். தருமபுத்திரர் சகல ஐஸ்வர்யங்களையும் தன்னிலே கொண்ட ஒரு மகானாக அந்த சகோதரர்களுக்கு நடுவே ஜொலித்தார்.

எது உத்தமமான விஷயம்? அஸ்திரங்களின் வலிவா, உடம்பு பலமா அல்லது வேறு ஏதேனும் சபதமா, அகங்காரமா, எதுவும் இல்லை. எப்பொழுது புத்தியும், மனமும் ஆத்மாவை நெருங்கி நிற்கிறதோ, எப்பொழுது புத்தி ஆத்மாவை சுற்றி இருக்கிறதோ அதுதான் முக்கியம். புத்தியின் விகசிப்பும், விவரிப்பும் மனம். அந்த மனதை நிறுத்தி, அடக்கி புத்தியானது ஆத்மாவிற்கு அருகே இருக்க வேண்டும். இதைச் செய்யத் தகாதவன் மனிதன் இல்லை என்கிறது நீதி சாஸ்திரம்.

புத்தி ஏன் மனதை அடக்கி ஆத்மாவில் லயிக்க முடியாமல் போகிறது என்ற கேள்வி வரும். இது தவறானவர்களின் கூற்று. ஆங்காரர்களோடும், அறிவற்றவர்களோடும் அதிகம் உணர்ச்சிவசப்பட்டவர்களோடும் நெருக்கமாக இருக்கையில் புத்தியானது கிளர்ந்து மனமாகி அம்மாதிரி செய்பவர்களே சரி என்று சொல்லும். புத்தி மனதின் போக்கை கட்டுப்படுத்தி அம்மாதிரி அறிவற்ற கூக்குரலிடுபவர்களிடமும் அல்லது முஷ்டி பலம் காண்பிப்பவர்களிடம் விலகி நின்று தன்னை உணரத் தலைப்படுகிறபோது... புத்தி என்ன என்று பார்க்கிறபோது புத்தி ஆத்மாவிற்கு அருகே போய்விடும்.

இதற்கு நல்லவர்களுடைய சகவாசம் மிகவும் தேவை. எவர் ஆத்ம தரிசனத்தை அடைந்தார்களோ அவர்களுடைய அண்மை வரும்போது புத்தியானது வெகு எளிதாக ஆத்மாவிற்கு அருகே வந்துவிடும். அது வெகு இயல்பாக நடக்கின்ற விஷயம். தானியங்கள் இறைக்கப்பட்ட இடத்தை பறவைகள் வந்து கொத்துவது போல அவைகளை வேறு எங்கும் தேடாது, இறைத்தவர் யார் என்றும் பார்க்காது. இறைத்த தானியத்தை வேகமாக கொத்துவது போல, அந்தப் பறவைகள் தானியத்தை உண்ணும்.

இறைத்தவர்கள் மிகக் கருணையோடு அந்தப் பறவைகளை பார்த்துக் கொண்டிருப்பார். பறவையினுடைய பசி தீர்ந்த பிறகு, யார் தானியத்தை தந்தது என்று சிலவை சிந்திக்கக் கூடும். இது ஒருவித தலையெழுத்து. ஒருவித வரம் என்பதும் உண்மை. மழைக்காலம் அருமையாகத் துவங்கிவிட்டது. மிகச்சரியான நேரத்தில் கோடைக்காலம் முடிந்து கருமேகங்கள் மேகமாக தைத்யவனத்தை சூழ்ந்து கொண்டன. பூமிக்கு மிக அருகில் வந்து பெரிய கூடாரங்களைப் போல கவிழ்ந்து நின்றன. இடியும், மின்னலும் அதிகமாக இருந்தது.

குளிர் காற்று வீசியது. மரங்களுக்கு உணவளிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தை அந்த கருமேகங்கள் ஏற்படுத்தின. காற்றினால் ஆடப்பட்ட தாவரங்கள் இந்த மழையை எதிர்பார்த்து மிக ஆவலாக அலைந்தன. சட்டென்று ஒரு சிறு மேகம் கலைந்து மழைத்துளிகள் வீச, பூமி சிலிர்த்து உயிர்பெற்றது. விழித்துக் கொண்டதுபோல பூமியின் அடியிலுள்ள தாவர வேர்கள் நெளியத் துவங்கின.

உள்ளே இறங்கிய நீரை வேகமாக உறிஞ்சின. அடித்தண்டிற்கு அனுப்பின. இன்னும் மேகங்கள் கீழ் இறங்க நல்ல இருட்டு ஏற்பட்டது. வெளிச்சமும், இருட்டும் கலந்த நிலை கண்ணுக்கு சுகமாக இருந்தது. தோலாடைகளை போர்த்தியபடி மலைக்குகையின் விளிம்பில் அமர்ந்தபடி இந்த இயற்கையின் ஆட்டத்தை பாண்டவர்கள் கண் கொட்டாமல் பார்த்திருந்தார்கள். ஐந்து வருடங்கள் பிரிந்திருந்த அர்ஜுனன் வந்து சேர்ந்த சந்தோஷத்தில் எல்லோரும் இருந்தார்கள்.

திரௌபதி அடிக்கடி அவனுக்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டாள். குளிரும், காற்றும் அவளை சிலிர்க்க வைத்து அவளை மேலும் அழகுபடுத்தியது. இப்போது மேகங்கள் மிக நிதானமாக தரை இறங்கின. கனத்த மழைத் துளிகள் தரையை தாக்கின. ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்றன்பின் ஒன்றாக தைத்ய வனத்தில் மேகங்கள் இறங்கிக் கொண்டிருந்தன. இரவும், பகலும் இடைவிடாது மழை பொழிந்து கொண்டிருந்தது. பூமி நீரை உறிஞ்சி குடித்தது. நதிகளில் நீர் வேகமாக ஓடிற்று. குளங்கள் நிரம்பின.

மீன்கள் துள்ளின. பறவைகள் மரங்களில் ஒடுங்கி மழை சற்று நிற்காதா என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தன. அடிக்கடி தலைநீட்டி வேடிக்கை பார்த்தன. முதலைகளும், ஆமைகளும் கரை ஏறி மழையை அனுபவித்தன. காட்டிலுள்ள சிங்கங்களும், யானைகளும், புலிகளும், நரிகளும் மழைக்கு பயந்து சுருண்டு ஒடுங்குகின்றன. பசிக்கு வேண்டுமென்ற மட்டும் அருகே ஓடுகின்றன. நீரை நாவால் நக்கி அனுபவித்தன.

இந்த மான்களும், மானை தின்ற சிங்கங்களும் ஏங்கின. குறுமுயல்களுக்காக நரிகள் மழையில் அலைந்தன. பசி தாங்காது யானைகள் மலையில் நனைந்தபடி கிளைகளை ஒடித்தன. மிருகங்கள் அஞ்சுகின்ற செந்நிற ஓநாய்கள் பதுங்கிப் பதுங்கி கூட்டம் கூட்டமாக மழையில் நனைந்தபடி வேடிக்கை பார்த்தன. படீரென்று உள்ளங்கைகளை சேர்த்து அறைந்ததும் பீமனுடைய அந்த வேகம் பார்த்து அவை சிதறி ஓடின. அவை வந்த விதமும், சிதறி ஓடிய விதமும் திரௌபதிக்கு ெபரும் சிரிப்பை உண்டாக்கியது.

எந்த கவலையுமின்றி, எந்த பொறுப்புமின்றி மழையை வேடிக்கை பார்ப்பதற்கு பிறந்தது போலவே இங்கு உட்கார்ந்திருக்கிறோம் என்று தருமருக்குத் தோன்றியது. நகரம் என்ற ஒரு இடத்தில் சுற்றி செங்கற்களால் சுவர்கள் கட்டிக் கொண்டு கூரை வைத்துக் கொண்டு பத்திரமாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுவதற்காக ஏதோ ஒரு விதத்தில் வாழ்கிறோமே, இந்த சுகம் அங்கு வருமா, இதுவல்லவா காட்சி.

உலகத்தில் எந்த உயிரும் மழைக்கு அஞ்சி வீடு கட்டிக் கொள்ளவில்லையே. நாம் மட்டும் ஏன் என்று எண்ணம் தோன்றியது. மழை சற்று அடங்க நாலாவிதமான பறவைகளின் ஒலியும் கேட்டன. வெளியே கிளம்புகின்ற பூச்சிகளை, புழுக்களை தின்பதற்காக இடதும், வலதுமாக பறவைகள் அலைந்தன. மயில்கள் அகவின. கிளிகள் பேசும் சத்தம் வேத கோஷம்போல இருந்தது. மழை நின்றதும் அவர்கள் வெளியே வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

நதியில் பிரப்பங் கொடிகள் அலைந்து ஆடின. வெள்ளியை உருக்கியதுபோல தெள்ளிய நீர் நதியில் ஓடியது. சிறு சிறு ஓடைகள்கூட காலை பலமாக இழுத்தன. சில நாட்கள் மழையிலேயே பூக்கள் திமிறித் தெரிந்தன. மான்களினுடைய ஓட்டமும், உணவு உண்பதும் பார்க்க சந்தோஷமாக இருந்தது. நீரின்றி உலகம் இல்லை என்பதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். ஒவ்வொரு உயிரும் நீருக்கு தவித்து அதை விதம் விதமாக அனுபவிப்பதை அதிசயத்தோடு பார்த்தார்கள். மழைக்காலம் மெல்ல பின் வாங்கியது. வெளிர்ந்தது.

சரஸ் ருது ஆரம்பமாகியது. வெயிலின் தாக்கத்தால் உலர்ந்து மரங்கள் நீர் உண்டு கிளர்ந்து இப்போது மெல்லிய வெயில் அடிக்க அதையும் உண்டு பச்சையம் ஏற்படுத்தி பூக்களை மலர்வித்தன. எல்லா திசையிலும் அழகு ததும்பி நின்றது. பாண்டவர்கள் தைத்ய வனம் விட்டு காம்ய வனம் போனார்கள். காம்ய வனம் இதே மழையில் நனைந்தும், பின்னிப் பிணைந்த செடி கொடிகளோடும், எவரோ நடந்து போன பாதைகளோடு அமைதியாக இருந்தது.

முன்னே பீமன் போக, பின்னே அர்ஜுனன் நடக்க, தருமபுத்திரர் அதற்குப் பின்னே வர, திரௌபதி அவர் பின்னே நடக்க, நகுல சகாதேவர்கள் பின்னே நாண் ஏற்றிய வில்லுடன் காவலுக்கு வர அவர்கள் எந்தக் கவலையும் இன்றி அங்கங்கே கிடைத்த கறிகளையும், காய்களையும் கைகளால் நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு சுத்தமான நீரைப் பருகி, முகம் துடைத்து அமைதியாக நடந்தார்கள். காம்ய வனத்தின் மத்தியப் பகுதியை அடைந்தபோதே அவர்கள் வருகையைத் தெரிந்து சுற்றும் முற்றும் தவத்தில் ஈடுபட்ட பிராமணர்கள் அவர்களை நோக்கி வந்தார்கள்.

சிறிய குடிசைகளில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களை உள்ளே வரச் சொன்னார்கள். ஆனால், வரிசையாக உள்ள குடிசைகளுக்கு எதிர்புறமுள்ள மேடையில் பாண்டவர்கள் அமர்ந்து கொள்ள, ஒரு அந்தணன் அருகே வந்து ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களைப் பார்க்க வரப் போவதாகச் சொன்னார். சில அந்தணர்களுக்கு இந்த மாதிரி குறிப்புகள் ஏற்படும். கிருஷ்ணர் கிளம்பிவிட்டார் என்றும், இன்ன தூரத்தில் இருக்கிறார் என்றும் அவர் தெளிவாகச் சொன்னார்.

அதுவரை புருஷர்களுடைய நெருக்கத்தில், உரையாடலில் அவர்களுக்கு அண்மையில் பயமின்றி அமர்ந்து இயற்கையை ரசித்த திரௌபதி சட்டென்று தன் குழந்தைகளைப் பற்றி எண்ண ஆரம்பித்தாள். அவளுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் துவாரகாவில் கிருஷ்ணருடைய பராமரிப்பில், பலராமருடைய மேற்பார்வையில் வாழ்ந்து வந்தார்கள். அங்கிருந்த அபிமன்யு வில் வித்தையில் சிறந்த வீரன். அவன் பஞ்ச பாண்டவர்களின் குழந்தைகளுக்கு வில்வித்தை கற்பித்து வந்தான்.

குழந்தைகளைப் பற்றிய துக்கம் வர திரௌபதி சற்றுத் தனியே வந்து கிருஷ்ணர் வரும் திக்கை நோக்கி காத்திருந்தாள். ஒரு தாயின் தவிப்பை அந்தப் புருஷர்கள் புரிந்து கொண்டார்கள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தார்கள். பரந்த புல்வெளிகளுக்கப்பால் தேரின் கொடி பறக்க குதிரைகள் விரட்டும் சத்தம் கேட்டது. கிருஷ்ணர் வருவது தெரிந்தது. சகலரும் எழுந்து அந்த திக்கை நோக்கி கை கூப்பி நின்றார்கள்.

தேரிலிருந்து தாவி இறங்கிய கிருஷ்ணர் வேகமாக நடந்து வந்து தருமரையும், பீமனையும் முறைப்படி நமஸ்கரித்தார். இரண்டு கைகளையும் விரித்து அர்ஜுனனை அருகே அழைத்தார். இறுக தழுவிக் கொண்டார். தலையை கோதிவிட்டார். கன்னங்களில் முத்தமிட்டார். தோள்களை பிடித்துவிட்டார். உள்ளங்கைகளில் சேர்த்துக் கொண்டார். மறுபடியும் இழுத்து அணைத்துக் கொண்டார். சிவனின் தரிசனம் பெற்றவனல்லவா. கடும் வைராக்கியத்தில் தவம் செய்து பல அஸ்திரங்களை பெற்றவனல்லவா.

இவன் அஸ்திரம் வாங்கிய கதை உலகம் முழுவதும் தெரிந்துவிட்டதே. எப்பேர்பட்டவன் என் நண்பன் என்று பெருமிதத்தோடு அவன் முகத்தை கையில் ஏந்திப் பார்த்தார். அர்ஜுனன் அந்த அன்பு தாங்காமல் கண்ணில் நீர் பெருக்கி நாக்குழற நின்றான். எல்லா விதத்திலும் தன்னுடைய சிறந்தவரான கிருஷ்ணர் தன்னை மௌனமாகப் பாராட்டுவதைப் பார்த்து வெட்கமடைந்தான். அவன் சகோதரர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்களுக்கு கிருஷ்ணர் என்பவருடைய பலம் தெரியும்.

அர்ஜுனனை விட்டுவிட்டு அவர் நகுல சகாதேவர்களை கட்டிக் கொண்டு கொஞ்சினார். அவர்கள் எல்ேலாரையும் மறுபடியும் தடவி ஆனந்தித்தார். திரௌபதியை அருகே அழைத்து அவள் தலையை கோதிவிட்டார். பெற்ற பெண்ணை கொண்டாடுவது போல கன்னம் தடவி, காது இழுத்து, தோள் அணைத்து உச்சி முகர்ந்து, உள்ளங்கையை பலமுறை அவள் தலையில் வைத்து ஆசிர்வதித்தார். கண்கள் நீர் கட்ட அவள் கை கூப்பி கிருஷ்ணரை பார்த்தாள். அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பது கிருஷ்ணருக்குத் தெரிந்தது.

‘‘உன் குழந்தைகள் துவாரகாவில் செளக்கியமாக இருக்கிறார்கள். எந்தக் குறையும் இல்லை. அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் ருக்மிணியின் மேற்பார்வையில் அபிமன்யு செய்து கொண்டிருக்கிறான். குதிரை ஏற்றம், யானை ஏற்றம், ஈட்டி எறிதல், வாள் சண்டை, வில் பயிற்சி என்று சகலமும் மிக முறையாக நடந்து கொண்டிருக்கிறது. உன் குழந்தைகள் உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்களைச்சுற்றி என் குழந்தைகள் அவர்களுக்கு எந்தத் துக்கமும் நேராதவாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

உங்களைப்பற்றி பிரிவுத் துயரம் ஏற்படும்போது சமாதானம் செய்கிறார்கள். ருக்மிணி அவர்களுக்கு உங்களின் வைராக்கியத்தையும், வீரத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிற மிகப் பெரிய காரியத்தையும், நீங்கள் உலகப்புகழ் பெறப் போவதையும் அவர்களுக்குச் சொல்லி ஆறுதல் அளிக்கிறாள். உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல. ருக்மிணியின் இந்த உரையாடலை என் குழந்தைகளும் கேட்கின்றார்கள். ஏன், நன்கு வளர்ந்த அபிமன்யு கூட இது குறித்து அவளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறான்.

உன்னுடைய குழந்தைகளின் வருகையால், அவர்களின் இருப்பால் என் துவாரகா மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் இருக்கிறது. என் குழந்தைகளுக்கு கூடுதலான அறிவு கிடைக்கிறது. ருக்மிணி இது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கிறாள். ருக்மிணியின் பேச்சுக்கு அபிமன்யு அவர்களுக்கு கூர்மையாக பயிற்சிகள் செய்விக்கிறான். எனவே, உன்னுடைய குழந்தைகள் பற்றிய எல்லா கவலைகளையும் இப்போதே இந்த காம்ய வனத்தின் மழைநீரில் விட்டுவிடு’’ என்று சொல்ல, அவள் அழுகையும், சிரிப்புமாக கிருஷ்ணரை நோக்கி கரம் குவித்து வணங்கி அவர் பாதம் பணிந்தாள்.

பாண்டவர்கள் எல்லோர் முகத்திலும் திருப்தி இருந்தது. திரௌபதி என்கிற ஒரு தாய் கிருஷ்ணனே கதி என்று வணங்குவதைப் பார்த்து நெகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த கிருஷ்ணர் இல்லாவிட்டால் வாழ்வு என்ன ஆகும் என்ற எண்ணமும், அதைத் தொடர்ந்த மிகப் பெரிய நன்றியறிதலும் அவர்களுக்கு ஏற்பட்டன.

அவர்களையும் அறியாமல் அடிக்கடி அவர்கள் கிருஷ்ணரை நோக்கி வணங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வணக்கங்களை கிருஷ்ணர் புன்சிரிப்புடன் ஆமோதித்தார். நெகிழ்ந்து நிற்பவர்களைத்தான் கடவுளுக்கு பிடிக்கும். தன்னை மறந்த பணிவுதான் மனிதர்களுக்கு உன்னதம். அதே நேரம் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பூமியில் வாழ்ந்த மார்க்கண்டேய மகரிஷி காம்ய வனத்திற்கு வந்தார்.

அத்தனை வயது வாழ்ந்தாலும் அவர் முப்பது வயது இளைஞனைப் போலவே அகலமான மார்பும், அடர்த்தியான தலைமுடியும், உறுதியான முகவாயும், அழுத்தமான நடையும், பலமான கைகளுமாய் இருந்தார். அந்த முனிவரைக் கண்டதும் ராஜ்ஜியத்தைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் உண்டான விசாரிப்புகள் போய், முனிவரிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று பாண்டவர்கள் மனம் பரபரத்தது.

யுதிஷ்டிரருக்கு எப்போதுமே இருக்கின்ற துக்க குணம் மார்க்கண்டேயரைப் பார்த்ததும் அதிகரித்தது. ஸ்ரீ கிருஷ்ணர் அண்மையில் இருந்ததால் மௌனமாக இருந்தார். அப்போது நாரதரும் அங்கு வந்து சேர்ந்தார். மிக நல்ல ஒரு சத்சங்கம் ஏற்படுகின்ற இடங்களிலெல்லாம் நாரதர் வந்துவிடுகிறார். தருமபுத்திரர் தன்னைப்பற்றி பேசுகிறபோது அதற்கு மார்க்கண்டேயர் கொடுக்கின்ற பதில், அதிலும்  கிருஷ்ணருக்கு முன்னால் கொடுக்கின்ற பதில் உலகத்தோருக்கு மிகச் சிறந்த பாடமாக இருக்கும் என்று எண்ணினார். எல்லோரும் தருமபுத்திரரை பார்த்திருக்க, தருமபுத்திரர் தயங்கிக் கேட்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

பாலகுமாரன்