மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சி!



ஆன்மிகம் இதழ் வெளியிடும் கட்டுரைகள் அறிவைத் தூண்டும் வகையில் உள்ளன. ஆன்மிக உணர்வு, அறிவுபூர்வமானது என்பதை
அறிந்தேன். தங்கள் ஆன்மிகப்பணிக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
- கே.ஜகன்நாதன். சேலம்.

தமிழ்நாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த பல கல்வெட்டுகளில் கணபதி வழிபாடு குறித்த வரலாற்றுப் பதிவுகள் இருந்திருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமான தகவல்களுடன் தொகுத்து வழங்கப்பட்டகட்டுரை எங்களுக்குக் கிடைத்த விநாயகர் சதுர்த்தி பரிசாகும். தெய்வீகப் புலவர் ஐயன் திருவள்ளுவர் எழுத்தாளர்களை அன்றே முதன்மைப்படுத்தி கெளரவப்படுத்தியிருப்பதை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் விவரித்த கட்டுரை சொல்லேர் உழவர்களான எழுத்தாளர்களைப் பெருமைகொள்ள வைத்தது.
- அயன்புரம் சத்தியநாராயணன்.

சித்தி புத்தி சமேத ஸ்ரீகணேசரின் அழகிய அட்டைப்படம் வெகு அழகாக இருந்தது. விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியான தகவல்கள், திருக்கோயில்கள் யாவும் அற்புதம். தெளிவு பெறுஓம் பகுதி வாழ்க்கையின் அர்த்தத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறது.
- இரா.கல்யாணசுந்தரம், வேளச்சேரி.

வியாபாரம் செழிக்க வைக்கும் ஓட்டை பிள்ளையாரின் படமும், கணபதி அக்ரஹாரம் பிள்ளையாரின் படமும் கண்களைக் கவர்ந்தன. கல்வெட்டில் கணபதி வழிபாட்டு சரித்திரம் பல அற்புதமான தகவல்களை வாரி வழங்கியிருந்தது.
- கே.சிவகுமார், சீர்காழி.

முயற்சி, உழைப்பு, கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடாமல் முன்னேற முயற்சிப்பது இது மனிதனின் கடமை. கூடவே வெற்றி பெறுவதற்கு இறைவனின் கருணையும் வேண்டும் என்பதை முதல்பக்கத்தில் பொறுப்பாசிரியர் நினைவூட்டியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

விநாயகர் பக்தி ஸ்பெஷல் அட்டைப்படம் மிக மிக போற்றத்தக்கதாக இருந்தது. மேலும், விநாயக சதுர்த்தி சமயத்தில் விநாயகரைப் பற்றிய பலதகவல்களை வாசகர்கள் அறியும் வாய்ப்பு கிடைக்க வைத்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
- ஜி.சுப்ரமணியன். திருச்சி.

முகப்பு வண்ணப்பட பிள்ளையார், மங்கலம்பேட்டை ஓட்டை பிள்ளையார், தஞ்சாவூர் கணபதி அக்ரஹார பிள்ளையார், மருத்துவக்குடி விருச்சிகப்பிள்ளையார், பற்றாக்குறைக்கு 12 ராசிகளுக்கும் 12 பிள்ளையார்கள், செண்பகபுரம் பிள்ளையார் என விநாயகர் பக்தி ஸ்பெஷலுக்கு அற்புதமாக மெருகூட்டிவிட்டீர்கள். வாழ்க உங்கள் தொண்டு.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்தினால் ஆலயத்துள் உறையும் இறைவன் நம் அகத்தில் குடிபுகுவார். அதற்கு யாரையும் பழிக்காத வாக்கு, வெறியற்ற உள்ளம், வன்முறையில்லாத நற்செயல் இந்த உயர்குணங்களை மனிதகுலம் பின்பற்றினாலே போதும் இறைவனின் கருணை மழையில் நாளு(மு)ம் நனையலாம். மாசடைந்த நெஞ்சங்களை வெளுக்கும் மை.பா. நாராயணன் வழங்கும் ஞான ஒளியில் அறியாமை, குரோதம், வன்மம், பொறாமை, காமம், மோகம் போன்ற தீயகுணங்கள் எரிந்து சாம்பலாகின்றன. மனிதனை மாமனிதனாக்கும் ஆன்மிக அன்பர்கள் மட்டுமல்லாது, பாமர மக்களுக்கு நல்லதொரு பக்திச் சொற்பொழிவைக் கேட்ட திருப்தியைத் தருகிறது.
- பொன்.நடேசன். சின்னஐய்யம்பாளையம்.

எதைச் செய்தாலும் சிறப்பாகவே செய்து வரும் உங்களுக்கு நன்றி பல. பலரின் வியாபார ஓட்டையை அடைக்கும் ஓட்டை பிள்ளையாரின் மகிமையே மகிமை. பிள்ளையார் சதுர்த்தி பூஜை நேரம் காலை 10.30க்கு முன் என்று இருந்திருக்கவேண்டும்.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.