மலையப்பஸ்வாமி மகிமை பாடுவோம்



1. திருப்பதி மகிமை நினைந்துருகினால் ஜீவன்முக்தி
திருமலையை கைதொழுதால் வீடுபேறு
வேங்கடன் நாமம் பாவம் போக்கும்
வேண்டியவர்க்கு வேண்டியது கிடைக்கும்
சதுர்புஜம், சங்குசக்ரம் அபயஹஸ்த தரிசனம்
சங்கடம்யாவும் சூரியன் கண்ட பனியாகும்!
மேகம் கீழிறங்கி கோபுரத்தை வணங்கும்
நீலமேகன் கருணை மழையாய் பொழியும்
பக்தர் கூட்டம் இரவுபகல் அலையாகும்
பகவான் அருள் நாளுமொரு கலையாகும்!

2. புரட்டாசி புரட்டிப்போடும் என்பது வெறும்வாதம்
புரட்டாசி, மார்கழி இரண்டுமே திருமாதம்!
குளிர்காலை எழுந்து பொய்கை நீராடி
செந்தளிர்பாதம் தொழுது அங்கப்பிரதட்சணம் செய்து
கேசவா, மாதவா, கோவிந்தா கீர்த்தனைகள்
கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் திருமலை வைகுண்டம்!
அழகன் அருகில் அருந்தவத்தாய் அலமேலுமங்கை
அன்பர் கோரிக்கை பரிந்துரைக்கும் கருணை நங்கை!
வெள்ளையுள்ளம் வெண்ணையாகும்
கண்ணனுக்கு
வெற்றி தரும் பரந்தாமன் பாதம் போற்றுவோம்!

3. மயக்கும் மாயன் கண்கள் சூரிய, சந்திரர்
மறைப்பதை பறிப்பது மாலவன் கொள்கை!
திருப்பம், விருப்பம் வாழ்வில் கைகூடும்
திருமால் மகிமையை யார் அளவிடக்கூடும்!
ஆகாசகங்கை, பாபநாசம் மேற்பதி நீர் விழுந்து
அகண்ட பொற்பாதம் தேடி பக்தியில்
சரணடையும்!
பனிசூழ்ந்த இளம்சோலை பச்சைமால்
பேர் பாடும்
கனியும், மலரும் கலியுகவரதன் காணிக்கையாகும்!
மணிமுடிசெல்வன் மலரடி போற்றி பணிந்திடுவோம்
அணிமேனி சுடர்விடும் ஆயவன் தாள்
வணங்கிடுவோம்!

4. வெண்நிலவு முகம் வேங்கடன் மீது வேட்கையானது
தண்நிலவு தாயார் பத்மாவதிக்கு ஏக்கமானது
விண்ணாகி, மண்ணாகி, வானாகி, வளியாகி
பெண்ணாகிய ஸ்ரீதேவி, ஸ்ரீதரன் நெஞ்சமர்ந்தாள்!
மாதவன் செய்த மாதவம் மாதவியோ-அல்ல
மாதவி செய்த மாதவம் மாதவனோ!
மங்கை மகிழ்ந்தால் மங்கலம் சூழும் வீட்டில்
மாமங்கை குளிர்ந்தால்
தர்மம் மேவும் நாட்டில்!
பெருமாள் பெருமைகள்
ஏற்றிடுவோம் போற்றி!

5. மெய்யுணர்வு என்பது உண்மை அறிதல்
மெய்யும், பொய்யும் மயக்கத்தில் உலகம்!
ஞானம் என்பது தன்னை
அறிதலாம்
தன்னை அறியும் தவமே தாமோதரன் பூசனை!
தவமெனும் பொறுமை கொண்டுவரும் கோடிசுகம்
பூபாலன் குழலிசை பூபாளம் கேட்டு
பசுக்கள் தானாக பால் சொரிந்து இன்புற்று
பக்தியில் பசித்த அடியார் மனம்போல்
திளைக்கும்!
பகைவர் நடுங்கும் பாஞ்யசன்யம் -சரணடைந்த
பக்தர் பயம் நீக்கி அருள் கொடுக்கும் பத்மநாபன்!

6. தினமொரு வாகனத்தில் காட்சி தரும்
திருமலைவாசன்
திருவீதியெங்கும் மலர்மாவிலை தோரண அலங்காரம்
தேவர்கள், அடியார்கள், பக்தர்கள் கண்ணாற அமுதம் பருக
தேரோடும் பாதையில் காத்திருக்கும் அற்புதகாட்சி
கோலாட்டம், ஒயிலாட்டம், கோபியர் வண்டாட்டம்
கோகுலத்து கோபாலன், திருமலையில்
கோவிந்தன்!
திருமால் திருவிளையாட்டு தீராத துன்பம் தீர்க்கும்
திருமலையப்பன் அருள் சொர்க்கம் சேர்க்கும்!
ஏழுமலையம்பதி நினைத்தால் மாறும் எழுதியவிதி
எல்லாம் அவன்செயலென சரணடைந்தால் நற்கதி!

7. தூயரத்தின மணற்பரப்பாகிய திருப்பாற்கடல் நாயகன்
மாய முத்துகள் அலங்கரித்த ஆசனத்தில் அமர்ந்து
காயம் குளிரும் ஸ்படிகமணி தேகம் ஒளிர
பூமி பாதம், வானம் நாபி, வாயு பிராணன்
சூரிய, சந்திரர் நேத்ரம், அக்னி வாயாக
சமுத்திர வயிற்றில் மூவுலகை அடக்கிய
சாந்த வடிவினன், பாம்பனை பள்ளி கொண்டு
பிறவி துன்பம் துடைத்து அருளும்
மகாவிஷ்ணு!
விரும்பும் அனைத்தும் அள்ளித்
தரும் சீதாராமனின்
கரும்பான நாமத்தை நாமும் பாடுவோம்!

8. பரிசுத்த மனதை வாசுதேவனிடம் கொடுத்து
பரந்தாமா, அச்சுதா, ஜனார்த்தனா, அநிருத்தாவென
பகவத் நாமத்தை பாராயணம் செய்தோரிடம்
குறையா செல்வம், புகழ், வெற்றி சேரும்!
பயம் ஒழிந்து தைரியம், தெளிவு பிறக்கும்
நோய்கள் தீர்ந்து ஒளியுண்டாகி குணம் மேம்படும்
கோபம், பொறாமை, பேராசை விடுபடும்
பஞ்சபூதங்கள், யோகபாக்கியம், பித்ருகள் அருள்
பெறுவர்
கேள்விஞானம், யோகம், வித்தை சித்திக்கும்
கோவிந்தனை கொண்டாடி நலம் பெறுவோம்!

9. பாரளக்கும் பரந்தாமன் பரமனடி சரணம்
தேரில் திருவலம் வரும் தர்மதேவன் சரணம்
வேர் பழுத்த கனிச்சுவை கலை செல்வன் சரணம்
மார்பில் மங்கையை வைத்த மணிவண்ணன் சரணம்
நித்ய சுகம் தரும் நின்றொளிர் நாயகன் சரணம்
சத்ய வழிகாட்டி காக்கும் கண்ணா சரணம்
வித்தில் விருட்சம் வைத்த விந்தனே சரணம்
விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா சரணம்
கடல்மனதில் ஆசை அலை அறுப்பவன் அடிபற்றி
மடல் வரைவோம் ராமஜெயம் வளங்கள்
பெருகும்!

10. உயிர்கள் வாழ, பயிர்கள் வளர, பசுமை செழிக்க
பிணிகள் நீங்க, பணிகள் ஓங்க லட்சுமிபதி
அருள்வாய்!
மக்கள் வாழ, மனிதம் சிறக்க, மனம் பண்பட
சொல் நிலைக்க, சொந்தம் நிலைக்க, சவுமிய பெருமாள் வருவாய்!
காலத் திரையின் பின்னால் ஒளிந்து விட்ட
நீதி, நியாயம், தர்மத்தை மீட்டுத் தருவாய்!
கரிக்கருளிய கார்மேகன் கருணைக்கு
காத்திருப்போம்
நரிபுத்தி நயவஞ்சகர் செயல்கள் பொறுத்திருப்போம்!
நற்புத்தி பிறக்க நாராயணன் நாமங்கள்
உச்சரிப்போம்
நரகம் தவிர்த்து நற்கதியடைய பாதங்கள்
சரணடைவோம்!

- விஷ்ணுதாசன்