சோறு வேண்டுவோர் சேற்றூருக்குச் செல்லுங்கள்!



சேத்தூர் ஜமீன்தார்

ஜமீன் கோயில்கள்

பாரம்பரிய சிறப்பு மிகுந்தவர்கள் சேத்தூர் ஜமீன்தார்கள். சேத்தூர் மற்றும் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட தேவதானம் பகுதியில் மிக அதிகமாக கோயில்கள் அவர்கள் அரவணைப்பில் தற்போதும் பொலிகின்றன. அந்த கோயில்களுக்கான திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை அவர்களது வாரிசுகள் முன்னின்று செம்மையாக நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் வட்டத்தில், ராஜபாளையம்-தென்காசி நெடுஞ்சாலையில். தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சேத்தூர். இது சேறையம்பதி சதுரகிரி மலைக்கும், திரிகூடமலைக்கும் நடுவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை அரணாகக் கொண்டு  அமைந்துள்ளது. சேத்தூர் ஜமீனுக்கு உள்பட்ட ஊர்கள் வளமிகுந்த நல்லூர்கள், செல்வம் கொழிக்கும் பொன்னூர்கள். எனவேதான் இங்கு வாழ்ந்த ஜமீன்தார் தாம் சீரும் சிறப்புமாக வாழ்ந்ததோடு, அவ்வாறு தம்மை வாழவைத்த இறைவனையும் அவர் குடிகொண்டிருந்த ஆலயங்களையும் போற்றினர்.

‘சோணாடு சோறுடைத்து’ என்பது பழமொழி. ஆனால், ‘சோற்றுக்கு அலைந்தவர்கள் சேற்றுருக்குச் செல்லுங்கள்’ என்பது இப்போதைய புதுமொழி. இது மெய் என்று உலகிற்கு பறைசாற்றும்விதமாக சேத்தூர், பச்சைபசேலேன்று காட்சியளிக்கிறது. ‘சேற்றூர்’ என்றும் ‘போற்றூர்’ என்றும் இலக்கியங்கள் இவ்வூரை பாராட்டுகின்றன. சேற்றூர்தான் சேத்தூர் என்று மருவிவிட்டது என்கிறார்கள். சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1162) மாறவர்மன் குலசேகரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், தர்மப் பெருமாள் குலசேகர பாண்டியன் ஆகியவர்களின் கல்வெட்டுகளால் ‘சேறை நகர்’ என்றும் ‘சேரூர்’ என்றும்  அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் குலசேகரபாண்டியனால் வியாபார ஸ்தலமாக நிறுவப்பட்டதனால் ‘குலசேகரபுரம்’ என்ற பெயரும் உண்டு. இன்றும் சேத்தூரில் மேட்டுப் பட்டியில் ‘சந்தைக்கடை’ என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது. தென்பாண்டி நாட்டில் அடிக்கடி எதிரிகள் தாக்குதல்  நடந்து வந்தது. அதை அடக்க சின்மயத்தேவர் தலைமையில் ஒரு படையை தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார் மன்னர் பராக்கிரம பாண்டியர். சேத்தூருக்கு மேற்கே அவர்கள் ஒரு கோட்டையைக் கட்டினர்.

அது சின்மயன்கோட்டை என்றழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் பந்தள நாட்டின் தளபதியான திருவநாதன் பெரும் படையுடன் வந்தான். அவனைப் போரிட்டு வென்றார் சின்மயத்தேவர். அதற்குப் பரிசாக பாண்டிய மன்னர் அந்த பகுதியை அவருக்கு வழங்கி அவரை திசைக்காவலராக நியமித்தார். இவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலேயே தங்கி விட்டார். இந்தப் பாளையத்தின் முதல் குறுநிலமன்னர் இவர்தான். இவர் ஆதிசின்மயத்தேவர் என்றழைக்கப்பட்டார்.

இவர்தான் தேவதானம் பெரிய கோயிலை கட்டியவர். இவரையும் இவரது மனைவி மனோன்மணி நாச்சியாரையும் கோயில் வளாகக் கல்தூணில் சிலைகளாக வடித்து மரியாதை செய்திருக்கிறார்கள். இவர் காலத்துக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து, சேத்தூர் தனி ஜமீனாக மாறியது. கடைசி பட்டங்கட்டிய ஜமீன்தார் வடமலை திருவநாத வணங்காமுடி சேவுகபாண்டியன் என்பவராவர். இவர் 1973 வரை ஆட்சி செய்தார்.

இவர்களது வாரிசுகள்தான் தேவதானம் பெரிய கோயிலில் அறங்காவலர்களாக இருந்து அறப்பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது சேத்தூர் ஜமீன்தார் திரு வி.டி.எஸ்.டி. துரைராஜசேகர் அறங்காவலராக இருந்து திருவிழாக்களை பக்தி மேம்பாட்டோடு மேற்கொண்டு வருகிறார். தேவதானம் மற்றும் சேத்தூர் பகுதியில் திரும்பிய இடங்களிலெல்லாம் ஜமீன்தார்கள் பூஜை செய்த கோயில்கள் உள்ளன. இவற்றில் மிகச்சிறப்பானது, அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலாகும். விருதுநகர் மாவட்டத்தில் பஞ்சலிங்கத் தலங்கள் உள்ளன. இவற்றில் ஆகாயத்தலமாக விளங்குவது தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சிவபெருமான் கோயில்தான்.

இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்புவாகக் கோயில் கொண்டிருக்கிறார். கன்னி மூலையில் குன்றின் மேல் அமைந்துள்ள திருமலைக் கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பானது. உமாதேவி தவக்கோலத்தில் இங்கு எழுந்தருளி ஈசனை வழிபாடு செய்துள்ளார். அதற்கான தடயங்களை இங்கே காணலாம். தேவர்கள், முனிவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த ஈசனை வழிபட்டுள்ளார்கள்.
 
பல சிவாலயங்களில் நாகலிங்க மரம் காணப்படும். ஆனாலும், இத்திருக்கோயிலில் காணப்படும் நாகலிங்க மரம் பிரசாத மரமாகவே பாவிக்கப்படுகிறது. ஆமாம், குழந்தைப் பேறு இல்லாதோர் இந்த நாகலிங்க மலரை பாலில் கலந்து சாப்பிட்டால் அப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது! மருத்துவ ரீதியாக கூட குழந்தை பாக்கியம் கிட்டாத பெண்மணிகள் இந்த நாகலிங்க மலரை உட்கொண்டு குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

இந்த ஆலயம், தேவதானம் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. திருக்கோயிலுக்கு அரசர் தேவபணிக்காக நிலத்தினை தானம் செய்த காரணத்தினால் ‘தேவதானம்’ என்று பெயர் வழங்கப்படுவதாக ‘ஊரும்பேரும்’ நூலில் டாக்டர். ஆர்.பி.சேதுப்பிள்ளை  கூறுகிறார். தேவர்கள் வந்து பெருந்தவம் புரிவதால் ‘தேவதானம்’ எனப் பெயர் பெற்றது என்று ‘சேறைத்தல புராணம்’ கூறுகிறது. தேவதானம் என்ற இத்தலத்திற்கு “அம்பிகாபுரம்” “மந்தாகினிபுரம்” “பராசகேந்திரம்” “ மகுலா புரம்” என்ற  பெயர்களும் உண்டு. 

பாறையின் மேலுள்ள கொன்றை மரத்தின் கீழ் இறைவன் வீற்றிருப்பதால் “திருமலைக் கொழுந்தீசர்” எனப் பெயர் பெற்றார். அம்மையப்பர், ஆறுடையார், சேவகத் தேவர், நச்சாடை தவிர்த்தவர் என்னும் வேறு பெயர்களும் இப்பெருமானுக்கு உண்டு. இத்தலத்தின் அருகாமையிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை ‘தருமாசலம்’ என்றும் ‘புண்ணியவெற்பு’ என்றும் புலவர்களால் பாராட்டப்படுகிறது. இம்மலையில் தவம் இயற்றி பக்தி சிரத்தையுடனும், வைராக்கியத்துடனும், இறைவனை காண முயல்பவர்கள் தங்கள் வினைகள் ஒழிந்து வீடுபேறெய்துவர் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

இம்மேற்கு மலைத் தொடரிலிருந்து கோரையாறு, தேவியாறு, நகரையாறு என்னும் பல ஆறுகள் ஓடிவருகின்றன. கோரையாற்றில் சதுர்ச்சுனை, மேலருவி, கீழருவி, கன்னிகா தீர்த்தம், தேவி தீர்த்தம், குயவரி தீர்த்தம், காரி தீர்த்தம், காருத்த தீர்த்தம், பூத தீர்த்தம், அருக்கத் தீர்த்தம், பராசர தீர்த்தம். சங்க தீர்த்தம் எனப் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இக்கோயிலை வணங்கி திருவோலக்க அருவியின் கீழ் உள்ள குகை பக்கத்தில் அம்மை தவம் செய்த இடத்தினை வணங்கி வருபவர்கள் முக்தி பெறுவார்கள் என்பது ஆன்றோர்கள் கருத்து.
இந்த ஈசன் தான் வெளிபட சின்மயத்தேவன் ஆட்சிகாலத்தில் ஒரு திருவிளையாடல் செய்தார்.  என்ன திருவிளையாடல் அது?           

(தொடரும்)
முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: பரமகுமார்