ஒவ்வொருவரும் வெல்ல வேண்டிய முதல் உணர்வு எது?



குறளின் குரல்

-திருப்பூர் கிருஷ்ணன்

எண்ண எண்ண வியக்கவைக்கும் எத்தனையோ பெருமைகளை உடையது உலகப் பொதுமறையான திருக்குறள். அந்த அற நூலால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமல்ல, ஜி.யு.போப் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கூடக் கவரப்பட்டனர். அவர்களில் ஒருவர் எல்லீஸ் துரை. சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் இவர் பெயரில் எல்லீஸ் தெரு என்றொரு தெருவே இருக்கிறது.
 
ஃபிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்பது எல்லீஸ் துரையின் முழுப்பெயர். 1796ல் மதராஸ் கலெக்டராக இருந்தவர். நாணய சாலை அதிகாரியாகவும் இருந்தார். திருக்குறளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த அவர், திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்டார் என்ற அரிய தகவலை, தொல்லியல் அறிஞர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆராய்ந்தறிந்து வெளிப்படுத்தியுள்ளார். திருக்குறளில் அறத்துப்பாலின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமையும் எல்லீஸ் துரைக்கு உண்டு. எல்லீஸ் துரையைக் கவர்ந்த மகத்தான நூலான நம் திருக்குறள் மனிதர்கள் துன்பமின்றி வாழ மூன்று உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று போதிக்கிறது. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்”
 - என்கிறது வள்ளுவம். (அதிகாரம் 36, மெய்யுணர்தல், குறள் எண் 360)

காமத்தாலும் கோபத்தாலும் அறியாமையாலுமே துன்பங்கள் உருவாகின்றன. எனவே பெயரளவு கூட அவற்றின் பாதிப்பு நம்மில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துன்பமின்றி வாழ அதுவே வழி. துன்பம் தரும் மூன்று உணர்வுகளுள் காமத்தை முதலில் வைத்துப் பேசுகிறது வள்ளுவம். காரணம் காமமே மற்ற இரு உணர்வுகளையும் தோற்றுவிக்கிறது. காமத்தாலேயே கோபம் உண்டாகிறது.
 
காமம் என்பது பாலுணர்ச்சி மட்டுமல்ல. ஆசை அனைத்துமே காமம் தான். நாம் ஆசைப்பட்ட ஒன்று நமக்குக் கிடைக்காதபோது, அல்லது நாம் ஆசைப்பட்டபடி நிகழ்வுகள் நடக்காதபோது, நம்மைச் சேர்ந்தவர்கள் நாம் ஆசைப்பட்ட விதங்களில் இயங்காதபோது நம் மனத்தில் கோபம் உருவாகிறது. அதனால் நிதானமற்ற மயக்கமும் ஏற்படுகிறது. இந்நிலையில் செய்யும் செயல்கள் சரியாக அமைய வாய்ப்பில்லை. ஆகையால் வாழ்க்கை சீரழிகிறது.
 
காமமும் கோபமும் இரட்டைக் குழந்தைகள். கோபத்தை வெல்ல வேண்டுமானால் காமத்தை வெல்ல வேண்டும். கோபம் இருக்கும் இடத்தில் காமமும், காமம் இருக்கும் இடத்தில் கோபமும் குடியிருக்கும். இவ்விரு உணர்வுகளும் நம் மனமென்னும் வீட்டில் ஒன்றோடொன்று இணைந்து சமரசத்தோடு ஒண்டுக் குடித்தனம் நடத்தும் சாமர்த்தியம் பெற்றவை!

நமது முற்கால முனிவர்கள் வரிசையில் அதிகம் கோபம் கொள்பவர் என்று பெயர் வாங்கியவர் மகரிஷி விஸ்வாமித்திரர். அதனால்தானே தசரதர் விஸ்வாமித்திரரின் கோபத்திற்கும் அதனால் அவர் அளிக்கக் கூடிய சாபத்திற்கும் அஞ்சி, தமது குலகுரு வசிஷ்டரது அறிவுரையின் பேரில், தம் புதல்வர்களான ராம லட்சுமணர்களை அவருடன் அனுப்புகிறார்?
 
கோபம் இருக்கும் உள்ளத்தில் அடக்க இயலாத காமமும் இருக்குமே? இருந்தது. விஸ்வாமித்திரர் தேவலோக நடனமணியான மேனகையின் அழகால் கவரப்பட்டு காம உணர்ச்சியை வெல்ல இயலாதவராய் அவளுக்குத் தன் மூலம் ஒரு குழந்தையையும் கொடுத்தார். பின்னர் அந்தக் குழந்தையையும் அதைப் பெற்ற மேனகையையும் விஸ்வாமித்திரர் துறந்ததும், கண்வ மகரிஷி அந்தக் குழந்தையை வளர்ப்புப் பெண்ணாய் ஏற்று வளர்த்ததும் வரலாறு. அக்குழந்தையே இளம்பெண்ணான பின் தன் மனம் கவர்ந்த துஷ்யந்த மாமன்னனைக் காந்தர்வ விவாகம் புரிந்துகொண்ட சகுந்தலை. 

துஷ்யந்தன் துர்வாச மகரிஷியின் சாபத்தின் காரணமாக ‘செலக்டிவ் அம்னீஷியா’ என்னும் மறதி நோய்க்கு ஆளானதையும் அதனால் சகுந்தலை அடைந்த துன்பங்களையும் விவரிக்கிறது மகாகவி காளிதாசர் எழுதிய சாகுந்தல காவியம். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான மறைமலை அடிகள், வடமொழியில் எழுதப்பட்ட சாகுந்தல நாடகத்தைத் தனித்தமிழிலேயே மொழிபெயர்த்திருக்கிறார்.

காமம் மனித வாழ்வைக் கெடுக்கக் கூடியது என்பதால் அந்த உணர்வை விட்டொழியுங்கள் என்று சித்தர்களும், பழைய புலவர்களும் அறைகூவியிருக்கிறார்கள். காம உணர்வை அடக்கி வெல்ல வேண்டும். அல்லாது போனாலும் அதை இல்லற வாழ்வுமுறையாகக் கொண்டு, இயன்றவரை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லறத்திலும் மகப்பேறுக்காகத் தவிர மற்றபடி பிரம்மச்சரியம் காப்பதே நெறி என மகாத்மா காந்தியின் நான்காம் தொகுதி உரத்துப் பேசுகிறது. தமிழ்செய்த தவத்தால் பிறந்த துறவி பட்டினத்தார், `மானிடர்களே! காம இச்சையை வெல்லுங்கள், அந்த உணர்வால் வாழ்வு கெடுகிறது! எச்சரிக்கை தேவை!’ எனத் தம் பல பாடல்களில் பதைபதைத்துப் புலம்புகிறார். அவரது வார்த்தைகள் உணர்ச்சி வேகத்தில் நாகரிக வரம்புகளையும் கூட மீறித் தெறிக்கின்றன.
 
எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை
எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் - நித்த
நித்தம்
பொய்யடா பேசும் புவிமட மாதரைவிட்டு
உய்யடா உய்யடா உய். 
நரகக் குழியும் இன்னும் நான்புசிப்பேன்
என்குதே
உரகப் படத்து அல்குல் உனைப்புசிப்பேன்
என்குதே....
குரும்பை முலையும் உன்றன் குடிகெடுப்
பேன் என்குதே
அரும்பு விழியும் உன்றன் ஆவியுண்பேன்
என்குதே...

காமத்தை நுகர்ந்து, புற்றீசல் போலப் பலப்பல குழந்தைகளைப் பெற்று, அந்தக் குழந்தைகளைப் பற்றிய கவலைகளில் ஆழ்ந்து வாழும் இந்த வழக்கமான பாதையைத் தவிர, இறைச் சிந்தனையோடு காமத்தை அடக்கி வாழும் மேலான வாழ்க்கையை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்று பட்டினத்தார் நம்பொருட்டாக ஏங்கி இரங்குகிறார். 

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம்
தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல
பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்க
ளைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும்
மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்
துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப்
போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!’

காமம் மனத்தின் துன்பத்திற்கும் உடலின் துன்பத்திற்கும் காரணமாகிறது என்ற உண்மையை நாம் அறிந்தாலும் கூட அந்த உணர்வை வெல்வதென்பது சாமான்யமானது அல்ல. மாபெரும் ஞானியரும் அந்த உணர்வை வெல்ல முடியாமல் தவிக்கும்போது எளிய
மானிடர்கள் எம்மாத்திரம்?
 
மகாத்மா காந்தியின சுயசரிதையான சத்திய சோதனை அவர் காம உணர்வை வெல்ல என்ன பாடுபட்டார் என்பதைப் பக்கம் பக்கமாய் விவரிக்கிறது. தந்தையின் உயிர் பிரியும் தறுவாயில் கூடத் தாம் தம் மனைவியுடன் சுகித்திருந்ததைக் கழிவிரக்கத்தோடு அந்நூலில் பதிவுசெய்கிறார் காந்தி.
 
தொண்ணூற்று ஒன்பது வயது நிறைவாழ்வு வாழ்ந்த மொரார்ஜி தேசாய், பிரம்மச்சரியத்தின் மேல் தீராத ஆர்வம் கொண்டவர். இல்லற வாழ்வு வாழ்ந்தாராயினும் அவர் காம உணர்ச்சியை அடக்கி ஆளவேண்டும் என்பதில் அதிக வேட்கை கொண்டவராய் விளங்கியவர். ஒரு நேர்காணலில் நிருபரொருவர் அவரிடம் கேட்ட கேள்வி நுணுக்கமானது.
 
`நீங்கள் பிரம்மச்சரியம் என்பது எளிதாக இயலக்கூடியது என்கிறீர்கள். அவ்விதம் பழகிவிட்டால் உடல் அதற்கு ஏற்ப மனதோடு ஒத்துழைக்கத் தொடங்கும் என்றும் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், காந்தி தன் காம உணர்வை வெல்வதற்குத் தான் மிகவும் சிரமப்பட்டதாகக் கூறுகிறாரே?’
 
மொரார்ஜி தேசாய் சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின் பதில் சொன்னார்:  `காந்திக்கு அது கடினமாக இருந்திருக்கிறது என்று காந்தியின் எழுத்துகளைப் படிக்கும்போது நமக்குத் தெரிகிறது. ஆனால், எனக்கு அது எளிதாகவே இருந்தது. நான் மிக சுலபமாக பிரம்மச்சரியத்தைப் பழகிவிட்டேன். மனத்தின் நினைவுகளை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் கலையில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் பிரம்மச்சரியம் என்பது மிக இயல்பானதாக மாறிவிடும் என்றே நான் நம்புகிறேன்.

ஆனாலும் ஒவ்வொருவரது உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். காந்திக்கு ஏன் அது கடினமாக இருந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. எனினும் ஒன்று சொல்வேன். கடினமானதாக இருந்தாலும் சரி, எளிதாக இருந்தாலும் சரி, காம உணர்ச்சியை வெல்வது ஒன்றுதான் மனிதனை எல்லா வகையிலும் மேம்படுத்தும். அந்த உணர்ச்சியை வெல்வதற்கு இணையாக மனிதன் செய்ய வேண்டிய முக்கியமான செயல் வேறொன்றும் இல்லை!’

சுவாமி சிவானந்தர் மனிதனின் எல்லாப் பருவங்களிலும் காம உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது, ஆனாலும் மனிதன் அதை வென்றுதான் ஆகவேண்டும் என்கிறார். வாழ்க்கையை வெல்லவும் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இவற்றோடு நிம்மதியாக வாழவும் பிரம்மச்சரியம்தான் ஒரே வழி என்பது அவர் கருத்து. மனிதனின் குழந்தைப் பருவத்தில் காம உணர்ச்சி மறைந்திருக்கிறது. இளமைப் பருவத்தில் ஓங்கியிருக்கிறது. முதுமைப் பருவத்தில் அடங்கியிருக்கிறது. ஆக காம உணர்வு இல்லாத காலம் என்று மனித வாழ்வில் எந்தக் காலமும் இல்லை.

எனவே இந்த உணர்ச்சியின் விஷயத்தில் மட்டும் எப்போதும் கடும் எச்சரிக்கை தேவை என்கிறார் சிவானந்தர். காம உணர்ச்சி மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் இனப்பெருக்கத்தின் பொருட்டாக இயற்கையிலேயே அமைந்திருக்கும் ஓர் உணர்ச்சி. விலங்குகளோ பறவைகளோ தங்கள் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுக் கொள்வதில்லை. இனப்பெருக்கக் காலத்தில் அவை வடிகால் தேடுகின்றன. பிறகு மறந்துவிடுகின்றன.
 
ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் அவ்விதம் இயங்குவதில்லை. அவனுக்கு இனப்பெருக்க காலம் என்று தனியாக எதுவுமில்லை. அறிவால் தன் உணர்வுகளைச் செயற்கையாகத் தூண்டி விட்டுக்கொண்டு அவன் எல்லாக் காலத்தையும் அவ்வுணர்ச்சியின் வெளிப்பாட்டுக்கான காலமாக ஆக்கிக் கொள்கிறான். இதனால் மற்ற எந்த உயிரினத்தையும் விட மனிதனே காம நுகர்ச்சியில் அதிகம் ஈடுபடுகிறான்.
 
இந்தப் போக்கு தவறு என்பதே இந்திய மெய்ஞ்ஞானிகளின் முடிந்த முடிபு. வள்ளுவர் காமத்துப் பால் எழுதினாரேனும் அவரின் முடிபும் இதுதான். இல்லறம் கண்டு அவ்வுணர்ச்சியை வரைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் உடலின்பம் உண்டாயினும், இல்லற வாழ்வில் அதையும் தாண்டிய உயர்நிலைக் காதலை மனிதர்கள் போற்ற வேண்டும் என்பதும் வள்ளுவரின் சித்தாந்தம். காமத்தை மட்டுமீறி நுகர்வதல்ல, அதை நெறிமுறைப்படுத்தி அடக்கி ஆள்வதே இந்திய ஆன்மிக மரபு.
 
ஆனால், துறவு நிலையில் உள்ள சிலரே தற்காலத்தில் இந்த உணர்ச்சியால் வீழ்ந்துவிடுவதைப் பார்க்கிறோம். இது ஏன் நேர்கிறது? தவம் செய்கிறபோதும் தியானம் செய்கிற போதும் மனிதன் தனது ஆழ்மனத்தை நேரடியாகத் தொடுகிறான். குண்டலினி சக்தி விழித்தெழும்போது இயல்பாக ஆழ்மனத்தில் உறங்கிக் கிடக்கும் உணர்வுகளெல்லாம் கிளர்ந்து மேலெழுகின்றன. மேலும் தொடர்ந்து தவம் செய்தும் தியானம் செய்தும் அந்த உணர்ச்சி வேகத்தை வெல்ல வேண்டும். அது இயலாத துறவிகள் தம் உணர்ச்சி தூண்டப்பட்டதும் அந்த மாயவலையில் வீழ்ந்து அழிகிறார்கள்.
 
காம உணர்ச்சியை வெல்வதை தெய்வ சக்தியின் துணையோடுதான் நாம் நிறைவேற்றிக் கொள்ள இயலும். ஓயாத பிரார்த்தனை இதற்கு உதவும் என்கிறார் மகாத்மா காந்தி. தெய்வ சக்தி தூண்டப் பெறும்போது மனத்தின் உள்ளே மறைந்துள்ள சைத்தானின் சக்தியும் வீறுகொண்டு மேலெழும். அதை வதைத்து நாம் ஆன்மிகத்தில் மேலே மேலே செல்ல வேண்டும் என்கிறார் அரவிந்தர்.

இந்திய மெய்ஞ்ஞானிகள் அனைவரும் கண்டுணர்ந்த உண்மை, காமத்தை வெல்வதே ஆன்மிக ரீதியாக மனித வாழ்வு மேம்பட ஒரே வழி என்பதுதான். இந்தப் பேருண்மையை `காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்’ என்ற குறளில் காமத்தை முதலில் வைப்பதன்மூலம் வள்ளுவர் மிகப் பழங்காலத்திலேயே உணர்த்தியிருக்கிறார் என்பது குறித்துத் தமிழர்கள் பெருமையடையலாம்.
 
`மகனே! திருமணம் செய்துகொள்கிறாயா?’ என அக்கறையோடு கேட்டார் தந்தை. `சேச்சே! அதெல்லாம் இப்போது வேண்டாம்!’ என்று அவசரமாக மறுத்தான் வாலிப வயதிலிருந்த மகன். திருப்தியடைந்த தந்தை `சரி. அப்படியானால் எப்போதுதான் திருமணம் செய்துகொள்வாய்?’ என மேலும் வினவினார். அதற்கு மகன் சொன்ன பதில்: `எப்படியும் இப்போது வேண்டாம் அப்பா! இன்னும் ஒருவாரம் போகட்டும்!’

(குறள் உரைக்கும்)