ராகுகாலத்தில் பிறக்கும் குழந்தைக்கு கெடுபலன்கள் ஏற்படுமா?



தெளிவு பெறு ஓம்

* சபரிமலைக்கு செல்லும்போது நீலம் அல்லது காவி நிற வஸ்திரம் அணிந்துதான் செல்ல வேண்டுமா? சந்நிதான அர்ச்சகர் வெண்ணிற ஆடைதானே அணிந்திருக்கிறார்! அப்படியிருக்க வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து பக்தர்கள் செல்லக்கூடாதா?
- மணிகண்டன், மணப்பாறை.

சாதாரண நாட்களில் ஆடை அணிந்து கொள்வதற்கும், விரதம் இருக்கும் நாட்களில் ஆடை அணிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. விரதம் இருக்கும் நாட்களில் அணிந்து கொள்ளும் வஸ்திரத்திற்கு ‘தீக்ஷா வஸ்திரம்’ என்று பெயர். சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்வதற்கு முன்னர் குருஸ்வாமியின் கரங்களால் ஆசீர்வாதம் செய்யப்பட்ட வஸ்திரத்தைப் பெற்று அதனை உடுத்திக் கொள்வது வழக்கம். இது குருவிடம் இருந்து தீக்ஷை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை.

இவ்வாறு தீக்ஷை பெறும்போது சிஷ்யர்கள் ஒரே மாதிரியான உடைகளை அணிவது மரபு. அதாவது, இப்போது பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்துகொள்வது போல. ஏழை, பணக்காரன், ஜாதி, மத, இன பேதம் ஏதும் இன்றி மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதைப்போல பக்தர்களும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி ஒரே மாதிரியான வஸ்திரத்தை அணிந்து இறைவன் சந்நதிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த தீக்ஷா வஸ்திரத்தை குரு ஸ்வாமிகள் பரிந்துரை செய்தனர். இதில் வருகின்ற நிற வேறுபாட்டிற்கும் அர்த்தம் உண்டு.

இந்த வஸ்திரங்களுக்கும் வர்ணாசிரம முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்து, அதன் வழி நடக்கின்ற பெரியோர்களுக்கு வெள்ளை நிற வஸ்திரம் தீக்ஷா வஸ்திரமாக அறிமுகம் செய்யப்பட்டது. நீங்கள் குறிப்பிடும் அர்ச்சகர்கள் இந்த பிரிவினில் வருகிறார்கள். சபரிமலை அர்ச்சகர்கள் மாத்திரம் அல்ல, சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்து அதன்படி நடக்கின்ற கேரளாவைச் சேர்ந்தவர்கள் பலரும் வெள்ளை நிற வஸ்திரத்துடன் சபரிமலைக்கு வருவதை இன்றும் காண முடியும்.

க்ஷத்ரிய தர்மத்தின்படி நடக்கின்றவர்களுக்கு சிவப்பு நிற வஸ்திரமும், வைஸ்ய தர்மத்தின்படி நடப்பவர்களுக்கு மஞ்சள் நிற ஆடையும், அடிப்படைத் தேவைகளை குறையின்றி நிறைவேற்றும் தொண்டு செய்பவர்களுக்கு கருப்பு அல்லது நீல நிற வஸ்திரமும் பரிந்துரை செய்யப்பட்டது. இது அவரவர் செய்யும் தொழிலிற்கு ஏற்ப வழங்கப்பட்ட சீருடையே அன்றி ஜாதியின் அடிப்படையில் அல்ல. வர்ணம் என்றால் நிறம் என்று பொருள்.

அவரவர் செய்யும் அடிப்படையில் வெவ்வேறு நிறத்தை உடைய வஸ்திரம் சீருடையாக அமைந்ததால்தான் இதற்கு ‘வர்ணாசிரம முறை’ என்ற பெயரும் வந்துள்ளது. இதில் காவி நிற வஸ்திரம் என்பது தாம்பத்ய வாழ்வினைத் துறந்த சந்நியாசிகளுக்கும், சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்ட வயது முதிர்ந்த முதியோர்களுக்கும் மட்டுமே உரியது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் காவி நிற வஸ்திரம் அணிவது அத்தனை சிலாக்கியமில்லை.

நீங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுணர்ந்து அதன்படி நடந்து வருபவர் என்றால் வெள்ளை நிற வஸ்திரத்தையே தீக்ஷா வஸ்திரமாகக் கொண்டு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லலாம். அவ்வாறு இன்றி சாதாரண லௌகீக வாழ்க்கையில் உள்ளவர் எனும் பட்சத்தில் நீல நிற ஆடையே தீக்ஷா வஸ்திரத்திற்கு உகந்தது. வயது முதிர்ந்தவர் என்றால் காவி நிற வஸ்திரத்தை அணியலாம். இதுபோன்ற தீக்ஷா வஸ்திரங்கள் இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டோமேயானால் சிந்தை தெளிவு பெறும்; பரம்பொருளை எளிதில் உணர முடியும்.

* சித்தர்கள் ஜீவசமாதி அடைகிறார்களே இது சாத்தியம்தானா?
- த. கோவிந்தராஜன், குடியாத்தம்.

சாத்தியம்தான். ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஜீவாத்மாவானது, ஒர் உடலைத் தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும்போது, எத்தனை தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்மாவான இறைவனிடம் சென்று சேர்வது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும்போது தூய்மையான ஆத்மாவாகத்தான் பிறக்கிறோம். ஆனால், வளரும்போது, இந்த உலக மாயையில் சிக்கி பல பாவங்களைச் செய்கிறோம். ஒவ்வொரு நாளும் சுயநலத்திற்காக செய்யும் பாவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே ஆத்மாவையும் அசுத்தம் செய்கிறோம். ஜீவ சமாதி அடைவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

தியானம், கடுமையான விரதம், தவம் என பல சோதனைகளைக் கடந்தால்தான் இப்படி ஜீவசமாதியை அடைய முடியும். ஒருவர் ஜீவ சமாதி அடையும்போது அவரது உடல் அழுகுவது இல்லை. மாறாக, ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி வற்றிப்போகும். இது எப்படி சாத்தியம் என்பதே உங்கள் கேள்வி. ப்ராணாயாமம் அல்லது மூச்சுப் பயிற்சியின் மூலம் இது சாத்தியமே. இவ்வாறு ஜீவசமாதி அடைபவர்கள் இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இந்தப் பயிற்சியின் மூலம் ஒருவர் மூச்சை அடக்கி, உயிர்வாழ முடியும்.

இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டம் என அனைத்தையும் நிறுத்தி வைத்து, ஆன்மாவை மட்டும் விழித்திருக்கச் செய்ய முடியும். உடலில் ஆன்மா இருக்கும், ஆனால், இதயத்துடிப்பு இல்லாமல் போவதால் உயிரற்ற உடல் போலத் தெரியும். இவ்வாறு ஜீவ சமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்பது அகத்தியர் வாக்கு.

ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மையை வேண்டுபவர்களாகத்தான் இருப்பார்கள். உலக நன்மை குறித்த அவர்களது எண்ணங்களின் அதிர்வுகள் அந்த ஜீவசமாதியின் மீது அமைந்திருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். அந்த அதிர்வுகளால்தான் மகான்களின் ஜீவசமாதி சாந்நித்தியம் பெறுகிறது. அதுபோன்ற ஜீவசமாதிகளை வலம் வரும்போது நமது மனமும் தூய்மை அடைகிறது.

* ராகுகாலத்தில் குழந்தை பிறந்தால் நிகழும் கெடு பலன்கள் என்ன?
- ந. கனிமொழி கயல்விழி, கண்ணமங்கலம்.

ராகுகாலத்தில் குழந்தை பிறந்தால் கெடு பலன்கள் நிகழும் என்ற கருத்து முற்றிலும் மூடநம்பிக்கையே. எந்த ஊனமும் இன்றி ஒரு குழந்தை இந்த பூமியில் ஜனிப்பது சாதாரண விஷயம் அல்ல. இந்த அறிவியல் உலகிலும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அறிவிற்கும் அப்பாற்பட்ட ஒருவிஷயம் குழந்தை பிறப்பு என்பது. ஒரு தாயின் வயிற்றில் கரு உருவாகி, முழுமையாக வளர்ந்து, நல்லபடியாக இந்த பூவுலகில் ஜனிக்கின்ற நேரத்தை இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாராலும் நிர்ணயம் செய்ய முடியாது.

இந்த காலத்தில் சிசேரியன் மூலம் அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை வெளியே எடுக்கிறார்கள் என்று பெருமை வேண்டுமானால் பேசிக்கொள்ளலாமே தவிர, குழந்தையின் மூச்சுக்காற்று இந்த பூமியில் படுகின்ற நேரத்தையும், அந்த குழந்தை இந்த பூமியில் உள்ள காற்றை சுவாசிக்கின்ற நேரத்தையும் இறைவன் ஒருவனால்தான் நிர்ணயிக்க முடியும். அவ்வாறு இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பிறக்கின்ற குழந்தை முழுமையாக இறையருள் பெற்ற குழந்தைதானே அன்றி அதில் ராகுகாலம், எமகண்டம் என்று நாம் பாகுபாடு ஏதும் கிடையாது. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே...’ என்பது கவிஞரின் கூற்றுமட்டுமல்ல, சாஸ்திரமும் அதைத்தான் கூறுகிறது.

‘தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. எந்தக் குழந்தையும் ராகுகாலத்தில் பிறப்பதால் கெட்டுப் போவதில்லை. அந்தக் குழந்தை வளர்கின்ற சூழலும், பெற்றோரின் வளர்ப்புமே குழந்தையை அவ்வாறு மாற்றுகிறது. ராகுகாலத்தில் பிறப்பு என்பதால் அந்தக் குழந்தைக்கு எந்தவிதமான கெடுபலன்களும் விளையாது என்பதே நூற்றுக்கு நூறு சரியானது.

* கணவனை இழந்த பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்க, மனைவியை இழந்த ஆண்கள் மட்டும் சுபநிகழ்ச்சிகளில் முன்நின்று செயல்படலாமா?
- கரு.ராஜமூர்த்தி, மாலையிட்டான்வயல்.

இந்த விஷயத்தில் ஆண், பெண் என்ற பேதத்தை சாஸ்திரம் உரைக்கவில்லை. தர்மசாஸ்திரத்தைப் பொறுத்த மட்டில் கணவனை இழந்த பெண்ணும் சரி, மனைவியை இழந்த ஆணும் சரி ஒரே தராசில் வைத்துத்தான் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே பொதுவான விதியே வகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒதுங்கியிருப்பது என்பது இவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்வதாக ஆகிவிடாது. ஆஸ்துமா நோய் உள்ள ஒருவன் எவ்வாறு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இயலாதோ, அதுபோல இவர்களால் முன் நின்று செய்ய இயலாத காரியங்களில் இவர்கள் சற்று தள்ளி நிற்கிறார்கள்.

சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பது வேறு, முன்நின்று நடத்துவது என்பது வேறு. உதாரணத்திற்கு ஒருவர் தன் பெண்ணிற்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று எண்ணும்போது, அவர் தம்பதியராகத்தான் முன்நின்று கன்யாதானம் செய்து தர முடியும். மாறாக கணவனை இழந்த பெண்ணோ அல்லது மனைவியை இழந்த ஆணோ தனது சொந்த மகளாக இருந்தாலும் தனித்து நின்று அந்த கன்யாதானத்தினை செய்துதர இயலாது. அதேநேரத்தில் அவர்கள் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு தன் பிள்ளையை ஆசீர்வதிக்க முடியும். அதேபோன்று புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளையும் தம்பதியராக இணைந்துதான் செய்ய இயலும். சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பேதம் இங்கு எழுவதில்லை.

* பயணம் வெற்றி பெற எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

பயணம் பொதுவாக மூன்று வகைப்படும் - தரைவழிப் பயணம் (இரயில் அல்லது சாலை மார்க்கம்), கடல்வழி (படகு, கப்பல்), ஆகாய மார்க்கம் (விமானம்). இவற்றில் தரைவழிப் பயணத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கிரகம் செவ்வாய். ஆகவே செவ்வாய்க்கு உரிய தேவதையான சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி தரைவழிப் பயணத்தை துவங்குவது நன்மை தரும். தற்காலத்தில் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில், பாதாள மார்க்கத்தில் தங்களது ஆராய்ச்சியினை மேற்கொள்கிறார்கள். இவர்கள் வாராஹி அன்னையை வணங்கி அதன்பின் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்வது வெற்றி தரும்.

நீர்வழிப் பயணத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் சந்திரன். நீர்வழிப் பயணத்திலும் இரண்டு உட்பிரிவுகள் உண்டு. நீரின் மேல் செல்லும் படகு, கப்பல் முதலான பயணத்திற்கு சந்திரனுக்கு உரிய தேவதையான கௌரி என்று அழைக்கப்படும் அம்பிகையையும், நீருக்குள் மூழ்கி செல்லும் நீர்மூழ்கி கப்பல் பயணத்திற்கு மச்சாவதாரம் கொண்ட பெருமாளையும் வணங்குவது நல்லது. ஆகாய மார்க்கத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் கோள் புதன்.

விமான வழிப் பயணம் மேற்கொள்ளும்போது ஆஞ்சநேய ஸ்வாமியையும், ஆராய்ச்சி ரீதியிலான விண்வெளிப் பயணத்திற்கு நடராஜப் பெருமானையும் வழிபடுவது நல்லது. இறைசக்தி என்பது ஒன்றுதான். எங்கே, எந்த அளவிலான உந்துதிறன் தேவைப்படுகிறதோ, அந்த அளவிலான உந்து திறனை பயன்படுத்தினால் மட்டுமே செயல் வெற்றி பெறும் என்பது இயற்பியலின் அடிப்படை விதி. அதேபோன்று இடத்திற்கு தகுந்தாற்போல் நாமும் இறைசக்தியை பிரார்த்தனை செய்துகொண்டால் செயலில் வெற்றி காண முடியும்.

* ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் கிரகபிரவேசம் செய்யலாமா?
- வெங்கட்நாராயணன், கூறைநாடு.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி தவிர மற்ற மாதங்களில் கிரகபிரவேசம் செய்யலாம். இந்த நான்கு மாதங்களில் பூமிபுத்திரனாகிய வாஸ்துபுருஷன் உறக்கத்தில் இருந்து எழுவதில்லை. அதனால்தான் இந்த நான்கு மாதங் களிலும் வீடு சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் துவக்க வேண்டாம் என்றார்கள் பெரியோர்கள். இந்த மாதங்களில் ஆடி இடம்பெறவில்லை. ஆடி மாதத்தில் வாஸ்து புருஷன் நித்திரை விடுவதால் ஆடி மாதத்தில் பூமி பூஜை, வாசக்கால் வைத்தல், தளம் போடுதல், கிரகபிரவேசம் செய்தல் முதலானவற்றை தாராளமாகச் செய்யலாம். மார்கழியில் வாஸ்து விழிப்பதில்லை என்பதால் மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா செய்யக் கூடாது.

* மற்ற அமாவாசைகளை விட மஹாளய அமாவாசை முக்கியத்துவம் பெறுவது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் சுபநிகழ்வுகளைத் தவிர்த்து முன்னோர்களின் நினைவாக அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.

15 நாட்களும் செய்ய இயலவில்லை என்றாலும், அமாவாசை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். இதற்கும் மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. தான தர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலை மலையாகக் கிடைத்தனவாம். ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை.

காரணம் இதுதான் & அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை. தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 14நாட்களுடன் இறுதி நாளான அமாவாசையையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். மஹாளய அமாவாசை நாளில் இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.     
 
பிரதி மாதம் வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும். பிதுர்காரகன் சூரியனும், மாதுர்காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர். ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய, தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள்.

* நாகதோஷம் உள்ள பெண்ணுக்கு அதே தோஷம் உள்ள ஆண்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா?
- ரா. வைரமுத்து, ராயபுரம்.

அவசியம் இல்லை. யோசித்துப் பாருங்கள், தோஷம் என்றால் ஏதோ ஒருவகையில் குறை இருக்கிறது என்று பொருள். ஜாதகத்தில் தோஷம் உள்ள அதாவது, ஏதோ ஒரு குறை உள்ள பெண்ணிற்கு அதேபோன்ற குறையை உடைய ஆண் மகனைத் திருமணம் செய்து வைப்பதால் அந்தக் குறை எவ்வாறு சரி ஆகும்? தோஷமும், தோஷமும் இணைந்தால் மேலும் அதிக தோஷத்தை அதாவது, அதிகமான குறையைத் தானே தரும். அவ்வாறு இருக்க ஜாதகத்தில் தோஷம் உள்ள ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ வரன் பார்க்கும்போது அந்த தோஷத்தை சமாளிக்கும் திறன் உடைய வலிமை வாய்ந்த ஜாதகத்தைப் பொருத்தினால்தான் குறையானது சரி செய்யப்பட்டு வாழ்க்கை சிறக்கும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, பலம் நிறைந்த ஜாதகத்தைப் பொருத்தி குறையில்லா வாழ்வினுக்கு வழிகாட்ட வேண்டும். நாகதோஷம் உள்ள பெண்ணுக்கு அதே தோஷம் உள்ள ஆண்பிள்ளை ஜாதகத்தைத்தான் பொருத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.